Monday, July 18, 2022

தமிழ்நாடு மாநிலம் -வரலாற்று பார்வை

 தமிழ்நாடு மாநிலம் -வரலாற்று பார்வை   Marturi Vasanth

நம் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு, இந்த நிலம் ஆழ்ந்த ஆன்மீக, நீண்ட பாரம்பரிய, ஓரின-பலமொழி பேசும் மக்களை கொண்ட புண்ணிய பூமி. இந்த நிலத்தில் தமிழர் பெரும்பாண்மை மக்களாகவும், தெலுங்கர் அடுத்தும், கன்னடர், மலையாளர், செளராஷ்டர், மராத்தியர் சிறுபாண்மையாகவும் பன்னெடுங்காலமாக கூடி வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு குறிப்பிடவேண்டிய விசியம், மேலே கூறிய மொழி சமூகங்களின் தாய்மொழி/குடிமொழி அவர்களில் ஜாதி அடிப்படையில் அவர்களை தெலுங்கர் கன்னடர் என அடையாளப்படுத்தினாலும், இன்றைய தேதியில் தமிழ் மொழியே இங்கு ஆட்சி மொழியாக உள்ளதால் அவர்கள் மத மாற்றம் போல் மொழி மாற்றம் ஆனவர்கள். அதாவது தெலுங்கு மொழியில் சொல்வார்கள் ஒரு மொழி காலத்தில் மக்களிடம் நிற்கவேண்டும் என்றால் படி,குடி,ஏழுபடி (பள்ளி, கோவில்,அலுவலகம்) என்ற மூன்று இடங்களிலும் இருந்தால் மட்டுமே அது தலைமுறைகளை கடந்து நிற்கும். வெறும் பேச்சுமொழியாக வீட்டினுள் மட்டும் பேசப்படும் மொழி, அந்த தலைமுறையில் இரட்டை மொழியினராக இருப்பர், இரண்டாவது தலைமுறையில் குன்றி, மூன்றாவது தலைமுறையில் வெறும் ஐநூறு வார்த்தைகளில் அடங்கிவிடும். இன்று தமிழக தெலுங்கர்களின் தினசரி உபயோக சொற்கோவை-vocabulary மொத்தமும் ஐநூறு சொற்களை தாண்டாது, இத்துடன் தமிழ் ஆங்கிலம் கலந்தே வீட்டினுள் பேசுகின்றனர். அடுத்த தலைமுறையில் வெறும் உறவுமுறை சொற்கள் நீடிக்கலாம். இதற்கு அடிபடை காரணம் கல்வி ! படிக்காத முன்னோர்கள் ஆயிரம் வருடமாக கட்டிகாத்த குடிமொழி, பள்ளி படிப்பு பரவலான இந்த 60 வருடங்களில் தாய்மொழி கல்வி இல்லாமல் சுருங்கி அழியும் நிலையில் உள்ளது.

இங்குதான் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் வரலாற்று முக்கியம் பெறுகிறது. இந்த நிலம் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என தன் எல்லைகளை வகுத்து கொண்டாலும், இந்த நிலத்தில் பிறமொழியினரின் தாக்கம், குடியேற்றம் தொடந்து பல ஆயிரமாண்டுகளாய் நடத்து வந்துள்ளது. இந்த நிலத்தை சேர சோழ பாண்டியர் ஆண்ட காலத்தைவிட பிற அரசுக்கள் ஆண்டதே அதிகம். அது மறுக்கமுடியாத வரலாறு. நாடு பிடிக்க வந்த கூட்டமும், பஞ்சம் பிழைக்க வந்த கூட்டமும், இஸ்லாமிய மதவெறிக்கு பயந்து வந்த கூட்டமும், வியாபாரத்திற்கு வந்த கூட்டமும், இங்கு இருந்த மக்களுடன் இரண்டற கலந்துவிட்டனர்.
