பழந்தமிழின் ஆகச்சிறந்த நூல்களையெல்லாம் தேடித்தேடிக் கண்டெடுத்து அச்சிட்டு வெளியிட்ட உ.வே. சாமிநாதையர், திருக்குறளை அச்சிட்டு வெளியிட ஆர்வம் காட்டவில்லை என்ற கருத்து சிலருக்கு உண்டு. தமிழின் ஆழ, அகலங்களைக் கண்டுணர்ந்த சாமிநாதையர் திருக்குறளின் ஆழத்தையும் கண்டுணர்ந்துள்ளார். சாமிநாதையரின் முக்கால் நூற்றாண்டிற்கும் மேலான வாழ்க்கை வரலாற்றினூடே பயணித்துப் பார்க்கையில் திருக்குறளோடு அவர் கொண்டிருந்த பிணைப்புப் புலப்படுகின்றன.
உ.வே. சாமிநாதையர் மிக இளம் வயதில் அரியலூர் கிருஷ்ணவாத்தியார் என்பவரிடம் திருக்குறளைப் பாடம் கேட்டறிந்திருக்கிறார் என்பதை அவரின் என் சரித்திரத்தில் உள்ள குறிப்புகள் புலப்படுத்துகின்றன. பதினாறாம் வயதில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க வருவதற்கு முன்னர் குன்னத்தில் சிதம்பரம் பிள்ளை என்பவரிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவ்வூரிலிருந்த முத்தப்பிள்ளை என்பவரிடம் திருக்குறள் தெளிபொருள் விளக்கவுரைப் புத்தகத்தை இரவலாகப் பெற்றுப் படித்திருக்கிறார் என்பதையும் அவரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் புலப்படுத்துகின்றன.
செங்கணம் விருத்தாசல செட்டியாரிடம் பாடம் கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் செட்டியாரிடமிருந்த பல பழந்தமிழ் நூல்களைத் தாமே தேடித் தேடிக் கண்டெடுத்துப் படித்திருக்கிறார். பேரீடுபாட்டோடு தேடிப்படித்த நூல்களுள் திருக்குறள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்திருக்கிறது. செட்டியாரிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தபோது ஒருநாள், செங்கணத்திலிருந்து பெரும்பூலியூருக்கு நடந்தே சென்று அவ்வூர் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ராயர் என்பவரைத் தேடிக் கண்டு திருக்குறள் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதப் பெற்றிருந்த பதவுரை, கருத்துரை, விசேடவுரை புத்தகத்தைப் பெற்று வந்து படித்திருக்கிறார். செங்கணத்திலிருந்து காரைக்கு அவரது குடும்பம் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டபோது விருத்தாசல செட்டியாரிடமிருந்து சில முக்கியமான தமிழ் நூல்களை இரவலாகப் பெற்றுச் சென்றிருக்கிறார் சாமிநாதையர். அவற்றுள் திருக்குறளும் இடம் பெற்றிருந்தது.
மாணவ நிலையைக் கடந்து ஆய்வாளர் நிலையை அடைந்த காலத்திலும் திருக்குறளைத் தொடர்ந்து படித்தறிந்து ஆராய்ந்து நோக்கும் வழக்கத்தைச் சாமிநாதையர் கொண்டிருந்திருக்கிறார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்றை இங்கு நினைவுபடுத்திப் பார்ப்பது பொருத்தமாக அமையும். புறநானூற்றைச் சுவடியிலிருந்து பெயர்த்தெழுதி ஆராய்ந்துப் பதிப்பித்து வெளியிடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில், பழைய தமிழ் நூல்களின் உரையில் புறநானூற்றுப் பாடல்கள் மேற்கோள்களாக இடம் பெற்றுள்ளனவா? என்று ஆராய்ந்து பார்க்க நேர்கையில் திருக்குறளின் அனைத்து உரைகளையும் முற்றாகப் படித்தறிந்திருக்கிறார். இவ்வாறாக இளமை தொடங்கி முதுமை வரையில் திருக்குறளோடு அறுபடா தொடர்பு சாமிநாதையருக்கு இருந்திருக்கிறது என்பதை அவரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் புலப்படுத்துகின்றன.
