Saturday, May 30, 2015

சங்கத் தமிழரை கண்டித்த திருவள்ளுவர்

பழந்தமிழ் மக்களிடையே மது, கள் அருந்தும் பழக்கம் தனிச் சிறப்புடன் விளங்கியது. அரசன் முதல் புலவர்கள், சான்றோர்கள். குடிமக்கள் வரை ஆண், பெண் அனைவரும் களிப்புடன் கள்ளைப் பருகி மகிழ்ந்த செய்திகளைப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் காணலாம். போதைக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் உடல் வெம்மைக்காகவும் பழந்தமிழர் பயன்படுத்திய ‘மது’, ‘கள்’ ஆகியன பற்றிய குறிப்புகளை இந்நூல்கள் விரிவாகக் குறிக்கின்றன. உள்நாட்டு மது வகைகளுடன் அயலக மது வகைகளும் பயன்படுத்தப்பட்டன. ‘யவன மது’வை மிக விருப்புடன் மகளிர் அருந்திய செய்தியைப் புறநானூறு குறிப்பிடுகின்றது. மட்டு, மது, நறவு, தேறல், கள் எனப் பல்வகைப் பெயர் பெற்று விளங்கும் குடிவகைகள் தேன், நெல்லரிசி, பழங்கள், பூவகைகள், தென்னை. பனை போன்ற மரங்களிலிருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டன.

கள் ‍ என்ற வார்த்தை களித்திருத்தல் (இன்பமாக இருத்தல்) என்ற சொல்லிருந்து வந்ததாகும். ‌கள் என்ற சொல் சங்க இலக்கியத்தில் வெறிநீர், பதநீர், மட்டு, தேன் ஆகிய நால்வகை பதங்களோடு குறிக்கப்படுகிறது. 
 
மதுவில் தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள், பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு. நெல்லால் சமைத்த கள் நறவு எனவும்,  தேனால் சமைத்த கள் தேறல் எனவும்,  பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.

கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்படுகின்றன.

கூறு மிக்க அரிசி பனை மரத்தின் காய் இவற்றின் கூழ் 8 லிட்டர் ம‌ற்றும் 21.5 லி உளுந்தை ஊறவைத்த தண்ணீர் இவற்றின் கலவை மதுக்குழம்பு எனப்படும் (ஒரு தூணி உழுந்துக்கழுநீர், 1 கருடம் கூறு மிக்க அரிசி மற்றும் பெருங் குரும்பை)
 
ஒரு தூணி உழுந்துக்கழுநீர் - 21.5 லி உளுந்தை ஊறவைத்த தண்ணீர் 
பெருங் குரும்பை - பனை மரத்தில் காய்க்கும் பிஞ்சு காய் ‍நுங்குவின் முந்தைய நிலை 
1 கருடம் - 1 மரக்கால் -  8 படி - தோரயமாக 8 லிட்டர்
 
ஒர் ஆண்டு வரை ஊறல் வைக்கப்படும் மது வகைகள் தலையாயது என்றும், ஆறு மாதங்கள் வரை ஊறல் வைக்கப்படும் மது வகைகள் இடையாயது என்றும், ஒரு மாதம் ஊறல் வைக்கப்படும் மது வகைகள் கடையாயது என்றும் அழைக்கப்படும்.
 
தோப்பி 
ஒரு தூணி நீர்(21.5 லி) அரை மரக்கால்(4 ப‌டி) அரிசி மூன்று படி மதுக்குழம்பு இவற்றின் கலவை தோப்பி எனப்படும்.
 வீடுகளிலேயே தயாரிக்கப்பட்ட கள்ளிற்குத் ‘தோப்பிகள்’ என்று பெயர்.
இல்லடு கள்ளின் தோப்பி பருகி
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
தேறல் 
பன்னிரண்டு மரக்கால் மா ஐந்து படி மதுக்குழம்பு புத்திரகமரத்தின் பட்டை கனிகள் மணக்கூட்டு இவைகளின் கலவை தேறல் எனப்படும்.
தேனை மூங்கில் குழாய்களில் பெய்து அதனை முதிர்விப்பார்கள். நாட்பட நாட்பட இத்தேனின் சுவை அதிகமாகும். இவ்வாறு பதனப்படுத்திச் சுவையேற்றிய மதுவே தேக்கள் தேறல் எனப்படும். குறவர்கள் இத்தகு ‘தேக்கள் தேறலை’ப் பருகிக் குறிஞ்சிக் கடவுளான முருகனைப் பாடி ஆடுவார்களாம். தேனினை மூங்கில் குழாயில் ஊறல் முறைப்படி முற்ற வைக்கும் இத்’தேக்கள் தேறலை’ப் பற்றிய குறிப்புகள் திருமுருகாற்றுப் படை, மலைபடுகடாம், அகநானூறு ஆகிய நூல்களில் காணப் பெறுகின்றன.
 
