Tuesday, March 4, 2014

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - நான்மறை ( 17-18)

மலர்மிசை ஏகினான்: - நெல்லைச்சொக்கர்
1. தம் துர்தர்‹ம் கூடமநுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம்I
- கடவல்லியுபநிஷத் (2.12)
காண்டற்கரியரும், மறைவினரும் (சீவான்மாவோடு உடலகத்தே) கூடப் பிரவேசித்தவரும், குகைக்குள் மறைந்தவரும், குகையில் அமர்ந்தவரும், பழையருமாயினார் (சிவபெருமான்).

2. ஸத்யம் ஜ்ஞானமனந்தம் ப்ரஹ்மயோ வே
த நிஹிதம் குஹாயாம் பரமவ்யோமந்I   -தைத்ரீயோபநிஷத் ஆனந்தவல்லி
பிரமம் எப்பொழுதும் ஒரே தன்மையாயுள்ளது. அறிவாயுள்ளது. முடிவில்லாதது. இருதயகுகையின்கண் பரமாகாசத்திலுள்ள அதனை எவன் அறிகின்றான்.

"பொள்ளலிக் காயந் தன்னுள் புண்டரீகத் திருந்த வள்ளலை" - 4-42-6 எனவும்
"அசிர்ப்பெனும் அருந்தவத்தால் ஆன்மாவின் இடமதாகி
உசிர்ப்பெனும் உணர்வும் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே." - 4-45-2 எனவும்
"கண்டு கொள்மின்நீர் கானூர் முளையினைப்
புண்டரீகப் பொதும்பினில் ஒதுங்கியே" - 5-76-2 எனவும்
"புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி" - 6-5-9 எனவும்
"புண்டரிகப் புதுமலர் ஆதனத்தார் போலும்" - 6-53-8 எனவும்
"பேணி நினைந்தெழுவார்தம் மனத்தே மன்னி,
இருந்த மணி விளக்கதனை நின்ற பூமேல், எழுந்தருளியிருந்தானை" - 6-84-1 எனவும்
"உள்ளாறாததோர் புண்டரிகத்திரள்,
தெள்ளாறாச் சிவசோதித் திரளினை" - 5-68-1 எனவும்

உள்ளத்தினுள்ளே (ஹ்ருதயகுகை) இறைவன் எழுந்தருளுவதை அடிகள் போற்றுகின்றார்.

ஆயிரமுகத்தான்:
1. ஸஹஸ்ர ஷீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் -யஜுர் 31.1
2.ஸர்வாநந சிரோக்ரீவஸ் ஸர்வபூத குஹாசய:
ஸர்வவ்யா பீச பகவாந் தஸ்மாத் ஸர்வகதச் சிவ:II

-ஸ்வேதாஸ்வதர உபநிஷத்

எங்கும் முகத்தையும் தலைமையும் உடையவன். எல்லாப் பூதங்களின் உள்ளத்துமுள்ளவன். எல்லாவற்றையும் வியாபித்தவன். பகவானாதலின் எங்கும் நிறைந்தவன் சிவனாம்.

இதனை, 
"ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடையானும்
ஆயிர ஞாயிறு போலும் ஆயிர நீண்முடியானும்
ஆயிரம் பேருகந்தானும் ஆரூரமந்த அம்மானே" - 4-4-8 என

அருளியுள்ளனர் ஆண்ட அரசு.

எங்கெங்குமாய் நின்றவன்:
1. ஏகோ தேவஸ் ஸர்வ பூதேஷு கூட:
ஸர்வ வ்யாபீ ஸர்வபூதாந்தராத்மாI
கர்மாத்யக்ஷஸ் ஸர்வபூதாதி வாஸ:
ஸாக்ஷீ சேதா கேவலோ நிர்குணச்சII     
-ஸ்வேதாஸ்வதர உபநிஷத்
ஒரே தேவன் எல்லாப் பூதங்களிலும் மறைந்துள்ளவன். எல்லாவற்றையும் வியாபித்தவன். எல்லாப் பூதங்களுக்கும் அந்தராத்மாவாயுள்ளவன். கர்மங்களுக்கு அதிபதி. சர்வ பூதங்களுக்கும் வாசஸ்தானம். சாக்ஷி. சுத்த ஞான சொரூபன். கேவலன், நிர்குணன்.

