Tuesday, March 4, 2014

திருக்குறளும் அப்பரடிகள் தேவாரமும் - நான்மறை

நெல்லைச்சொக்கர் 
http://nellaichokkar.blogspot.in/2009/07/blog-post_18.html


க்கட்டுரையின் பொருள் பற்றி விரிவாக எழுத வேண்டும் என நெடுநாட்களாக நான் நினைத்திருந்தேன். ‘கற்றதேல் ஒன்றுமில்லை’ எனினும் ‘அளவில் ஆசை துரப்ப’ அதற்கான காலத்தை எதிர்நோக்கியிருந்தேன்.
என் அன்பிற்குரிய சகோதரி ஹேமா சௌந்தரராஜன்அவர்கள் நெல்லை வானொலி நிலையத்தில் பணிபுரிபவர். அவர் அந்நிலையத்தில் ‘தமிழமுது’ நிகழ்ச்சிக்காக நான் பேச வேண்டுமென கேட்டார். அதையே காரணமாகக் கொண்டு இக்கட்டுரையை எழுதினேன். நெல்லை வானொலியில் இது 12-08-09 முதல் 7 நாட்களுக்கு ஒலிபரப்பாகிறது.
அப்பரடிகள் தேவாரத்தையும் திருக்குறளையும் ஒப்பிடுவதற்கு இது ஒரு முன்னோட்டம்தான். இன்னும் விரிவாக இப்பொருளில் எழுத இயலும். ஆயினும் ‘வேலை நித்திரை யாத்திரை’ யிலேயே போது போவதால் இப்போதைக்கு இது மட்டுமே என்னால் இயலுவதாயிற்று. இக்கட்டுரையை தட்டச்சு செய்து அனுப்பிய என் அன்புச் சகோதரி ஹேமா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி உரியது.இனி கட்டுரை......


ப்பரடிகள், தமிழகம் சமண்சமய இருள்மூடித் தடுமாறியபோது அவ்விருள் நீக்கும் ஞானசூரியனாய் அவதரித்தவர். இதனைச் சேக்கிழாரடிகள்,


அலகில்கலைத் துறைதழைப்ப அருந்தவத்தோர் நெறிவாழ
உலகில்வரும் இருள்நீக்கி ஒளிவிளங்கு கதிர்போல
மலரும்மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்                
எனப் போற்றுகின்றார்.


சமயாசாரியர் மற்றவரின் வாழ்வினை நோக்கும்போது அப்பரடிகளின் வாழ்க்கை கடும் சோதனைகளே நிறைந்த வாழ்க்கையாக இருந்ததை நாம் காண்கின்றோம்.


இளமையில் ஒருவருக்கு நேரக் கூடாத துன்பங்கள் யாவும் அப்பரடிகளுக்கு நேர்ந்தன. அத்துன்பங்களே அவர் மனத்தை ‘சுடச் சுடச் ஒளிரும் பொன் போன்று’ தூய்மையும் துணிவும் நிறைந்ததாக்கின.


‘மறுஒழித்த இளம்பிறைபோல்’ வளர்கின்ற மருள்நீக்கியார் கல்வி பயிலத் தொடங்குகின்றார். எப்படி? ‘புலன்கொளுவ மனம்முகிழ்த்த சுருள்நீக்கி மலர்விக்கும் கலைபயிலத்’ தொடங்கினார் என்கின்றார் தெய்வச் சேக்கிழார்.


அஃதாவது, இதழ்கள் மூடிக்கிடக்கும் மலர் அவ்விதழ்கள் பிரிந்து மலர்வது போல ஆண்டஅரசும், புலன்கள் வழியாகப் பெறுகின்ற அறிவினால் மனம் மலர்வதாகிய-விரிவதாகிய கல்வியைப் பயிலத் தொடங்குகின்றார்.


ஆளுடைய அரசின் தகப்பனார் புகழனார் இவ்வுலகை விட்டு நீங்குகின்றார். அவரைப் பிரிந்த துயரத்தினாலே மனைவியார் மாதினியாரும் இவ்வுலகைத் துறக்கின்றார். அப்பரடிகளின் ஒரே தமக்கையான திலகவதியாருக்கு குணம்பேசிக் குலம்பேசி மணமுடிப்பதற்கு நிச்சயம் செய்துவைத்த கலிப்பகையாரும் போரிலே உயிர்துறந்த செய்தி வருகின்றது.


அடுத்தடுத்துப் பேரிடிகள் வருமாயின் யாரால்தான் தாங்க இயலும்? திலகவதியாரும் மருள்நீக்கியாரும் பெருந்துயரில் அழுந்துகின்றனர். திலகவதியார் தம்முயிர் நீப்பதற்குத் துணிகின்றார். இச்செயலறிந்து மருள்நீக்கியார் தமக்கை காலில் விழுந்து


“அன்னையும் அத்தனும் அகன்ற
பின்னையும்நான் உமைவணங்கப் பெறுதலினால் உயிர்தரித்தேன்
என்னைஇனித் தனிக்கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்
முன்னம்உயிர் நீப்பன்” என மொழிந்தார்.


‘தம்பியார் உளராக வேண்டும்’ என வைத்த கருணையினால் திகலவதியார் ‘அம்பொன் மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி’ தவம்புரிந்து திருவதிகையில் வாழ்ந்து வந்தார்.


நிலையாமையைத் தம்வாழ்வின் ஆரம்பத்திலேயே கண்டுணர்ந்த அப்பரடிகள் ‘காசினிமேல் புகழ்விளங்க நிதியளித்துக் கருணையினால் ஆசில்அறச் சாலைகளும் தண்ணீர்ப்பந்தரும்’அமைக்கின்றார்.


சோலைகள் வளர்க்கின்றார், குளங்கள் உண்டாக்குகின்றார். தமது கடமையே வேண்டியவர்க்கு வேண்டியவை அளித்தல் தாம் என்பது போல இவர் அவர் என்று பாராது ஈகை புரிகின்றார். இதனை ‘யாவர்க்கும் தவிராத ஈகைவினைத் துறைநின்றார்’ என்கிறது பெரியபுராணம்.


கல்வியிலே தலைநின்ற அப்பரடிகள் இந்த உலகத்தின் நிலையாமையைக் கண்டு நிலைத்த வாழ்வுதனைத் தேடி ஆராய்கின்றார். இவ்வுலகத்தினரின் இன்பதுன்பங்களை நடுநின்று நோக்கி சிந்தை செய்கின்றார்.


அவர் வாழ்ந்த காலத்தில் துறவின் மேன்மையை மட்டுமே வலியுறுத்திய சமணசமயம் நம் தமிழகத்தில் செல்வாக்குடைய சமயமாகத் திகழ்ந்தது.


ஏற்கனவே நிலையாமையை அனுபவித்து மேலும் அதன் தன்மையை ஆராய்ந்த அப்பரடிகளுக்குச் சமணத்தின் கொள்கைகள் பிடித்துப்போயிற்று. மருள்நீக்கியார் சமணத்தில் சேர்ந்தார்.


சமணசமயத்தின் சாத்திரங்களை எல்லாம் பயின்றார். அச்சமய ஒழுக்கத்தில் தலைநின்றார். சமணசமயத்தவர்க்குத் தலைவரானார். ‘தருமசேனர்’ எனும் பட்டத்தை அவர்க்கு அச்சமயத்தார் அளித்தனர்.


பின்பு சிவபிரான் அருளினால் அவர்க்குச் சூலைநோய் வந்ததையும் அதனால் அவர் தம் தமக்கையாரைச் சரணடைந்து சைவரானதையும், கோயில் கோயிலாகப் போய் இறைவன் புகழ் பாடியதையும் ‘திருநாவுக்கரசர்’, ‘அப்பர்’ எனப் பெயர்கள் பெற்றதையும் பெரியபுராணம் மிக விரிவாகக் கூறுகின்றது.


அப்பரடிகள் எண்பத்தொரு வயதுவரையிலும் வாழ்ந்தார் என்பர் ஆன்றோர். அதில் அவர்தம் பெரும்பான்மையான வாழ்வினை அதாவது 60 லிருந்து 70 ஆண்டுகள் சமணசமயத்திலேயே கழித்திருக்கக் கூடும் என்பர் வரலாற்று ஆய்வாளர்.


அப்பரடிகள் தம் வாழ்வு பற்றிய செய்திகளைத் தாம் பாடிய தேவாரப் பாக்களில் ஆங்காங்கே குறிக்கின்றார். அவர் கற்றறிந்த பெரியோர்; தம் வாழ்வின் பெரும்பகுதியில் ஏற்பட்ட அனுபவங்களைக் கண்டுணர்ந்த சான்றோர்; அதன் பயனாய் தாம் சிந்தித்தறிந்த பல்வேறு நற்கருத்துக்களை உலக மக்களுக்கு வழங்கி அவர்கள் நன்னிலை பெற்று உய்யவேண்டும் என்னும் கருணைத் திருவுள்ளம் உடைய உண்மை நாயனார்;


அப்பரடிகள், சிவபிரான் அருளினாலே சைவசமயம் திரும்பி நாடெங்கும் திருத்தல யாத்திரை செய்தார். அங்ஙனம் தாம் செல்லும் திருத்தலங்களிளெல்லாம் உழவாரத் திருப்பணி எனும் கைத்திருத்தொண்டு செய்து வந்தார்.


இதனால்தான் சேக்கிழாரடிகள், ஆளுடைய அரசு திருவவதாரம் செய்தருளிய நாட்டின் பெருமையைக் குறிக்க வந்த இடத்தில் ஆளுடைய அரசினை, ‘அறந்தரு நாவுக்கரசு’ என்று குறித்தார்.


இங்ஙனம் அறமே வடிவமான திருநாவுக்கரசருக்கு இறைவன் அங்கங்கே காட்சியளித்து அருள்புரிந்தான். பொய்வாய்மை பெருக்கிய புன்சமயமாகிய சமணசமயத்தில் தாம் நெடுநாள் கிடந்தமையையும், தன்னையும் ஆட்கொண்டருளிய இறைவனின் கருணையையும் நினைந்து நினைந்து உருகி உருகி உள்ளங்குழைந்து அமுதப் பாக்களினால் துதிக்கலாயினர்.


திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் போன்ற புதுமையான செய்யுள் வகைகளை தமிழுக்கு அளித்தருளினர் ஆளுடைய அரசு. அதனால்தான் தெய்வச் சேக்கிழாரும் இவரை, ‘நாவின்மொழிக்கு இறை’, எனவும் ‘இன்தமிழ் ஈசர்’ எனவும், ‘தாண்டக வேந்தர்’ எனவும் ‘தாண்டகச் சதுரர்’ எனவும் பலவாறு போற்றி மகிழ்கின்றார்.


இங்ஙனம் இறைவன் தமக்கு எளிவந்தருளிய திறத்தை நினைந்து உருகிப் பாடிய தேவாரப் பாக்கள் சிலவும் திருக்குறள் கருத்தும் ஒத்திருக்கின்றன. பலகலைகளையும் கற்றுத்துறைபோய அவர்தம் திருவாக்கும் திருக்குறளும் எவ்வகையில் ஒத்துச் சிறந்து விளங்குகின்றன என்பதையே நாம் இனி காணப் போகின்றோம். அதற்கு அவரது வாழ்வே ஆதாரமாதலால் அதை இங்கே விரிவாக எடுத்துக் கூறினோம்.

பொதுவாகச் சான்றோரின் கருத்துக்களை எடுத்து ஆள்வதோடு அவர்களின் வார்த்தைகளையும்- மொழிகளையும் அப்படியே எடுத்தாளுதல் நம் தமிழிலக்கிய மரபாகும்.


அவ்வகையில் அப்பரடிகள் திருக்குறளின் சில சொற்றொடர்களை அப்படியே தமது தேவாரப் பாக்களில் எடுத்தாண்டிருக்கின்றார்.


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


என்பது வள்ளுவர் வாய்மொழி.


இதனை அப்படியே திருவாவடுதுறையில் ‘நம்பனை நால்வேதம் கரைகண்டானை’ எனும் திருத்தாண்டகத்தில், 9 ஆவது பாடலில்


‘வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை’


என்றருளிச் செய்கின்றார் அப்பரடிகள்.


‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’
எனும் அருமைத் திருக்குறளை பழமொழித் திருப்பதிகத்தில் முதல் திருப்பாடலிலேயே,


‘ஆரூரரைக், கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே’ என வைத்து தம் நிலையை எடுத்துக் கூறுகின்றார்.


‘ஓர்த்துள்ளம் உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு’

எனும் பொய்யா மொழியை திருச்சேறை திருநேரிசையில்,

‘ஓர்த்துளவாறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்,
வார்த்தையை மெய்யென்றெண்ணி’

என்பதாக வைத்துக் காட்டுகின்றார்.


‘ஊருணி நீர்நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு’ என்பது குறள்.


‘உலகநடையை விரும்பிச் செய்யும் பெரிய அறிவினையுடையவனது செல்வம் ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர்நிறைந்தாற் போலும்’ என்பது பரிமேலழகர் உரை.


இறைவன் எல்லார்க்கும் அருள்செய்பவன். அவனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று யாருமில்லை. அடியார் எதனைக் கேட்கின்றார்களோ அதனை இன்று நாளை என்னாது தந்துவிடுவான். மேலும் அவன் இம்மைக்குதவும் செல்வங்கள் மட்டுமின்றி மறுமைக்குதவும் ஞானச் செல்வமும் அச்செல்வத்தால் கிட்டும் முத்தி எனும் சென்றடையாத திருவும் உடையவன். இறைவன் இத்தகைய செல்வங்களை உடையவனாயிருப்பதனால்தான் அவனுக்கு ‘ஈசன்’ எனும் திருப்பெயர் உண்டாயிற்று.


இறைவன் எல்லா செல்வங்களுக்கும் உறைவிடமாய் இருப்பதனை உணர்ந்த அப்பரடிகள் அந்நிலையை எதனோடு உவமை சொல்லிப் பாடுவது? என்று சிந்தித்தார். அவருக்கு மேற்சொன்ன திருக்குறள் நினைவுக்கு வந்திருக்கும் போலும்.


‘மூரி முழங்கொலிநீர் ஆனான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்’


என்று திருமறைக்காட்டுத் திருத்தாண்டகத்தில் அருளிச்செய்கின்றார்.


‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு’ என்பது வள்ளுவர் வாய்மொழி.


இதனை அப்பரடிகள் தமது திருப்பாதிரிப்புலியூர் திருவிருத்தத்தில்,


‘பற்றாய் நினைந்திடப் போது நெஞ்சே’ எனவும்,


பாவநாசத் திருப்பதிகத்தில்,


‘பற்றற்றார் சேர் பழம்பதி’ எனவும் அருளிச் செய்கின்றார்.


திருக்கோடிகா திருத்தாண்டகத்தில்,


‘பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்’ என்று அருளுகின்றார்.


’பற்றற்றார் பற்றும் பவள அடி’ என்பார் திருவடித் திருத்தாண்டகத்தில்.


‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்பதனை இறைவன் விருப்பு வெறுப்பற்றவன் எனும் பொருளில்


கரைந்து கைதொழுவாரையும் காதலன்
வரைந்து வைதெழுவாரையும் வாடலன்
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்
விரைந்து போவது வீழிமிழலைக்கே.


என்று அருளிச் செய்கின்றார்.


நம்மை இவன் துதித்து வ்ழிபடுகின்றானே என்று ஒரு சிலருக்கு மட்டும் அருள் செய்வதும், நம்மை இவன் நிந்தை செய்கின்றானே என்று ஒருசிலருக்குத் துன்பம் தருவதும் அவன் இயல்பன்று என்பது இதன் பொருள். அவனுக்கு எல்லோரும் ஒன்றே. அதனால்தான் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ’நிட்கண்டகன்‘ எனப் போற்றுகின்றார்.


‘கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்’ என்பது பொய்யாமொழி.


‘ஆகம அறிவிற்குப் பயன் அவன்தாளைத் தொழுது பிறவி அறுத்தல்’ என்பது பரிமேலழகர் உரை.


இங்கே கற்றல் என்பது ‘இறைவன் பொருள்சேர் புகழ்புரிதல்’
என்றே கொள்ளலாம். இதனை


‘வாயே வாழ்த்துகண்டாய்-மத யானையுரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடு பிரான்தன்னை வாயே வாழ்த்துகண்டாய்’


எனத் திருவங்கமாலையிலும்,


‘நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே’


என நமச்சிவாயத் திருப்பதிகத்திலும்,


‘கற்றவர் பரவியேத்திக் கலந்துலந் தலந்துபாடும்
அற்றவர்க்கன்பர் போலும் ஆவடு துறையனாரே’


எனத் திருவாவடுதுறைத் திருநேரிசையிலும்


‘கல்லாதார் மனத்தணுகாக் கடவுள்தன்னை
கற்றார்கள் உற்றோரும் காதலானை’
என திருச்செங்காட்டங்குடித் திருத்தாண்டகத்திலும்,


‘ஓதி நன்னூல் கற்றார் பரவப் பெருமை உடையன - ஐயாறன்
அடித்தலமே’


எனத் திருவையாற்றுத் திருவிருத்தத்திலும்,


‘கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி’


எனத் திருவாரூர் போற்றித் திருத்தாண்டகத்திலும் எடுத்தாளுகின்றார் ஆளுடைய அரசு.


‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்’ என்பது தெய்வத் திருக்குறள்.


இதன் உரையில் மலர் என்பதற்கு ‘உள்ளக்கமலம்’ அதாவது ‘இதயத் தாமரை’ என்றே பொருள் கொள்ளுகின்றார் பரிமேலழகர்.


‘அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின், ஏகினான் என இறந்த காலத்தால் கூறினார்’ என்பது பரிமேலழகர் உரை.


இதனை,


‘அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமினீர்கள்
பொள்ளல்இக் காயந் தன்னுள் புண்டரீகத் திருந்த
வள்ளலை வான வர்க்கும் காண்பரி தாகி நின்ற
துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே’


என்று திருத்துருத்தி திருநேரிசையில் அருளிச்செய்கின்றார். இப்பாட்டில் வரும் ‘புண்டரீகம்’ உள்ளக் கமலத்தைக் குறிக்கும்.


‘எண்டளவில் என்னெஞ்சத் துள்ளே நின்ற
எம்மானை’ என்று திருத்தலையாலங்காட்டுத் திருத்தாண்டகத்தில் குறிக்கின்றார்.


எண்+தளம்=எண்டளம் என்றாயிற்று. அஃதாவது ‘எட்டுஇதழ்த் தாமரை வடிவில் உள்ள இல்லமாகிய என் நெஞ்சம்’. அதாவது ‘இருதய கமலம்’ என்பது இதன் பொருளாகும்.


கன்றாப்பூர் திருத்தாண்டகத்தின் ஒவ்வொரு பாடலின் ஈற்றடியிலும் ‘அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே’ என்றே இதன் பொருள் பற்றியே அருளிச் செய்கின்றார்.


மேலும் ‘காயத்துள் கலந்து நின்று உள்ளத்துள் ஒளியுமாகும் ஒற்றியூர் உடையகோவே’ என திருவொற்றியூர் திருநேரிசையில் குறிப்பிடுகின்றார்.


இன்னும்,


தேசனைத் தேசமாகும் திருமாலோர் பங்கன்தன்னைப்
பூசனைப் புனிதன்தன்னைப் புணரும் புண்டரிகத்தானைநேசனை நெருப்பன்தன்னை நிவஞ்சகத் தகன்ற செம்மை
ஈசனை அறியமாட்டேன் என்செய்வான் தோன்றினேனே


என ‘வென்றிலேன் புலன்கள் ஐந்தும்’ எனத் தொடங்கும் குறைந்த திருநேரிசையில் 7 ஆவது பாடலில் கூறுகின்றார் அப்பரடிகள்.


இப்பாடலில் வரும் புண்டரிகம் என்பதும் உள்ளக்கமலத்தையே குறித்ததாகும்.


‘அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர்’ என திருஞானசம்பந்த மூர்த்திகள் அருளியதிலிருந்து புண்டரிகம் என்பது உள்ளக்கமலமே என்பதை நாம் உணரலாம்.


திருவதிகை வீரட்டானத்து போற்றித் திருத்தாண்டகத்துள், 9-ஆம் பாடலில், ‘புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி’ என்றருளிச் செய்கின்றார்.


இறைவன் உயிர்களின் உள்ளக் கமலத்தில் எப்போதும் வீற்றிருப்பவன் என்பதனை இதன்மூலம் உணர்த்துகின்றார்.


இனி, திருவிடைமருதூர் திருத்தாண்டகத்தில் ‘எரியாய தாமரைமேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே’ என்றும் அருளிச் செய்துள்ளார்.