பிழி 
ஒரு துலை விளம்பழம், ஐந்து துலை பாகு, ஒரு படி தேன் இவைகளுடைய கலவை பிழி எனப்படும். காற்கூறு மிக்கது தலையாயது. காற்கூறு குறைந்தது கடையாயது.
 
1 துலை - 1 துலாம் - 3.5 கி.கி.  
பாகு - செறிவாக் காய்ச்சிய சர்க்கரை
 
சாராயம் 
ஆடு திண்ணாப்பாளை திப்பிலி என்னும் இவற்றின் சாற்றைக் கொதிக்க வைத்து அதனோடு கருப்பஞ்சாறு வெல்லம் தேன்பாகு நாவற்பழச்சாறு பலாப்பழச்சாறு என்னும் இவற்றுள் ஒன்றைக் கலந்து ஒரு திங்கள் ஆறு திங்கள் அல்லது ஓர் யாண்டு வரை வைத்துப் பின் அதனோடு சிற்பிடம் வெள்ளரிப் பழம் கரும்பு மாம்பழம் நெல்லிக்கனி என்னுமிவற்றின் சாற்றிற் கலந்தேனும் கலவாமலேனும் அமைக்கப் படுவன சாராய வகைகளாம். 
 
நறும்பிழி
நெல்முளையைக் காயவைத்து  மாவாக்கி ,பிறகு அரிசியை கொதிக்க வைத்து அதனுடன் ஏற்கனவே அரைத்த மாவையும் கலந்து கூழாக்கி, அதை வாய் அகன்ற தாம்பளத்தில் இட்டு காய வைப்பார்கள். அதை குடத்தில் வைத்து இரு இரவும், இரு பகலும் தொடமல் வைக்க வேண்டும். இரு நாள் கழித்து எடுத்து உண்ணப்படும் கள்ளுக்கு நறும்பிழி எனப் பெயர். 
 தொண்டை நாட்டில் வாழ்ந்த ‘வலையர்’ என்பார் தயாரிக்கும் கள் ‘நறும்பிழி’ எனப்பட்டது. குற்றாத கொழியில் அரிசியைக் களி போல் துழாவிக் கூழாக்குவார்கள். பின் அதனை ஆறச் செய்ய, வாயகன்ற தாம்பாளம் போன்ற தட்டுப் பிழாவில் ஊற்றி ஆற்றுவர். நெல் முனையை இடித்து அக்கூழிற் கலப்பர்; கலந்த இக்கூழினை இரண்டு நாட்கள் சாடியில் ஊற்றி வைப்பர். நன்கு ஊறிய பின்பு விரலாலே அரிப்பர். இவ்வாறு அரிக்கப்படும் கள் மிகுந்த சுவையினை உடையதாக இருக்கும். நறும்பிழி எனப்படும் இக்கள்ளினை வலையர்கள் உண்டு மகிழ்ந்தனர் என்னும் செய்தியினைப் பெரும்பாணாற்றுப் படையில் காணலாம்.
தேக்கள்
மூங்கில் அரிசியுடன் தேனைக் கலந்து கூழாக்கி, அந்த தெளிவை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்து சிறிது நாள் கழித்து எடுத்து பருக வேண்டும். இதற்கு தேக்கள் தேறல் எனப் பெயர்.
 
சங்க காலப் பெண்பாற் புலவர் ஒளவையாரும் தகடூர் அரசன் அதியமானும் சேர்ந்தே மது அருந்தியுள்ளனர் (புறநானூறு பா. 235). மன்னன் அதியமான் ஒளவையாரின் புலால் நாற்றம் அடிக்கின்ற கூந்தலை நரந்தம்புல்லின் மணம் வீசும் தன் கையால் தடவிக் கொடுப்பதாக ஒரு குறிப்புள்ளது. 
 
புணர்ச்சியின் போது நுகரப்படும் கள் காம பானம் எனப்பட்டது, போருக்குச் செல்லுமுன் மறவ்ர்கள் அருந்தும் கள் வீரபானம் எனப்பட்டது. பூக்கமழ் தேறல், மணங்கமழ் தேறல் என்று கூறப்படும் இருவகை மதுபானமும் காமபானமாக உட்கொள்ளப்பட்டதாக இலக்கியங்களில் காணப்ப‌டுகின்றன. பெண்கள் புணர்ச்சியினபோது கள் அருந்தியதாக பட்டிணப்பாலை பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது.
 
"பட்டு நீக்கித்துகிலுடுத்தும் 
 மட்டு நீக்கி மதுமகிழ்ந்தும்” 
 
