Tuesday, March 4, 2014

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - நான்மறை (1-8)

நெல்லைச்சொக்கர்  http://nellaichokkar.blogspot.in/

திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.
தொன்மை முறை வருமண்ணின் துகளின்றி துகளில்லா, நன்மை நிலை ஒழுக்கத்து நலஞ்சிறந்த குடிகள்" வாழும் நாடு திருமுனைப்பாடி வளநாடு. 

`மறம் தரும் தீ நெறிகள் மாறும்படியும், மணிகண்டராம் மகாதேவரின் வாய்மைநெறி தழைக்கவும் அறந்தரு நாவுக்கரசரும் ஆலால சுந்தரரும் திருவவதாரம் செய்யும் தகைமைத்து அத்திருமுனைப்பாடி நாடு எனில் அதன் பெருமையை நாம் பேச முடியுமோ?"என வியப்பர் தெய்வச் சேக்கிழார்.

அத்திருமுனைப்பாடி வளநாட்டில் சிவம்பெருக்கும் திருவாமூர் என்னும் தலம் உள்ளது. அவ்வூரில் வேளாளர் குலத்தில் குறுக்கையர் குடியில் வந்த புகழனார் - மாதினியார்தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகத் திருவவதாரம் செய்தவரே நம் அப்பரடிகள். 

திலகவதியார் இவர் தமக்கையார்.இவ்விருவரின் இளவயதிலேயே பெற்றோர் இறைவனடி சேர்ந்தனர். திலகவதியாருக்கு மணம் பேசி வைக்கப்பட்ட கலிப்பகையார் போர்க்களத்தில் உயிர்கொடுத்துப் புகழ் கொண்டார்.

பெற்றோரும், மணம் பேசிய மணாளரும் மாண்டபின், இம்மண்ணுலகில் வாழ்வதற்கோர் ஏதில்லை எனக் கருதி உயிர்நீக்கக் கருதிய திலகவதியாரின் அடியிணை மீது மருள் நீக்கியார்(அப்பரடிகளுக்குப் பெற்றோர் இட்டபெயர்) விழுந்தார்.

தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயாவினால், திலகவதியார் உயிர்தாங்கி, அணிகள் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி, திருவதிகையில் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளின் திருக்கோயிலுக்கருகே வசித்து வரலானார்.

இங்கே, மருள்நீக்கியார், தமது மனத்துயர் ஒழியும்படியாக நிலையாமையை உன்னிக் கருணையினால் அறங்கள் செய்வாராயினர்.சோலைகளமைத்தல், குளம் தொடுதல், இரப்போர்க்கீதல் முதலியன அவரீடுபட்ட அறங்களுள் சிலவாம்.

நிலையாமையினை எண்ணி நிலைத்த பொருளைத் தேடுவாராய் சமயநூல்களைக் கற்று உணரலானார். நம்பர் அருளாமையினால் போலி வேடமிட்டுத் திரிந்த சமணசமயத்தில் புகுந்தார்.

திருப்பாதிரிப்புலியூருக்கருகே இருந்த பாடலிபுத்திரம் என்னும் சமணர்களின் கலாசாலையை அடைந்து சமண தத்துவங்களைக் கற்றுத் துறைபோகி, சமணர்களின் தலைமைக்குருவாகி `தருமசேனர்' எனும் பெயரும் கொண்டார்.

அங்கே, தம்பியாரின் நிலையினை அறிந்து மனவேதனை கொண்ட திலகவதியார், நாடோறும் திருவதிகைப் பெருமானிடம் பிரார்த்திக்கலானார். இறைவனும் அவர் கனவில் தோன்றிசூலை கொடுத்து ஆட்கொள்வதாகக் கூறிமறைந்தார்.

அவ்வாறே தருமசேனர் சூலைநோயால் அவதியுற்றுப் பின்பு திருவதிகைக்கு வந்து தமக்கையாரிடம் அடைக்கலம் புகுந்து, அவரால் திருநீறளிக்கப் பெற்றுச் சைவரானார்."கூற்றாயினவாறு" திருப்பதிகம் பாடினார். 

சூலைநோய் மறைந்தது. இறைவன் அவருக்கு `நாவுக்கரசு' எனும் பெயர் சூட்டினான்.

சமணர்களின் சூழ்ச்சியான நீற்றறை, யானை ஏவல், நஞ்சூட்டல், கடலில் இடல் முதலிய இடர்களை சிவபிரானின் திருவருளால் கடந்து, மன்னனையும் சைவனாக்கினார்.

செந்தமிழ் நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டு தலங்கள் தோறும் எழுந்தருளியுள்ள இறைவனைப் பாடித் தொண்டுநெறியை வலியுறுத்தித் தாமும் உழவாரப் படையினால் கோயில்களைச் சுத்தம் செய்து சமணகற்றி சைவம் வளர்த்தார்.தமது 81 ஆவது வயதில் திருப்புகலூரில் நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி, அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டஅரசு ஐக்கியமானார். 

தமிழகத்தில் சிவ வழிபாடு
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் பண்டைக் காலந்தொட்டு சிறந்து வரும் வழிபாடுகளுள் சிவ வழிபாடு முதன்மையானதாகும்.

திராவிட நாகரிகத்தோடு தொடர்புடைய சிந்துவெளி நாகரிகத்தில் சிவவழிபாடு இருந்தது. 

சங்க இலக்கியங்களில் `தாழ்சடைப் பொலிந்த அருந்தவன்'; `ஈர்ஞ்சடை அந்தணன்'; முக்கண்ணன்; கறைமிடற்றண்ணல், முதுமுதல்வன், நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன், ஆலமர் செல்வன், கணிச்சியோன், நுதல்விழி நாட்டத்து இறையோன், பிறவாயாக்கைப் பெரியோன் எனப் பல்வேறு பெயர்களில் சிவபிரான் சுட்டி அறியப்படுகிறார். 

ஆயினும் திருமால், இந்திரன், பலராமன், முருகன், வஜ்ராயுதம், வெள்ளையானை ஆகிய தெய்வ வழிபாடுகளும் தமிழகத்தில் இருந்து வந்துள்ளன. 

"கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழகம் மிக வளர்ந்த நாகரிகத்தையும், இலக்கியத்தையும் கொண்டிருந்தது. கடவுள் உலகங்கள், அவற்றினமைப்பு போன்றவற்றைப் பற்றிய கோட்பாடுகளோடு வேறுபல உயரிய குறிக்கோள்களும் அவற்றில் நிரம்பியிருந்தன."1
இச்சமயத்தில் வடநாட்டில் தோன்றிய பௌத்த சமண சமயங்கள் தமிழகத்தில் ஒன்றன்பின் ஒன்றாகப் பரவலாயின. 


தமிழகத்தில் பௌத்தம்

தேவனாம் பிரியனான அசோகனின் மகனான மஹிந்தன் காலத்தில் பௌத்தம் தமிழகத்தில் பரவத் தொடங்கியதென்பர். 