வரலாற்றில் ஏனோ தமிழ்குடிகளின் மக்கள்தொகை பல்கிபெறுகவில்லை. மானுட ஆய்வாளர்கள் ஏன் தமிழ்குடிகள் வலசு சென்று பரவி பெருகவில்லை என ஆராயவேண்டும். பல நாடுகளில் உள்ள தமிழர்கள் ஆங்கிலேயேர் ஆட்சியில் போனவர்களே. தமிழர்கள் அவர்களின் எல்லையான வடவேங்கடம் தென்குமரியுடன் அதாவது 800 கிமி தென்வடலாக, மேற்கே தொடர்ச்சிமலை முதல் கிழக்கே கடல் வரை 250 கிமி, மொத்தமாக இரண்டு லட்சம் சதுர கிமி பரவி, இன்றைய தேதியில் ஆறு கோடி தமிழர்கள் இந்த நிலப்பரப்பில் வாழ்கிறார்கள். அன்று வரலாற்றில் தெரியாத காரணங்களால் அதற்குமேல் விரிந்து பரவ முடியாமல் போனது. வரலாற்று காலத்தொட்டு இந்த நிலபரப்பில் மக்களே இல்லாத வெறுங்காடுகளாய், குருங்காடுகளாய், புல்வெளி நிலங்களாய் இருந்தபோது, அதை பிடிக்க பெரும் மக்கள் தொகையுடன் பல்கி பெருகி இருந்த தெலுங்கு பேசும் குடிகள் குடிபெயர்ந்தனர். குலங்களாக 18 குடிகளுடன் அன்றைய வேளான் சார் பொருளியலுக்கு தகுந்த நிலையில் சமூக கட்டமைப்பு இருந்ததால், அந்த பெருங்கூட்டம் நர்மதை நதி முதல் தாமிரபரணி வரை பரவினர்.
எங்கள் கிராமங்களில் பழமொழியாக, ‘தேசம் பாதி தெலுங்கு பாதி, நாடு பாதி நாயக்கன் பாதி’ என சொல்வார்கள், இதை பற்றி விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டால், தெலுங்கரின் எல்லைகளாக சொல்வது, “யடமன்டி விந்யமு, குடிமன்டி பரணி, படமன்டி கொண்டலு, தூர்ப்பு கடலி, புட்டி பெரிகிந்தி தெனுகு மாட்ட” என்பதை தமிழில் கூறினால் இடதுபுறம் விந்தியமலைக்கும் வலதுபுறம் பரணி ஆற்றுக்கும் கிழக்கே கடலுக்கும் மேற்கே மலைக்கும் இடையே பிறந்து வளர்ந்தது தெனுகு மொழி.
இன்றைய தமிழ்நாடு என்பது மன்னர் ஆட்சிகளில் பல பல நாடுகளாக இருந்தாலும், அதன் எல்லை வடவேங்கடம் தென்குமரி என்பதை தமிழர்கள் வகுந்திருந்தனர். இந்தியதேசம் எப்படி பல பல நாடுகளாக இருந்தாலும் இமயம் முதல் குமரி வரை உள்ளது பாரதம் என்று பண்டைய காலந்தொட்டு,”வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்” என பாரத்தேசத்தின் எல்லைகள் என்பது வடக்கே இமயமும், தெற்கே குமரியும் என்றே கருதினர்.
இந்த தேசம் ஒரே அரசின்கீழ் ஆளப்படவில்லை, ஒரே மொழியும் இல்லை ஆனால் ஒரே தர்ம பண்பாட்டு கூறுகள் கொண்ட இடம் என்பதால் ஒரு கலச்சார தேசமாகவே ( civilisational nation) கருதப்பட்டது. இது போலவே பரந்து விரிந்த தெலுங்கினம் இடதுபுறம் விந்தியமலைக்கும் வலதுபுறம் பரணி ஆற்றுக்கும் இடையே 1500 கிமி, கிழக்கே கடலுக்கும் மேற்கே மலைக்கும் இடையே 600 கிமி என சுமார் பத்து லட்சம் சதுர கிமி பரவி இருக்கிறது. இன்றைய தேதியில் சுமாராக 15 கோடி தெலுங்கர்கள் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ரா, ஒடிசா, கர்நாடகா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் வாழ்கிறார்கள்.
இவர்கள் மார்வாடிகள் தமிழகத்தில் உள்ளதுபோல் சிறிய மக்கள் தொகையுடன் குடிபெயர்ந்து இன்றும் ராஜஸ்தானுடன் தொடர்பில் உள்ளவர்கள் போல் அல்ல!
