Thursday, March 8, 2018

திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)

திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், பழைய உரையாசிரியர்களும் தமிழர் மெய்யியல் மரபில் வள்ளுவர் வீடுபேறைக் கூறி உள்ளார் எனத் தெளிவாய் காட்டுகின்றனர்

 இதைப் பரிதிப்பெருமாளும் பரிமேலழகரும் செய்வதற்கு முன்னரே மணக்குடவர் செய்துள்ளார். அவரது உரையில்,
புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்...
என்று மணக்குடவர் விளக்குகிறார்.
அதுபோலவே பழைய உரையாசிரியர் பரிப்பெருமாளும் கூறுகின்றார்:
உலகத்து மக்கட்கு உறுதி பயத்தல் காரணமாகப் பல வகைப்பட்ட சமய நூல்கள் எல்லாவற்றுள்ளும் துணிந்துரைத்த அறம் பொருள் இன்பம் வீடு நான்கினையும் அருங்கினமுகத்து உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள் வீடாவது அறஞ்செய்தாரது பயனாதலின் அவ்வீடு பேற்றை அறத்தினுள் அடக்கி அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்றார்.
 பரிமேலழகர் 
இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை, அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆதலில், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவது அல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூற்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.
தேவாரம் ஞானசம்பந்தர்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
  மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே - 575/3,4

                                          தேவாரம் அப்பர்

 அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு
அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் -   2747/3

                                               நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
 மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் - நாலாயி:2716/1
                                               ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64
 அறம் பொருள் இன்பம் வீடு என்பன பற்றி ஔவைப் பிராட்டியார் ஒரு வெண்பாவில் விளக்கியுள்ளமை அறிந்து இன்புறத் தக்கது.
            
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.                        -ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64


ஈதல் அறம் = மற்றவர்களுக்கு தருவது அறம்
தீவினைவிட்டு ஈட்டல்பொருள்  = தீய வழிகளை தவிர்த்து, நல்ல வழியில் உழைத்து சேர்ப்பது பொருள்
எஞ்ஞான்றும் = எப்போதும்
காதல் இருவர்  = காதலர் இருவர் (கணவன் மனைவி என்று சொல்லவில்லை)
கருத்து ஒருமித்து = ஒத்த கருத்துடன் (சண்டை போடாமல், வேண்டா வெறுப்பாகச் செய்யாமல்)
ஆதரவு  பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து ஆதரவு தருவதே இன்பம்
பரனை நினைந்து = இறைவனை நினைத்து
இம்மூன்றும் = இந்த மூன்றையும் (பேரின்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து)
விட்டதே பேரின்ப வீடு. - = விடுவதே பெரிய இன்பம், வீடு பேறு

தான் பெற்ற கல்வியினால் அறச் செயல்கள் செய்ய வேண்டும் வீடுபேறு அடையவே.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.               குறள் 38:  (அறன்வலியுறுத்தல்)
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்
மனித வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது, நாம் இங்கே பிறந்து பிறந்து இறக்கிறோம்

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு -                          குறள் 349

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.                             குறள் 10 -கடவுள் வாழ்த்து

மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க உலகினைப் படைத்த தெய்வத்தின்  திருவடியைப் பற்றிக் கொண்டு பின்பற்றினால் மட்டுமே, மற்றவரால் இயலாது.
வீடுபேறு எனும் மோக்ஷம், பிறவியில்லா நிலையை அடைதலே திருக்குறளின் அடிப்படை.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
        மற்றீண்டு வாரா நெறி.  
356.                       மெய்யுணர்தல்


கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று  மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

5 comments:

  1. அன்பர்கள் திருக்குறளில் இறை பற்றிய மாற்று கருத்து
    அடங்கிய பாவேந்தர் கண்ணோட்டம் யாதென அறிய
    விழைபவர்கள் முகநூல் பக்கம்

    @tirukkural.in.6.languages

    பார்க்கலாம்.

    ReplyDelete
  2. #வீடுபேறு என ஒன்று கிடையாது என்பதுவே திருவள்ளுவரின் முடிவு. உயிர் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்னும் அச்சத்தால் எற்படுத்தப்பட்டதே வீடுபேறு ஆகும்.