பெண்கள் புணர்ச்சி நேரத்தில் பட்டு ஆடகளை நீக்கி, நூலாடை அணிந்தும், மயக்கம் தராத கள்ளை உண்டு மகிழ்ந்தனர் எனப் பொருள். இங்கு "மட்டு" என்பது இனிய சுவை உடையது, மயக்கத்தை தராதது எனப் பொருள்படும்.
பெண்ணைப் பிழி (பனங்கள்)
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த பரதவர்கள் பனங்கள்ளைப் பருகிய செய்தி பட்டினப்பாலையில் குறிக்கப்பட்டுள்ளது.
--------------------
நறவு
நன்னனது மலைநாட்டில் வாழும் மக்கள் நடத்தும் விருந்தில் தேக்கள் தேறலையும், நறவு எனப்படும் கள்ளினையும் பரிமாறி உண்டதாகத் தெரிகிறது. ‘நறவு’ என்பது நெல்லரிசி கொண்டு அமைக்கப்பட்ட ‘கள்’ ஆகும்.
------------------------
பூக்கமழ் தேறல்
செல்வந்தர்களின் மாளிகைகளிலும் அரண்மனைகளிலும் இவ்வகை மது பருகப்பட்டது. பொற்கலசங்களில், தேக்கள் தேறல் போன்றவற்றில் இஞ்சி, குங்குமப்பூ போன்ற மணங்கமழும் பூக்களை இட்டுத் தயாரிக்கப்படுவதே ‘பூக்கமழ் தேறல்’ ஆகும். அரசர்கள் இத்தகு தேறலை உண்டு வாழ்ந்த வரலாற்றை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் குறிப்பிடுகிறார்.
-----------------
கட்சுவையும் – பழச்சுவையும்
படைவீரர்கள் கள்ளை விரும்பிக் குடிப்பதால் நாவில் ஏற்படும் புளிப்பு வேட்கைக்குக் களாப்பழமும், துடரிப்பழமும் உண்டனர். அப்படியும் நீர் வேட்கை தணியாமையால், கருநாவல் பழத்தைப் பறித்து உண்டனர். கள் உண்டதால் ஏற்பட்ட நீர் வேட்கையைக் களாப்பழமும், துடரிப்பழமும். கருநாவற் பழமும் தணிவித்ததுடன் உடலுக்கு உரமாகவும் இவை விளங்கின. படை வீரர்கட்கு அளப்பரிய வலிமையையும் இவை அளித்தன. களாப்பழம் உடம்பு வலியைப் போக்குவதுடன் மலையைப் போன்று உடலுக்கு வன்மையை அளிக்கும் குணம் உடையது. கருநாவற்பழம் கள் அருந்துதலால் ஏற்படும் உடல் வறட்சியைப் போக்கி உடலுக்கு உரமளிக்கும் தன்மையுடையது என்பதை மூலிகைக் குணபாடம் வழி அறியலாம். எனவே, கள்ளைப் பருகினாலும், அதன் தீமைகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும் வகையில் பழ வகைகளையும் அக்காலத்தில் உண்டனர். அதனால் கள் உடலுக்குத் தீமையை உண்டாக்கவில்லை.
--------------------
கண் சிவக்கும் கள்
வையை ஆற்றில் நீராடிய தலைவி உடலின் ஈரம் புலர வெப்பத்தைத் தரும் கள்ளைப் பருகினாள். கள் பருகுவதற்கு முன் நெய்தற் பூவைப் போன்ற கருமையாக இருந்த கண்கள் கள்ளைப் பருகியபின், நறவம் பூவைப் போல சிவந்தனவாம். அவ்வளவு வெப்பத்தினை அளிக்க வல்ல கள்ளைப் பருகி, நீராடிய களைப்பைப் போக்கி மகிழ்ந்தனர் அக்கால மகளிர் என்பதைப் பரிபாடல் உணர்த்தும்.
குளிரைப் போக்கும் கள்
தானைத் தலைவன் ஒருவன் போருக்குச் செல்லத் தயாராகின்றான். அப்போது நடுக்கத்தைத் தரும் குளிரிலிருந்து உடம்பைப் பாதுகாக்க நாறால் வடிக்கப்பட்ட ‘நறவு’ என்னும் கள்ளைப் பருகிச் செல்கின்றான். உண்டார்க்கு வெம்மையை அளிக்கும் குணம் நறவு கள்ளுக்குண்டு என்பதைப் புறுநானூற்றுப் பாடல் கருத்து குறிப்பிடுகிறது.
------------------
வழி நடை வலியைப் போக்கிய கள்
பரிசில் பெற வழிநடை சென்ற பாணர்களுக்கு ஏவல் மகளிர் பொன்னாற் செய்த வட்டில் நிறையக் கள்ளினை அளித்தனர். அக் கள்ளினைப் பாணர்கள் பருகி வழிநடையால் ஏற்பட்ட உடல் வலியைப் போக்கிக் கொண்டனர். போதைக்கு மட்டுமின்றி உடல் வலியைப் போக்குவதற்கும் அக்கால மக்கள் கள் பருகியமையை இச்செய்தி உணர்த்தும்.
இவ்வாறு பழந்தமிழர் பழக்கத்தில் நிலவிய பலவகை மதுவும், கள்ளும் போதைக்காகவும் உடல் நலத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டதை அறியலாம். இக்காலத்து, தென்னை, பனை, ஈந்து, அரிசி போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் மது, வயிறு, நுரையீரல் போன்ற உள் உறுப்புகளின் நோய்களுக்கு மருந்தாவதை நோக்கும்போது சங்க காலத்துத் தயாரிக்கப்பட்ட இவ்வகை மதுவும், கள்ளும், உடல்நலத்தைக் கெடுக்கவில்லை என்பதையும், மாறாக இவை குளிர்காலங்களில் உடலுக்கு வெம்மையைத் தந்து, வழிநடையின் பொது வலியைப் போக்கிக் களைப்பையும், நீர் வேட்கையையும் தணித்து உடலுக்கு உரம் அளித்த திறத்தினையும் அறியலாம்.
மதுவையும் கள்ளையும் பயன்படுத்திய பழந்தமிழர் இவற்றுடன் களா, துடரி, கருநாவல், இஞ்சி, குங்கும்பூ, இலுப்பைப்பூ போன்ற மருத்துவக் குணமுடைய துணைப் பொருட்களையும் கலந்து உண்ட தால் உடல் வலிமை பெற்றனரேயன்றித், தீமை ஏதும் பெறவில்லை என்பதை அறியலாம். பழந்தமிழர் மதுப்பழக்கம் இக்கால மதுவினின்று முற்றிலும் வேறுபட்டது. இயற்கைப் பொருட்களி லிருந்து அவை தயாரிக்கப்பட்டதால் உடலுக்கு நன்மை அளித்தன. அதனால் தான் ஔவை போன்ற பெண்பாற் சான்றோர்களும் அதனைப் பருகி மகிழ்ந்து போற்றினர். அவ்வகையில் பழந் தமிழரின் நலவாழ்வுக்கு உறுதுணையாகும் வகையில் அமைந்த நலம் தரும் பழக்கங்களில் தலைசிறந்த பழக்கமாக ‘மதுப் பழக்கம்’ இருந்தது. பிற்காலத்தில் சித்தர்கள் பட்டைச் சாராயம் என்னும் பெயரில் தயாரித்த மதுவுக்கும் சங்க கால ‘மது’, ‘கள்’ ஆகியவற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சங்க கால மதுவின் விரிவான வளர்ச்சியைச் சித்தர்களின் பட்டைச் சாராயத் தயாரிப்பில் காணலாம். 
சமீப காலமாய் அதியமான் ஔவை பற்றி இன்னொரு செய்தியும் பிரபலமாகி வருகிறது. மது தொடர்பானது தான் அதுவும். அரசனுக்கு ஒரு மடக்கு மது கிடைத்தால், அதை ஔவைக்கே வழங்கிடுவாராம். ஒரு கோப்பை கிடைத்தால் அரசன் பாதி ஔவை பாதி என்று பகிர்ந்து கொள்வாரம். 