தெலுங்கு மக்களுக்கு பிரச்சனையே பரந்து விரிந்து பல அரசர்களின் கீழ் பல மொழிபேசும் மக்களுடன் காலங்காலமாக கலந்து வாழ்வதே. திருநெல்வேலியில் உள்ள ரெட்டியாருக்கும் மராத்வாடாவில் உள்ள ரெட்டியும் ஒரு மொழியை குடிமொழி/ தாய்மொழியாக கொண்டிருந்தாலும், ஒருவர் தமிழருடன் கலந்து தமிழராகவும் மற்றொருவர் மராட்டியருடன் கலந்து மராட்டியராகவும் வாழ்கிறார்கள். இப்படி வாழ்ந்தவர்களை (அதாவது விந்தியமலை முதல் வானமாமலை வரை)தீடீர் என ஒரு கூட்டம் எங்களுக்கு மொழிவழியாக தனி மாநிலம் வேண்டும் என்று கோரி போராடியது.
இதை செய்தவர்கள் யார்?அன்றைய ஆந்திரா தலைவர்கள் அதுவும் குறிப்பாக கோஸ்டல் ஆந்திரா எனும் கிருஷ்ணா கோதாவரி படுகையை சேர்ந்தவர்களே! இன்றைய ஆந்திராவில் கூட ராயலசீமா( நெல்லூர் சித்தூர் பெல்லாரி- வடற்காடு) மக்கள் மெட்ராஸ் மாகானத்துடன் இருக்கவே விரும்பினர். கோதாவரிக்கு வடக்கே இருந்தவர்கள்( காக்கிநாடா முதல் கடகம்வரை) கலிங்கம் என்ற தனி மாநிலம் கோரினர். தென்னக தெலுங்கர்கள் மொழிவாரி மாநிலம் பிரிப்பதையே எதிர்த்தனர்.
இங்கு குறிப்பிடவேண்டியது, தமிழர்கள் யாரும் தமிழ்நாடு வேண்டும் என கேட்கவில்லை. ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள் மெட்ராஸ் ராஜதானியில் தெலுங்கர்கள் பெருவாரியாக இருந்தும் அதிகாரத்திற்கு வர முயற்சித்தால், தமிழ் தலைவர்களுடன் மோதி கடைசியில் தென்னக தெலுங்கர் ஒருவரை இருவருக்கும் பொதுவாக தலைவராக ஏற்கும் நிலையை கண்டும், தலைநகர் மெட்ராஸில் தங்களின் செல்வாக்கு சரிவதைகண்டு பாப்பட்லாவில் கூடி தனி ஆந்திர மாநில கோரிக்கை வைத்து போராட ஆரம்பித்தனர். பல ஆதரவு எதிர்ப்புக்களிடையே, 1949ல் நேரு மொழிவாரி மாநில கோரிக்கையை ஆராய S.K தார் கமிட்டி அமைத்து ஆராய்ந்து, அது தேவையில்லை என அறிக்கை கொடுத்தநிலையில், ஆந்திர தெலுங்கர்கள் போராட்டத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல, நேரு எப்பொழுதும் போல் குழப்ப, வல்லாபாய் பாடீல் போன்ற தலைவர்கள் இல்லாமல், ஆந்திர கேஸரி பிரகாசம் பந்துலு பிடிவாதம் பிடிக்க( சிறிது காலம் மெட்ராஸ் ராஜதானியின் முதல்வராக இருந்தார், ஆனால் தெலுங்கர்/ தமிழர் அதிகாரபோட்டியில் குமாரசாமி ராஜா என்ற ராஜபாளையத்து தெலுங்கர் முதல்வாராக்கப்பட்டார்) இதில் ராஜாஜி- காமராஜர் அதிகாரபோட்டியும் சேர்ந்து மொத்தமாக ஆந்திர தலைவர்கள் தமிழர்களுடன் இருந்தால் அதிகாரத்திற்கு வரவேமுடியாது என மீண்டும் பெரும் போராட்ங்களில் இறங்கி, உணர்ச்சிகள் தூண்டப்பட்டு பல உயிர்கள் ஆந்திராவில் பழியானதை கண்டு, தனி ஆந்திரா பிரிப்பது என மொழிவாரி மாநில சீரமைப்பு சட்டம் கொண்டுவந்தார் நேரு.