"சிங்கள நாட்டு மகாவம்சமும் பாகியான் எழுதிய குறிப்புகளும் பல்லவராட்சி தோன்றும் முன்பே, பாண்டிய நாட்டில் பௌத்தம் பரவி இருந்தது எனக் குறிக்கின்றன. மணிமேகலை சேரநாட்டு வஞ்சி மாநகரிலும், சோழநாட்டுக் காஞ்சிபுரத்திலும், காவிரிப்பூம்பட்டினத்திலும் புத்த சமய சங்கிராமங்கள் இருந்ததைக் குறிப்பிடுகின்றன."

புத்தரின் மறைவுக்குப் பின்பு மகாயானம், ஹீனயானம் என இருபெரும் பிரிவாக பௌத்தம் பிரிந்தது. தமிழ்நாட்டில் மகாயான பௌத்தமே பரவியது.
கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் தென்னாட்டிற்கு வந்த நாகார்ஜுனர் பௌத்தத்தை இங்கே பரப்பினார் என்றும், அவர் தென்னாட்டு வேந்தன் ஒருவனையும், 10,000 பிராமணர்களையும் பௌத்தர்களாக மதம் மாற்றினார் என்றும் அறிஞர் கூறுவர்.


பிற்காலத்தில் அதாவது கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் காஞ்சியைக் காண வந்த சீனயாத்ரிகர் ஹியூன்சாங் "இங்கு 100க்கும் மேற்பட்ட பௌத்த சங்கிராமங்கள் உள்ளன. 10,000க்கும் மேற்பட்ட குருமார்கள் தேரவாத நூல்களைப் பயில்கின்றனர். சைனர் உள்ளிட்ட ஏனையோர் கோயில்கள் எண்பதுக்கும் குறையாமல் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.4எனினும் சமண சமயத்தைப் போல் பௌத்தம் தமிழகத்தில் செழித்து வளரவில்லை என்பது வரலாற்றறிஞர்களால் குறிப்பிடப்பட்டு வருகிறது. 

பௌத்தக் காப்பியங்களான மணிமேகலை, குண்டலகேசி ஆகிய நூல்களின் வழியே பௌத்த சமயம் குன்றிய செய்தியும், பௌத்தர்களுக்குச் சமணர்களோடும், ஏனைய வைதீகச் சமயத்தாரோடும் இருந்து வந்த முரண்பாடுகளும் தெற்றெனப் புலப்படுகின்றன. 

மணிமேகலையைப் பெரிதும் ஆராய்ந்த அறிஞர் சோ.ந. கந்தசாமி, "பௌத்தத்தின் பல்வேறு பிரிவுகட்கும் இடையே இந்தியாவில் கி.பி. 100-500லும், சீனத்தில் கி.பி. 500-900லும் கொள்கைப் போராட்டங்களும் முரண்பாடுகளும் நிகழ்ந்தன. காலக்கோட்பாட்டினாலும் அயலார் படையெடுப்பிலும், புறச் சமயத்தாக்குதலாலும், போலித் துறவிகளின் பொறுப்பின்மையாலும், பௌத்தம் நலிந்தது. பௌத்தப் பனுவல்கள் பல மறைந்தன"என்றுரைப்பார்.

கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் (கி.பி. 753ல்) சமண சமயக் குருவாய்ப் பெயர்பெற்ற ஆசாரிய அகளங்கர் காஞ்சிபுரத்தில் பௌத்தக் கோயிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்தப்பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார்.

அவைதீக சமயங்களின் உட்பூசல், பௌத்தத் துறவிகளின் போலித்தனம் (மத்த விலாசப் பிரகசனத்தில் கூறியபடி) ஆகியவற்றால் தமிழகத்தில் பௌத்தம் தன் செல்வாக்கை இழந்து பெயரளவில் வாழலாயிற்று. 

தமிழகத்தில் சமணம்

பௌத்தத்திற்குப் பின்பு தமிழகத்திற்குள் நுழைந்த சமணம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரையிலும் தன் செல்வாக்கைச் செலுத்தி வந்தது.
வடநாட்டிலிருந்து தெற்கே வந்த சமணம் தென்கன்னடப் பகுதியிலுள்ள சிரவண பெலகுளாவில் நிலைகொண்டு பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தன்மதத்தை வளர்த்து வந்தது. 


சந்திரகுப்த மௌரியருடன் வந்த பத்ரபாகுவிற்குப் பின் கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாமந்தப்பத்திரர் எனும் சமணத் துறவி பற்றியும், அவருக்குப் பின் வந்த எண்ணற்ற சமணத் துறவிகள் பற்றியும் அவர்கள் காஞ்சிமாநகரில் இருந்து சமயத்தைப் பரப்பினர் என்பதையும் சிரவணபெலகுளாக் கல்வெட்டுகளும், வேறுசில சமண சமய நூல்களும் கூறுகின்றன.

தென்னார்க்காடு மாவட்டத்தில் இன்றுள்ள திருப்பாதிரிப்புலியூர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பாடலிபுத்திரம்/பாடலிபுரம் என்று அழைக்கப்பட்டது. இங்கு ஒரு பெரிய சைனமடம் இருந்தது. இதனைச் சேக்கிழார், "பாடலிபுத் திரமென்னும் பதியணைந்து சமண்பள்ளி மாடணைந்தார்"(திருநா. 38) என்று கூறுவார். 

இம்மடத்தில் சந்திரநந்தி என்ற சமணமுனிவர் தங்கியிருந்து "லோகவிபாகம்" எனும் நூலை அர்கத்மாகதி மொழியிலிருந்து வடமொழியில் பெயர்த்தெழுதியுள்ளார். இந்நூல் எழுதி முடித்த காலம் சகம் 380 (கி.பி. 458) சிம்மவிஷ்ணு பல்லவனின் 22 ஆம் ஆட்சியாண்டில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மடத்தில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் சிம்மசூரி என்பவரும், சர்வநந்தி என்பவரும் சம்ஸ்க்ருதத்திலும் பிராகிருதத்திலும் பெரும்புலமை பெற்று விளங்கினர். 

இம்மடத்தில் தான் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் மருள் நீக்கியார் `தருமசேனர்' எனும் பெயர் பூண்டு சமணர்களுக்குத் தலைமை தாங்கினார். பிற்காலத்தில் சைவராகித் திருநாவுக்கரசர் ஆயினார். 

இம்மடத்தினருகில் சமணர் கோயில் இருந்தது. இதனை மஞ்சள்குப்பம் பயணியர் மாளிகையின் அருகிலுள்ள நான்கடி உயரச் சமணர் சிலை இன்றும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.