திருக்குறளின் ‘கள்ளுண்ணாமை’ என்னும் அதிகாரத்தில் மது அருந்தும் பழக்கத்தைக் குற்றம் என்றும், அதனால் ஏற்படும் தீங்குகளையும் ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். 

’எதையும் மன்னிப்பவள் தாய், அந்த தாய்க்கூட குடிக்கும் பழக்கத்தை மன்னிக்க மாட்டாள், மன்னிக்கக் கூடாது!’ என்கிறது ஒரு குறள். இதுதான் வள்ளுவர் வகுத்த சட்டம். குடிப்பழக்கத்தை மிகப்பெரும் குற்றமாக கருதுதல் வேண்டும். தமிழர்களின் மூலநூல் திருக்குறள் என்று மார்தட்டிக் கொண்டால் மட்டும் போதாது, திருக்குறளில் இருக்கும் குறள்வழியும் நாம் நடந்து கொள்ளவேண்டும்.
வள்ளுவர் கள்ளுண்பவரைச் செத்தவராகவே எண்ணுகின்றார்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லார் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

இப்படி அறிவை கெடுத்துப் பிறரால் எள்ளப்படும் தன்மைக்கு ஆளாக்கும் குடி சமுதாயத்திற்குத் தேவையில்லை என்ற காரணத்திற்காக தான் வள்ளுவர் ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார்.மது நஞ்சு என்று தெரிந்தும் கண்ணை திறந்து கொண்டே கிணற்றில் விழுவது போல அதில் விழுந்து உழன்று கொண்டிருப்பவர்கள் சிந்தித்தால் வள்ளுவர் கண்ட உயர்ந்த சமுதாயம் உருவாகக் முடியும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் 
திண்ணிய ராகப் பெறின்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

மதுவை மறப்போம்,மகிழ்வை பெறுவோம்.சமுதாயத்தில் நன்மக்கள் என்ற பெயரினை அடைவோம்என்ற எண்ணத்தில் தெளிவும் உறுதியும் கொண்டு செயல்படுவோம் என்ற உறுதியை ஒவ்வொரு இளைஞர்களும் கொண்டால் வள்ளுவர் கண்ட சமுதாயம் மலரும்.\

மதுவை உண்ணுவதால் ,பிறரால் மதிக்க கூடிய தன்மையை இழப்பதுடன்,தன் தோற்றப் பொலிவினையும் இழப்பர்.

உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
களகாதல் கொண்டொழுகுவார்.

இதனையே அறநெறி சாரமும் ,

ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடையன் என்றுரைக்கும்தேசும் - களியென்னும்
கட்டுரையால் கோது படுமேல் இவையெல்லாம்
விட்டொழியும் வேறாய் விரைந்து (144)

வஞ்சமுங் களவும் பொய்யு மயக்கமு மரபில் கொட்புந்
தஞ்சமென் றாரை நீக்குந் தன்மையுங் களிப்புந் தாக்கும்

எனக் கம்பராமாயணமும் மது உண்பதால் ஏற்படும் விளைவுகளைக் கூறுகின்றன.
கள்ளுண்பவனைத் தாயே மதிக்கமாட்டாள் என்றால் பிறகு யார் தான் மதிப்பார்கள்.
யாவரும் இகழக்கடிய மதுவை உண்பவனிடத்து வெட்கம் கூட அவனை விட்டு சென்றுவிடும்.