ஆந்திரபிரதேசம் கர்நாடகம் கேரளா என தனி மாநிலங்களை பிரித்தனர். இப்படி பிரிக்கும்போது தெலுங்கு மக்கள் மட்டுமே உள்ள பகுதிகள் மட்டும் ஆந்திராவிற்கு கொடுக்கப்பட்டது. கன்னடர் கலந்த தெலுங்கு பகுதி கர்நாடகவிற்கும்( பெங்களூர், பெல்லாரி மற்றும் ஹைதிரபாத் கர்நாட்டகா)
தெலுங்கர் கலந்த தமிழ் பகுதிகள்( திருத்தணி முதல் திருநெல்வேலி வரை) மெட்ராஸ் மாகாணத்திலேயே இருக்கும்படி பிரிக்கப்பட்டது. , பொட்டி ஶ்ரீராமுலு ‘மெட்ராஸ் மனதே’ என போராடி உயிர்விட்டாலும், தலையில்ல முண்டமாய் தலைநகர் இல்லாமல், பலகோடி தெலுங்கர்களை மாநில எல்லைக்கு வெளியே விட்டாலும், எங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்ற வெறியில் கிடைத்ததை கொண்டாடி பிரிந்தனர் அன்றைய ஆந்திர தலைவர்கள்.
இங்கு தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தனி மாநிலம் கேட்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. தமிழக தெலுங்கர்கள் ஆந்திர பிரிவதை எதிர்த்தனர், அன்று முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டி ஆந்திர தலைவர்களிடம் மிக கடுமையாக நடந்து கொண்டார். ஈரோடு ராமசாமி நாயக்கர் திராவிடநாடு கோரிக்கை எடுபடாமல் தமிழ்நாடு தமிழருக்கே என்று மாற்றினார். பல தென்னக தெலுங்கு தலைவர்கள் ஆந்திர தலைவர்களை கண்டு தனி மாநில கோரிக்கையை கைவிடும்படி கோரினர்.
லாடபுரம் ராமசந்திர நாயுடு என்ற காங்கிரஸ் தலைவர், தனது 90 வயதில் பிரகாசம் பந்துலுவை சந்திந்து, தனது காரில் வாருங்கள் திருத்தணி முதல் திருநெல்வேலி வரை ஊர் ஊராக செல்லலாம், தெலுங்கர்கள் எத்தனைபேர் அந்தந்த ஊரில் நல்ல செல்வாக்குடன் சமூக தலைவர்களாக அரசியல் தலைவர்களாக உள்ளனர், மண் சட்டி செய்வதில் இருந்து பஞ்சாலை தொழில்வரை செய்கின்றனர் பெருவாரியான மக்கள் விவசாயிகளாக இந்த நிலத்துடன் பின்னிபிணைந்து வாழும் இவர்கள் எங்கே செல்வது என கேட்டு மன்றாடியும், ஆந்திர தலைவர்கள் ஒருவர்கூட செவி சாய்காமல் தனி ஆந்திர வேண்டுமென நிற்க, அடுத்த நாள் பத்திரிக்கை பேட்டியில், அவர் சொன்ன வார்த்தை, “ஆந்திர டாக்ஸ் கெட்அவுட் ஆப் மெட்ராஸ்” ! அதுபோல் அனைத்து தென்நாட்டு தெலுங்கர்களும் குல ஜாதி அந்தஸ்து வித்தியாசம் பார்க்காமல், ஆந்திராவுடன் சேராமல் தமிழர்களோடு நிற்க, தலையில்ல முண்டமாய் தலைநகர் இல்லாது ஆந்திர பிரிந்தது. அன்றே உருப்படியான தலைநகரை உருவாக்காமல் தெலுங்கானாவை இணைத்து ஹைதிராபாத்தை தலைநகராக்கி, இன்று அதுவும் இல்லாமல் போய் நாளை ராயலசீமா பிரியும் நிலையில் கிரிஷ்ணா கோதாவரி மாவட்டங்கள் மட்டும் ஆந்திராவாக இருக்கும் நிலையை அடைய அன்று செய்த தவறு விடாமல் துரத்துகிறது ஆந்திர சகோதர்களை!
சரி ஆந்திர கர்நாடகம் பிரிந்ததும் இங்குள்ள கிட்டதட்ட 30% சதவீதம் இருந்த மொழி சிறுபாண்மையினர் நிலை?
S.K.தார் கமிட்டி மொழிவாரி மாநில கோரிக்கையை 1948ல் நிராகரித்தவுடன், JVP (நேரு, வல்லாபாய் பாடீல், பட்டாபி சீத்தராமையா) கமிட்டியை உறுவாக்கி, தார் கமிட்டி சொன்னவற்றை பரிசீலித்து, இப்போது தேவையில்லை, நாளை தேவைப்பட்டால் மொழிவாரி மாநிலங்களை உருவாக்க செய்யவேண்டியது சட்டநடவடிக்கைகளை பட்டியலிட்டனர்.
தனி மாநிலமானாலும் ஒருவரும் இடம்பெயர வேண்டியதில்லை, மொழி சிறுபாண்மையுனரின் சொத்து, மொழி, பண்பாடு காக்க சட்டவழிமுறைகள் இயற்றபடவேண்டும் என பல பரிந்துரைகளை கொடுத்தது அந்த JVP கமிட்டி. ஆனால் திடிரேன வல்லாபாய் பட்டேல் இறந்தவுடன், பொட்டி ஶ்ரீராமுலு உண்ணவிரதம் இருந்து இறந்தவுடன் ஆந்திர மாநிலம் அவசரமாக பிரிக்கப்பட, இந்திய அரசியலமைப்பு சட்டமும் 1950 அமலுக்கு வந்து இந்திய குடியரசாக இருந்தநிலையில், JVP கமிட்டி சொன்ன பரிந்துரைகள் காற்றில் விடப்பட்டு மெராஸ் மாகாணம் பிரிக்கப்பட்டது.
1953 ஆரம்பித்து 1956ல் ஆந்திரபிரதேசம்(தெலுங்கான -ஹைதிரபாத்துடன் சேர்த்து) கர்நாடகம்( மைசூர் ராஜ்ஜியத்துடன் சேர்த்து)
கேரளா( திருவான்கூர் ராஜ்ஜியத்துடன் சேர்ந்து) தனிதனியாக பிரிக்கப்பட்டது.
மீதம் இருந்த மெட்ராஸ் ராஜதானியை, மெட்ராஸ் ஸ்டேட்( மெட்ராஸ் மாநிலம்) என்றே வைத்துகொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
ஏனேனில் இங்கு பிறமொழியினர் பெருவாரியாக வாழ்ந்ததை கணக்கில்கொண்டு, தாய் மாநிலமாக கருதப்பட்டு அதே பெயரை நீடிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் விரும்பியது. 1956 முதல் 1969வரை அப்படியே நீடித்தது. ஆனால் திமுக தமிழர்களின் உணர்ச்சிகளை தூண்டி மொழி அரசியலை கையில் எடுத்து ஹிந்தி எதிர்ப்பு/ இந்திய எதிர்ப்பு போராட்டங்களை கொண்டு காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தவுடன், அண்ணா இந்த மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றினார்.
தமிழர்களின் பார்வையில் பார்க்கும்போது இது ஞாயமான கோரிக்கைபோல் தெரிந்தாலும், இதில் பல சிக்கல்கள் உள்ளன.
தமிழ்நாட்டை தவிர பிற இங்கிருந்து பிரிந்து தனி மாநிலங்களான ஆந்திர, கர்நாடகம், கேரளம் எதுவும் மொழியின் பெயரை வைக்கவில்லை. இங்கு மொழிவெறியுடன் இயங்கிய திமுகவும், தமிழ் பத்திரிக்கை ஊடகத்தில் இருந்த தமிழ்வெறி கும்பலும்( தினதந்தி ஆதித்தனார் நாம் தமிழர் என்ற கட்சியே நடத்தியவர், தினமலர் உரிமையாளர் கன்யாகுமரியை தமி்ழ்நாட்டுடன் சேர்க்க நேரடி போராட்டம் செய்தது) எழுதி எழுதி ஊத, எல்லை பிரச்சனையில் பாலக்காடு இடுக்கி பீர்மேடு திருத்தணி என இடியிடிக்க, மெட்ராஸ் மனதே வெடிக்க மொத்தமாக, தமிழர்கள் ஏமாற்றபடுகிறார்கள் என திமுக போரட்டங்களை செய்ய, சரி உணர்வுகளை தணிக்க பெயரில் என்ன இருக்கிறது என “தமிழ்நாடு” பெயர் திருத்தம் செய்ததை ஒப்புகொள்ளவேண்டிய நிலைக்கு மத்திய அரசு சென்றது. அப்படித்தான் 1969 ஜனவரி 14ல் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை பெயர் திருத்தம் செய்து தமிழ்நாடு மாநிலம் என மறுபெயரிடப்பட்டது! இந்த பெயர் தமிழர்களுக்கு ஒரு எக்ஸ்டரா உரிமையை தந்து பிறமொழியினர் ஒருவித அச்சத்தில் தமிழரின் தயவில் வாழும் இரண்டாம் தர குடிகளாய் வாழவேண்டிய சூழல். ஏதாவது கேட்டால் இது தமிழ்நாடுடா என பதில் கொடுக்கும் கொடுக்கை தந்துள்ளது இந்த பெயர்!
உண்மையில் இன்நிலம் அதன் பழமையான மொழி/கலச்சார ரீதியான பெயருக்கு மாற்றப்பட்டது சரியே என்று எடுத்துக்கொண்டாலும் இந்த நிலம் தமிழ்நாடு என்று சொன்னாலும் இந்தியதேசத்தின் ஒரு பகுதியே என்பதே இங்கு வாழும் 90% சதவீத மக்களின் கூற்று, தமிழ் தேசியம் பேசும் 10% சத மக்கள் தமிழ்நாடு தனி மொழி தனி கலச்சார தனி வரலாறு கொண்டது என்ற எண்ணத்துடன் தனிநாடு கோரிக்கையுடன் இயங்கிவருகின்றனர்.
இதில் இங்கு வாழும் தெலுங்கு மக்கள் பெரும்பாலும் தமிழர்களகவே மாறிவிட்டாலும், தமிழ் தேசியவாதிகள் மட்டுமல்லாது இந்திய தேசிய சிந்தனையுடைய பாஜகவில் உள்ள தமிழர்களே, இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தெலுங்கரே காரணம் என ஈசியான ஒரு பொது எதிரியை உருவகித்துக்கொண்டு வந்தேரி கொல்டி என வசைபாடுவதுடன், திமுக தலைமை ஏதோ தெலுங்கை வளர்ந்து தமிழை அழிப்பதுபோல் ஒங்கோல் என பிதற்றுவது அறிவிலார் செயல். முதலில் அவர்களுக்கு தெலுங்கு மொழி தெரியுமாவென்றே தெரியாது. தெலுங்கை பள்ளி கல்வியில் அழிப்பதில் திமுகவே முதலிடம் வகித்தது. தெலுங்கர் அண்ணாதொர தான் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார்.
இத்தனை சிக்கல்களுக்கிடையே இங்கு மண்ணின் மைந்தர்களாக வாழும் எம்மக்களுக்கு இந்த நிலமே கதி. என் தந்தை எம்ஜீஆர்யைதான் ஹீரோவாக நினைத்தார், ராமராவை அல்ல, நான் கமலை, ரஜினியை ரசித்ததுபோல் சிரஞ்சீவியின் ஒரு படம்கூட பார்த்ததில்லை, என் மகன் விஜய் படம்தானே பார்க்கிறான், மகேஷ் பாபுபடத்தையல்ல.
தினமலர் தானே என் பத்திரிக்கை, ஈநாடல்லவே, சன்டீவியும் புதியதலைமுறையும்தானே பார்க்கிறோம்! எடப்பாடியா ஸ்டாலினா அண்ணாமலையா என்று இங்குள்ள ஒவ்வொரு தமிழனும் மோதுவதுபோலத்தான் ஒவ்வொரு தெலுங்கரும் மோதுகின்றனர், என்ன வேறுபாடு கண்டார் சீமான், அவராவது தூய ரத்தம் தேடி அலைபவர், ஓநாயிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? ஆனால் கைபர் கணுவாய் வழிவந்த வந்தேரி என தூற்றப்படும் பிராமணர்கள் தேசிய சிந்தனை தேசிய கட்சி இந்து பாரம்பரிய பார்வையுள்ளதாக பார்க்கபடும் பிராமணர்களில் சிலர் தமிழ்வெறி பிடித்து அலைவது அதிர்ச்சி அளிக்கிறது, மிகவும் வருந்தமளிக்கிறது.
இது தமிழ்நிலம் என்பது எவ்வளவு உண்மையோ அது இந்தியநிலம் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் இது தெலுங்கர் நிலம் என்பதும் உண்மை! “யடமன்டி விந்யமு, குடிமன்டி பரணி,படமன்டி கொண்டலு தூர்ப்பு கடலி நடம புட்டி பெரிகிந்தி தெனுகு மாட்ட” என்பது தெலுங்கர் நம்பிக்கை.
பிரிந்தது ஒன்று சேர்வது நடவாசெயல், வரலாற்றை மாற்றமுடியாது, தமிழ்நாடு இன்றுள்ள நிஜம், அது இந்திய தேசத்தில் ஒரு மாநிலம் அந்த நிஜத்துடன் வாழ்வதே அனைவருக்கும் நல்லது.
இதில் தெலுங்கர்களை அவர்களின் உண்மை முகத்துடன் தமிழ் முகமூடி அணியாமல் இங்கு எப்பொழுதும் போல வாழ பெருபாண்மையான தமிழர்களே வழிகாட்டவேண்டும்.
தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள் அன்றும் சரி இன்றும் சரி எந்த பிரச்சனையிலும் தமிழர்களோடே நின்று களமாடி வருகிறார்கள். ஈழபி்ரச்சனைக்கு தீ குளித்த தெலுங்கரும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இறந்த தெலுங்கரும், காவேரி பிரச்சனையில் பெங்களுரில் இருந்து அடித்து துரத்தப்பட்ட தெலுங்கரும் கன்னடரும் அவர்களுது தாய்மொழிக்காக போராடியதில்லை, மாநில பிரிவினைக்கு பின் தமிழையே தங்கள் மொழியாக ஏற்றுகொண்டு, இரு கண்களாய் வீட்டில் தாய்மொழியும் வெளியில் தமிழும் பேசுவதையும் கிண்டல் செய்வது, வந்தேரி என இகழ்ந்து இந்த நாட்டின் குடிமகனாக உள்ள உரிமைகளை பெற ஏளனம் செய்வது என்பது ராஜபக்‌ஷேக்களின் புத்தி!
இரண்டு கோடி தெலுங்கர்கள் இங்கு வாழ்கிறார்கள், அவர்களின் மொழிக்கு, கலச்சாரத்திற்கு, அரசியல் அதிகாரத்திற்கு வாழ்வியலுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெறுவதே ஜனநாயக மாண்பு !ஒரே ஒன்றுகூட கூடுதலாகவோ குறைவாகவோ இல்லாமல் தருவது தமிழரின் கடமை
இந்த புண்ணிய பூமிக்கு வேர்வையும் ரத்தமும் தந்து, தமிழர்களோடு சகோதரனாய், இந்திய குடிமகனாய் கூடிவாழவேண்டியது தெலுங்கரின் கடமை! இந்த இலக்கை அடைய இடையில் வந்த திராவிடத்தை விடுத்து மொழிதுவேசம் இல்லாத தேசிய சிந்தனையுடைய பாரதிய ஜனதாவோடு பயணிப்பதே இன்நிலத்தில் வாழும் மொழி சிறுபாண்மையினர் அனைவருக்கும் நல்லது, திராவிடத்தில் ஊறி திளைக்கும் சிலர் முதலில் நகைப்பர், எதிர்ப்பர் பின்னர் உண்மை உணர்ந்து வந்துசேர்வர். பாஜகவும் மொழிசிறுபாண்மையினரை தனதாக்கி தன் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக பயன்படுத்திகொள்ளவேணடும்.
அனைவருக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment