Tuesday, March 4, 2014

திருக்குறளும் வடமொழி வேதமும்

முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி

மாமுனிவர் திருவள்ளுவர்

தமிழ் வேதம் என்றும் உத்தரவேதம் என்றும் போற்றப்படுவது திருக்குறள். திருவள்ளுவரின் காலம் கி.பி 2 எனக்கருதப்படுகின்றது. திருக்குறள் வேதநெறியினைத் தழுவிக்கொண்டு தமிழ்மரபின் தனித்தன்மையையும் நிலைநிறுத்தும் அறநூலாகும்.

திருக்குறளின் முதலதிகாரம் கடவுள் வாழ்த்து. அதில் இறைவனைக் குறிக்க எட்டு பெயர்கள் கூறப்படுகின்றன. ஆதிபகவன்(1), வாலறிவன்(2), மலர்மிசை யேகினான்(3), வேண்டுதல் வேண்டாமையிலான்(4), இறைவன்(5), பொறிவாயிலைந்தவித்தான் (6), தனக்குவமையில்லான், அறவாழியந்தணன்(8) எனும் இவ்வெட்டுப் பெயர்களும் இறையாகிய பதிக்கு வேதாகமங்கள் கூறும் தன்வயம், இயற்கையறிவு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேராற்றல், தூயவுடம்பு, வரம்பிலின்பம், பேரருள் எனும் எட்டுக் குணங்களை முறையே உணர்த்துவனவாகும். இறைவன் ‘எண்குணத்தான்’ ஒன்பதாவது திருக்குறளும் கூறுகின்றது. இந்த இலக்கணம் இறைக்கு வேறெங்கும் கூறப்படவில்லை.

பிறப்பைப் ‘பெருங்கடல்’ என்றது, அதைக் கடக்கப் புணை இறைவனது திருவடி என்றது, (10), அவிச்சை காரணமாகப் பிறப்புத் தோன்றலின் ‘ பிறப்பைப் பேதமை’ என்றது, (358), மக்கள் தேவர் நரகர் விலங்கு பறவை முதலிய எந்தப் பிறப்பும் துன்பமேயாகையால் பிறப்பினை ‘மாணாப் பிறப்பு(351) என்றது, பிறப்புத் துன்பமாதலறிந்து அப்பிறப்பே வேண்டாமென ‘வேண்டுங்கால் பிறவாமை வேண்டும்’(362) என்றது, ‘தூய்மை அவாவின்மை,(364), உயிர் இருவினையை ஈட்டுவதற்கும் அதனால் பிறப்புண்டாதற்கும் காரணம் இருள் என்னும் ஆணவமலம் அதனைப் போக்கிக் கொள்ள இறைவனின் புகழ்சேர் புகழை இடைவிடாது சிந்திக்க வேண்டும் (5) என்றது இவை போன்றவையெல்லாம் வேத சிவாகமங்களில் பேசப்பட்ட பொருள்களாகும்.

திருக்குறள் ‘தாமைரைக் கண்ணா னுலகு’(1103), ‘புத்தேள் நாடு’(1323), ‘அளறு’(நரகம் 255) முதலிய உலகங்களையும் ,’அடியளந்தான்’(திரிவிக்ரமன் 610)’தாமரையினாள்’, ‘முகடி’(617), தென்புலத்தார்’ (43), என்னும் இவை போன்ற வேதாகமக் கருத்தாக்கங்கள் திருக்குறளில் செறிந்துள்ளன.

திருமகளைச் செய்யாள் என்பது தமிழ்வழக்கு. முகமினியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவாரது இல்லின்கண் செய்யாளாகிய திருமகள் அகனமர்ந்து உறைவாள்(84) எனக் கூறிய திருவள்ளுவர், வேதநெறி பற்றிச் செய்யாளுக்கு மாறுபட்ட இயல்புடைய மூத்தாளையும் கூறுகிறார். சீதேவிக்கு மூத்தவள் மூதேவி. அவளை ‘ஜ்யேஷ்டா’ என வடமொழியிலும், அதனைத் தமிழ் எழுத்தில் ‘சேட்டை’ என்றும் கூறுவர். “முன்னம் தோன்றலால் முகடியைச் சேட்டை என்றனர்” (லிங்கபுராணம்2-5-4) தமக்கை எனப் பொருள்படும் ‘ஜ்யேஷ்டா’ என்னும் சொல்லை மொழிபெயர்த்துத் திருவள்ளுவர்,

“அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்” (167) என்றார். தவ்வை மூத்தவள்.

“அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு”

என்னும் முதற்குறளில் வேதாகமத் தாக்கம் பெரிதும் காணலாம். வேதங்களின் ஆறங்கங்களில் ஒன்று தருக்கம். முதற்குறள் தருக்க முறைப்படி முதற்கடவுளது உண்மையை நிறுவுகின்றது.

தருக்கத்தில் ஒருபொருளை(வஸ்து)ப் பெயர்(உத்தேசம்) கூறிய பின்னரே மேற்கோள் ஏது உதாரணம் முதலியவற்றல் நிறுவ வேண்டும் என்பது விதி. திருவள்ளுவர் ஆதிபகவன் என்று தாம் சாதிக்கப் போகும் பொருளுக்கு முதலில் பெயர் கூறினார். உலகம் ஆதிபகவனாகிய முதலை யுடைத்து என்று மேற்கோள் கூறினார். அகரமுதல வெழுத்தெல்லாம் என்று ஏது கூறினார். காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறும் அனுமானமும் இதனால் உணர்த்தினார்.

ஆதி என்ற தமிழ்ச் சொல்லும் பகவன் என்னும் வடசொல்லும் சேர்ந்த தொகைச் சொல் ஆதிபகவன் என்பது. பகவன் தமிழ்ச் சொல்லாயின் ஆதிப்பகவன் என ஒற்று மிகவேண்டும் ஒற்று மிகாமல் ஆதியாகிய பகவன் என்னும் பொருளைத் தருதலால் இச்சொல் இருபெயரொட்டுப் பண்புத்தொகை யென்றும் இது வடநூன்முடிபு என்றும் பரிமேலழகர் கூறினார்.

பகவன் என்பது ‘பகவான்’ என்னும் வடசொல் என்றும், பகவான் என்பது சிவனுக்குப் பெயர் என்றும், அதர்வசிகோபநிஷத், “யோவை ருத்ர: ஸ பகவான்” என முப்பது முறை கூறுகின்றது. சங்கார காரணனாகிய சிவனே உலகத்துக்கு ஆதி என்பது இதனால் உணர்த்தப்பட்ட பொருளாம்.

“சங்கரோ பகவான் ஆத்யோ ரரட்ச ஸகலா: ப்ரஜா:
மஹேசோ பகவான் ஆதி தேவ:”

எனச் சரபோபநிஷதம் கூறுகின்றது. அதாவது சங்கரனுக்குத் தவிர ஏனையோருக்கு இறைமைக் குணங்கள் இல்லை. அவனே பகவான். எனவே ‘மஹேசனே பகவான், ஆதி தேவன்’ என்பது இதன் பொருள். எனவே ‘ஆதிபகவன்’ என்ற பெயரில் உள்ள ‘ஆதி’ என்பது, இறைமைக் குணங்கள் இலராகிய ஏனைத் தேவர்களை விலக்க வந்த அடை, அதாவது சிவனே முதற்கடவுள் என்றுணர்த்துவது இதன் கருத்தாம்.

சித்தாந்த சைவர்கள் ‘ஆதிபகவன்’ எனுமித்தொடருக்கு ‘ஆதிசத்தியொடு கூடிப் பிரிவின்றி யுள்ளானாகிய சிவன்’ என்று மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிப் பொருள் விரித்துப் பொருள்கொள்வர். பதிப்பொருளாகிய ஒருபொருள் சிவமும் சத்தியுமாகத் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு உலகினை இயக்கி நிற்றல் பற்றி இறைவனை “ஆதிபகவன்” எனும் பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனகொள்ளுதல் பொருந்தும் என்பர். (திருவருட்பயன். 1-2. க. வெள்ளைவாரணம். சமாஜபதிப்பு)

திருவள்ளுவர் வேதங் கூறும் நான்கு வருணங்களை அறிந்தேயுள்ளார். அதில் தமிழ் மரபுக் கேற்றதைத் தழுவிக் கொண்டுள்ளார்.

“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” (134)

என்னும் குறளில் ‘பார்ப்பானின் தொழில்களில் ஒன்று வேதங் கற்றல். கற்ற வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்று மீட்டுக் கொளலாகும். ஆனால் அவன் தன்னுடைய பிறப்பொழுக்கத்தைக் கைவிட்டால் அழிந்துவிடுவான்’ என்று பார்ப்பனன் தொழிலின் சிறப்பையும், அவன், தன் பிறப்பொழுக்கத்தைக் கைவிடாமையின் சிறப்பையும் ஓதினார்.

பார்ப்பான் என்னும் பெயர் முன்பு மரியாதைக்கு உரியதொன்றாகவே வழங்கியது. இது இருபிறப்பாளன் என்ற பொருளைத் தருவதாகும்.

“பார்ப்பு” என்பது பறவையின் குஞ்சுக்குப் பெயர். (“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை” தொல். பொருள்- மரபியல் சூ559). பறவைக்குஞ்சுக்கு இரண்டு முறை பிறப்புண்டாகும். தாயின் வயிற்றினின்றும் முட்டையாக வெளிவருவது ஒருபிறப்பு. முட்டையினின்றும் குஞ்சாக வெளிவரல் மற்றொரு பிறப்பு. அந்தணர்களுக்கும் இரண்டு பிறவிகள் உண்டு. ஒன்று அன்னையின் வயிற்றினின்றும் வெளிவரல், மற்றொன்று, உபநயனத்தின் பின் உள்ள வாழ்க்கை. ஆதலின் அவர்களை “இருபிறப்பாளர்” என்பர். அதாவது, பறவையின் குஞ்சு போல்பவர் என்ற பொருளில் “பார்ப்பு அன்னவர்” என்பர். ‘பார்ப்பன்னவன்’ என்பதில் உள்ள மெல்லொற்றும் ‘வ’கர உயிர்மெய்யும் கெட்டுப் ‘பார்ப்பனன்’ என நின்றது. மாணிக்கவாசக சுவாமிகள் குருவாக வந்து ஆண்டு கொண்ட சிவபரம்பொருளை, “பார்ப்பானே” என விளிப்பது அறியத் தக்கது. ( புணர்ச்சிப்பத்து -10 திருவாசகம், சிவக்குடில் விளக்கம்.)

“அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்” (543)

என்னும் குறளில் அரசசாதியையும் செங்கோலின் மாட்சியையும் கூற வந்த திருவள்ளுவர், முதற்சாதியாகிய சிறப்புடைய அந்தணசாதிக்குரிய வேதத்திற்கும் அறத்திற்கும் மன்னவன் செங்கோலே காரணமாக நின்றது என்றார். சிறப்புடைய அந்தணசாதியைக் கூறி ஏனைய இரண்டுசாதியையும் தழுவிக் கொண்டார்.

“ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்” (560)

என்னும் குறளில் அரசன் செங்கோல்முறையினால் உயிர்களைக் காவானாகில் கேடுகளாக அறனில்லாத அந்நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோராகிய அந்தணரும் தம்முடைய வேதக் கல்வியை மறந்து விடுவர் என்று கூறுகின்றார்.

இதனால், ‘வேதமும் அறனும் அநாதி; பசுக்கள் பால் குன்றியவழி அவியில்லாது போகும். அவி கொடுத்தற்கு உரியராகிய அந்தணர் வேள்வியின்மையின் வேதக் கல்விக்குரிய மந்திரங்களை ஓதார். வேள்வி நடவாது. ஆதலால் வானம் மழை பொழியாது’ என்று வேள்விக்கும் மழைக்கும் உள்ளதொடர்பினைக் கூறினார்.

இந்தத் தொடர்பைத் தொல்காப்பியமும்,
“அமரர்கண் முடியும் அறுவகையானும்” (தொல். பொருள்81 புறத்திணை 26)
என்று கூறிற்று. ‘அமரர்கண் முடியும் அறுவகையாவது பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின் கண்ணும்’ என்றும், அந்த ஆறாவன, ’முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம்’ என்று நச்சினார்க்கினியர் எடுத்துரைத்தார்.

இச்சூத்திரத்திற்கு பலர் பலவாறு கூறினும் நச்சினார்க்கினியர் கூறியதே பண்டை மரபு தழுவியதாம். திருஞானசம்பந்தசுவாமிகள் தம்முடைய திருப்பாசுரத்தில் இந்த அறுமுறை வாழ்த்தை வலியுறுத்தியுள்ளார்.

‘வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே’ (3-54-1)

என்னும் இவ்வறுமுறை வாழ்த்தில் நச்சினார்க்கினியர் கூறிய முனிவருக்குப் பதில் ‘வானவர்’ இடம்பெற்றுள்ளது.

அரசனது செங்கோலுக்கும் அந்தணர் வேள்விக்கும் மழைக்கும் நாட்டின் வளத்துக்கும் குடிகளின் மகிழ்ச்சிக்கும் உள்ள சங்கிலித் தொடர்பினைச் சமயச்சான்றோர் உடன்பட்டு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

“வேந்தன் முறைதிறம்பின் வேத விதிதிறம்பும்
ஏந்திழை யார்தம் கற்பும் இல்லறமும் நில்லாவாம்
மாந்தர் பசியால் உணங்க மழைவறந்து
பாந்தள் மூடிக்கிடந்த பாரின்விளை வஃகுமால்”
(பிரமோத்தரகாண்டம்,10- 1)
என எதிர்மறையானும் வலியுறுத்தப்பட்டது.


பராசரருக்கும், மீனவப்பெண் மத்ஸ்யகந்திக்கும் பிறந்த மாமுனிவர் வேதவியாசர்

திருவள்ளுவர், வேதவேள்வி செய்யும் அந்தணர்களுக்கு இவ்வளவு ஏற்றம் கொடுத்துப் பேசினாலும் பிறப்பால் மட்டுமே அந்தப் பெருமை ஒருவர்க்கு வந்துவிடாது; அதாவது, ‘ஜன்ம பிராமணனை விடக் கன்ம பிராமணனுக்கே ஏற்றம்’ என்பதையும் தெய்வப்புலவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

“பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (972)
என்னும் குறளில், திருவள்ளுவர், பெருமையாவது குலத்தினா லறியப்படாதென்றும் அதற்குக் காரணம் இன்னது என்றும் சுட்டிக் காட்டினார்.

இங்குத் தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 2-ஆம் சூத்திரத்திற்கு இளம்பூரணர், இத்திருக்குறளை மேற்கோள் காட்டி செய்தவுரை ஆன்றோர் கருத்தை நன்கு புலப்படுத்தும்.

“ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப” என்பது.
ஒப்பு பத்து வகைப்படும். அவை,
“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு வகையே (மெய்ப்.25)

என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம்.

அவற்றுள் பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வருங் குலம். குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்” (குறள் 972)

எனவே குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டு.

அந்தணர் ,பார்ப்பார் என்பன காரண இடுகுறிப் பெயர். காரணம் குறிக்கும் பொழுது அப்பெயர் அந்தக் காரணத்தை உடைய எல்லாரையும் குறிக்கும். சுட்டப்பட்ட காரணம் அந்தணரிடம் சிறப்பாக விளங்க வேண்டும் என்பது விதி. பிறப்பந்தணர்களிடத்தில் எதிர்பார்க்கப்படும் பண்பு.. இதனைத் திருவள்ளுவர் அளவையியலில்(Logic) கூறப்படும் முக்கூற்று விதியில் (Deductive syllogism) வைத்துக் கூறியுள்ளது அறியத்தக்கது.

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர்
அந்தணர் எவ்வுயிரிடத்தும் செந்தண்மை யுடையவர்
ஆதலால் அந்தணர் என்போர் அறவோர்.

மற்றொரு முறையிலும் இதனைக் கூறலாம்.

அந்தணர் என்போர் அறவோர் – இது மேற்கோள்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் – இது ஏது.
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர். – முடிவு
இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் அந்தணர்களுக்குப் பிறப்பால் குடிவரவாக வரும் என்பதும், அச்சிறப்பொழுக்கம் இல்லாதவன், பிறப்பால் அந்தணனாயினும் அந்தணன் எனப்படமாட்டான் என்றும், ஏனைய குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பதும் வள்ளுவனார் கருத்தென்பது பெறப்படும்.
இவ்வாறு வேதவழிச் செல்வதே தமிழ்வேதமாம் திருக்குறள் எனலாம்.
பிறப்பால் மட்டுமே சாதியுயர்வைப் பேசுவாரை வேதமும் இழித்துரைக்கின்றது. ஈண்டு சந்தமறையும் தமிழும் வல்ல பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கூறுவது கருதத் தக்கது.
“ஸாமவேத வஜ்ரஸூசிகோபநிஷதம் – பிராமணத் தன்மைக்குரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியறிவன்று, கன்மமன்று, தன்மமன்று எனத் திருட்டாந்த வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி இதுவே, சுருதிஸ்ம்ருதி புராணேதிஹாசங்களின் அபிப்பிராயம் என்று முடிவுரை மொழிந்துளது. “
“மஹாபாரதத்து வனபர்வத்து 206ஆம் அத்தியாயங்களிற் பகரப்பட்ட தர்மவியாதரென்னும் வேடரும் அந்தப் பாரதத்திற் பல இடத்துங் கூறப்பட்ட விதுரரென்னுஞ் சூத்திரரும் மகாஞானிகளா யிருந்தனர் என்பதை அறியலாம். இத்திறத்தோரும் பலரே.”
“இன்னோர், பிராமணராகப் பிறந்திருந்த சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த ஞானம் அழியாதிருந்ததினாற் பிரமநிட்டராயினரென்று அவர்கள்நிலைக்கொரு போக்குக் காட்டினும் அஃது அத்திறமுள்ளார் இக்காலத்து மிருப்பர், இனி வருங் காலத்துந் தோன்றுவரென்பதையும்; சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த அறியாமை அநீதி. அநீதி அழியாம லிருந்தோரே அநீதிகளை யெழுதி வைத்தார், அவற்றைப் பிரமாணமாக வெடுத்துக் காட்டுகின்றாரென்பதையும்; பிரம வித்தைக்கும் பிரமோபாசனைக்கும் உரியோர் பிராமணசாதியிற் பிறந்தவரே யல்லால் இதரரல்லரென் றியம்பிக்கொண்டு கல்வி யறிவுமில்லாதிருப்போரும் அவரொத்தவரே யென்பதையும் நிலைநிறுத்தும்” எனப் பாம்பனடிகள் கூறுவது கருத்தில் இருத்தத் தக்கது..
“பிரஜாபதியின் முகம், தோள், தொடை, காலெனுமிடங்களில் முறையே பிராமணனும், சத்திரியனும், வைசியனும், சூத்திரனும் பிறந்தனரென்று நுவறல் – முகம் (பிரம வித்தையாகிய ) வாக்குக்கும், தோள் வெற்றிக்கும், கால் ஒருவனைச் சரணடைந்து ஊழியஞ்செய் துயிர் வாழ்தற்கும், தோலுக்குங் காலுக்கும் இடையிலுள்ள தொடை நடுநாவுடைத் துலையினுக்கும் அருத்தமாதலைக் காட்டவல்லதாமேயன்றிப் பிறப்பிடமே அவைகளெனக் காட்ட வல்லதாகாது. வல்லதாமென்னின், மேற்சொல்லப்பட்ட சூதமுனிவரும், பிறமுனிவருள் வியாசர் முதலாயினார் பலரும் பிறப்பிடத்தா லிழிந்தோராவரெனுந் தீர்வை யேற்படும். இதுநிற்க.”
“குறிப்பிட்ட தொழில்களை யுடையாரெல்லாம் அவ்வத்தொழில் இழைக்குங்காறும் அவ்வச்சாதியாரென விருத்தலுங் கண்கூடன்றோ. முனிவர் சரிதைகளையுங் கருதுக. பூணூல் பல தொழிலாளருந் தரிக்கின்றமையின் அதனையொரு பெரிதாக நினைப்பதும், இருபிறப்பாள ரென்பார் அத்துவித ஆன்மஞான வேதம் தமக்கே யுரித்தென்பதற்கியைய ஆசாரமுள்ள மற்றையர் அவ்வேதத்தைக் கைவிடலும் அறிவுடைமையாகா” (பரிபூரணானந்த போதம், சிவசூரியப்பிரகாசம். பக் 208-209)

No comments:

Post a Comment