’எவன் ஒருவன் குடிப்பழக்கத்தைப் பின்பற்றுகிறானோ, அவன் செத்துப் போனவர்களுள் வைக்கப்படுவான்’ என்கிறார் வள்ளுவர். ’என்று குடிக்கத் தொடங்குகிறானோ, அன்றே அவன் செத்தான்’ என்று குடிப்பழக்கத்தை முற்றிலும் புறக்கணிக்கார் நம் ஐயன் வள்ளுவர். இவ்வாறு மதுவை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக வள்ளுவர் குறள்களை இயற்றினார்.
 திருக்குறளில் வள்ளுவர் 1330 குறளில் தமிழ் என்ற சொல்லை பயன் படுத்தவே இல்லை.


தமிழரிடம் பரவலாய் இருந்த மது அருந்துதலை கண்டித்த திருவள்ளுவர்

4 comments:

  1. திராட்சை இரசம் குடித்த இயேசு, பேர்த்தம் பழ இரசம் குடித்த முஹம்மது, கள்ளு இரசம் குடித்த ஒவ்வையார் இவர்களெல்லாம் தவறு என்பதனை விட கள்ளு குடிக்காத வள்ளுவனே தவறானவர். கள்ளின் சுவை தெரியாமல் அது கலகம் விளைவிக்கும் என்று சொல்வது தவறு. களவும் கற்று மற என்பதுதான் நல்வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா? (எழுத்தாளர் ஜோ. தமிழ்ச்செல்வன்) .
      அப்ப எதுக்கு இஸ்லாம்ல குடிக்ககூடாதுன்னு சொல்ராங்க? அனுபவத்தால் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு உரைப்பது தவருங்களா?? இதை செய்தால் இப்படி நடக்கும் நல்லதௌ இது கெட்டது இது என்று பெற்ற அறிவை சொல்லுவது தவறா?. களவு கற்றப்பிறகு எல்லாராலும் மறக்க முடியாதென்பதை தெரிந்துதான் சொல்கிரார் வள்ளுவர் அவரை விட அறிவா (ரசங்களை) குடித்தவர்கள்,....அப்படின்னா இன்னைக்கு உலகமும், மணிதமும் இப்படி தீவிரவாதத்தினாலும், ம(மா)க்கள் தொகையாலும் அவதிப்படாது.

      Delete
  2. அப்படிங்களா? அப்ப எதுக்கு இஸ்லாம்ல குடிக்ககூடாதுன்னு சொல்ராங்க? அனுபவத்தால் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு உரைப்பது தவருங்களா?? இதை செய்தால் இப்படி நடக்கும் நல்லதௌ இது கெட்டது இது என்று பெற்ற அறிவை சொல்லுவது தவறா?. களவு கற்றப்பிறகு எல்லாராலும் மறக்க முடியாதென்பதை தெரிந்துதான் சொல்கிரார் வள்ளுவர் அவரை விட அறிவா (ரசங்களை) குடித்தவர்கள்,....அப்படின்னா இன்னைக்கு உலகமும், மணிதமும் இப்படி தீவிரவாதத்தினாலும், ம(மா)க்கள் தொகையாலும் அவதிப்படாது.

    ReplyDelete
  3. In Islam, drinking of any alcoholic drink is not only prohibited, by religion, but is called Haram in Arabic, meaning against religion itself. Arabs take dates in both the raw dates form which is yellow in colour, juicy and bitter and biting in taste. That along with bitter coffee i.e Kahwa made from black coffee with cardamom is their official drink in Govt offices, which totally kills appetite. Even that you cannot take during Ramzan fasting period. I had lived in Muscat and coffee with date offering is a great custom, for them. In a typical Islamic court the punishment for drinking alcohol in the Ramzan period is death.

    ReplyDelete