Monday, July 18, 2022

தமிழ்நாடு என்றுப் பெயர் வர உண்ணாவிரதத்தில் உயிர் கொடுத்த தியாகி சங்கரலிங்கனார்

தமிழர் பெரும்பான்மை மாநிலத்திற்கு  தமிழ்நாடு என்றுப் பெயர் வர உண்ணா விரதத்தில் 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த  தியாகி சங்கரலிங்கனார் 

ழம்பெரும் தியாகியான சங்கரலிங்கனார், 'மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்ட தமிழர்களின் நிலப்பரப்பை ' தமிழ்நாடு' என்று பெயர் மாற்றக்கோரி  76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அவர் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று, மானமே பெரிது” என்ற லட்சிய முழக்கத்தோடு உண்ணா விரதத்தைத் தொடங்கிய நாள் 27.7.1956 அன்று.

பின்வரும் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துதான் அவர் உண்ணா விரதம் மேற்கொண்டார். அவை

மொழிவழி மாநிலம் அமைக்கவேண்டும்.

சென்னை ராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடவேண்டும்.

ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் சமமாக பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்

வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கவேண்டும். அவர்களுக்கு சைவ உணவு மட்டுமே அளிக்கவேண்டும்.

அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் ஆடை உடுத்தவேண்டும்.

அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் எளிமையாக வாழவேண்டும். ஆடம்பரச் செலவுகள் செய்யக்கூடாது.

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

தொழிற்கல்வி அளிக்கவேண்டும்

நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும்.

விவசாயிகளுக்கு விளைச்சலில் 60 விழுக்காடு வாரம் (குத்தகை)  அளிக்க வேண்டும்

மத்திய அரசு அலுவல் மொழியாக இந்தியை மட்டும் பயன்படுத்தக்கூடாது

பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்வதைத் தடுக்கவேண்டும்.

கம்யூனிஸ்ட்  ஜீவானந்தம், காங்கிரஸ் கக்கன், ம.பொ.சிவஞானம், சி.என்.அண்ணாதுரை போன்ற தலைவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் சங்கரலிங்கனார் மறுத்துவிட்டார். லட்சியத்துடனும் உறுதியுடனும் இறுதிவரை இருந்தார். தொடர்ந்து 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாரின் உடல்நிலை 10.10.1956 அன்று மிகவும் மோசமான நிலையை எட்டியது. மருத்துவனைக்குக் கொண்டு சென்றும் அவர் சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. 13.10.1956 அன்று தியாகியின் உயிர் மண்ணைவிட்டுப் பிரிந்தது


தமிழ் நாடு பெயர் மாற்றமும் பெரியாரின் நிலைப்பாடும்
1955 கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் ஆந்திரா, கர்நாடக, மலையாளப் பகுதிகள் பிரிந்து போன பிறகு எஞ்சிய தமிழர் பகுதிகளுக்கு "தமிழ் நாடு " என்று பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது.
அப்போது பெரியார் தமிழக எல்லை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்காமல் பிற மொழியினரை உள்ளடக்கி திராவிட நாடு கோரிக்கையை எழுப்பி வந்தார். ஆனால், மற்ற பிறமொழிப் பகுதியினர் பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையை ஏற்காமல் தனி மொழி வழி மாநிலக் கோரிக்கைக்கு புத்துயிரூட்டியதோடு வெற்றி பெறும் நிலையில் இருந்தனர்.
இதனை அறிந்த பெரியார் வேறு வழியின்றி மொழிவழி தமிழகக் கோரிக்கையை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அப்போது வரை தமிழ் நாடு பற்றி கவலைப்படாத பெரியார் திடீரென்று தமிழ் நாடு பெயர்கூட வைக்கமுடிய வில்லையே என்று பெரிதும் கவலைப்பட்டார். 11.10.1955இல் பின் வருமாறு எழுதினார்.
"தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் கூட இருக்கக்கூடாது என்றும் பார்ப்பானும், வட நாட்டானும் சூழ்ச்சி செய்து இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து சென்னை நாடு என்று பெயர் கொடுக்க இருப்பதாகத் தெரிய வருகிறது.
தமிழ், தமிழ்நாடு என்ற பெயர் இந்த நாட்டுக்கு இல்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடைய வாழ்வோ, என்னை பின்பற்றும் கழகத்தினருடைய வாழ்வோ எதற்காக இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்றார்.
பேராயக் கட்சியைச் சேர்ந்த ஈகி சங்கரலிங்கனார் "தமிழ் நாடு" பெயர் சூட்டக் கோரி ( 27.7. 1956 முதல் 13.10.1956 வரை) 78 நாட்கள் பட்டினி கிடந்தார். அப்போது சங்கரலிங்கனார் மட்டுமே எதற்கு இந்த வாழ்வு என்று கேட்டு உயிர் துறந்தார். பெரியார் வாய்மூடி மெளனம் காத்தார்.
1964ஆம் ஆண்டு சூலை 23ஆம் நாள் தி.மு.க. உறுப்பினர் இராம. அரங்கண்ணல் "தமிழ் நாடு" பெயர் மாற்றம் கோரி தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போதும் பெரியார் தமிழ்நாடு பெயர் கோரிக்கையை ஆதரிக்க வில்லை. இராம. அரங்கண்ணல் அவர்கள் தமது உரையில் பெரியார் "இரண்டு கெட்டான்" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். அது பின் வருமாறு:
"ஈரோட்டுப் பெரியாரைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். ஈரோடுப் பெரியாருக்கு நாங்கள் என்றைய தினமும் எங்களை ஆளாக்கியவர் என்பதால் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆனால், இன்றைய தினம் ஈரோட்டில் இருக்கிற எங்கள் பழைய தலைவர் இரண்டுங் கெட்டனாக இருந்து கொண்டிருக்கிறார். அதே பாதையில் தான் நம்முடைய தட்சிண மூர்த்தி கவுண்டர் அவர்கள் பதிலும் இங்கே இருந்தது. தமிழகம் வேண்டும் என்றும் சொன்னார். அதே சமயம் என் தீர்மானத்தையும் எதிர்த்தார்.
(தமிழ் நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும் - ஆசிரியர்: அ.பெரியார், பக்கம் 150)
இராம.அரங்கண்ணல் கூறிய இரண்டுங் கெட்டான் நிலையை உறுதிப் படுத்தும் விதமாக இன்னொரு செய்தியும் உள்ளது. அது வருமாறு:
தமிழ் நாடு பெயர் மாற்றம் பற்றி டிசம்பர் 6ந்தேதி (1968) விடுதலை ஏட்டில் வந்த தலையங்கம் இது.
" இந்தப் பிரச்சினை வெற்றி பெற்றதற்கு அண்ணாவின் ஆட்சிதான் காரணம். ஆனால் தமிழ் மக்களுக்கு இந்த பெயர் மாற்றத்தினால் என்ன பயன்? இது எப்படி இருக்கிறதென்றால், நமது ஆள் எதிரியிடம் உதை வாங்காமல் தப்பித்து வந்து விட்டான் என்பது போலத்தான் இருக்கிறது.
ஆசாமிக்குக் கண் பொட்டை தான் என்றாலும் பெயர் கண்ணப்பன் என்பது தோன்றுகிறது. எனக்கு டில்லி ஆட்சி இந்த பெயர் மாற்றத்தை மறுத்திருந்தால் நம் கதி என்ன? ராஜிநாமா செய்வோம். அது நமது பலவீனத்தைத் தானே காட்டுகிறது?
எப்படியானாலும் இது மற்ற கட்சியாரால் செய்து முடித்திருக்க இயலாது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியது தான். ஆயினும் இதற்கு "அண்ணா துரை நாடு" என்பதாகப் பெயர் மாறினாலும், தமிழர்கள் அடிமை நாட்டின் அடிமையாக வாழ்வது மாற்றமடையுமா?"
என்று எழுதினார்.
(தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு -ஆசிரியர்: கருணானந்தம். பக்கம் : 573)
தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராக பார்ப்பனர்களும், வடவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் என்று அன்றைக்கு கூறிவிட்டு, இன்றைக்கு பெயர் மாற்றத்தால் என்ன பயன் என்று கேட்பதன் மூலம் அவரும் பார்ப்பன- வடவர் சூழ்ச்சிக்குப் பலியாகி விட்டாரோ என்று தான்
கேட்கத் தோன்றுகிறது.
ஆசாமிக்கு கண் பொட்டை தான் என்றாலும் பெயர் கண்ணப்பன் என்று கூறுவதன் மூலம் தமிழ்நாடு பெயர் மாற்றத்தை பெரியார் உள் மனம் ஏற்க மறுப்பதை அறிய முடிகிறது.
"மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயர் தான் வெளி உலகுக்கு தெரியும் என்று கூறி "தமிழ் நாடு" பெயர் மாற்றத்தை காமராசர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி எதிர்த்ததோ, அதே போல் பெரியாரும் அடிமை நாட்டிற்கு பெயர் முக்கியமில்லை என்று வாதாடி எதிர்ப்பு காட்டுகிறார்.
இதன்மூலமாக 1955ஆம் ஆண்டிலிருந்து தமிழ் நாடு என்று பெயர் வைக்கப் பட்ட 1967ஆம் ஆண்டு வரை இந்த இடைப்பட்ட 12 ஆண்டுகளில், பெரியார் தமிழ்நாடு பெயர் குறித்து கவலைப்படாமல் இருந்திருந்தால் கூட பரவாயில்லை. மறைமுக எதிர்ப்பு நிலை எடுத்து தமிழக மக்களை குழப்பி உள்ளார் என்பதை அறிய முடிகிறது.
பிறகு ஏன், பெரியார் தான் முதன்முதலில் "தமிழ் நாடு " பெயர் சூட்டிட குரல் கொடுத்தார் என்று பெரியாரிஸ்டுகள் வாய்ச்சவடால் அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை!
-கதிர் நிலவன் Tamilthesiyan.wordpress.com

No comments:

Post a Comment