திருக்குறள் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்தவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை என்பதைப் பலரும் அறிவர். அவர், கோவை சிறையில் இருந்தபோது திருக்குறளை ஆழ்ந்து கற்றறிந்திருக்கிறார். அப்போது திருக்குறளில் தமக்கு ஏற்பட்டிருந்த ஐயங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டுச் சிறையிலிருந்து செப்டம்பர் 14, 1908இல் சாமிநாதையருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் என்பதையும் நாம் இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
திருக்குறளுக்கு ஒரு ஆராய்ச்சிப் பதிப்பைக் கொண்டுவர வேண்டுமென்று சாமிநாதையர் பெருவிருப்பம் கொண்டிருந்திருக்கிறார். சாமிநாதையரின் விருப்பம் கி. வா. ஜகந்நாதையர் வழியாக நிறைவேறியிருக்கிறது. 1963 ஆம் ஆண்டு “திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு” ஒன்றை வெளியிட்டுச் சாமிநாதையரின் விருப்பம் நிறைவெய்தியதாகக் கி.வா.ஜ. குறிப்பிட்டிருப்பார்.
1929இல் திருச்சி, குளித்தலை தாலுக்கா மருங்காபுரி ஜமின்தாரிணி கி.சு.வி. இலட்சுமி அம்மணி என்பவர் எழுதிய ‘திருக்குறள் தீபாலங்காரம்’ என்ற நூலுக்கு சாமிநாதையர் எழுதிய அணிந்துரையில்,
திருக்குறளுக்குச் சமானமான நீதி நூல் வேறு இல்லையென்பது ஆன்றோர் கருத்து. அது பலவேறு பாஷைகளிலும் பல பலவாறாக மொழிபெயர்க்கப் பெற்றிருத்தலே அதன் பெருமையை நன்கு தெரிவிக்கும். திருக்குறளையே ஆதாரமாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ள செய்யுள் நூல்களும் வசன நூல்களும் பல இக்காலத்தில் வழங்கி வருகின்றன (திருக்குறள் தீபாலங்காரம், 1929)
என்று எழுதி மகிழ்ந்திருக்கிறார்.
1929இல் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமசிவன் பிள்ளை என்பவர் ‘திருக்குறட் சாரம்’ என்றவொரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். பரமசிவன் பிள்ளை சாமிநாதையரிடம் பெரிதும் விரும்பிப் பெற்ற வாழ்த்துரையில்,
திருக்குறளின் வசனமாகப் பல நூல்கள் இக்காலத்தில் வெளிப்போந்து உலாவி வரினும் இப்புத்தகம் ஒரு புதிய அமைப்பைப் பெற்று விளங்குகின்றதென்று சொல்லலாம். ஒவ்வோர் அதிகாரத்தும் உள்ள சிறந்த குறள் ஒன்றை எடுத்துக்காட்டி அதன் பொருளையும் தெளிவாக எழுதி அவ்வதிகாரத்திலுள்ள ஏனைப்பாக்களின் கருத்துக்களையும் தொடர்புபடுத்தி நல்ல நடையிற் செவ்வனே விளக்கி உரிய இடங்களிற் சிறந்த சைவநூற் கருத்துக்களை இதன் ஆசிரியர் பிரமாணங்களாகக் கொடுத்திருப்பது யாவராலும் பாராட்டத்தக்கது. இதனைப் படிப்பவர்கள் திருக்குறளிற் கூறப்பட்ட நீதிகளையும் சிவபக்தி மார்க்கத்தையும் எளிதில் அறிந்து கொள்வார்களென்பது என் கருத்து (திருக்குறட்சாரம், 1929)
என்று திருக்குறளை மதிப்பிட்டு நோக்கியிருக்கிறார். சாமிநாதையர் 1929ஆம் ஆண்டு ச. சோமசுந்தர பாரதியார் எழுதிய ‘திருவள்ளுவர்’ என்ற நூலுக்கும் மதிப்புரை எழுதி மகிழ்ந்திருக்கிறார்.
 1936இல் “திருக்குறளால் வந்த பயன்” என்றொரு கட்டுரையையும் இவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். தஞ்சாவூர் அரண்மனையில் சரசுவதி மகால் என்று பெயர்பெற்ற நூல்நிலையத்தில் சரபோஜி மன்னர் திருக்குறள் சுவடிகளைச் சேகரித்து வைக்கத் தொடங்கிய வரலாற்றுப் பின்புலத்தை இக்கட்டுரையில் சாமிநாதையர் குறிப்பிட்டிருப்பார்.
சாமிநாதையர், இவை எல்லாவற்றிற்கும் மேலாகத் 1936இல் ‘திருவள்ளுவரும் திருக்குறளும்’ என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பது வரலாறாகும். திருக்குறளைத் திறனாய்வு நோக்கில் நோக்கிய நூல்களுள் இந்நூலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. சாமிநாதையர் இந்நூலில் பல்வேறு நிலைகளில் குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் திறனாய்வு செய்திருக்கிறார். அந்நூலின் ஓரிடத்தில் திருக்குறளை இவ்வாறு மதிப்பிட்டு நோக்குகிறார்.
ஏனைய தமிழ் நூல்களிற் காணப்படாத சில சிறப்பியல்புகள் திருக்குறளுக்கு உண்டு. நூற்பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றைத் தெளிவாகக் கூறிய நூல்களுள் குறளுக்கு ஈடானது வேறு இல்லை. சங்க மருவிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்பவற்றுள் திருக்குறளைப் போல 1330 செய்யுட்களையுடைய நூல் வேறொன்று இல்லை; குறட்பாவில் அமைந்ததும் இல்லை...... குறட் கருத்துக்களை எடுத்தாளாத தமிழ் நூலே இல்லையென்று கூறுவது மிகையாகாது. தமிழ்ப் புலவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நூல்களில் திருக்குறளே முதன்மை வாய்ந்த தென்பதில் ஐயமில்லை. நீதிநெறி விளக்கம் குறட் கருத்தைச் சுருக்கமாக வேறு உருவத்தில் அமைத்துச் சொல்லும் நீதிநூலாகும். கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஸ்ரீமான் சி. தியாகராஜ செட்டியார் அந்நூலை, “இது குறள் பருவத்தில் பெற்ற பிள்ளையைப் போன்றது” என்பர். (திருவள்ளுவரும் திருக்குறளும், 1936)
இளமை தொடங்கி வாழ்நாளின் இறுதிவரையில் திருக்குறளோடு சாமிநாதையருக்கு இருந்த தொடர்பு பல தரவுகள் புலப்படுகின்றன. திருக்குறள் பதிப்பு (1812) இவர் பிறப்பதற்குப் (1855) பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்துவிட்டன. திருக்குறளுக்கு மூலம், உரை, புத்துரை, பதவுரை, விளக்கவுரை, அகலவுரை ஆகிய உரைப்பதிப்புகள் சாமிநாதையர் பதிப்புத் துறையில் ஈடுபடத் தொடங்கியதற்கு (1878) முன்னமே வெளிவந்து விட்டன. வாழ்நாளில் பிறர் பதிப்பித்து வெளியிட்ட நூலொன்றை மீண்டும் பதிப்பித்து வெளியிடும் வழக்கத்தைச் சாமிநாதையர் கொண்டிருந்ததில்லை. பலபேர் திருக்குறளுக்குப் பல வகையான பதிப்புகளை வெளியிட்டு முடித்திருந்த நிலையில் சாமிநாதையர் திருக்குறளைப் பதிப்பித்து வெளியிடும் முயற்சியில் ஈடுபடவில்லை போலும். என்றபோதிலும் ஆராய்ச்சி நோக்கில் திருக்குறளை அணுகும் முயற்சியைச் சாமிநாதையர் தம் வாழ்நாளின் இறுதிவரையில் கைவிடவில்லை என்பதை வரலாறு புலப்படுத்துகிறது.
http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jun20/40399-2020-06-26-06-59-39