2. ஈசாவாஸ்யமிதக் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்     - ஈசாவாஸ்யோபநிஷத்
உலகத்தில் எது எது தோன்றுகிறதோ இந்த ஸமஸ்தமான பிரபஞ்சமெல்லாம் ஈசராலே வியாபிக்கப்பட்டிருக்கின்றது.

3. ஸர்வோவை ருத்ரஸ்தஸ்மை ருத்ராய நமோ அஸ்து
விச்வம்பூதம் புவநஞ்சித்ரம் பஹுதாஜாதம் ஜாயமாநஞ்சயத்I
ஸர்வோ ஹ்யோதிருத்ர:I

எல்லாம் ருத்ரரே. அத்தகைய ருத்ரமூர்த்திக்கு நமஸ்காரம். அநேகமாக ஆனவும் ஆகப் போகின்றனவுமாகிய எல்லா உலகமும் விசித்ர புவனமுமாகிய இவையெல்லாம் ருத்ரரே.
-தைத்ரீயாருண சாகை நாராயணவல்லி

"அண்டமாய் ஆதியாய் அருமறையோடு ஐம்பூதப்
பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை" - 4-7-4 எனவும்,
"நீருமாய்த் தீயுமாகி நிலனுமாய் விசும்புமாகி
ஏருடைக் கதிர்களாகி இமையவர் இறைஞ்ச நின்று
ஆய்வதற்கரியராகி" - 4-54-8 எனவும்,
"மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்
எல்லையான பிரானார்" - 5-20-6 எனவும்
"ஏழுலகும் தானாகும்மே" - 6-4-6 எனவும்
"அண்ட கோசரத்துளானே" - 6-4-9 எனவும்
"கொள்கை சொல்லின் ஈறும் நடுவும் முதலுமாவார்" - 6-17-1 எனவும்

"நீதியாய், நிலனாகி நெருப்பாய் நீராய் நிறைகாலாய் இவையிற்றின் நியமமாகிப்
பாதியாய், ஒன்றாகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய்ப் பழுத்த பண்களாகிச்
சோதியாய் இருளாகிச் சுவைகளாகிச் சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
ஆதியாய் அந்தமாய் நின்றான்" - 6-26-6 எனவும்

"ஏயவன்காண் எல்லார்க்கும் இயல்பானான் காண்" - 6-48-3 எனவும்
"எவ்விடத்தும் நீயல்லா தில்லையென்று
தலையாரக் கும்பிடுவார் தன்மையானே" - 6-62-8 எனவும்
"ஒழிவற நின்றெங்கும் உலப்பிலான் காண்" - 6-85-6 எனவும்

இறைவன் எங்குமாய் எல்லாமாய் நிறைந்திருப்பதனைக் கண்டு ஏத்துகின்றார் வாகீசப் பெருந்தகையார்.

இறைவன் திருவுரு:
1. புத்திகுஹாயாம் ஸர்வாங்க ஸுந்தரம் புருஷரூபம் அந்தர்லக்ஷ்யம் மித்யபரெ!
சீர்ஷா sந்தர்கத மண்டல மத்யகம் பஞ்சவக்த்ரம்
உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்தம் அந்தர்லக்ஷ்யம் இதிகேசித்I
அங்குஷ்டமாத்ர: புருஷோந்தர்லக்ஷ்ய மித்யேகேII                        
- மண்டல பிராம்மணோபநிஷத்

புத்தி குகையின் கண்ணே சர்வாங்க சுந்தரமுள்ள புருஷர் அந்தர்லட்சியமென அபரரும், சிரசின் உள்ளிடத்து மண்டல மத்தியில் ஐந்து முகங்களும், நீலகண்டமும், மிக்க சாந்தத் தன்மையுமுடைய உமாசகாயர் அந்தர்லட்சியமெனச் சிலரும், அங்குஷ்ட அளவினராய புருஷர் அந்தர்லட்சியமென ஒருசிலரும் உரைக்கின்றனர்.

2. நமோ ஹிரண்ய பாஹவே, ஹிரண்யவர்ணாய ஹிரண்யரூபாய
ஹிரண்ய பதயேம்பிகாபதயே உமாபதயே பசுபதயே நமோநம:II

- தைத்ரீயாருண சாகை நாராயணம்


பொற்றோளருக்கு, பொன்வண்ணருக்கு, பொன்மேனியருக்கு, பொன்னுக்கிறைவருக்கு, அம்பிகாபதிக்கு, உமாபதிக்கு, பசுபதிக்கு நமஸ்காரம். நமஸ்காரம்.

3. அஸௌயோsவஸர்பதி நீலக்ரீவோ விலோஹித:
-தைத்ரீய சம்ஹிதை
(சூரிய மண்டலத்துள்ளிலிருந்து உதயாஸ்தமனஞ் செய்விக்கும் பொருட்டு சிவபிரான்) பிரவர்த்திக்கின்றனர். இவர் நீலகண்டரும் செந்நிறமும் உடையவர்.

4. உமாஸஹாயம் பரமேச்வரம் ப்ரபும் த்ரிலோசனம் நீலகண்டம் ப்ரசாந்தம்
-கைவல்யோபநிஷத்
உமாசகாயரும் பரமேசுவரரும் பிரபுவும் முக்கண்ணரும் நீலகண்டரும் பரமசாந்தரும்.

"ஓருடம்பிருவராகி" - 4-22-6
"சுரிபுரி குழலியோடும் துணையலால் இருக்கையில்லை" - 4-22-6
"உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண்" - 6-65-7

என உமாசகாய நிலையையும்,
"நீலமாமணி கண்டத்தர்" - 5-51-1
"நீலமுண்ட மிடற்றினன்" - 5-35-5

என நீலகண்டத்தையும்
"முக்கணா போற்றி" - 6-5-10
"கதிர்செய் நெற்றிநுதல் கண்டேன்" - 6-77-2
"நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய் போற்றி" - 6-32-3

என த்ரிலோசனத்தையும்
"பொன்வரையே போல்வான் தன்னை" - 6-69-2
"பொன்பொதிந்த மேனியனை" - 6-68-6
"பொன்னொத்த திருமேனிப் புனிதர்" - 6-53-5
"செம்பொனாற் செய்தழகு பெய்தாற்போலும்
செஞ்சடையெம் பெருமானே" - 6-4-9
"அணிகிளர் அன்னவண்ணம் அவள்வண்ண வண்ணம்
அவர் வண்ணம் அழலே" - 4-8-6

என பொன்போலும் திருமேனியையும் புகழ்ந்துள்ளார் அப்பரடிகள்.

மேலும், பாற்கடலில் பிறந்த நஞ்சுண்டு கண்டம் கறுத்தது, திரிபுரம் எரித்தது, பிரளயத்தில் பிரமவிஷ்ணுக்களின் சிரோரோமம், கபாலம் இவற்றை தரித்தது, வாமன அவதாரத்தை தண்டித்தது, பிரம்மவிஷ்ணுக்கள் அடிமுடி தேடியது என பல புராண செய்திகளை ரிக் வேதம், தைத்ரீய சம்ஹிதை, சரப உபநிஷத் ஆகியன எடுத்து இயம்புகின்றன.


அப்பரடிகளும் இந்த புராணச் செய்திகளை தமது திருப்பதிகங்களில் பல்வேறு இடங்களில் குறித்து உள்ளார்.

முடிவுரை:
எனவே, இதுவரையினும் கூறியவாற்றான், வைதிக நெறியைப் புறந்தள்ளி சமண பௌத்தம் முதலிய அவைதிக நெறிகள் மேலோங்கிய காலத்தில் மீண்டும் வைதிக நெறியை புனருத்தாரணம் செய்வான் பொருட்டு சமயக்குரவர் அவதரித்தனர் என்பதும்,

அவர்களுள் அப்பரடிகள் வேத வேள்வியை நிந்தனை செய்துழன்ற சமணசமயத்தில் நெடுங்காலம் இருந்தமையால், அவ்வேத வேள்விகளின் அருமைபெருமைகளைப் பல்வகையாலும் எடுத்தருளியுள்ளனர் என்பதும்,

வேதோபநிஷதங்களும், திருமுறை சித்தாந்த சாத்திரங்களும் எவ்வகையானும் தம்முள் பொருள் ஒருமை உடையன, எனவே அவற்றுள் பேதமில்லை என்பதும்,

வேதம் சிவபிரான் வாக்கு, உலகர்க்கருளிய பொதுநூல், சிவபரத்வம் அதில் விளம்பப்பட்டிருக்கும் என்பதும்,

அப்பரடிகளின் திருவாக்கிலிருந்து அவர் கூறும் வேதம் வடமொழி வேதமே என்பதும் தெளிவுப்பட எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment