எஸ். இராமச்சந்திரன்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605194&format=html
இந்துக் கோயில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு வகை செய்யும் அரசாணை ஒன்றினைத் தமிழக அரசு பிறப்பிக்க இருப்பதாகத் தமிழக நாளிதழ்கள் அனைத்திலும் செய்தி வெளிவந்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை இந்து சமயக் கோயில்களுள் சைவ, வைணவ சமயச் சார்புடைய கோயில்களே பெரும்பான்மையாகும். முருக வழிபாட்டுத் தலங்கள் என்று குறிப்பிடப்படும் கோயில்களிலும் சைவ ஆகம நெறிப்படியே பூசை முதலிய வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள கிராமக் கோயில்கள் எனப்படும் குல தெய்வக் கோயில்கள் மற்றும் சிறு தெய்வக் கோயில்கள் தவிர்த்து உள்ள பிற இந்து சமயக் கோயில்களில் குருக்கள் என அழைக்கப்படும் சிவாச்சாரியார் மரபினரோ பட்டாச்சாரியார் என அழைக்கப்படும் வைணவ ஆச்சாரியார்களோ மட்டுமே பூசைப் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அர்ச்சகர்களாகப் பணிபுரிவதற்கான உரிமையையும் தகுதியையும் அனைத்துச் சாதியினருக்கும் வழங்குகின்ற ஒரு முயற்சியாக அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதன் சட்டபூர்வமான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்வதை விட, இந்நடவடிக்கையை மையமாக வைத்து இந்துக் கோயில்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு விமர்சனபூர்வமான ஆய்வு மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும்.
பக்தி என்பது தனி மனிதனுக்கும், பரம்பொருளுக்கும் (பிரபஞ்சம் என்கிற பிரும்மாண்டமான புதிரை இயக்குவிப்பதாக நம்பப்படுகிற ஆற்றலுக்கும்) இடையில் நடக்கின்ற உணர்வுபூர்வமான ஊடாட்டம் எனக் கருதப்படுகிறது. மனிதனுக்குள் உள்ள ஆழமான உணர்வுகளை நெறிப்படுத்துவதன் மூலம் உணர்வு கடந்த நிலையை எய்தலாம் என்றும் அந்த உணர்வு கடந்த நிலையை எய்துவதே யோகம் ஆகும் என்றும் பக்தி யோகம் என்னும் நெறியைப் பயில்வோர் விளக்கமளிக்கின்றனர். இந்த பக்தி தனி மனித மட்டத்தில் மட்டும் நிற்கும் போது அது ‘ஆன்மிகத் தேட்டம்’ ஆகிறது. அது ஒரு பொது விஷயமாக மாறும்போது மதம் என்ற ஒரு நிறுவனமயமாகிறது.
எந்த ஒரு நிறுவனமானாலும் ஆளும் வர்க்கம் அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது இயல்பு. ராஜராஜ சோழன் தனது தலைநகராகிய தஞ்சையில் ‘ராஜராஜீஸ்வரம்’ என்ற பெயரில் பெருங்கோயில் ஒன்றை எழுப்புவதற்கு அடிப்படையாக இருந்தது ஆன்மிகத் தேட்டமா அல்லது அரசியல் கண்ணோட்டமா என்ற கேள்வி எழுந்தால் அரசியல் கண்ணோட்டம்தான் என்ற எளிய விடையை யாருமே கூறிவிட முடியும்.
அரசியல் பின்னணியுடன் நடைபெறுகின்ற சமய நம்பிக்கை சார்ந்த கட்டமைப்பு முயற்சிகள் வெற்றி பெற்று பிரம்மாண்டமான கட்டுமானங்கள் எழுந்து நிற்பதை உலக வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் நாம் காணமுடியும். ஆனால் அக்கட்டுமானங்கள் எழுப்பப்பட்ட உள்நோக்கத்தை அவற்றின் ஒவ்வோர் அங்கமும் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ உலகுக்குத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றது. சில நேரங்களில் வெளிப்படையாகப் பறைசாற்றுவது போல – சாசனங்களில் இடம்பெறும் மெய்க்கீர்த்திகள் போல – அவை அமைந்து விடுவதுண்டு.
பல நேரங்களில் ரகசியமாகவேனும் அவை தம் நோக்கத்தைப் பிறர்க்குப் புலப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன – தஞ்சைப் பெரிய கோயிலானாலும் சரி, டெல்லி ஜும்மா மசூதியானாலும் சரி. எனவே, அரச வம்சங்களின் அரசியல் உள்நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அல்லது வலுப்படுத்தப்பட்ட மத நிறுவனங்கள் இன்றைய ஜனநாயக அரசியலின் வீச்சுக்கு மட்டும் உட்படாமல் விலகிப் போவதென்பது இயலாத ஒன்றாகும்.
ஏற்கெனவே இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை என்ற பெயரில் இந்து சமயக் கோயில்கள் மற்றும் மடாலயங்களின் வருவாயையும் சொத்துகளையும் நிர்வகிப்பதற்கு – அல்லது வருவாய்க் கணக்குகளை மேற்பார்வையிடுவதற்கு ஓர் அரசுத்துறை இயங்கி வருகிறது. எனவே, ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் இயக்கங்களின் ஆதிக்கம் கோயில்களின் வழிபாட்டு முறைகளிலும் வேறு விதங்களிலாகிலும் நிலைநாட்டப்படுவது இயல்புதான்.
சென்ற 1996 – 2001 காலகட்டங்களில் இருந்த தமிழக அரசு இந்துக் கோயில்களில் தமிழ் அர்ச்சனையைக் கட்டாயமான நடைமுறை ஆக்கிற்று. அப்போது மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் “கலைஞரே போற்றி” என்ற வாசகமும் தமிழ் அர்ச்சனையில் இடம் பெற்றதென்றும், இது குறித்துக் கேள்வி எழுந்த போது, கபாலீஸ்வரனாகிய சிவபெருமானே ஒரு நடனக் கலைஞன்தான் என்பதால் கலைஞரே போற்றி என்பது சிவபெருமானைக் குறிப்பதாகத்தான் பொருள் கொள்ளவேண்டும் என்று பதில் கூறப்பட்டதாகவும் செய்தி இதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது போன்ற எள்ளி நகையாடத்தக்க சில முயற்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அரசியல் அடித்தளத்தின் மீது பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் மத நிறுவனங்கள் அனைத்துமே மாறுகின்ற அரசியல் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதென்பது தவிர்க்க முடியாதது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
மொழி சார்ந்த இன அடையாளத்தை உருவாக்க முயலும் ஓர் இயக்கம், வடக்கு-தெற்கு, ஆரியம்-திராவிடம், இந்தி-தமிழ் என்கிற முரண்பாட்டை முதன்மைப்படுத்தி வளர்ந்த ஓர் இயக்கம் இத்தகைய முயற்சிகளில் இறங்குவதையும் நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். வெகுஜன அரசியலில் இது தவிர்க்க முடியாததுதான். ஆயினும், இது தொடர்பாகச் சில அடிப்படையான கேள்விகள் எழுகின்றன. கோயில்கள் உருவாக்கப்பட்டுப் பெரும் சொத்துடைய நிறுவனங்களாகப் பரிணமித்த வரலாற்றுக் காலகட்டங்களில் நிலவிய சமூக அமைப்பு என்பது இன்றைக்கு முற்றிலும் மாற்றமடைந்து விட்டது.
1765-67ஆம் ஆண்டளவில் மஹாராஷ்டிரத்திலும் தமிழகத்தின் செங்கல்பட்டு சுபா பகுதியிலும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியாரால் மேற்கொள்ளப்பட்ட நில வருவாய்க் கணக்கெடுப்பு முயற்சிகளின் போதே இன்றைய நிலைக்கான விதை ஊன்றப்பட்டு விட்டது. கோயில்களைச் சார்ந்து ஊர்களும் ஒட்டு மொத்த சமூகமும் இயங்கி வந்த நிலை மாறத் தொடங்கிவிட்டது.
1820ஆம் ஆண்டளவில் சர். தாமஸ் மன்றோ தலைமையிலான நில வருவாய் நிர்வாகச் சீரமைப்பு நடவடிக்கைகளின்படி, இந்துக் கோயில்களின் சொத்துகளைக் கணக்கெடுத்து வகைப்படுத்தி நிர்வகிக்கின்ற முயற்சிகள் தொடங்கின.
இன்றைய இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் நிர்வாகத்திற்கான முன்மாதிரியான நடவடிக்கையாக இதனைக் கருதலாம். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் இத்தகைய நடவடிக்கை வேறொரு செயல்பாட்டின் எதிர்வினையாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோயில்களை மையமாக வைத்து அரசியல் அணி சேர்க்கைகளை உருவாக்குவதும் ஆங்கிலேயருக்கு எதிராகப் படை திரட்டுவதும் நிகழ்ந்துள்ளன என்பதற்கும் எடுத்துக்காட்டுகள் உள்ளன. 1760ஆம் ஆண்டில் நெற்கட்டும் செவ்வல் பாளையக்காரர் பூலித்தேவர், யூசுப்கானின் முற்றுகையிலிருந்து தப்பி ராமநாதபுரம் சீமைக்குச் சென்று செல்லத்தேவர் எனப்பட்ட விஜய ரகுநாத சேதுபதியுடன் இணைந்து ராமேஸ்வரம் திருக்கோயிலில் பிரம்மாண்டமான திருச்சுற்று ஒன்றினைக் கட்டுவிக்கின்ற முயற்சியில் இறங்கினார்
எனச் சில வரலாற்றுக் குறிப்புகளால் தெரிய வருகிறது[1]. போர்க்களத்திலிருந்து ஒதுங்கிப் போய் கோயில் கட்டுமானப் பணிகளில் பூலித்தேவர் ஈடுபட்டார் என்பது இதன் பொருளன்று. யூசுப்கானுக்கும், ஆர்க்காட்டு நவாபுக்கும், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினிக்கும் எதிராகப் பாளையக்காரர்களையும், வட்டாரத் தலைவர்களையும் ஒன்று சேர்த்துப் புரட்சி அணி ஒன்றினை உருவாக்குவதற்குப் பூலித்தேவர் முயன்று கொண்டிருந்தார்.
அவரது நோக்கத்துக்கு உகந்த சூழல் ராமேஸ்வரத்தில் நிலவிற்று என்பதும், காசிக்குச் சமமான திருத்தலமாக கருதப்பட்டு ஜம்பு த்வீபம் முழுவதும் உள்ள சிவ பக்தர்களின் தீர்த்த யாத்திரை நிகழ்ச்சி நிரலில் தவறாமல் இடம் பெற்று எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கின்ற ராமேஸ்வரத்தில் சமய உணர்வு என்ற முகாமுக்குள் அமர்ந்து கொண்டு தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவருக்குப் பல வசதிகள் இருந்தன என்பதுமே இதற்குப் பொருளாகும்.
இதே போன்று 1779ஆம் ஆண்டில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் அருளாசியுடன் பாஞ்சாலங்குறிச்சி ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன், சாத்தூர் எறபாப்ப நாயக்கர், ஏழாயிரம் பண்ணை முத்துசாமி ஆண்டுகொண்டார் ஆகிய பாளையக்காரர்களும், சிவகாசி நாடார்களும், தூத்துக்குடிப் பகுதியிலுள்ள ஏழூர் தட்டாப்பாறை வணிதம் சூழ்ந்த கிராமத்து மஹாஜனம் பிள்ளைமார்களும் சேர்ந்து வரி வசூல் செய்து திருச்செந்தூர் முருகன் கோயிலின் மேலைக் கோபுரம் எழுப்புவதற்கு முயற்சி மேற்கொண்டனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.[2] இவர்களுள் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன், அவரது மகன் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினிக்கு எதிராக வரி கட்ட மறுத்து 1780க்கும் 1799க்கும் இடைப்பட்ட காலத்தில் போராடியவர்களாவர். ஏழாயிரம் பண்ணை முத்துசாமி ஆண்டுகொண்டார் என்பவர் 1800-01 அளவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியாரால் தீவாந்தர சிட்சை எனப்பட்ட நாடு கடத்தப்படும் தண்டனையை அனுபவித்து இறந்தவராவார்.[3] எனவே, திருச்செந்தூர் கோயில் மேலைக் கோபுரம் எழுப்புகின்ற பணி என்ற போர்வையில் புரட்சியணிப் பாளையக்காரர்களும் சில சாதி சமூகத் தலைவர்களும் இணைந்து திருச்செந்தூரை மையமாக வைத்து ஆர்க்காட்டு நவாபுக்கும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினிக்கும் எதிரான அணிதிரட்டும் முயற்சியை மேற்கொண்டனர் என்பதும் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர் என்பதும் இதனால் தெரிய வருகின்றன. கோயில்கள் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தமையால் கோயில்களிலோ, கோயில்களை ஒட்டி அமைந்திருந்த அம்பலங்களிலோ ஊர்க்கூட்டங்கள் நடத்தி அப்போதைக்கப்போது எழுகின்ற நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதும் பொதுப் பிரச்சினைகள் ஏற்படும்போது ஊர் ஒன்றுபட்டு அப்பிரச்சினைகளை எதிர்கொள்வதும் தெய்வத்தின் மீது ஆணையிட்டுச் சூளுரைத்து உறுதிமொழிகள் கூறுவதும் அக்கால வாழ்க்கையின் இயல்பான அம்சங்களாகும். இத்தகைய வாழ்க்கை முறை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு இடையூறாக இருந்தமையால்தான் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி நிர்வாகம் கோயில்களை மையமாக வைத்து இயங்கிய வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கின்ற நோக்குடன் கோயில்களின் சொத்துகளை நிர்வகிக்கின்ற அதிகாரத்தைத் தானே ஏற்றது. ஆங்கிலேயர்களால் தொடக்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வுப் போக்கு 20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முழுமை பெற்றது.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததன் பின், அதிலும் குறிப்பாக இந்தியா ஒரு குடியரசு நாடு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டபின் கோயில்களைச் சுற்றி அமைந்த வாழ்க்கை முறையும் பல ஊர்களே தேவதான சுரோத்திரிய மானிய நிலங்களைக் கொண்ட ஊர்களாக இருந்த நிலைமையும் முற்றிலும் மாற்றமடைந்து விட்டன.
நாடு குடியரசாகி 20 ஆண்டுகளுக்குள் கோயில்களிலிருந்த பரம்பரை அறங்காவலர் போன்ற பதவிகளும் ஒழிக்கப்படலாயின. இவ்வாறெல்லாம் இருப்பினும் கோயில் வழிபாட்டு நெறிமுறைகளுடனும் திருவிழாக்களுடனும் தொடர்புடைய தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட நிகழ்வு ஒன்றைத் தவிர, வழிபாட்டு முறையிலான குறுக்கீடுகள் பெருமளவுக்கு நேரவில்லை. “தமிழ் வேந்தர்கள் கட்டிய கோயில்களில் தமிழுக்கு இடமில்லையா” என்பது போன்ற தமிழ் மொழி உணர்வு சார்ந்த முழக்கங்கள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால் இதிலிருந்த உள்முரண்பாடு என்னவென்றால் சைவ சமய நாயன்மார்களின் தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் வைணவ ஆழ்வார்களின் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களெல்லாம் மூடநம்பிக்கையை வளர்ப்பவை; மதம் என்ற போதையில் மனிதனை ஆழ்த்துபவை – எனவே, அவை எரித்து அழிக்கப்பட வேண்டியவை என்று பிரச்சாரம் செய்த இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் குரல்களும் இத்தகைய நியாயமான முழக்கங்களோடு இணைந்து ஒலித்தன. இத்தகைய முரண்பாடு போன்றே மிட்டா-மிராசுகள், பரம்பரை ஆதிக்க சக்திகள் ஆகியோரின் பிடியிலிருந்து தமிழ்ச் சமூகத்தை விடுவிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றிய இயக்கத்தவரே, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டுவித்த ராஜராஜ சோழனுடைய சிலை என்று தாங்களாகவே ஓர் உருவத்தைக் கற்பனை செய்து சிலை வடிக்கச் செய்து அச்சிலையைப் பெரிய கோயிலுக்குள் நிறுவுவதற்கும் முயற்சி மேற்கொண்டனர்.[4] (அன்றைய நிலையில் பெரிய கோயிலை நிர்வகித்த இந்திய அரசு தொல்லியல் துறை அச்சிலையைக் கோயிலுக்குள் நிறுவுவதற்கு மறுத்துவிட்டது என்பதும், இன்றைய நிலையில் அச்சிலை கோயிலுக்குள் நிறுவப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதும் வேறு கதையாகும்.) இந்நிகழ்வின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அமைந்த ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு முடிசூட்டு விழா 1984ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் பிரதமரே கலந்து கொண்ட ஒரு பெரும் திருவிழாவாக நடைபெற்றது.
கம்ப ராமாயணமும் பெரிய புராணமும் எரிக்கப்படவேண்டிய சீரழிவு இலக்கியங்கள் என்று பறைசாற்றி “தீ பரவட்டும்” என்று அறைகூவல் விடுத்து இயக்கம் கண்டவர்கள் பண்டைக் காலத்தில் ரோமானிய நாகரிகத்திலும் கிரேக்க நாகரிகத்திலும் வழிபடப் பெற்றுவந்த சிலைகளெல்லாம் இன்றைக்கு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாகிவிட்டன, ஆனால் இந்தியாவில் மட்டும்தான் கற்சிலைகளின் மீது பாலையும் தேனையும் கொட்டி அபிஷேகம் செய்து கும்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற ஆதங்கத்தில் ‘மாஜி கடவுள்கள்’ என்ற நூலை எழுதியவரின் தலைமையில் உருவான இயக்கத்தவர்கள்தாம் இத்தகைய பெருவிழாக்களையும் மிகுந்த ஈடுபாட்டோடு கொண்டாடினார்கள். “தில்லை நடராசரையும் ஸ்ரீரங்க நாதரையும் பீரங்கி வைத்துப் பெயர்த்தெடுப்பது எந்நாளோ” என்று கனல் தெறிக்கக் கவிதை பாடியவர்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாகக் காட்டிக் கொள்கின்ற மனநிலையும், பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜனுக்குச் சிலை வைத்து அம்மன்னன் முடி சூடிய திருநாளைப் பெரும் திருவிழாவாகக் கொண்டாடுவதற்கு விழைகின்ற மனநிலையும் ஒருவரிடத்திலேயே காணப்படுவது நம்மை மலைக்க வைக்கின்றது. டில்லி சுல்தான்களின் படையெடுப்புக் காலகட்டத்தில் – கி.பி. 14ஆம் நூற்றாண்டில் திருவரங்கம் பெருமாள் சிலையைக் காப்பதற்காக ஊணுறக்கமின்றி வைணவ அடியார்கள் பலர் ஊர் ஊராக அலைந்து திரிந்த வரலாற்றிலுள்ள வீரம் செறிந்த, ஜனநாயகப் பண்புமிக்க ஆக்கிரமிப்பு எதிர்ப்புணர்வும் ஈடுபாடும் உண்மையானவை. ஆனால், ராஜராஜனின் சிலைக்காக எழுப்பப்படும் கோஷங்களுக்குப் பின்னணியாக இருப்பது போல ஜோடிக்கப்படுகின்ற வட புலத்திலும் கடல் கடந்த நாடுகளிலும் புலிக் கொடியைப் பறக்க விட்ட சோழரின் வீரம் குறித்த பெருமிதம், உணர்வு பூர்வமானதோ இயல்பானதோ அன்று.
புறநானூறு 290ஆம் பாடலில் ஒளவையார் எந்த உணர்வை வேரூன்றச் செய்வதற்கு முயல்கிறாரோ அந்த உணர்வுதான் இதற்கும் பின்புலமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. அந்தப் புறநானூற்றுப் பாடலின் கருத்து இதுதான்: “முன்னொரு நாள் நடந்த போரின் போது உனது பாட்டனை நோக்கி எதிரிகள் எறிந்த வேலினை, இதோ இருக்கின்றானே இவனது பாட்டன் தன் நெஞ்சில் தாங்கி உயிர் துறந்தான். இவன் பாரம்பரியமே உன் முன்னோர்களைக் காப்பதற்காக உயிர் விட்ட பெருமையை உடையது. மறத்தன்மை நிறைந்த இவனும் உன்னை நோக்கி எதிரிகள் எறியும் வேலைத் தாங்கும் கவசமாகச் செயல்படுவான். ஆகவே, இவனுக்கு மேலும் மேலும் கள்ளை ஊற்றிக் கொடு”. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று எதிர்ப்புக் குரல் கொடுத்த அப்பர் பெருமானை விட எந்த விதத்தில் இத்தகைய பேரரசர்கள் தமிழ் உணர்வு சார்ந்த ஜனநாயகப் பண்புகளின் பிரதிநிதியாக உள்ளனர் என்பதற்கு இந்த இயக்கத்தவர்தாம் விடை கூற வேண்டும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு வழி செய்யும் நடவடிக்கையும் இத்தகைய முரண்பாடுகளின் உச்சகட்ட அடையாளமாகவே தோன்றுகிறது. ஆகம நெறிகளின்படி அமைக்கப்பட்ட கோயில்களில் அந்தந்த ஆகம நெறிப்படிதான் பூசைகளும் வழிபாடுகளும் பிற சடங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஆகமங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அர்ச்சகர்கள் ஆகின்றனர். மறை (மறைவாக உச்சரிக்கப்படுவது மற்றும் மறை பொருள் உடையது) எனப்படும் வேதங்களைக் கற்றவர்கள் மறையோர் எனப்பட்டனர்
. வேதங்களில் ஆலய வழிபாட்டு மரபு இடம்பெறவில்லை. ஆலய வழிபாட்டு மரபுக்கு ஆகமங்களே அடிப்படை. இருப்பினும் ஆகம அறிவும் மறைவான ஓர் அறிவாகவே கருதப்பட்டது. மறை அல்லது மந்திரம் என்பது மிகுந்த சக்தி வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டது. மந்திரம் என்ற சொல்லே ரகசியம் என்ற பொருள் உடையதாகும். மந்திராலோசனை என்றால் அரசன் தனது ‘உட்படுகருமத்தலைவர்கள்; அல்லது ‘ரகஸ்யாதிக்ருத்’ எனப்படும் துறை சார்ந்த நிபுணர்களுடன் கூடி ஆலோசிப்பதைக் குறிக்கும்.
மந்திரி என்ற பதவிக்கும் அமைச்சர் என்ற பதவிக்கும் இடையே நிலவிய வேறுபாடு என்னவென்று இன்றைக்கு ஆய்வறிஞர்கள் உட்படப் பலருக்கும் தெரியாது. அர்த்தசாஸ்திரக் கோட்பாட்டின்படி, அரசன் போர் காரணமாகவோ வேறு அவசரப் பணிகளின் பொருட்டோ தலைநகரை விட்டு அல்லது நாட்டை விட்டு வேறிடத்திற்கு சென்றிருக்கும் போது அரசனுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றைக் கவனிக்கின்ற அதிகாரமுடையவனே மந்திரி ஆவான். இத்தகைய அதிகாரம் மிக்க மந்திரி பதவியில் நியமிக்கப்படத் தக்கவர்கள் பிராமணர், க்ஷத்திரியர் என்ற இரண்டு வர்ணத்தவர்களே என்றும், அமாத்யர் (அமைச்சர்) எனப்பட்ட செயலர் பதவிக்கு இத்தகைய உயர் அதிகாரம் வழங்கப்படுவதில்லை என்றும் அனைத்து வர்ணத்தவர்களும் அமைச்சர் பதவியில் நியமிக்கப்படத்தக்கவர்களே என்றும் அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது.[5]
மந்திரி சோழிக ஏனாதி என்பவன் இத்தகைய அதிகாரம் மிக்க பதவியை வகித்தவனாகக் கி.பி. 5-6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிமேகலை (22 சிறைசெய் காதை) குறிப்பிடுகிறது. மந்திரி, அமைச்சர் என்ற இருவகைப் பதவிப் பெயர்களும் வேறுபாடற்ற தொனியில் திருக்குறளில் அமைச்சு அதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது களப்பிரர் ஆட்சியின் விளைவாக இருக்கலாம். எவ்வாறிருப்பினும், இந்தியச் சிந்தனை மரபுக் கண்ணோட்டத்தின்படி மந்திரி என்பது மந்திராலோசனைக்குரிய பதவி என்பதும் மந்திரம் என்பது ஒரு குறுகிய குழுவுக்கு மட்டும் தெரிந்த ரகசிய அறிவு என்பதுமே நாம் வலியுறுத்த விரும்புகின்ற கருத்துகளாகும்.
இந்த இலக்கணப்படி, மறை அல்லது மந்திரம் என்பது உயர் தகுதி வாய்ந்த ஒருவராக அல்லது ஒரு சிறு குழுவினராக அடையாளம் காணப்படுவோர்க்குக் குருகுல மரபின்படி கற்பிக்கப்படும் உயர் கல்வியாகும். வேதக் கல்வியாயினும் சரி, ஆகமக் கல்வியாயினும் சரி, குரு – சீடர் என்ற மரபுப்படி கற்பிக்கப்படும் மறைக்கல்வியே ஆகும். இந்தக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தோர் மறையவர் எனப்பட்டனர்.
கல்வி முறை என்பதே பாரம்பரியக் கல்வி முறைதான் என்ற நிலைப்பாடு அன்று நிலவிற்று. பதவிகளுக்கான நியமனம் என்பது வெளிப்படையான தேர்வு முறை மூலமாக இல்லாமல் தனிப்பட்ட நட்பு, பற்று, கருத்தொற்றுமை போன்றவற்றின் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்றாக இருந்த காலகட்டம் அது. “நட்டவர் குடி உயர்க்குவை” என்று மதுரைக் காஞ்சி (வரி 131) அரசனைப் புகழ்கின்றது.
“அறனிலை திரியா அன்பின் அவையத்துத் திறனில் ஒருவனை நாட்டி முறை திரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக” என்று ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் புறநானூறு 71ஆம் பாடலில் சூளுரைக்கிறான்.
“திறமையற்ற ஒருவனை, வழக்குரைக்கின்ற நீதிமன்றத்தின் தலைவனாக நட்பு காரணமாக நியமித்து அநீதியான தீர்ப்புகள் வழங்கப்படுவதற்குக் காரணனாகிச் செங்கோல் தவறியவனாவேனாக” என்பது இதன் பொருள். “காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும்” என்ற திருக்குறளும் அன்பு காரணமாக மட்டும் நடைபெற்ற பல நியமனங்களால் ஆட்சியாளர்கள் மட்டுமின்றி மக்களும் பல வேதனைகளை எதிர்கொள்ள நேர்ந்த அவல நிலையைப் புலப்படுத்துகின்றது. எப்படியாயினும் சரி, அக்கால அரசபதவி உள்பட அனைத்து நிர்வாகப் பதவிகளுக்கும் நடைபெற்ற நியமனங்களில் வம்சாவளித் தொடர்பு, தனிப்பட்ட அன்பு போன்றவையே முதன்மையான பங்கு வகித்தன எனத் தெரிகிறது. அதே வேளையில், அக்கால ஆட்சி முறை என்பதே தான்தோன்றித்தனமானது என்று கருதுவது தவறாகும்.
தொல்காப்பியம் பொருளதிகாரம், புறத்திணையியலில் (நூற்பா. 16) வாகைத் திணையின் துறைகளாகப் பார்ப்பன வாகை, அரச வாகை, வணிக வாகை, வேளாண் வாகை, பொருந வாகை, அறிவன் வாகை, தாபத வாகை போன்ற பலவித வெற்றிகள் குறிப்பிடப்படுகின்றன. இவை எல்லாமே அவ்வப் பிரிவினர்களுக்குள் போட்டிகள் வைத்து அப்போட்டிகளில் வென்று வாகை சூடியவர்களுக்குச் செய்யப்படும் சிறப்புகளைக் குறிப்பிடுபவையாகும். தொல்காப்பியம் குறிப்பிடுகின்ற இலக்கணங்களுள் ஒன்றாகிலும் தமிழகத்தில் நடைமுறையில் இருந்தமைக்கான சான்று உள்ளதா என்று ஒரு கேள்வி எழுப்பப்படுவதற்கு வாய்ப்புள்ளது. நாம் அறிந்தவரை இது தொடர்பான எந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டதில்லை.
கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்கும் 10ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் சேர நாட்டில் நிலவிய ஒரு மரபு ‘வடக்கன் பாட்டுகள்’ போன்ற பழமையான நாட்டுப்புற இலக்கியங்களிலும் மரபு வழிச் செய்திகளிலும் குறிப்பிடப்படுகிறது. திருநாவாய் என்ற திருத்தலத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்த மகாமகத் திருவிழாவின் போது வள்ளுவ நாடாழ்வான் என்ற அரச குலத்தவனை முதன்மை நடுவராகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட போட்டிகள் மூலமாகவே சேரமான் பெருமாளாக முடிசூடுவதற்குரியவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதே அச் செய்தியாகும்.
சேக்கிழாரின் பெரிய புராணத்தில் ‘கழறிற்றரிவார் நாயனார் புராண’த்தில் (பா. 11-12) குறிப்பிடப்பட்டுள்ளபடி திருவஞ்சைக் களத்திலிருந்த பெருமாக் கோதையாரை மந்திரிகள் அணுகி “மலைநாட்டுச் செய்தி முறைமையால் உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு முடி சூடி அருளுமாறு” வேண்டினர் என்றும் அதன்படி பெருமாக் கோதையார் முடிசூடி அரசாண்டார் என்றும் தெரிய வருகின்றன. இக் குறிப்பு மேற்குறிப்பிட்ட மரபு வழிச் செய்தி பெருமளவு உண்மையானதே என்பதை உறுதிப்படுத்துகிறது. கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் கோயில் தேவராயன் பேட்டைக் கல்வெட்டின்படி, தர்மசாஸ்திரக் கல்வி கற்ற பிராமணர்களிடையே பல வகையான தேர்வுகளும் போட்டிகளும் நடத்தப்பட்டன என்றும் அப்போட்டிகளில் எவ்விதக் குறைபாடுமின்றி வெற்றி பெற்றோர் “கலமறுத்து நல்லாரானார்” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டனர் என்றும் தெரிய வருகின்றன.[6]
அண்மைக் காலம் வரை வைணவ பிராம்மணர்களிடையே ‘நல்லான்’ என்ற குடும்பப் பட்டம் வழக்கிலிருந்து வந்துள்ளது. இவர்களின் மூதாதையர் ஒருவர் இத்தகைய தர்மசாஸ்திரக் கல்வி தொடர்பான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி கண்டவராக இருக்க வாய்ப்புண்டு. மேற்குறித்த இலக்கிய மற்றும் கல்வெட்டுச் செய்திகள் சற்றுப் பிற்காலத்தவையாகினும், சங்க காலத் தமிழகத்தில் நிலவிய சில மரபுகளின் தொடர்ச்சியையே இவை சுட்டிக் காட்டுகின்றன என்று நாம் உறுதிபடக் கூறலாம். மேற்குறித்தவை போன்ற போட்டிகள் அல்லது தேர்வுகளில் அவ்வத் துறையோடு தொடர்புடைய வருணத்தவர் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு இருப்பினும் வருணாஸ்ரம அமைப்பு என்பதோ ஆட்சி அதிகாரப் பதவிகள் என்பவையோ முற்றிலும் எதேச்சாதிகாரத் தன்மை உடையவையாக இருக்கவில்லை என்பதற்கு மேற்குறித்த எடுத்துக்காட்டுகள் ஆதாரங்களாக அமைகின்றன. மட்டுமின்றி, பழங்குடி அமைப்பிலிருந்து படிநிலைச் சமூக அமைப்பிற்குத் தென்னிந்தியச் சமூகம் குறிப்பாகத் தமிழ்ச் சமூகம் முன்னேறிய வரலாற்றில் தேர்வுகள் மூலம் உயர்குடி அந்தஸ்து பெறுதல் என்ற நடைமுறையும் ஓர் அம்சமாகவே இருந்துள்ளது என்பதற்கு இவை அடையாளங்களாகும்.[7]
படிநிலைச் சமூக உருவாக்கத்தின் தொடக்கக் கட்டங்களில் வருணக் கலப்பில் தோன்றியவர்கள் தம் தாயின் வருணத்தையோ தந்தையின் வருணத்தையோ ஏற்ற நிகழ்வுகள் பல நடந்துள்ளன எனத் தெரிகிறது.
சிலப்பதிகாரம் புறஞ்சேரி இறுத்த காதையில் (வரி 38-41; 102-105) ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. கோவலன் கண்ணகியோடும் கவுந்தி அடிகளோடும் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் வேதத்தை ஓதுவதற்குப் பதிலாக இசை பாடுகின்ற தொழிலினை ஏற்ற பிராம்மணர்கள் வாழ்கின்ற குடியிருப்பில் அவர்களைத் தங்க வைத்தான் என்றும் (“வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து”), தலைமக்களுக்குப் பாங்கன் அல்லது வாயிலோனாகத் தொழில் புரிகின்ற கெளசிகன் என்ற பிராம்மணன் அங்கிருந்தான் என்றும் அங்கு வெற்றிக் கூத்தாடும் இயல்பை உடைய அந்தரி கோலத்தை ஆடுகின்ற பாணரும் இருந்தனர் (“ஆடியல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணர்”) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இசைப் பாடல் – ஆடல் தொடர்பான தொழிலை முதன்மையாக ஏற்ற பிராம்மணர்கள் இருந்துள்ளனர் என்பது இக்குறிப்பால் தெரிய வருகிறது. பல்லவர் காலத்தைச் (9-10 நூற்றாண்டுகள்) சேர்ந்ததாகக் கருதத்தக்க ஒரு கல்வெட்டில் இதனையொத்த குறிப்புள்ளது. அக்கல்வெட்டு விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திலிருந்து செஞ்சி நோக்கிச் செல்லும் பாதையில் அமைந்துள்ள முக்குன்னம் என்ற ஊரில் பாறையொன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் “நாரத கோத்திரத்து அந்தரியப் பார்ப்பாரில் திருக்கோவலூர் அழகியான்” என்ற வாசகம் உள்ளது.[8] இத்தகைய பிராம்மணர்கள் காலப்போக்கில் பாணர், பறையர் போன்ற குலத்தவருடன் ஒன்று கலந்திருக்கவும் வாய்ப்புண்டு; இவர்கள் வைதிகப் பிராம்மணர்களுக்குச் சற்றுக் கீழ்ப்பட்ட அந்தஸ்துடைய ஒரு சாதியினராக அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக, மறையவர்களின் பறையூரைச் சேர்ந்த கூத்தச் சாக்கையர்கள் பற்றிச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. (“பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கையன்” – சிலம்பு. 28:76-77). கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவொற்றியூர்க் கல்வெட்டின் மூலம் கோவில்களில் கூத்து நிகழ்த்துகின்ற கூத்தச் சாக்கையர்களுக்குப் ‘பறைக் காணி’ என்ற பெயரில் மானிய நிலம் வழங்குகின்ற மரபு இருந்தது எனத் தெரிகிறது. இச் சாதியினர் தமிழகத்தில் ‘சாக்கைக் கணியான்’ அல்லது ‘கணியான்’ என்ற பெயரில் தற்போது சுடலை மாடன் கோயில்களில் ‘மகிடக் கச்சேரி’ (மகிஷம் எனப்படும் எருமைத் தோலில் செய்யப்பட்ட பறையை அடித்துப் பாடுதல்) நிகழ்த்தும் பறையர் குலப் பிரிவினராக உள்ளனர். கேரள மாநிலத்திலோ சோரம் போன நம்பூதிரிப் பெண்ணுக்குப் பிறந்தமையால், பிராம்மண வருணத்திலிருந்து சற்றுத் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் என இலக்கணப்படுத்தப்பட்டு நம்பியார்-நங்கையார் எனப்படும் தேவதாசியர் குலத்தவர்களுக்கு இணையான சாக்கியார் என்ற குலப்பெயருடன் வாழ்கின்றனர். சாக்கியார் கூத்து என்பது கதகளிக்கு நிகரான சமஸ்கிருதச் சாயலைப் பெற்ற செவ்வியல் நடன மரபாக உருவாகி விட்டமையால் (அல்லது நீடித்து நின்று விட்டமையால்) கேரள மாநிலத்தில் இத்தகைய ஓர் உயர்ந்த அந்தஸ்தினை அவர்கள் பெற்றிருக்கக் கூடும். பாடல்-ஆடல் ஆகிய கலைகள் கோயில் வழிபாடு சார்ந்த கலைகளாகவே வளர்ச்சி பெற்றன. தொடக்க காலகட்டத்தில் ஆடல் பாடல்கள் மூலம் வழிபாட்டை நிகழ்த்திய பூசாரிகளாக இருந்தவர்களே பிரத்தியேகமான பிரதேச வேறுபாடுகளுக்கு ஏற்ப அந்தரியப் பார்ப்பார் என்றும், கூத்தச் சாக்கையர் என்றும் இன்னும் இவற்றை ஒத்த பட்டப் பெயர்களாலும் பிற்காலத்தில் குறிப்பிடப்பட்டனர் என்பது புலனாகிறது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த பல கோயில்கள் ‘கோ இல்’களாக, அதாவது இறந்து போன தலைவர்களின் சமாதிகளாகவே இருந்தன
. பிற்கால மரபில் இவை பள்ளிப்படை எனப்பட்டன. இத்தகைய கோயில்கள் ‘தேவகுலம்’ என்று அழைக்கப்பட்டன. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சி (சிவகங்கை மாவட்டம்) கல்வெட்டில் தேவகுலம் குறிப்பிடப்படுகிறது. இத் தேவகுலங்களில் பூசைப் பணி புரிவதற்கு அங்கு அடக்கமாகி இருந்த தலைவர்களுடன் ரத்த உறவு கொண்ட அர்ச்சகர்களே நியமிக்கப்பட்டனர். இவர்கள் ‘தேவகுலக பிராம்மணர்கள்’ எனப்பட்டனர் எனப் புராண நூல்களால் தெரிய வருகின்றது. இவர்கள் அன்றைய நிலையில் க்ஷத்திரிய பிராம்மணக் கலப்பில் தோன்றியவர்கள். இவர்கள் தந்தை வழியில் க்ஷத்திரிய மூலத்தை (அதாவது க்ஷத்திரியர்களுக்கு உரிய உறுப்பாகிய தோள் அல்லது கையில் பிறந்த தன்மை) உடையவர்கள் என்பதால், இவர்களை ‘இடங்கைத் தளத்து அந்தணர்’[9] என்றும், ‘பிரம்மாதி ராஜர்கள்’[10] என்றும் சற்றுப் பிற்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன என நாம் ஊகித்துப் புரிந்து கொள்ளமுடிகிறது. இவர்களில் பலர் ‘சூத பெளராணிகர்கள்’ என அழைக்கப்பட்டனர். ‘பட்டர்’ என்ற சாதிப் பட்டமும் இவர்களுக்கு உரியதாக இருந்தது. நின்ற நிலையில் அரசனை வாழ்த்திப் பாடும் ‘சூதர்’ மரபினர் ‘கைவாரிகள்’ என்றும், அமர்ந்து கொண்டே அரசனை வாழ்த்திப் பாடுவோர் ‘பட்’ (Bhat) என்றும் அழைக்கப்பட்டனர் எனச் சிலப்பதிகாரம் 5:48 அரும்பத உரையில் (சிலப்பதிகாரம் மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும், உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு, 1978) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இலக்கணத்துக்கு ஓர் இலக்கியமே போன்று மைசூர்ப் பகுதியில் சிட்லகட்ட தாலுக்கா ஜங்கமகோட்டை கொல்லஹள்ளி கிராமth தமிழ்க் கல்வெட்டொன்று அமைந்துள்ளது. (Epigraphia Carnatica, Vol X, Sidlaghatta Taluk, No. 9.) கி.பி. 1120ஆம் ஆண்டைச் சேர்ந்த இக் கல்வெட்டு கைய்வார நாட்டுத் தலைவனாகிய பார்ப்பனப் பெருமாள் உதய மார்த்தாண்ட பிரம்ம ராயனைப் புகழ்ந்து பாடப்பட்ட பாடல் கல்வெட்டாகும். இவன் விக்ரம சோழனின் முதன்மையான படைத்தலைவனும் பட்டர் மரபினனும் ஆவான். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மொகலாய அரசர் அக்பரின் அமைச்சராக இருந்த பீர்பால், அரண்மனைப் பாடகராகிய பட்டர் மரபினரே என்பது வட இந்திய வரலாற்று மாணவர்கள் அறிந்த ஒரு செய்தியாகும். இத்தகைய மரபுகளின் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்ன? பண்டைக் காலத்தில் இந்திய நாடு முழுவதும் பிராம்மணர் க்ஷத்திரியர் இடையே ஆட்சிக் கலை தொடர்பான ரகசிய அறிவுத் துறைகளைத் தமது ஏகபோகமாகப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் மண உறவுகள் உள்படப் பல்வேறு வகையான இணக்கங்கள் நிலவின என்பதையும் அத்தகைய உறவுகளின் மூலம் உதித்த தலைமுறையினர் அவ்வப் பிரதேசங்களின் விசேடச் சூழல்களுக்கேற்ப க்ஷத்திரியராகவோ, பிராம்மணர்களாகவோ தம்மை இனம் காட்டிக் கொண்டு, தத்தம் வருணம் தொடர்பான பணிகளை முதன்மையாகவும், தம்மிடம் கலந்திருக்கும் பிற வருணக் கூறுகள் தொடர்பான பணிகளை ஓரளவும் கவனித்து வந்துள்ளனர் என்பதையும் இவை நமக்கு உணர்த்துகின்றன. எடுத்துக்காட்டாக, வங்காளம் உத்தரப் பிரதேசம் முதலிய பகுதிகளில் க்ஷத்திரிய பிராம்மண வருணக் கலப்பினை அடிப்படையாகக் கொண்டே கார்யஸ்தர் அல்லது காயஸ்தர் (செயலர் மற்றும் கணக்கர்) என்ற சாதி உருவாயிற்று. வங்காளத்தில் மித்ரா என்ற குடும்பப் பட்டப் பெயருடன் திகழும் காயஸ்தர்கள் கி.பி. 18ஆம் நூற்றாண்டிலிருந்து தம்மை சூத்திர வருணத்தினராகவே அடையாளம் காட்டிக் கொண்டனர். மிஸ்ரா என்ற குடும்பப் பட்டப் பெயருடன் கூடிய உத்தரப் பிரதேசத்தவர் தம்மை பிராம்மணராக நிலை நிறுத்திக் கொண்டனர்.
கி.பி. 6-7 நூற்றாண்டுகளில் நிறுவன மயமாக்கப்பட்ட சைவ சமயமும் வைணவ சமயமும் தமிழகத்தில் வேரூன்றின. அதற்கு முன்பு தமிழகத்தில் நிலவிய ஜைனம், பெளத்தம் அல்லாத பிற சமய நிறுவனங்களைப் பற்றிய ஆதாரங்கள் மிக மிகக் குறைவாகவே நமக்குக் கிடைக்கின்றன. கிடைக்கின்ற ஓரிரண்டு ஆதாரங்களை வைத்துப் பார்க்கையில் ஐயனார் வழிபாடு போன்ற ஒருவகையான முன்னோர் வழிபாடு தமிழகத்தில் நிலவியுள்ளதென்றும், இவ்வழிபாடு நிலவிய கோயில்களில் அருவுருவான கந்து போன்ற ஒரு கல்தூண் ஐயனாருக்குரிய அடையாளக் கல்லாக நிறுத்தப்பட்டு வழிபடப்பட்டிருக்க வேண்டும் என்றும் நாம் ஊகிக்க முடிகிறது.[11] இக் கோயில்களில் பூசாரியாக இருந்தோர் ஊர்த் தலைவர்களாக அல்லது போர்க்குடித் தலைவர்களாக இருந்த தலைமக்கள் குடும்பத்துடன் மண உறவு கொண்ட பிராம்மணர்களாகவே இருந்திருக்க வேண்டும். திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருப்பிடவூரில் புகழ் வாய்ந்த ஐயனார் கோயில் ஒன்றுள்ளது. இந்த ஐயனார் புறநானூற்றில் ஒரு குல மூதாதையராகக் குறிப்பிடப்படுகிறார். (“நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன் கிளையோன் பெரும” – புறம். 395.) இந்த ஐயனாரை “வேதியர் திருப்பிடவூர்தனில் மாசாத்தனார்” எனப் பெரியபுராணம் (வெள்ளானைச் சருக்கம் பா. 52) குறிப்பிடுகிறது. இத்தகைய இனக் கலப்பின் மூலம் குலதெய்வப் பூசாரிகளை உருவாக்கும் நடைமுறை கி.பி. 7-8ஆம் நூற்றாண்டுகளோடு நின்று போய்விட்டதாகத் தோன்றுகிறது. சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவர் பற்றிய திருத்தொண்டத் தொகை இயற்றியவரும் தேவார மூவரில் மூன்றாமவருமாகிய சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாற்றை ஆராய்ச்சி செய்வதன் மூலம் நம்மால் இந்த முடிவுக்கு வரமுடிகிறது. சுந்தர மூர்த்தி நாயனார் சிவ பிராம்மணர் (குருக்கள்) மரபைச் சேர்ந்தவர். பிராம்மணர்களுக்குக் கோத்திரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். வைதிக பிராம்மணரான திருஞானசம்பந்தர் கெளண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதற்குச் சம்பந்தரின் தேவாரப் பாடல்களிலேயே அகச் சான்று உள்ளது. ஆனால், சுந்தரமூர்த்தி நாயனார் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது அவராலும் குறிப்பிடப்படவில்லை; பெரிய புராண ஆசிரியர் சேக்கிழாராலும் குறிப்பிடப்படவில்லை. சுந்தரர் நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசரால் மகன்மை (சுவீகாரம்) செய்து கொள்ளப்பட்டவர். இத்தகைய இலக்கியச் சான்றுகள் மட்டுமின்றி, சுந்தரர் அரச குலக் கலப்புடைய பிராம்மணர் என்பதற்கு ஓவியங்களிலும் ஆதாரமுள்ளது. தஞ்சைப் பெருங் கோயிலில் ராஜராஜ சோழனின் காலத்தில் வரையப்பட்ட சுவர் ஓவியங்களில் சுந்தரமூர்த்தி நாயனாரின் தடுத்தாட்கொண்ட புராணக் காட்சி இடம் பெற்றுள்ளது. இவ்வோவியத் தொகுதியில் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணச் சடங்கு தொடர்பான மாப்பிள்ளை அழைப்புக் காட்சியும் உள்ளது. அக் காட்சியில் தலையில் கிரீட மகுடம் அணிந்து குதிரையின் மேல் அமர்ந்த நிலையில் சுந்தரர் சித்திரிக்கப்பட்டுள்ளார். மணமகன் குதிரையின் மேல் அமர்ந்து மாப்பிள்ளை அழைப்புச் சடங்கில் கலந்து கொள்வதென்பது சங்க கால மருத நிலத் தலைமகனாகிய மகிழ்நன் மரபாகும் (“பெருமணம் பண்ணி அறத்தினில் கொண்ட பருமக் குதிரை” – கலித்தொகை 96 : 33-34). அரசாட்சி என்பது வம்சாவளி ஆட்சியாக இருந்ததாலும், ஆளும் வர்க்கத்தவரின் தனிப்பட்ட பணிகளையும் அரசுப் பணிகளையும் பிரிக்கின்ற எல்லைக் கோடு தெளிவாக வரையறுக்கப்படாத நிலையில் இருந்ததாலும் பண்டைய அரசியல் நிறுவனங்களின் தன்மை பற்றிய ஆய்வை மேற்கொள்வோர்க்குப் பெரும் குழப்பம் ஏற்படுகின்றது. தனி மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் அவர் சார்ந்திருந்த சாதி அல்லது சமயம் என்ற நிறுவன மயமாக்கப்பட்ட ஓர் அமைப்பால் நிர்ணயிக்கப்படுகின்ற இக்கட்டான நிலைமை இடைக்காலத் தமிழகத்தில் உருவாகி விட்டது. உத்தேசமாகச் சொல்வதானால் கி.பி. 12, 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சாதி அமைப்பும் சமய நிறுவனங்களும் இளக்கமின்றி இறுகிய நிலையை அடையத் தொடங்குகின்றன. அவ்வச் சாதி சார்ந்த பாரம்பரியத் தொழில் தொடர்பான கல்வியைத் தாண்டி வேறு கல்வியை யாரும் கற்க இயலாத நிலை தோன்றிவிட்டது. ஆனால், இதற்கு நேர் முரணான வகையில் க்ஷத்திரியர் அல்லாத வேளாண்மை சார்ந்த போர்க்குடிகளே ஆட்சியதிகாரத்தில் அமர்ந்ததாலும் தமிழ் மொழி மரபு சார்ந்த சமயாசாரத் தலைமைப் பதவியை வகித்தவர்கள் வேளாளர்களாக இருந்ததாலும் பிராம்மணர்களும், வேளாளர்களும் தமக்குள் இணக்கமான ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டு ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின்பால் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ஒரு சாரார் ஆதிக்க நிலைமையை மாற்றி அனைத்துத் துறைகளையும் ஜனநாயகமயமாக்க வேண்டும் என்ற அறைகூவல்தான் இன்றைக்கு இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளின் முதன்மையான அறைகூவலாக உள்ளது. அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு, வெகுஜன (பகுஜன்) சமாஜ இயக்கம், இட ஒதுக்கீடு போன்ற பல முழக்கங்களும் நெருக்கடி ஏற்படுத்தி நினைத்ததைச் சாதிக்கின்ற போர்த்தந்திரங்களும் ஜனநாயகத்தின் பாற்பட்டவையே என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளையில் ஜனநாயக முழக்கங்கள் மூலம் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தவர்கள் தங்களுடைய பரம்பரையினரை அதிகார பீடத்தில் அமர்த்துகின்ற வாரிசு அரசியல் முறை இந்த வெகுஜன இயக்கங்களில் வெற்றிகரமாகப் புகுந்தது எப்படி என்ற புதிருக்கு நாம் மேலே மேற்கோள் காட்டிய ஒளவையாரின் பாடலிலேயே விடை இருக்கின்றது. கள்ளை ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றிப் போர் வெறியைத் தூண்டுவது என்பது நிச்சயமாக ஜனநாயகத் தன்மை உடைய அரசியல் செயல்பாடு ஆகாது. சமய நிறுவனங்கள் ஜனநாயகமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் அல்லது கட்டளையில் உள்ள நியாயத்தை நாம் உணர்கிற அதே வேளையில் தங்களுடைய நாயகத்தை நிலைநாட்ட விரும்பும் ஜனங்களின் சரியான பிரதிநிதிகளால்தான் அத்தகைய கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றனவா என்பதைப் பரிசீலிக்கின்ற உரிமையும் நமக்கு இருப்பதாகக் கருதுகின்றோம். இந்து என்றால் திருடன் என்று பொருள் கண்டுபிடித்துப் பறைசாற்றுபவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடுவதற்கு அதிகாரம் உண்டா என்பதைத் தமிழ் உணர்வும் சமயப் பற்றும் கொண்ட மடாலயத் தலைவர்களும், அடியார்களின் பிரதிநிதிகளும், ஆன்மிக ஈடுபாடு கொண்ட அரசியல் தலைவர்களும் கூறட்டும். அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும் மறைமொழிகளை உருவாக்கும் தகுதி படைத்த நிறைமொழி மாந்தர்களாக இந்நிறுவனத் தலைவர்களும், அடியார்களின் பிரதிநிதிகளும் யாரை அடையாளம் காட்டுகிறார்களோ அவர்கள் மறைமொழிகளை உருவாக்கட்டும். சட்டவியல் துறை தொடர்புடைய தொழில்நுட்பச் சொற்களையோ, மருத்துவத் துறை சார்ந்த தொழில் நுட்பச் சொற்களையோ தமிழில் மொழிபெயர்ப்பதற்கு அவ்வத் துறையில் ஆழ்ந்த புலமையும் தெளிந்த நடைமுறை அறிவும் தமிழ்ப் புலமையும் கொண்ட குழுவினர் எவ்வாறு ஈடுபடுத்தப்படுகிறார்களோ அது போன்றே இந்திய நிலப்பரப்பளவில் நிலவுகின்ற பல்வேறு பிரதேச வேறுபாடுகளுடனான ஆகமங்கள் பற்றிய நடைமுறை அறிவும் தமிழறிவும் கொண்ட வல்லுநர் குழுவினரை இத்தகைய முயற்சியில் ஈடுபடச் செய்யலாம். இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதை விடுத்து பெரியார் கண்ட கனவு என்று சொல்லி ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த நினைப்பது நியாயமானதன்று. அதற்குப் பதிலாக, கோயில்களைப் பூட்டிக் கோயில்களுக்கு முன்னால் “கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குபவன் காட்டுமிராண்டி” என்ற அறிவிப்புப் பலகையைத் தொங்கவிட்டு விடலாம். அது நியாயமான, யோக்கியமான ஓர் உத்தியாக இருக்கும். அடிக்குறிப்புகள்: [1] Asiatic Researches – Vol. VI Chapter XI Remarks on Some antiquities on the west and south coasts of Ceylon written in the year 1769 by Captain Colin Mekenzie p. 427 – Cosmos Publications, Delhi, 1972 [2] திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடுகள், ச. கிருஷ்ணமூர்த்தி, உண்ணாமலைப் பதிப்பகம், 43/20, கலா§க்ஷத்ரா சாலை, திருவான்மியூர், சென்னை – 41 (2000) [3.] சிதம்பர வன்னியன் வம்சாவளி, பாளையப்பட்டுகளின் வம்சாவளி தொகுதி IV பக்கம் 91. பதிப்பு: க. குழந்தைவேலன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை-8 [4] ராஜராஜ சோழனின் சிலை குறித்த ஒரு சுவையான செய்தி நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசர் சிவாஜி ராஜா போன்ஸ்லே என்பவர் 1855ஆம் ஆண்டு ஆண் வாரிசின்றி இறந்து போனார். டல்ஹவுஸியின் ‘வாரிசின்மையால் அரசு அதிகாரம் இழத்தல்’ என்ற கோட்பாட்டின்படி ஆங்கிலேயக் கும்பினி அரசு தஞ்சைப் பகுதியின் நிர்வாகத்தைத் தானே ஏற்றது. இதனை எதிர்த்து மராட்டிய அரசி காமாட்சி அம்பா பாயி சாகேப் முதலானோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து 1916ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. நீதிமன்றத் தீர்ப்பின்படி தஞ்சைப் பெரிய கோயில் உட்பட 108 கோயில்களின் நிர்வாகம் மூத்த இளவரசர் எனப்பட்ட பெண் வழி வாரிசு ஒருவருக்கு உரியதாயிற்று. அந்த ஆண்டிலேயே தஞ்சைப் பெரிய கோயிலில் இருந்த ராஜராஜ சோழனின் சமகாலச் செப்புப் படிமம் விற்கப்பட்டது. அது இருந்த இடத்தில் உள்ளூர் ஸ்தபதி ஒருவரால் புதிதாகச் செப்புப் படிமம் ஒன்று வார்க்கப்பட்டு, அதன் பீடத்தில் “தஞ்சாவூர்ப் பெரிய கோயில் ராசா ராசேந்திர சோழ ராசா” என்றும் பொறிக்கப்பட்டது. இப் புதிய செப்புப் படிமமே ராஜராஜ சோழனின் பழைய செப்புப் படிமம் என்று தவறாகக் கருதப்பட்டு பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரால் இதற்கு முடிசூட்டும் விழாவும் நடத்தப்பட்டது. பூர்விகச் செப்புப் படிமம் தற்போது அஹமதாபாதிலுள்ள சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ளது என்று தொல்லியல் கலை வரலாற்று அறிஞர் திரு. சி. சிவராம மூர்த்தி கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். [5] பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள் நிலையங்கள் சில தோற்றங்கள், ஆர்.எஸ். சர்மா (தமிழில்: சோமலெ), Indian council of Historical Research, 1989, பக்கம் 216-7 [6] South Indian Inscriptions Vol XIII No. 250. “கலமறுத்து நல்லாராதல்” என்ற தொடர் விரிவாக ஆராயத்தக்கது. ராஜராஜ சோழனின் முதன்மையான வெற்றி என்பது “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய” வெற்றியே ஆகும். இத்தொடர் பற்றிப் பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டு வருகின்றன. கேரள நாட்டில் திருநாவாய்க்கு அருகிலுள்ள காந்தளூரே இங்கு குறிப்பிடப்படுகிறது என்பது எமது கருத்தாகும். (இக் காந்தளூரில் பழமையான ஒரு சிவன் கோயில் உள்ளதாக ‘A Descriptive Memoir of Malabar’ by Lieutenants Ward and Conner, First published in 1906, Government of Kerala, 1995 – என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.) இக் காந்தளூரில் நடைபெற்ற அரச பதவி தொடர்பான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, சேர சோழ பாண்டிய நாடுகளின் தலைவனாக – மும்முடிச் சோழனாக – ராஜராஜன் முடிசூடிய நிகழ்வே காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய வெற்றியாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். கலமறுத்து நல்லாரானார் என்ற பட்டம் பிராம்மணர்களுக்கு மட்டுமின்றி, க்ஷத்திரியர்களுக்கும் உரியதாக இருந்தது எனக் கருத வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக விரிவான ஓர் ஆய்வுக் கட்டுரை என்னால் எழுதப்பட்டு வருகிறது. [7] சங்க கால அரசு உருவாக்கத்தில் போட்டிகள் மூலம் அரச பதவி அடைதல் என்பது ஒரு கால கட்டம் வரை நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. சோழன் போரவைக்கோ பெருநற்கிள்ளிக்கும் ‘ஊர்கொள வந்த’ முக்காவல் நாட்டு ஆமூர் மல்லன் எனும் பொருணனுக்கும் நடந்த மற்போர் குறித்துச் சாத்தந்தையாரும், பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையாரும் பாடிய புறநானூற்றுப் பாடல்களில் (80-85) இதற்கான ஆதாரம் உள்ளது. ஆயினும் கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கும் பிறகு இவ்வழக்கம் சிறுகச் சிறுக மறைந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது குறித்து ‘தென்னிந்திய அரச குலம்’ என்ற தலைப்பில் என்னால் மிக விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. [8] தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிகின்ற திரு. ச. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கண்டறிந்து வாசித்த கல்வெட்டு. இச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றி. இக்கல்வெட்டு இன்னமும் வெளியிடப்படவில்லை. [9] 1227ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாலிகண்டபுரம் கல்வெட்டு ARE No. 276 / 1943-44. [10] Travancore Archealogical Series Vol. I Page 387. [11] தமிழகத்தின் மிகப்பழமையான இரும்பு யுக இடுகாடுகள் ‘பெருங்கற்படைகள்’ (Megalithic Monuments) எனப்படுகின்றன. இப் பெருங்கற்படைகள் நெய்தல் தலைவனான வருணனின் கோயில்களாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். சங்கத் தமிழ் இலக்கியங்கள் சாவுப் பறையை நெய்தல் பறை என்று குறிக்கின்றன. நெய்தல் நிலம் (Nether world) என்பது முன்னோர் உலகின் அல்லது தென்புலத்தின் குறியீடாகக் கருதப்பட்டது. பெருங்கற்படைக் காலப் புதைகுழிகள் இருந்த இடங்கள் சில பெளத்த சமயம் சார்ந்த சைத்தியங்களாக மாற்றம் பெற்றன என்றும் சில இடங்கள் பாரசீகப் பாசண்டச் சாத்தன் கோட்டங்களாக மாறின என்றும் ஊகிக்க முடிகிறது. இது குறித்து ஐயனார் வழிபாடு தொடர்பான என்னுடைய கட்டுரையில் விரிவாக ஆராய உள்ளேன். maanilavan@gmail.com
No comments:
Post a Comment