கி.பி. 525 அளவில் பூஜ்யபாதர் என்பவருடைய மாணவரான வஜ்ரநந்தி என்பவர் சமணசங்கம் ஒன்றினை நிறுவினார். தேவசேனர் என்பார் எழுதிய `திகம்பர தரிசனசாரம்' என்னும் நூல், அச்சங்கம் தமிழகத்து பாண்டி நாட்டு மதுரையில் நிறுவப்பட்டதெனக் கூறுகிறது.10 

ஆராய்ச்சியாளர் சிலர் இச்சங்கத்தையே தமிழ்ச்சங்கம் என்றும், முதலிடை கடைச் சங்கங்கள் இருந்தனவாக இலக்கியங்கள் கூறுவன மிகையே என்றும் கூறுவர். 

பௌத்தத்தின் நலிவைக் கண்ட சமணர்கள் தமிழ் பயின்றனர். தமிழுக்கான இலக்கண நூல்களையும், நீதிநூல்களையும், காப்பியங்களையும் இயற்றலாயினர். பௌத்தம் போன்று சாதிக் கோட்பாட்டினை முற்றிலும் வெறுக்காது, வணிகர்களை முதன்மையாகக் கொண்டு சாதிகளை ஒருபால் ஏற்றுக் கொண்டனர். 

தமிழகத்தில் பெரும்பான்மையும் திகம்பர சமணமே இருந்ததெனினும் சிறுபான்மை சுவேதாம்பர சமணமும் இருந்து வந்தது. 

சிலப்பதிகாரக் காலந்தொட்டு கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்த சமணம், மன்னர்களால் ஆதரிக்கப் பெற்றது. பல்லவராட்சிக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட களப்பிரர்கள் சமணர்களே.
மதுரையைச் சுற்றியிருந்த மலைகளில் எண்ணாயிரம் சமணர்கள் வாழ்ந்தனர் எனப் பெரியபுராணம் கூறும். 


களப்பிரர்களும் சமணமும்

கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்து முடியுடை மூவேந்தர்களையும் வடபுலத்திலிருந்து வந்த களப்பிரர்கள் வென்று தமிழகத்தைப் பிடித்துக் கொண்டனர்.

"களப்பிரரர்கள் தென்கன்னடப் பகுதியைத் தாயகமாகக் கொண்டு மலையின்கண் வாழும் அரச குடியினராய்த் தனியாட்சி செலுத்தி வந்தவராதல் வேண்டும்" என்பது டாக்டர் க.ப. அறவாணன் கருத்து.11

”எருமை நாடு எனப்படும் மைசூர்ப் பக்கத்திலிருந்து புறப்பட்ட களப்பிரர்கள் பாண்டியர்களை வென்று அடிமைப்படுத்தி அங்கேயே தங்கி ஆட்சி புரிந்தனர். இவர்களில் மற்றொரு சாரார் சோழநாட்டைக் கைப்பற்றிக் காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். மூன்றாம் பிரிவினர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டில் காலூன்றினர்”என்பது ஆய்வாளர் மு. அருணாசலம் அவர்களின் கருத்து. 12

"இவர்கள் அரச குலத்தினர் அல்லர். எனவே பண்பு முதலியவற்றை இவர்கள்பால் எதிர்பார்ப்பது சரியன்று. அரசாட்சியைக் கைப்பற்றிய பின்னர் தத்தம் சமயத்தை இவர்கள் மக்களிடையே திணிக்க முயன்றனர். இவர்களைப் பற்றிக் குறிப்பிடும் வேள்விக்குடி அறமுறியின் தமிழ்ப் பகுதியில் கூட இவர்கள் பெயரைக் குறிப்பிடும் பொழுது பிராகிருத மொழியே பயன்படுத்தப்படுகிறது. எனவே இவர்கள் பெயரைத் தமிழில் எழுத முயன்ற பிற்காலத்தார் "களப்பிரர்" என்றும் "களப்பாளர்" என்றும், பல்வேறு வகையாக எழுதினர்"என்றார் அ.ச. ஞானசம்பந்தனார்.13

களப்பிரர் தமிழகத்தை ஆண்ட மூன்று நூற்றாண்டுகளில் தமிழகத்தில் கலை முதலியன வளர்ச்சி பெறவில்லை. ஆகவே அது இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

"தமிழ்க்கலை தமிழர் நாகரிகம் பிற சிறந்த பண்புகள் எல்லாம் சிதைந்து போயின. மதுரை மாநகரில் தமிழாராய்ச்சி செய்து கொண்டிருந்த கடைச் சங்கமும் அழிந்தது. களப்பிரர் ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளுள் இதனினும் கொடியது வேறில்லை என்று கூறலாம். எனவே இவர்களது ஆட்சிக் காலம் ஓர் இருண்ட காலம் ஆகும்" என்று வரலாற்றறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.14

களப்பிரர் காலத்தில் சமணசமயம் செழித்தோங்கியது. கன்னட நாட்டில் அது தலை நிமிர்ந்து நின்றது. தமிழ்நாட்டில் ஆங்காங்கு பரவத் தொடங்கியது. தமிழும், தமிழர் சமயமும், களப்பிரர் ஆட்சியில் மிதிப்புண்டு ஒடுங்கிக் கிடந்தன. வளர்ச்சியின்றி வாழ்விழந்தன. 

எனவே இக்காலப் பகுதியில் புலவர்கள் தலையெடுக்கவோ, சீரிய தமிழ்நூல்கள் தோன்றவோ முடியவில்லை. எனவே இக்காலத்தை ”இருண்டகாலம்” என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். சிலர் இக்கருத்தை மறுக்கின்றனர்.

தமிழக வடகொங்குப் பகுதிப் பெரும்பாலும் கன்னட நாட்டு அரசியலுடன் கலந்தே வந்திருக்கிறது. இப்பகுதியை கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை ஹொய்சாளர்கள் ஆண்டு வந்துள்ளனர். 

கங்க மன்னர்களுடைய ஆட்சியில் அவர்களால் போற்றப்பட்ட சமணசமயம் இப்பகுதியை மிகவும் ஆட்படுத்தியுள்ளது. அதாவது கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முடிய 6 நூற்றாண்டுகள் வரை சமணசமயம் வடகொங்கில் மிகுதியாகப் பெருகியது.15

சமயக்குரவர் காலத்தில் கங்கநாடு சமணர் நிறைந்த நாடாக இருந்தது. பல்லவர்க்கும் கங்கர்க்கும் ஏற்பட்ட உறவு காரணமாகத் திகம்பர சமணமுனிவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிச் சமயப் பிரச்சாரம் செய்து வந்தனர். திருப்பாதிரிப்புலியூரில் புகழ்பெற்ற சமணமடம் ஒன்று இருந்தது. 

நாட்டின் பல பகுதிகளிலும் சமண மடங்கள் பாலி, வடமொழி, தமிழ் ஆகிய இம்மூன்று மொழிகளிலும் சமயநூல்களை வெளியிட்டன. சமணக்குரத்திமார் (பெண் துறவிகள்) மடங்களைத் தோற்றுவித்துப் பெண் உலகிற்குத் தொண்டு செய்து வந்தனர்.16
சமணத்தின் வீழ்ச்சி
க, வைதீக சமயம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பரத கண்டம் முழுவதுமே நலிவுற்றிருந்தது. பௌத்த சமயங்கள் புயலெனப் பொங்கி மக்களைப் பெருமளவில் ஈர்க்கலாயின என்பது மேற்கண்ட சான்றுகளிலிருந்து தெரிய வருகின்றது.
பண்டைக் காலத்திலேயே கடவுட்கோட்பாடு சிறந்திருந்த போதும், தமிழகத்தை ஆண்ட சிற்றரசர்களிடையே ஏதாவதொரு காரணம் தொட்டு போர்கள் நடந்தன என்பதை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பேரரசு தோன்றாக் காலத்தில் நிகழ்ந்த இப்போர்கள் நீடித்த விளைவுகளை அளிக்காவிட்டாலும் நிம்மதியான வாழ்விற்கு உலை வைத்தன.

"பண்டை இலக்கியங்கள் கடவுளரைப் பற்றிய வழிபாடுகளைப் பற்றியும் கூறுகின்றன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழகத்தில் பல்வேறு சமயங்கள் நிலவியிருந்தமையைக் காட்டுகின்றன. தொடர்ந்து நடந்த போர்களாலும் பிரிவினைகளாலும் தளர்ந்து போயிருந்த மக்களின் மனத்தைச் சமண, பௌத்த சமயக் கருத்துக்கள் ஈர்த்தன."17

"காதல் வாழ்க்கை என்றிருந்த தமிழ் மக்களுக்குச் சமண பௌத்தக் கோட்பாடுகள் வரவேற்கத் தக்கனவாயிருந்தன. புதுமை, அவர்களைப் பெரிதும் கவர்ந்தது."18

வைதீக சமயங்களைப் பூண்டோடு அழிக்க முற்பட்ட களப்பிரருக்குப் பின்பு தொண்டை நாட்டைக் கைப்பற்றி யாண்ட பல்லவ மன்னர்கள் தமிழர் அல்லர் என்றே அறிஞர் பெரும்பாலோர் கருகின்றனர்.
"பல்லவர்கள் தமிழ்நாட்டவரல்லர் என்பதும், காலம் செல்லச்செல்லப் படிப்படியாக வடநாட்டிலிருந்து தென்னாடு புகுந்து தொண்டைநாட்டிலும் சோழநாட்டிலும் பரவியவர் என்பதும் அவர்கள் வரலாற்றால் அறியப்படுகின்றன. எனவே அவர்கட்குத் தமிழ் வேற்றுமொழி என்பதும் வடமொழி உரிமைமொழி என்பதும் வெளிப்படை. ஆகவே, அவர்கள் ஆட்சியில் வடமொழியே பெரிதும் பேணி வளர்க்கப்படும் என்பது சொல்லாமலே விளங்கும்."19

அப்பரடிகள் காலத்தில் வாழ்ந்திருந்த பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் வடமொழியில் பெரும்புலமை கொண்டவன். பாடலிபுத்திரத்தில் இருந்த சமண சங்கத்தின் மீது பேரன்பு கொண்டிருந்தான். 

சமண சமயத்தைச் சேர்ந்த மகேந்திரவர்மன் சமணத் துறவிகள் மனமகிழும்படியாகப் பிறமதத்தவர்களைக் கிண்டல் செய்யும் நையாண்டி நாடகமான `மத்த விலாசப் பிரகசன'த்தை வடமொழியிலே இயற்றினான்.20

அக்காலத்துத் தமிழகத்தில் பரவியிருந்த பௌத்தம், பாசுபதம், காபாலிகம், காளாமுகம், பைரவம் ஆகிய மதங்களைக் கிண்டல் செய்து இந்நாடகத்தை இயற்றியிருக்கிறான்.21

இவன் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டிருந்த மாறவர்மன் அரிகேசரியாகிய கூன்பாண்டியனும் சமணசமயத்தைத் தழுவியிருந்தான்.

சமணசமயக் கொள்கைகளுள் பெரும்பாலன நடைமுறைக்கு ஒவ்வாதனவாயிருந்தன.

"துறவு பூணுதலின்றி, குறிக்கோளை எட்ட உதவும் வழிவேறில்லை என்னும் விதி ஏற்றுக் கொள்வதற்கு ஏற்றதாயில்லை. மேலும் அரசு இந்த வகையில் வற்புறுத்தலை மேற்கொண்டது. வழிபாட்டு முறையில் தாராளமான சுதந்திரத்தை அனுபவித்துப் பழகிய மக்களுக்கு இந்தக் கட்டாயமும் திணிப்பும் வெறுப்பை ஊட்டின. எனவே தான் களப்பிரர்களின் ஆட்சி முடிவடையும் காலத்தில் தோன்றிய சைவ சமயக்குரவர்களுக்கு வரவேற்பு இருந்து. அவர்கள் துறவினுடைய சிறப்பை ஒரு சிறிதும் குறைக்காமலேயே `இறைவன் துறவியர்க்கெல்லாம் துறவி' என்று கூறியும் அதே நேரத்தில் `பாகம் பெண்ணுருவானவன்' என்று கூறியும் இறைவனைப் பாடியுள்ளார்கள். அதாவது துறவியாய் உள்ள அதே இறைவன் காதல் வாழ்க்கைக்கும் கடவுளாக அமைகின்றான். துறவு என்பது அன்புக்கு மாறானது அன்று. பௌத்த சமண சமயங்கள் வெறுத்து ஒதுக்கிய பல்வேறு கலைகளும் சமயக் குரவர்களால் புத்துயிர் பெற்றன. இறைவன் புகழைப் பாடுவதற்கும் பரப்புவதற்கும் அவர்கள் இசையைப் பயன்படுத்தினர்."22

இன்னும் சமண சமயத்தார் மேற்கொண்ட காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளை அப்பரடிகள் தமது தேவாரத்தில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

தலைபறித்தல், கடுப்பொடி பூசிக் கொள்ளுதல், நின்று கொண்டு உரையாடாமல் உண்ணல், பாயுடுத்தல், மெல்லோசைகளைக் கொண்ட மந்திரங்களை முணுமுணுத்தல், பீலிகளை இடுக்கிக் குண்டிகைத் தூக்கி கொள்ளுதல், உடல் அழுக்கை நீக்காமை, பல் விளக்காமை, போலி அறவுரை கூறல் என்பது முதலியன சமணர்களின் அன்றாட வழக்கங்களாக இருந்தன என்பதை அப்பரடிகள் தேவாரத்தின் அகச்சான்றுகள் விளக்குகின்றன.

பரத கண்டம் முழுதும் நிலவியிருந்த வேதநெறியினைப் பழித்ததும், வேள்விகளைக் கடுமையாக எதிர்த்ததும் சமண சமயத்தின் அழிவிற்கு வித்திட்ட முக்கிய காரணங்களாம். 
மேலும், பண்டை தமிழ்ச் சமூகத்தில் மேம்பட்டிருந்த பெண்கள் நிலை இழிவடைந்தமை, தமிழ்ப்பண்பாட்டிற்கு முற்றிலும் மாறான வழக்கங்களை சமணத் துறவிகள் மேற்கொண்டமை, சமண மடங்களில் ஏற்பட்ட குழப்பங்கள், துறவிகளின் போலித்தன்மைஇவையாவும் சேர்ந்து தமிழகச் சமய வரலாற்றில் சமண சமய வீழ்ச்சிக்கும் வைதீக சமயங்களின் எழுச்சிக்கும் முக்கிய காரணங்களாயின.

சமணசமயத்தைக் குறிக்க வந்த தெய்வச் சேக்கிழாரும், "உலகில் வரும் இருள்" என்றும்,"கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம்" என்றும், "பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறி" என்றும், "கொலையும் பொய்ம்மையும் இலமென்று கொடுமையே புரிவோர்" என்றும், "கொலைபுரியா நிலை கொண்டு பொய்யாழுகும் அமண் குண்டர்" என்றும் சமண சமயத்தின் அன்றைய உண்மை நிலையை எடுத்துரைத்தனர்.

இச்சூழ்நிலையில் தான் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் அவதரித்து வேதநெறி தழைத்தோங்கவும் மிகுசைவத்துறை தழைக்கவும் பாடுபட்டனர்.

தமிழகமும் வேதமும்

வேதங்கள் பற்றியும் வேதநெறிகள் பற்றியும் எடுத்தியம்பும் குறிப்புகள் தமிழில் தொல்காப்பியம் முதலே காணக் கிடைக்கின்றன.
எழுத்து அதிகாரத்தில் ஒலிபிறப்பியலுக்கு இலக்கணம் கூற வந்த தொல்காப்பியனார் நாவிடைப் பிறக்கும் ஒலிகளுக்கு மட்டுமே இலக்கணம் கூறுவதாகவும், நாபியிலிருந்து எழும் ஒலிகளுக்குக் கூறவில்லை என்றும் அவையெல்லாம் வடமொழி வேதத்திற்குரியன என்றும் கூறுகின்றார்.


`வினையினீங்கி' என்ற சூத்திரத்தின் உரையில் பேராசிரியர், "முனைவனாற் செய்யப்படுவதோர் நூலில்லையென்பார், அவன் வழித் தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பாற் பொருள் கேட்டு முதனூல் செய்தாரெனவும், அம்முனைவன் முன்னர் ஆகமத்துப் பிறந்ததோர் மொழியைப் பற்றி அனைத்துப் பொருளும் கண்டு பின்னர் அவ்வவற்றுக்கு நூல் செய்தார் அவரெனவும், அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து வழிநூலுஞ் சார்பு நூலுமெனப் பலவுஞ் செய்தாரெனவும் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்த நூலன்மையின் அவை தேறப்படா. அல்லதூஉம் அவை தமிழ் நூலன்மையின் ஈண்டு ஆராய்ச்சியில வென்பது" என்று கூறி பரமாப்தனான இறைவன் அருளியவை வேதாகமங்கள் எனவும், அவை தமிழில் அமையாது வடமொழியில் அமைந்தவை எனவும் தெளிவாக்கியிருக்கிறார். 

மேலும், "தமிழ் நூலுள்ளும் தமது மதத்திற்கேற்பன முதனூல் உளவென்று இக்காலத்துச் செய்துகாட்டினும் அவை முற்காலத்தில என்பது முற்கூறிய வகையான் அறியப்படும்"என்றும், 

"தாமே தலைவராவாரும், அத்தலைவரை வழிபட்டுத் தலைவராயினாரும் பலராகலின், தாமே தலைவராயினார் நூல் செய்யின் முதனூலாவதெனின், அற்றன்று; தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலர்" என்றும் இதனையே தெளிவுப்படுத்தியிருக்கிறார். 

இன்னும், "அறங்கறை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து"என்னும் தொல்காப்பியப் பாயிர அடிகளுக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர், "நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறையென்றார். அவை தைத்திரியமும் பௌடிகமும் தலவகாரமுஞ் சாமவேதமுமாம். இனி இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமுமென்பாருமுளர். அது பொருந்தாது. இவர் (தொல்காப்பியர்) இந்நூல் செய்த பின்னர், வேதவியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தாராதலின்" என்று விளக்கியிருக்கின்றார். 

எனவே தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வேதங்கள் இருந்தன என்பது தெளிவாகிறது. 

பின்னும் வேதங்களைப் பயின்ற வேதியர் பற்றியும் அவரது ஒழுக்கங்கள் பற்றியும், வேதநெறியிற் செய்யப்படும் வேள்விகள் பற்றியும் சங்க இலக்கியங்கள் பலபடியாய்ப் பேசுகின்றன. 

திருக்குறளும், "அந்தணர் நூல்" என்றும், "ஓத்து" என்றும் வேதத்தைக் குறிக்கின்றது. 
திருவள்ளுவ மாலை, "ஆரியம், வேதமுடைத்துத் தமிழ் திருவள்ளுவனார் ஒது குறட்பா உடைத்து" என்று வடமொழி வேதத்தை இனம்பிரித்துச் சுட்டுகிறது. 

நரிவெரூஉத்தலையார், "வடமொழி வேதத்தில் சொல்லப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடென்னும் உறுதிப் பொருள்கள் நான்கனையும் வள்ளுவர் குறளில் மொழிந்திருக்கின்றார்"என்று கூறுகின்றார். 

திருஞானசம்பந்தரும், "அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும் செந்தமிழ்க் கீதமும்"என்று வேறுபடுத்தி அருளிச் செய்கின்றார். 

நம்பியாண்டார் நம்பிகள் சம்பந்தப்பிள்ளையாரைத் தோத்திரிக்கும் இடங்களில், "வளமலி தமிழிசை வடகலை மறைவல" என்றும், "பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவாகமவிதியும் நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே" என்றும்,"வகைதகு முத்தமிழாகரன் மறைபயில் திப்பிய வாசகன்" என்றும், "பலமலிதருந் தமிழின் வடகலை விடங்கன்" என்றும் வேறுபடுத்திக் காட்டியருளுகின்றார். 

தொல்காப்பியத்திற்குப் பின்னர் பல்லாயிரக் கணக்கான தமிழிலக்கியங்களில் காணப்படும் வேதம், வேள்வி, வேதியர் பற்றிய குறிப்புகளைக் காணுமிடத்து தமிழர்கள் வேதம் பற்றியும் வேள்வி பற்றியும் நன்றாக அறிந்திருந்தனர் என்பதையும், அவற்றை தம் சமய வாழ்வில் ஏற்று நடத்திக் கொண்டு இருந்தனர் என்பதையும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.இவ்வேத நெறியினையே தம் வாழ்வில் மேற்கொண்டு சமயப்பூசலின்றி வாழ்ந்திருந்த தமிழரிடையே சமண பௌத்த மதங்கள் நுழைந்து குழப்பத்தை விளைவிக்கத் தொடங்கின. 

வேதங்கள் பிரமாண நூல்கள் அல்ல என்றும், வேள்விகள் இயற்றி ஆவதொன்றில்லை என்றும், வேதநெறியின்படி தெய்வ வழிபாடு இயற்ற வேண்டியதில்லை என்றும் அவைதீக மதங்களான சமண, பௌத்தங்கள் பிரச்சாரம் செய்யலாயின. 

தமிழகத்தில் சமணம் பரவியபோது வேதநெறியைத் தாக்குவதைத் தனது முதல் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டது. 23 ஆம் தீர்த்தங்கரரான பார்சுவநாதர் வேதங்களையும், வேள்விமுறைகளையும் கடுமையாக எதிர்த்தவர். வேதவேள்வியின் நிந்தனை, ஒழுக்கத்தை வற்புறுத்தல் என்ற இரண்டை அடிப்படையாகக் கொண்டே சைன நூலான யசோதர காவியம் இயற்றப்பட்டது. 23 

வட இந்தியாவில் தோன்றி வளர்ந்த போதும் தென்னாட்டில் வந்து பரவிய போதும் சமணம் முற்றிலும் வைதீக எதிர்ப்புச் சமயமாகவே விளங்கியிருக்கிறது.24 

எனவேதான் நலிந்த வேதநெறியை மீண்டும் நிலைநாட்ட அவதரித்தனர் அப்பரடிகளும், சம்பந்த சுவாமிகளும். 

"அன்றிருந்த தமிழகத்தின் நிலைமையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது சமயக் குரவர்களுடைய பிறப்பின் சிறப்பு நன்கு புலப்படும். ஏறக்குறைய ஒரே விதமான கருத்தைத் தெரிவிக்கும் வகையில் சேக்கிழார் அவர்களுடைய பிறப்புக்களின் பெருமையை எடுத்துரைக்கிறார். தமிழ்நாட்டில் சமண, பௌத்த நெறிகளை எதிர்த்து வைதிக நெறி மீண்டும் ஓங்கி வளர்வதை அவர்களுடைய வருகை தெரிவித்தது."25 

"தமிழகத்தில் வெவ்வேறு சமயங்கள் பரவி ஆட்சி செலுத்திய காலத்தில், சிவநெறியை மீண்டும் நிலை நிறுத்துவதற்காக சமயாச்சாரியர்கள் தோன்றினார்கள். திருநாவுக்கரசர் உலகைக் கவ்வியிருந்த இருளை நீக்கும் கதிரவனைப் போலத் தோன்றினார். அவர் பெயரே `மயக்கத்தை நீக்குபவர்' (மருள் நீக்கியார்) என அமைந்தது. திருநாவுக்கரசர் எதற்காகத் தோன்றினார் என்பதை அவருக்குப் பெற்றோர் இட்ட பெயரே உணர்த்துகின்றது."26 

வேதமும் சிவாகமமும்
"ல்லா மனிதர்களும் எந்த உண்மையான கல்வியைக் கற்றால் அறிஞர்களாகவும், சுகமுள்ளவர்களாகவும், உண்மை-பொய் ஆகியவற்றை முடிவு செய்யும் திறமையுள்ளவர்களாகவும் இருப்பார்களோ அதுவே வேதம்."27

"அதுபோலவே சிருஷ்டியின் துவக்கம் முதல் இன்றுவரை பிரம்மா ரிஷி முதல் நாம் வரை எதனால் உண்மையான கல்வியைக் கேட்டு, கற்று வந்தோமோ, அதுவே `ஸ்ருதி' என்னும் பெயருடையதாயிற்று." 

"வேதங்களை இயற்றியவரை இதுகாறும் எவரும் நேரில் கண்டதில்லை. அதனால் உருவமற்றவராகிய இறைவனே வேதங்களை இயற்றினார் என்பது தெளிவு"
28 

பாரதத்தில் தோன்றிய மதங்களுள் பௌத்தம், சமணம், ஆசீவகம், சார்வாகம் தவிர பிறவனைத்தும் மேற்சொல்லியபடி இறைவனால் அருளப்பட்ட வேதங்களைத் தமது பிரமாண நூல்களாக ஏற்றுக் கொண்டன. சைவமும் அவற்றுளொன்று. 

"சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்றபடி சிவபிரானையே முழுமுதற் கடவுளாகக் கொண்டமை, அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தன்மை முதலிய கொள்கைகளை உடையதே சைவசமயம். 

பாரதத்தில் மொத்தம் 5 வகையான சைவ சம்பிரதாயங்கள் நிலவுகின்றன. 
1. லகுலீச பாசுபதம்; 2. காஷ்மீர (த்ரிக) சைவம்; 3. (தமிழக) சித்தாந்த சைவம்; 
4. ஸ்ரீகண்டரின் சிவாத்வைதம்; 5. சக்திவிசிஷ்டாத்வைதமான வீரசைவம் என்பன அவை. 

இவை ஐந்துமே வேதங்களைத் தமது பிரமாண நூல்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் லகுலீச பாசுபதம் வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. மற்றவை ஆகமங்களையும் அடிப்படை நூல்களாகக் கொண்டவை. 

பதி பசுபாசம் எனும் முப்பொருள் உண்மை, இறைவன் நிமித்த காரணன், சிவசக்தி அபேதம், ஸ்ருஷ்டி முதலான பஞ்சகிருத்தியங்களுக்கு ஈசனே கர்த்தா, வேத உபநிஷதங்களில் கூறும் பிரம்மம் பிரகாச - விமரிச மயனான ஈசனே எனும் துணிபு, ஷட் தரிசனங்களைப் போலல்லாமல் 24 தத்துவங்களுடன் மேலும் 12 சுத்த தத்துவங்களைக் கூட்டி 36 தத்துவங்களாகக் கொள்ளல் முதலியன இவ்ஐவகை சைவ சம்பிரதாயங்களுக்கும் பொதுவானவை.29
நால்வர் ஆசாரியரால் பரப்பப்பட்டு மெய்கண்ட சிவத்தினால் நிலைநிறுத்தப்பட்ட சித்தாந்த சைவம் வேதங்களையும் ஆகமங்களையும் பிரமாண நூல்களாகக் கொண்டது. ஆயினும்வேதத்தைப் பொதுநூல் என்றும், ஆகமங்களைச் சிறப்பு நூல் என்றும் வகைப்படுத்திக் கொண்டது.


இதனை,

"வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஓதும் சிறப்பும் பொதுவும் என்று உன்னுக"
 என்று திருமூல நாயனாரும், 


"வேதநூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள்
வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள்
ஆதிநூல் அநாதி அமலன் தரு நூல் இரண்டும்
ஆரணநூல் பொது, சைவம் அருஞ்சிறப்பு நூலாம்நீதியினால் உலகர்க்கும் சத்திநி பாதர்க்கும்
நிகழ்த்தியது நீள்மறையின் ஒழிபொருள் வேதாந்தத்
தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல்சைவம் பிறநூல்
திகழ்பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்தமாகும்" 


என்று சிவஞான சித்தியாரில் அருணந்தி சிவாசாரியரும் அருளிச் செய்தனர். 

வேதங்கள் மூவர்ணத்தாருக்கே உரியது, உலகருக்குரிய அறங்களைக் கூறுதல், அதில் சிவபிரானோடு பிற தேவதைகளும் பேசப்பட்டிருத்தல் முதலிய காரணங்களினால் அது பொதுநூல் எனப்படுகிறது. 

சிவாகமங்களோ எனின் நால்வர்ணத்தாருக்கும் உரியவை, சத்திநிபாதர்க்குரிய அறங்களைப் பேசுகின்றமை, சிவபிரான் ஒருவனுக்கே பரத்துவம் கூறுகின்றமை முதலிய காரணங்களால் அவை சிறப்பு நூல் எனப்படுகின்றன.


"...மற்றவை ஆகமங்களைச் சார்ந்தவை. `ஆகமங்களைச் சார்ந்தவை' என்றால், அவை வேதங்களைப் பிரமாணமாக ஒப்புக் கொள்ளவில்லை என்பதில்லை. அதற்கு மாறாக, `ஆகமமும் வேதமும் சிவன் இயற்றியவையாகையால், இரண்டின் தத்துவ ஞானமும் ஒன்றே' என்று அவை உறுதியுடன் கூறுகின்றன. ஆனால் வேதம் என்பது மூவர்ணத்தார் வரையிலேயே அளவுபட்டு நிற்பதனால், எல்லா வர்ணத்தாருக்குமுரிய ஆகமங்களைச் சைவசமயம் ஏற்றுக் கொண்டு, எல்லா இனத்து ஆண் பெண்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. `எல்லா வர்ணத்தாருக்கும் நாம கீர்த்தனத்தில் உரிமை' (அதாவது முக்தியுரிமை) என்ற பக்தி மார்க்கத்திய கோஷத்துக்கு, இது முன் உருவமாகும்.
30 

"...இந்தத் தத்துவ ஞானம் சிறப்பாக ஆகமங்களைச் சார்ந்தது; அதாவது, இது மூவர்ணத்தாரின் அளவில் கட்டுப்பட்டிராமல் பொது மக்களான எல்லா ஆண் பெண்களுக்கும் அறிவு பெறவும், சாதனைகள் பயிலவும் உரிமை தருகிறது. இந்தத் தத்துவஞானம் த்வைதம், அத்வைதம் முதலிய எந்தச் சம்பிரதாயத்தைச் சார்ந்ததாயினும், அதன் நோக்கம் சிவத்தன்மை பெறும் முக்தியை அடைவதாகும்."31 

வேதம் நிலையானதா?
னி, வைதிக சமயத்தாரில் ஒருசாரார் கூறுகிறபடி, வேதமானது `சுயம்பு' - தானே தோன்றியது என்னும் கருத்தையும், `அபௌருஷேயம்' - ஒருவராலும் செய்யப்படாதது என்னும் கருத்தையும், வேதம் நித்தத் தன்மையுடையது என்னும் கருத்தையும் சித்தாந்த சைவம் மறுக்கிறது.

வேதம் `சுயம்பு' என்று அழைக்கப்படுவதன் காரணம், `சுயம்பு' எனும் பெயருடைய இறைவனால் அருளிச் செய்யப்பட்டதனால், இறைவன் பெயர் அதற்கு வந்தது என்றும், (வள்ளுவரால் செய்யப்பட்டமையின் குறள் வள்ளுவர் எனப்படுவது போல), இறைவன் வேதத்தில் தன்னைத் தானே வழிபடுவது போலக் கூறியுள்ளமை, பக்குவ ஆன்மாக்களாயுள்ளவர்கள் தம்மை வழிபாடு செய்து உய்ந்து போவதற்கு என்றும், வேதம் ஆன்மாக்களுக்காகவே இறைவனால் அருளிச் செய்யப்பட்டது என்றும் சங்கற்ப நிராகரணத்தில் உமாபதி சிவாசாரியர் மாயாவாதி நிராகரணத்தில் அருளியுள்ளார். 

மேலும், புருஷர்களாகிய ஜீவாத்மாக்களால் செய்யப்பட்டதன்று என்பதைக் கூறவே `அபௌருஷேயம்' என வேதம் கூறப்பட்டது. 

வேதம் `ஆப்தவாக்கியம்' எனப்படுகிறதே எனின், இறைவனுக்கு `பரமாப்தன்' என்று பெயராதலின், அவனால் அருளிச் செய்யப்பட்டமையின் அவ்விதம் அழைக்கப்படுகிறது. 

தொல்காப்பியம் ஆப்தனுக்கு இலக்கணம் கூறுகையில், "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்" என்றார். அத்தகைய முனைவனாற் செய்யப்பட்டமையின் வேதம்`முதனூல்' எனப்பட்டது. 

இதனை, "ஆப்த வாக்கியமானது சித்தாந்தமேயாகும். சிவனொருவனே ஆப்தனாயிருக்கின்ற காரணத்தால், அவன் வாக்குச் சித்தாந்தம் எனப்படும். அந்தச் சித்தாந்தம், ஆப்தனாகிய பரமசிவன் என்னும் இருபொருள்களோடு சமானமான வேறொரு பொருள் இல்லை" என்று இரத்தினத்திரயம் கூறும்.32 
இதனையே ஸ்ரீமத் அகோர சிவாசாரியர் செய்த விருத்தியுரை மேல்வருமாறு விளக்குகின்றது. அஃதாவது: 

"ஆகமமானது ஆப்தவாக்கியம்; அந்த ஆகமமும் பிரத்தியக்ஷத்தினாலும் அனுமானத்தினாலும் அறியப்படாமல் இருக்கிற பதார்த்தத்தை அறிவதற்குச் சாதனம் என்று சொல்லப்படும். பிரத்தியக்ஷத்தாலும் அனுமானத்தாலும் நிச்சயமாயிருக்கிற அர்த்தத்தை யாவனொருவன் சொல்லுகிறானோ, அவன் ஆப்தன் ஆவான். அந்தக் காரணத்தால் அந்தப் பரமசிவம் பரமாப்தர் என்று சொல்லப்படுவர். மிகத் தெளிந்த புலன்தொகுதியை உடையவரும், சர்வக்ஞரும், எல்லாத் தொழிலும் உடையவரும், பக்ஷ பாதமில்லாதவரும், உள்ளபடி கிரகிக்கிறவரும், நாசமில்லாதவரும், பெத்தான்மாக்களுடைய பந்தத்தைக் கெடுக்கிறவருமாகிய சிவபெருமான் பரமாப்தர் என்று சொல்லப்படுவர்."33 

எனவேதான் அப்பரடிகளும் "ஓதினார் வேதம் வாயால்" என்று இறைவன் வேதத்தை அருளிச் செய்தான் எனப் பாடினர். 

இனி, "முற்கூறிய 36 தத்துவங்களுள் நாதம் முதல் தத்துவம். இது `பிரணவம்' என்றும் `ஓம்' என்றும் கூறப்படும். அது பின்னர் விந்து தத்துவமாய் விரிந்து பரவும்... பரமசிவத்தின் அருளொளியானது சுத்தமாயையென்னும் குடிலையில் வந்து பொருந்தியவுடன் தோன்றிய தொனியே நாதமாகும். இந்த நாதமே வைதிக சைவத்துட் கூறப்பட்ட தத்துவங்கள் எல்லாவற்றிற்கும் முதன்மையானது. இதுவே சர்வாத்மாக்களுக்கும் அறிவை எழுப்புவித்து ஞானமாய் விளங்குவது. 

இந்நாதமே சப்தமயப் பிரபஞ்சம் (சொல் உலகம்), அர்த்தப் பிரபஞ்சம் (பொருள் உலகம்) ஆகிய இருகூற்றுப் பிரபஞ்சங்களுக்கும் காரணமாக விளங்குவது.
இவற்றுள் சப்தபிரபஞ்சமே வேதமாயும், பல சாகைகளாயும், காண்டங்களாயும், அத்தியாயங்களாயும், மந்திரங்களாயும், பதங்களாயும் அட்சரங்களாயும் விரிந்து அவற்றின் கோவைப் பாட்டோடு கூடிய தொகுதியாக விளங்குகிறது. எனவே அது காரியம் என்பது தெளிவாகிறது."
 34 


சைவ சித்தாந்தப்படி 36 தத்துவங்களும் மாயையின் காரியமாதலின் அவை நித்தியமென்று சொலப்படா. காரியமான அவை காரணமாகிய மாயையிலிருந்து தோன்றி ஒடுங்கும்.

இவ்விலக்கணம் வேத ஆகமங்களுக்கும் பொருந்தும். எனவே வேதம் நித்தம் என்னும் ஒருசாராரின் கொள்கை அடிபட்டுப் போகிறது. 

இதனை, 

"வேதம் நித்தம் என்பதற்குப் பிரமாணம் இன்மையானும், தோற்றக்கேடுகள் காணப்படுதலின் அநித்தம் என்பதே துணியப்படுதலானும், `அந்தக் ககரமே இது' என்னும் மறித்துணர்வு `அந்தச் சுடரே இது' என்பது போலச் சாதியொருமை பற்றி நிகழ்வதேயாம் ஆகலானும், அவ்வாறன்றி எழுத்துக்கள் நித்தமெனக் கொள்ளினும் அவை ஒன்றோடொன்று தொடர்ப்பாடுற்று வரும் சொற்கள் அநித்தமே ஆகலானும், உலகத்திற்குத் தோற்ற ஒடுக்கங்கள் உண்மையிற் பிரவாக நித்தம் என்பதும் பொருந்தாமையானும், எல்லாவுயிர்கள் மாட்டும் பேரருளுடைய பரமசிவனாற் செய்யப்பட்டமை பற்றியே வேதங்கட்குப் பிரமாணமுண்மை கொள்ளப்படும். அம்முறையானே சிவாகமங்களும் பிரமாணமாதல் துணியப்படும். அது வேதம் முதல் உலகாயதநூல் இறுதியாகிய எல்லாநெறியும் பரமசிவனாற் செய்யப்பட்டமையிற் பிரமாணமாமெனச் சூதசசங்கிதையிற் கூறியவாற்றானும் அறிக"35 

என, சிவஞானபோத பாஷ்யத்தில் ஸ்ரீசிவஞானசுவாமிகள் தெளிவுபடுத்தியுள்ளார். 
குறிப்புகள்
1.சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும் ( டாக்டர். டி.பி.சித்தலிங்கம்) - பக்.27.
2.சைவ இலக்கிய வரலாறு (ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை) - பக்.11.
3.மேலது - பக்.13.
4.மேலது - பக்.11,12.
5.தமிழக வரலாற்றில் சமயப் பூசல் (வீரா. அழகிரிசாமி) -பக். 127.
6.மேலது - பக்.118.
7.மேலது - பக். 117.
8.சைவ சமய உலகில் நால்வரின் செல்வாக்கு (முனைவர். சோ. குமரேச மூர்த்தி) - பக்.106.
9.மேலது - பக்.107.
10. சைவ இலக்கிய வரலாறு - பக்.16.
11. சைவ சமய உலகில் நால்வரின் செல்வாக்கு (முனைவர்.சோ.குமரேச மூர்த்தி) - பக். 23.
12. மேலது -பக்.25.
13. மேலது -பக்.25.
14. மேலது -பக்.14.
15. மேலது -பக். 58.
16. மேலது - பக்.58
17. சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும் (டி.பி.சித்தலிங்கம்) - பக். 27.
18. மேலது - பக்.28.
19. சைவ இலக்கிய வரலாறு (ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை) - பக்.23.
20. மேலது - பக்.18.
21. சைவ சமய உலகில் நால்வரின் செல்வாக்கு (முனைவர்.சோ.குமரேச மூர்த்தி) -- பக்.27.
22. சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும் - பக்.28.
23. சைவ சமய உலகில் நால்வரின் செல்வாக்கு (முனைவர் சோ. குமரேச மூர்த்தி )- பக்.35.
24. மேலது - பக்.187.
25. சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும் (டாக்டர். டி.பி.சித்தலிங்கம் ) - பக். 32.
26. மேலது - பக்.32.
27. வேதச் சுற்றுலா (ஸ்ரீ தயானந்த சரஸ்வதி,ஆர்ய சமாஜம் ) - பக். 34.
28. மேலது - பக். 34.
29. சைவத் தத்துவம் (டாக்டர். தகாரே )-பக். 373,374.
30. மேலது -பக். 372.
31. மேலது -பக். 379.
32. வேதாகம நிரூபணம் - பக்.35.
33. மேலது - பக். 36.
34. ப்ரணவ வித்யா பரிமளம் - பக்.6,9.
35. சிவஞான பாடியம் - பக். 18,19.

No comments:

Post a Comment