    இதைத் திருவள்ளுவர்.
    "அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப்படும்." என்பார்.
    மேலும் தீரத்துறந்தார் முதலியோர் அடையும் முடிந்த நிலையாக மிகவும் உயர்வான விளக்க முடியாத எச்சில்படாத மெய்ப்பொருள் பற்றிக் கூறும் #மெய்யுணர்வு அதிகாரத்தைக் கூறும் திருவள்ளுவர் உயிர் வாழும் வீடுபேறு அல்லது மோட்சம் பற்றிக் கூறும் தாழ்ந்த நிலை பற்றிக் கூறுவாரா? சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  3. #வீடுபேறு என ஒன்று கிடையாது என்பதுவே திருவள்ளுவரின் முடிவு. உயிர் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்னும் அச்சத்தால் எற்படுத்தப்பட்டதே வீடுபேறு ஆகும்.

    இதைத் திருவள்ளுவர்.
    "அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப்படும்." என்பார்.
    மேலும் தீரத்துறந்தார் முதலியோர் அடையும் முடிந்த நிலையாக மிகவும் உயர்வான விளக்க முடியாத எச்சில்படாத மெய்ப்பொருள் பற்றிக் கூறும் #மெய்யுணர்வு அதிகாரத்தைக் கூறும் திருவள்ளுவர் உயிர் வாழும் வீடுபேறு அல்லது மோட்சம் பற்றிக் கூறும் தாழ்ந்த நிலை பற்றிக் கூறுவாரா? சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  4. திருக்குறளிற்கு உரை தேடுபவர்கள் தமிழரின் பண்பாடு - பழமை சிறப்பை மறுக்கும் திராவிஷ நாசியர் உரைகளை குப்பை என ஒதுக்கி பல ஆண்டுகள் ஆயிற்று
    வள்ளுவர் சொன்னதை விட்டு சொல்லாத வார்த்தைகளை சேர்த்து நீங்களாக கொள்ளும் பொருள் வள்ளுவர் கூறுவது இல்லை. வள்ளுவர் கூறியதை தான் என் முன்னோரும் இன்றும் மெய்ப் பொருள் தேடும் அறிஞர்கள் ஏற்பர்
    பிறவிப் பெருங்கடல் கடப்பதே மனிதனின் அறச் செயல்களின் எல்லை என்பதே வள்ளுவம்
    சாதாரணமாக அறம் செய்தால் வானுலகம் கிடைக்கும் பாவம் செய்தால் பாதாளம் நரகம் கிட்டும், வினை முடிந்த பின் மீண்டும் பிறப்பு.
    சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 31: அறன்வலியுறுத்தல்
    மணக்குடவர் உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
    பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
    செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்
    மணக்குடவர் உரை: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று
    கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி. குறள் 356:மெய்யுணர்தல்
    மணக்குடவர் உரை:இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.
    சாலமன் பாப்பையா உரை:பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.
    வள்ளுவரின் உள்ளத்தை பாராமல், தமிழர் பண்பாட்டோடு பார்க்காமல் தன்னிச்சையாய் என்னவேணுமானாலும் நீங்கள் பொருள் கொள்ளலாம், வள்ளுவர் உள்ளம் என்ன என்பதே முக்கியம்

    ReplyDelete
  5. உடம்பு என்பது வெறும் எலும்பு தோல் போர்த்தியது, அது வெறும் மனிதனின் ஆன்மா உயிர் தங்கும் கூடு தான், இதில் மனித வாழ்க்கை எனும் பிறப்பு, நேற்று இருந்தவன் இன்றில்லை என்பதே இயல்பு.
    உறஙுவது போலே இறப்பு, உறங்கி விழித்தல் போலே பிறப்பு, அதாவது பல லட்சம் ஆண்டு உள்ள உலகில் நாம் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.
    அந்தப் பிறவிக் கடலை கடப்பதே மனித அறவாழ்வின் அடிப்படை
    பொருள் அல்லாத வற்றை பொருள் எனக் கொண்டு, மீண்டும் மீண்டும் பிறக்கும் பேதைமை நீங்கிட இறைவன் திருவடி பற்றி பிறவா நிலை அடைதலே வள்ளுவம் காட்டும் வழி

    ReplyDelete