இன்னும், ‘பேணி நினைந்து எழுவார்தம் மனத்தே மன்னி, இருந்த மணிவிளக்கதனை, நின்ற பூமேல் எழுந்தருளி இருந்தானை’ என்று திருச்செங்காட்டங்குடி திருத்தாண்டகத்தில் காட்டுகின்றார்.


மேலும், திருவீழிமிழலை திருத்தாண்டகத்தில், ‘புண்டரிகப் புதுமலர் ஆதனத்தார் போலும்’என்று அருளிச் செய்து, இறைவன் உயிர்களின் உள்ளக்கமலங்களையே தன்னிருக்கையாகப் பேணிக் கொள்கின்றான் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.


‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஓழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்’ என்பது திருக்குறள்.


இறைவன் ஐம்புலன்களையும் அவற்றின் வழியே செல்கின்ற பொறிகளையும் அடக்கும் ஒழுக்க நெறியை நமக்குச் சொன்னவன். எனவே அவன் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவன் என்பது தெளிவு. உபசாரமாக இறைவன் ஐம்புலன்களை வென்றவன் என்பது இலக்கியங்களில் கூறப்படும். எதனாலெனின், ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றுமில்லாதவன் அவன். இக்கருத்தே பற்றி, திருநாவுக்கரசரும் திருவையாறு திருத்தாண்டகத்தில்,


‘காப்பரிய ஐம்புலனும் காத்தாய் நீயே’ என்றும்,


திருக்காளத்தி திருத்தாண்டகத்திலே


‘பொல்லாப் புலனைந்தும் போக்கினான் காண்’ என்றும்


திருக்கருகாவூர் திருத்தாண்டகத்திலே,


‘அறுத்தானாம் அஞ்சும் அடக்கி’ எனவும்,


அருளிச் செய்துள்ளார்.


தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது - என்பது வள்ளுவம்.

இதன் உரையில் ‘ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது, மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது’ என்பார் பரிமேலழகர்.


சிவபிரான் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என வேதம் உரைக்கின்றது. யார் தனக்கு மேலாக ஒரு தலைவனைக் கொண்டிருக்கவில்லையோ அவரே இறைவராவார். சிவபிரான் தாமே தலைவராய சிறப்பினை உடையவர். அவரது எண்குணங்களும் அவரது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைமையை நமக்கு உணர்த்துகின்றன.


அப்பரடிகள் இறைவனின் இத்திறத்தைப் பெரிதும் போற்றி உகக்கின்றார்.
அவர் சமணசமயத்தினின்றும் சைவசமயம் புக்கார் எனக் கேட்டு சமணர்கள் பல்லவனிடம் இல்லாததையெல்லாம் கூற அவனும் அவரைக் கொண்டுவர ஆளனுப்பினான்.


அப்பரடிகளின் திருமடத்தின் முன்பு காவலர்கள் வந்து நின்று மன்னன் அழைத்தான் என்று ஆணையைத் தெரிவித்தனர்.


ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனாகிய சிவபிரானுக்கு ஆட்பட்ட அப்பரடிகள் ‘நாம் யார்க்கும் அடிமை இல்லை; சங்கரனாகிய கோமானுக்கே மீளா அடிமை’ என்று உறுதியுடன் புகன்றருளினார். இத்திறத்தை அவரருளிச் செய்த மறுமாற்றத் திருத்தாண்டகம் முழுதும் நாம் காணலாம்.


மேலும்,


‘மற்றாரும் தன்னொப்பார் இல்லாதானை’ எனத் தில்லையிலும்


‘ஒப்பொருவர் இல்லாத ஒருவன் தன்னை’ எனத் திருவாரூர் அரநெறியிலும்


‘மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி’ எனத் திருவாரூரிலும்


‘தன்னானைத் தன்னொப்பார் இல்லாதானை’ எனத் திருவாரூரிலும்


தாமருளிச்செய்த திருத்தாண்டகங்களில் குறிக்கின்றார்.


இங்ஙனம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒருவனுக்கே ஆட்பட்ட உத்தமர் உள்ளம் நடுங்குவதில்லை; நமனும் அங்கு வருவதில்லை; அவன் பால் வைத்த அன்பினால் உண்டாகும் தவ ஆற்றல் அளப்பரியது. அது இப்பூவுலகில் யார்க்கும் அஞ்சவேண்டாத ஆற்றலைத் தருவது.


‘ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்’ எனும் திருக்குறளும்


‘கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு’ எனும் திருக்குறளும்


அப்பரடிகள் வாழ்வில் மெய்யாயின.


அப்பரடிகள் தம்மையே இறைவனிடம் ஒப்புவித்தார். அறத்தொடு நின்ற தவம்புரிந்தார். அதனால்தான் சேக்கிழாரடிகளும் ‘திண்மை மெய்த்தவர்’ எனப் போற்றினார். இதனை,


‘பிறத்தலும் பிறந்தால் பிணிப்பட வாய்ந்தசைந் துடலம் புகுந்து நின்று
இறக்குமாறுளதே இழித்தேன் பிறப்பினை நான்
அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வச் செற்றக் குரோதம்நீக்கியுன்
திறத்தனாய் ஒழிந்தேன் திருவாரூரம்மானே’


எனவரும் அடிகளின் திருவாக்கினால் நாம் உணரலாம்.


தீரத் துறந்தவரும், மருள்நீங்கிய மாசறு காட்சி பெற்றவரும், கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டவரும், சிவனென்னும் செம்பொருளை வழிபடுபவரும் ஆன அப்பரடிகள் யார்க்கு இனி அஞ்ச வேண்டும்? அடியார்கள், இறைவனுக்கு ஆட்பட்ட மெய்யடியார்கள் யார்க்கும் அஞ்சவேண்டியதில்லை என்பதைத் தம் அருமைத் திருமொழிகளால் நமக்கு உணர்த்துகின்றார். தவமும் தவம் உடையவர்க்குத்தான் ஆகுமன்றோ?


‘தப்பி வானம் தரணி கம்பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்பமாம் சேறைச் செந்நெறி மேவிய
அப்பனார்உளர் அஞ்சுவது என்னுக்கே’ என்று கேட்கின்றார்.


நாம் ஏன் அஞ்ச வேண்டும்? ‘அறிவுடையார் ஆவது அறிவார்’ அன்றோ? நமக்குப் பற்றாக திருப்பாதிரிப்புலியூர் அரன் திருவடி உண்டே! அப்புறம் யாரைக் கண்டு நாம் அஞ்ச வேண்டும்?


‘மண் பாதலம் புக்கு மால்கடல் மூடி மற்றுஏழ் உலகும்
விண் பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே!
திண்பால் நமக்கொன்று கண்டோம் திருப்பாதிரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரோன் கழலிணையே


என்று காட்டிக் கொடுக்கின்றார் அப்பரடிகள்.


இவ்வுலகிலுள்ள கடலெல்லாம் வற்றி மழையே இல்லாமல் போயினும் பஞ்சமே வந்தாலும் நாம் அஞ்ச வேண்டியதில்லை. நமக்குப் புகலிடமாக திருக்கயிலாயம் உள்ளது என்கிறார் அடிகள்.


‘வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்’ அல்லவா?


கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுங் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டென்று
என்னொடும் சூளறும் அஞ்சல்நெஞ்சே இமையாத முக்கண்
பொன்னெடுங் குன்றம் ஒன்றுண்டு கண்டீர் இப்புகலிடத்தே


‘பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள்’
கண்டவர் உள்ளம் நடுங்குவதில்லை. அப்பரடிகள்,


‘வானம் துளங்கிலென் மண்கம்பம் ஆகிலென் மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடுமாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்டு
ஊனம் ஒன்றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே’


என்று இதனைத் தெளிவாக நமக்கு அருளிச் செய்கின்றார். இச்செய்தியை அவர் வாழ்விலும் நாம் காண்கின்றோம்.


நஞ்சூட்டியபோதும், கொல்வதற்கு யானை ஏவப்பட்ட போதும், கடலில் கற்புணை கொண்டு தள்ளப்பட்ட போதும் அவர் அஞ்சவில்லை. இறைவனின் நாமத்தையே துணையெனக் கொண்டவர். இதனை,


‘மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையில்நின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவனாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே’


எனும் அவர்தம் திருவாக்கினால் நாம் உய்த்துணரலாம்.


இதன்மூலம்


‘ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்’ எனும் குறள் விளக்கமாகிறதல்லவா?


அறத்தைக் கூறவந்த வள்ளுவர்


அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்


என்பார்.


‘அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமை; அவா-புலன்கள் மேற் செல்கின்ற அவா; வெகுளி-அவையேதுவாகப் பிறர்பால் வரும் வெகுளி; இன்னாச் சொல்- அது பற்றி வரும் கடும் சொல் ஆகிய நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறமாவது’ என்பார் பரிமேலழகர்.


இதனையே அப்பரடிகள்,


‘ஞாலமும் அறிய வேண்டில் நன்றென வாழல் உற்றீர்
காலமும் கழியலான கள்ளத்தை ஒழியகில்லீர்
கோலமும் வேண்டா ஆர்வச் செற்றங்கள் குரோத நீக்கில்சீலமும் நோன்பும் ஆவார் திருச்செம்பொன் பள்ளியாரே’
என்றருளிச் செய்கின்றார்.


இவ்வுலகில் வாழ்பவர்களே! உங்கள் வாழ்நாளோ கழிந்து கொண்டிருக்கின்றது. நீங்களோ கள்ளத் தன்மையை விடுவதாயில்லை. நீங்கள் ஆசையையும், கோபத்தையும், பொறாமையையும் நீக்கி விட்டீர்களானால் அதுவே உங்களுக்கு இறைவழிபாடாகும் என்பது இதன் பொருள்.


அசுரர்கள் தவம்செய்து அவம் பெருக்கியவர்கள். அவர்கள் இன்சொல் என்றால் என்னவென்றே அறியாதவர்கள். அவர்களை ராமன் வென்று திருஇராமேச்சுரத்தில் ஈசனை வழிபட்டான் எனும் செய்தியை,


‘வாக்கினால் இன்புரைத்து வாழ்கில்லார் தம்மையெல்லாம்
போக்கினால் புடைத்தவர்கள் உயிர்தனை உண்டுமால்தான்
தேக்குநீர் செய்தகோயில் திருவிரா மேச்சுரத்தை
நோக்கினால் வணங்கு வார்க்கு நோய்வினை நுணுகுமன்றே’


என்று அருளிச் செய்கின்றார் அப்பரடிகள்.


புலன்களைந்தும் அழுக்காறு அவா வெகுளியிலேயே மூழ்கி நம்மை மயக்கும். ஆயினும் நாம் இடைவிடாது முயன்று ஈசன் திருவஞ்செழுத்தை ஓதி அவற்றை வெல்ல வேண்டும் எனும் கருத்துப்பட


‘வெறுத்துகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டு நெஞ்சே
மறுத்துக ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாயப்
பொறுத்துகப் புட்பகத்தேர் உடையானை அடரவூன்றி
ஒறுத்துகந் தருள்கள் செய்தான் ஒற்றியூர் உடையகோவே’


என்று அருளுகின்றார் ஆண்ட அரசு.


இப்பிறவியாகிய நோய் கெடவேண்டுமாயின் மூன்று குற்றங்கள் கெட வேண்டும்.


காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்.


‘அநாதியாய அவிச்சையும் அதுபற்றி யானென மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கிது வேண்டுமென்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கட் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கட்செல்லும் கோபமும் என வடநூலார் குற்றம் ஐந்தென்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக் கண்ணும் அவாவுதல் ஆசைக் கண்ணும் அடங்குதலான், மூன்றென்றார். இடையறாத ஞான யோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத்துய் போலுமாகலின் அம்மிகுதி தோன்ற இவை மூன்றன் நாமம் கெட என்றார்’ என்பது இக்குறளுக்குப் பரிமேலழகர் உரைத்த உரை.


அப்பரடிகளும் இக்கருத்தை உள்வாங்கித் தமது தேவாரங்களில் பல இடங்களில் குறிக்கின்றார். நெடுங்காலம் சமணத்தில் இருந்தமையாலும் இளமையிலேயே மிகப்பெரும் துன்பங்களை அனுபவித்தமையாலும் இவ்வாழ்வின் இயல்பினை நன்கு அறிந்திருக்கின்றார் என்பதை அவரது திருவாக்குகளின் மூலமே நாம் அறிய இயலும்.


‘ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே
வான்நோக்கும் வழியாவது நின்மினோ’ எனவும்


‘நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்’ எனவும்


‘மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றமென்னும்
வினையுளே விழுந்தழுந்தி வேதனைக் கிடமாகாதே’ எனவும்


நமக்கு அருளிச் செய்கின்றார்.


குறளின்கண் சொல்லப்பட்ட காமத்தை வெல்வதற்கு


‘வேலைவென்ற கண்ணாரை விரும்பிநீர்
சீலம் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்
காலையே தொழும் காட்டுப்பள்ளிய் யுறை
நீலகண்டனை நித்தல் நினைமினே’


என வழிகாட்டுகின்றார்.


மேலும் மயக்கமாகிய அவித்தையால் எழும் ஆசையை நீக்க,

‘அழகியோம் இளையோம் எனும் ஆசையால்
ஒழுகிஆவி உடல்விடல் முன்னமே
நிழலதார் பொழில் நீலக்குடியரன்
கழல்கொள் சேவடி கைதொழுதுய்ம்மினே’ எனவும்


‘காமத்துள் அழுந்தி நின்று கண்டாரால் ஒறுப்புண்ணாதே
சாமத்து வேதமாகி நின்றதோர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடையிராவும் ஏகாந்தம் இயம்புவார்க்குஓமத்துள் ஒளியதாகும் ஒற்றியூர் உடைய கோவே’ எனவும்


பெருநெறி காட்டி அருளிச் செய்கின்றார் தமிழாளியார்.


வெகுளியாகிய சினம் தீயவற்றுக்கெல்லாம் பிறப்பிடம். ஏனெனில் வள்ளுவரும், ‘மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய, பிறத்தல் அதனால் வரும்’ எனச் சுட்டிக் காட்டுகின்றார்.


ஒருவன் தன்னைத் தானே காக்க வேண்டுமாயின் சினம் எனும் பகையை வெல்லவேண்டும். வள்ளுவர்,


‘தன்னைத் தான் காக்கில் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்’ என சினத்தின் தீமையை சுட்டுகின்றார்.


ஆன்மிக வாழ்க்கையில் சினத்திற்கு இடமிருக்கலாகாது. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியை விட்டு நாம் நீங்க வேண்டுமாயின் சிவபிரானை சிந்தைசெய்ய வேண்டும் என்கிறார் தாண்டக வேந்தர்.


‘சினத்தினால் வரும் செய்தொழிலாம் அவை
அனைத்தும் நீங்கிநின்று
 ஆதரவாய்மிக
மனத்தினால் மருகற் பெருமான் திறம்
நினைப்பினார்க் கில்லை நீள்நில வாழ்க்கையே’ என்பதும்


‘புலன்களைப் போக நீக்கிப் புந்தியை ஒருங்க வைத்து
இலங்களைப் போக நின்று இரண்டையும் நீக்கி ஒன்றாய்
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலும் திருப்பயற் றூரனாரே’ என்பதும்

aப்பரடிகள்தம் அருமைத் திருவாக்குகள்.


ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து என்பது திருக்குறள்.


‘ஆமைபோல ஒருவன் ஒருபிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்க வல்லனாயின் அவ்வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரணாதலை உடைத்து’ என்பார் பரிமேலழகர்.


‘ஆன்மிக வாழ்விற்கு ஐம்புலன்களையும் அடக்குதலாகிய ஒழுக்கமே அடிப்படை. அந்தத் தூய்மையே ஒருவனை இறைவனை நோக்கி அழைத்துச் செல்லும். தூய்மையில்லாதவன் ஆன்மிகவாதியாக இருத்தல் இயலாது’ என்பார் சுவாமி விவேகானந்தர்.


இதனையே அப்பரடிகள் சிவபிரான் நாமத்தை ஓதியே ஐம்புலன்களையும் வெல்லலாகும் என்னும் கருத்துப்பட,


‘அல்லலாக ஐம்பூதங்கள் ஆட்டினும்
வல்லவாறு சிவாயநம என்று
நல்லம் மேவிய நாதனடி தொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே’


என்று அருளிச் செய்துள்ளார்.


‘புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போதுபோக்கிப்
புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலங்கொள்சடை முடியுடைய தலைவா என்றும்
தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தாய் என்றும்
இலங்கையர்கோன் சிரம்நெரித்த இறைவா என்றும்
எழிலாரூர் இடம் கொண்ட எந்தாய் என்றும்
நலங்கொள்அடி என்தலைமேல் வைத்தாய் என்றும்
நாடோறும் நவின்றேத்தாய் நன்மையாமே’


என்று புலன்களினால் நாம் கெட்டுப்போகாமல் நன்னெறிச் சென்று உய்வதற்குத் தீர்வு அருளுகின்றார் வாகீசப் பெருந்தகை. மேலும் கன்றாப்பூர் திருத்தாண்டகத்தில்,


‘புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பிநோக்கிக்,
கருத்தினால் தொழுமடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே’.


என்பார்.


நமது முயற்சியோடு கூட ஐம்புலன்களையும் அடக்குவதற்கு இறையருள் தேவை என்பதனையும் அடிகள் வலியுறுத்துகின்றார்.


‘மூக்கு வாய்செவி கண்ணுடல் ஆகிவந்து
ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சியே கம்பனே’


என்பது அவர்தம் திருவாக்கு.

அங்ஙனம் ஐம்புலன்களையும் செற்றவர் மனதிலே தோன்றி அருள்புரிவான் சிவபிரான் என்பதனை,


‘பொறிப் புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை
நெறிப் படுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப் புறும் அமுதாயவன் ஏகம்பம்
குறிப்பினாற் சென்று கூடித் தொழுதுமே’


என்றருளிச் செய்கின்றார்.


‘நில்லாதவற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை’ என்பார் வள்ளுவர்.


‘தோற்றம் உடையவற்றைக் கேடிலவென்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேற் பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏது’ என்பார் பரிமேலழகர்.


‘நில்லா வாழ்வு நிலைபெறும் என்றெண்ணிப்
பொல்லா வாறு செயப் புரியாதுநீர்
கல்லாரும் மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லேறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்மினே’


என்று நிலையாமையைச் சுட்டிக் காட்டி நிலையான வாழ்வுபெற வழிகாட்டுகின்றார் அப்படிகள்.


‘நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.’


என்று வள்ளுவர் இவ்வுலகின் உண்மையான நிலையை எடுத்துக் காட்டுகின்றார். முன்னோர் மொழிபொருளே அன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவது நம் மரபு. ஆதலின் இக்குறளை அப்பரடிகள்,


‘இன்றுளார் நாளை இல்லை எனும்பொருள்
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்டனார் காட்டுப் பள்ளி கண்டுய்ம்மினே’


என்னும் திருப்பாடலில் அப்படியே வைத்து சுட்டிக் காட்டுகின்றார்.


‘தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
இமைக்கும் போதும் இராதுஇக் குரம்பைதான்
உமைக்கு நல்லவன் தானுறையும்பதி
நமக்கு நல்லது நல்லம் அடைவதே’
என திருநல்லம் திருக்குறுந்தொகையில் உடலின் நிலையாமையை சுட்டி சிவநெறியின் மேன்மையை உணர்த்துகின்றார்.


‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு’ எனும் திருவார்த்தையை அப்பரடிகள்
திருவலம்புரம் திருநேரிசையில் 7ஆவது திருப்பாடலில்,


‘மங்கல மனையின் மிக்கார் வலம்புரத் தடிகளாரே’ என வைத்துப் போற்றுகின்றார்.


‘தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்’


எனும் அருமைக் குறளின் கருத்தாகிய ‘வாய்மையே தூய்மையாதல்’ என்பதனை,


‘காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக’


எனும் திருநேரிசையில் வைத்துப் பேணுகின்றார்.


இன்னும் பல்வேறு திருப்பாடல்களிலெல்லாம் திருக்குறள்கூறும் அரிய கருத்துக்களையும், திருக்குறள் மொழிகளையும் அப்பரடிகள் எடுத்தாண்டுள்ளார். இவையாவையும் ஒருங்கே நினையும்போது உள்ளத்தால் உயர்ந்தோர் எண்ணம் யாவும், ஒத்ததாயிருக்கும் எனும் உண்மை நமக்குப் புலப்படுகிறதல்லவா? 

No comments:

Post a Comment