Thursday, October 4, 2018

திருப்பரங்குன்றம் -சமணத்தை அழித்துத் தோன்றியதா

திருப்பரங்குன்றம் ஒரு அறிமுகம்:
துரை திருப்பரங்குன்றத்தில் இரண்டு குடைவரைகள் உள்ளன. முருகன் வீற்றிருக்கும் வடக்கு குடைவரை கோவிலை வடபரங்குன்றம் என்றும், இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போகும் கோவிலை தென்பரங்குன்றம் என்றும் அழைப்பர். மேற்கண்ட இரண்டுத் தலங்கள் போக மலையின் வடக்கே பழனியாண்டவர் ஆலயமும், மலையின் மேலே  காசி விஸ்வநாதர் ஆலயம் ஒன்றும் உள்ளது.
இவை போக கி.மு 1 ம் நூற்றாண்டு தமிழ்-பிராமி கல்வெட்டுகளோடு கூடிய சமணக்குகைகளும், கற்படுக்கைகளும், கி.பி9-10ம் நூற்றாண்டு
தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்களும் என இம்மலைக்கும்
சமணர்களுக்குமான சான்றுகள் ஐந்து வெவ்வேறு இடங்களில் உள்ளன.
ஆக, திருப்பரங்குன்றமானது சைவர்-சமணர் இருவரும் கோலோச்சிய
மலை என்பது இதனால் புலனாகிறது.

முன்னுரை:

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியொன்றில் வார்டன் என்றாலே அடிப்போம் என்று வரும் வசனம் போல சமணம் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் சென்று சைவர்கள் அவற்றை அழித்து தமதாக்கிக்
கொண்டதாக வரலாற்றுலகில் பெரும் குற்றச்சாட்டு உள்ளது.
இக்கூற்றுக்கு முக்கிய ஆதாரமாக திருப்பரங்குன்றம் மலையின் தெற்கு அடிவாரத்தில் உள்ள பாண்டியர் குடைவரையை சுட்டுவர்.
தென்பரங்குன்றம் குடைவரை ஒரு பார்வை:

கிழக்கு நோக்கிய கருவறையும் அர்த்த மண்டபமும் பெற்று விளங்கும் இக்குடைவரையின் கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும், அர்த்தமண்டபத்தின் வடக்குச் சுவரில் பிரமாண்டமான ஆடல்வல்லான்
சிற்பத் தொகுதியும், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர் சிற்பமும் உள்ளது. மேலும் குடைவரையின் வெளியே இருபக்கப் பாறைச்சரிவிலும் சைவ ஆச்சாரியர்கள், சண்டிகேசுவரர், தேவார மூவர், பைரவர்
ஆகியோரின் சிற்பங்கள. உள்ளன. மேற்கண்டவை அனைத்தும் பாறையிலேயே செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்களாகும்.
இத்தலத்தின் அர்த்தமண்டபக் கிழக்குச் சுவரில் 129 வரிகள் கொண்ட மிக நீளமான கல்வெட்டுக் காணப்படுவதால், இதனை கல்வெட்டுக் கோவில் என்றும் அழைப்பர்.
தென்பரங்குன்றம் கோவிலின் காலம்:
கட்டமைப்பின் அடிப்படையில் வடபரங்குன்றத்தின் அமைப்பை ஒத்துக் காணப்படுவதால் இக்குடைவரையும் கி.பி.8ம் நூற்றாண்டில் குடையப்
பெற்ற ஒன்றே என்பதில் ஆய்வாளர்களுள் எவ்வித கருத்து முரணும்
இல்லை. எனினும் இக்குடைவரை சிற்பங்கள் 13ம் நூற்றாண்டு சிற்ப அமைதியில் உள்ளதால் இக்கால இடைவெளி ஆய்வாளர்கள் மத்தியில் அனுமானங்களைத் தோற்றுவித்தது.
ஆய்வாளர்களின் கருத்துகள்:
தென்பரங்குன்றம் சமணக் குடைவரையே -
ஆய்வாளர்கள் மா.சந்திரமூர்த்தி, வெ.வேதாசலம், தேவகுஞ்சரி,
சாந்தலிங்கம் ஐயா ஆகியோர் இக்குடைவரை கி.பி.8ம் நூற்றாண்டில் சமணக்குடைவரையாக எடுக்கப்பட்டதாகவும் பின்னர் 13ம் நூற்றாண்டில் சமணர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு சைவர்கள் இங்குள்ள சமண
சிற்பங்களை அழித்து சைவ சிற்பங்களை அமைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள்.
அவர்கள் கூறுவதின் சுருக்கம் இவை,
  1. அசோகமரத்தின் கீழ் அமர்ந்த தீர்த்தங்கரர் சிற்பம் அர்த்தநாரீஸ்வரராக மாற்றப்பட்டுள்ளது.
2. அர்த்தமண்டபத்தில் உள்ள சமண சிற்பங்களை நீக்கி , கோஷ்ட்டத்தை ஆழப்படுத்தி நடராஜர் & சுப்பிரமணியர் சிற்பங்களாக மாற்றியுள்ளனர்.
3. பாகுபலிச் சிற்பத்தின் கைகளை மாற்றி பைரவர் சிற்பமாக வடித்துள்ளனர்.
தென்பரங்குன்றம் சைவக்குடைவரையே –
மேற்கூறிய ஆய்வாளர்களின் கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள மரு.கலைக்கோவன் ஐயா, தென்பரங்குன்றத்தில் சமண சிற்பங்கள் இருந்து அழிக்கப்பட்டதாகக் கூறும் கூற்று அடிப்படையற்ற ஒன்று எனவும் இக்குடைவரை தோற்றத்திற்கும், சிற்பங்களின் கால இடைவெளிக்கும்
உள்ள 500 ஆண்டு இடைவெளி அக்கூற்று எழக் காரணமாகிவிட்டது என்பதையும் தனது “மதுரை மாவட்டக் குடைவரைகள்” புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். (பக்கம் 100-107).
தனது மறுப்புக்கு முக்கிய சான்றாக கலைக்கோவன் முன்வைப்பது – சிற்ப கோஷ்டங்களுக்கு அருகில் உள்ள பாறைக்கும் கோஷ்டங்களுக்கும் இடையே
உள்ள ஆழமே ஆகும்.
ஏற்கனவே உள்ள சிற்பத்தை முழுவதும் அகற்றிவிட்டு புதிய சிற்பம் உருவாக்கியதாக இருந்தால் கோஷ்ட்டங்களின் ஆழம் அதிகமாக
காணப்பட வேண்டும். இந்த ஆழத்தை அளந்து விவரிப்பதன் மூலம்
இவை வடிக்கும்போதே சைவ வடிவங்களாகத் தான் வடிக்கப்பட்டன
என்பதை நிரூபணம் செய்கிறார். அவரது விளக்கத்தை சுருக்கமாகவும், புகைப்பட விளக்கத்துடனும் இங்கு காணலாம்.
அர்த்தநாரீஸ்வரரா? அசோக மரத்தடி தீர்த்தங்கரரா?
கருவறையில் தற்போது உள்ள சிற்பமானது அதன் பக்கச்சுவரில் இருந்து
4-6 செ.மீ ஆழம் மட்டுமே உள்ளது. சிற்பம் உள்ள நடுப்பகுதியின் ஆழமும் கூட தாய்ப்பாறையில் இருந்து 18 செ.மீ மட்டுமே ஆழம் உள்ளது. ஒருவேளை தீர்த்தங்கர/இயக்கி சிற்பம் இருந்து அதனை நீக்கிவிட்டு செய்யப்பட்டிருக்கும் என்றால் குறைந்தது இதைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் சிற்பம் இருந்திருக்குமேயன்றி இவ்வளவு மேலோட்டமாக இருந்திருக்காது.
மேலும் அர்த்தநாரீஸ்வர்ருக்கு மேலே உள்ள து அசோகமரத்தின் கிளை என்பதற்கு பிற முற்கால (8-9ம் நூற்றாண்டு) சமண சிற்பத்தில் உள்ள
மரத்தின் வடிவமைப்பைச் சுட்டி இரண்டும் வேறுபடுவதை தெளிவாக
எடுத்துக் காட்டுகிறார். மேலும், இப்போதுள்ளது அர்த்தநாரீஸ்வரருக்கு சமகாலத்திய (13ம் நூற்றாண்டு) கொடிக்கருக்கு என்று கூறுகிறார்.
அர்த்தமண்டப கோஷ்டங்கள்:
அர்த்தமண்டபத்தில் ஏற்கனவே இருந்த சமண சிற்பங்களை முற்றிலும் நீக்கிவிட்டு, ஆழப்படுத்தி அவ்விடத்தில் ஆடல்வல்லான் & சுப்பிரமணியர் சிற்பங்களை வடித்துள்ளதாக பிற ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆடல்வல்லானின் சிற்பமோ அதன் பக்கச் சுவரில் இருந்து இடமிருந்து வலமாக 18-50-19 செ.மீ ஆழம் உள்ளன. சுப்பிரமணியர்
சிற்பமானது பக்கச் சுவர்களில் இருந்து 20-27-18 செ.மீ. ஆழம் கொண்டு விளங்குகிறது.
இவை மற்றச் சிற்பங்களைக் காட்டிலும் சற்று ஆழமாக குடைந்து வடிக்கப்பெற்றிருந்தாலும் இச்சிற்பங்கள் பக் கச்சுவர் மற்றும் பீடங்களின் விளிம்புகளில் இருந்தே சிற்பம் தொடங்குவதை கலைக்கோவன் சுட்டிக்காட்டுகிறார். மற்றவர்கள் கூறுவது போல் சமணச் சிற்பத்தை நீக்கிவிட்டு செதுக்கப்பட்டிருந்தால் இவ்வாறு விளிம்பு வரை இல்லாமல்
சற்று ஆழமாகவே சிற்பங்கள் தொடங்கி இருக்கும். குறிப்பாக ஆடல்வல்லானின் தொகுதியில் உள்ள குடமுழவுக் கலைஞன், முயலகன், உமை அன்னையின் பீடம் ஆகியவற்றையும், சுப்பிரமண்யர் தொகுதியில் உருவங்களின் பாதங்கள். தொடங்கும் இடத்தையும் நோக்கினால் இவ்வுண்மை புலப்படும். இவற்றை கீழே உள்ளப் படங்களில் தெளிவாக காணலாம்
பைரவரா? பாகுபலியா?
குடைவரையின் வெளியே, கிழக்குப்பாறைச் சரிவில் உள்ள பைரவர் சிற்பமானது சமணர்களின் பாகுபலி சிற்பத்தின் கைகளை மாற்றியும்,
பின்புறம் நாய் ஒன்றை வடித்தும் பைரவராக மாற்றிவிட்டனர் என்பது குற்றச்சாட்டு. பைரவரின் நிர்வாண கோலம் இக்கூற்றுக்கு அடிப்படையாக அமைந்துவிட்டது.
சமண பாகுபலிக்கு கைகள் நெகிழ்கைகளாக தொங்கிய நிலையிலேயே இருக்கும். ஆனால் பைரவருக்கோ முழங்கை அளவில் கைகள் மடங்கியது போல் செதுக்கி இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியும். பாறையில் புடைப்புச் சிற்பமாக வடிக்கும்போது தொங்கவிடப்பட்ட கைகளை மடங்கிய கைகளாக மாற்ற இயலவே இயலாது என்பது எளிய உண்மையாகும்.
அதையும் மீறி செய்ய வேண்டுமானால் பாகுபலி சிற்பத்தை முற்றிலும் நீக்கிவிட்டு முழுமையாக செதுக்கியிருக்க வேண்டும். ஆனால், கோஷ்டட்த்தின் ஆழமும், சிற்பம் தொடங்கும் இடமும் இக்கூற்றுக்கு சாதகமாக இல்லை.

முடிவுரை:

ஆக, தென்பரங்குன்றத்தில் தற்போதுள்ள சிற்பங்களானது கைவிடப்பட்ட
8ம் நூற்றாண்டுக் குடைவரையில் வடிக்கப்பட்ட 13ம் நூற்றாண்டு
சிற்பங்களே என்றாலும், எந்த சமணச் சிற்பங்களையும் அழித்து உருவாக்கப்படாத முதல்நிலைச் சிற்பங்கள் என்பதும், கலைக்கோவனின் ஆய்வுகளில் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது.
ஆதாரம்: மதுரை மாவட்டக் குடைவரைகள் – மு.நளினி; இரா. கலைக்கோவம்; பக்கம் 100-107

நன்றி: அர்த்தமண்டப கோஷ்ட சிற்பங்களின் படங்கள் - R.k. Lakshmi

No comments:

Post a Comment