Saturday, September 14, 2024

சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள் -முனைவர். துளசி ராமசாமி

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்
சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள்
https://www.vikatan.com/government-and-politics/71672-did-thiruvalluvar-write-thirukkural-issue-raises-again

https://www.youtube.com/watch?v=OTvA62iov1I&list=PLXPD1_to_UjQ6QP4UaDJPEE16ee_J0oKA&t=6s
திருக்குறள் தொடர்பாக முனைவர். துளசி ராமசாமி வெளியிடும் கருத்துகள் ஆய்வு நோக்கில் மிக முக்கியமானவை. அதிலும், '  நமது பண்பாடு குறித்த தரவுகளைச் சேகரிப்பதில் வெளிநாட்டவர்களிடையே ஏராளமான கோளாறுகள் இருக்கின்றன. நம்முடைய அணுகுமுறையிலும் சிக்கல்கள் இருக்கின்றன' என்கிறார் அவர். 

' சமண முனிவர்கள் எழுதியதுதான் திருக்குறள்' என்ற புத்தகத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் முனைவர்.துளசி ராமசாமி. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல ஆண்டுகாலம் மூத்த ஆய்வாளராக பணியாற்றியவர். இதுவரையில், 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். தற்போது ‘களப்பிரர் காலம் இருண்ட காலமா? இருட்டடிப்புச் செய்த காலமா?’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வருகிறார். இந்நிலையில், பழந்தமிழர் குறித்த ஆய்வில் நிகழும் சிக்கல்கள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். " ஆய்வுப் பணிகளில் ஈடுபடும்போது தரவுகள் சரியாக இருந்தால்தான், ஆய்வில் எந்த முறையைப் பயன்படுத்தினாலும் மிகச் சரியானதாக இருக்கும். நம்மைப் பற்றிய ஆய்வில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்த்தேன். அவர்கள் சேகரிக்கும் தரவுகளில் கோளாறு இருக்கிறது. அதனால் அவர்கள் எந்த அளவில் நம்மைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டாலும், அது முழுமையாக வடிவத்துக்கு வருவதில்லை. ஆனால், இந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக நாம் இருப்பதாலும் பண்பாட்டைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருப்பதாலும் தரவுகளைச் சரியாகச் சொல்கிறோம். ஆனால், நம்முடைய அணுகுமுறையில் கோளாறு இருக்கிறது" என்கிறார் துளசி ராமசாமி. 

தொடர்ந்து, " நமக்குக் கிடைக்கும் தரவுகளைச் சரியாகச் செப்பனிட்டுக் கொடுத்தால் ஆய்வு முடிவுகள் சரியாக வரும். படிக்கும் காலத்தில் திருக்குறளைப் படித்திருக்கிறோம். அப்போது தேர்வுக்காக குறள்களை மனப்பாடம் செய்தோம். பிற்காலத்தில், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அதே திருக்குறளை திரும்ப திரும்பப் படித்தேன். திரும்பத் திரும்ப ஒரே கருத்து சொல்லப்படுகிறதே என்ற எண்ணம் இதைப் படிப்பவர்களுக்கு ஏற்படும். ஆய்வில் ஈடுபடுபவர்கள் ஐந்தாறு பத்திகளைப் படித்தாலே, ஒரு கருதுகோளுக்கு வருவார்கள். அதன்படியே தரவுகளைச் சேகரிப்பார்கள். அவர்களது ஆய்வோடு தரவுகளும் பொருந்தி வந்தால், கருதுகோள் நிலை கொள்ளும். இல்லாவிட்டால், 'நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் வரும்.  

அப்படித்தான், ' திருக்குறளை ஒரே நபர் எழுதவில்லை' என்ற கருதுகோளுக்குள் என்னால் வர முடிந்தது. 1330 குறளை எழுதியவருக்கு 133 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை வைத்துவிட்டோம். ' திருவள்ளுவர் இல்லை' என்று நான் சொல்லவில்லை. அதை எழுதிய பலர் யார் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. எனக்கு முன்னால் பல பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என பலரும் வழிவழியாக சொல்லி வந்த ஒரு கருத்து, ' இது சமண மதத்தைச் சார்ந்தது. அதன் கொள்கைகள் குறளில் இடம் பெறுகின்றன' என்பதுதான். என்னுடைய ஆய்வின் முடிவுகளை வெளியில் சொல்கிறேன். மற்றவர்கள் சொல்வதற்கு மறந்துவிட்டார்களா என்றும் தெரியவில்லை. திரு.வி.கவும், ' சமண தத்துவம் உள்ளது' என்கிறார். தரவுகளை வைத்துக் கொண்டுதான் இதைச் சொல்கிறோம். என்னுடைய கூற்றை மறுக்க வேண்டும் என்றால், உரிய தரவுகளோடு விவாதம் நடத்த வேண்டும். ஒரு பேராசிரியர் என்னிடம், 'நீங்கள் சொல்வதை என்னால், ஏற்றுக் கொள்ள முடியாது' என்று கோபப்பட்டார். ' தரவுகள்தான் ஆய்வுகளைப் பேச வேண்டும். இது பட்டிமன்றம் கிடையாது. அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டுதான் எழுதினேன்' என அவருக்கு பதில் அளித்தேன். 

திருக்குறளை எழுதியது சமணர்கள் என்றால் எப்படி? தமிழர்களும் சமண மதத்தைத் தழுவிருக்கிறார்கள். சமண மதத்தவர் கி.மு. 3-ம் நூற்றாண்டில் மதத்தைப் பரப்புவதற்காக இங்கு வந்தவர்கள். அவர்கள் தமிழை வளர்க்க வந்தவர்கள் அல்ல. ஆனால், தமிழில் இலக்கண நூல்களை எழுதியிருக்கிறார்கள். இவை அனைத்தும் தரவுகள் மூலம் கிடைத்தன. சமண முனிவர்கள் எழுதியதுதான் திருக்குறள். சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில், ' சங்க இலக்கியத்தின் ஆசிரியர்கள் பெயரைச் சொல்ல முடிகிறதே...அதேபோல், திருக்குறளை எழுதிய பலர் யார் என்று சொல்லுங்கள்' என ஒருவர் கேட்டார். அந்த இடத்தில் மழுப்பலாகத்தான் பதில் சொன்னேன். எனக்குப் பதில் தெரியவில்லை. ' சமண முனிவர்கள் என்று சொல்கிறீர்களே, அங்கே அறத்துப்பால் வருகிறது. அவர்கள் எழுதியிருப்பார்களா?' எனவும் ஒருவர் கேட்டார். ' அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப் பால் என்று பார்ப்பதைவிடவும், அனைத்து குறள்களிலும் புத்திமதி சொல்வது போலவேதான் வருகிறது. வேறு எதுவும் இல்லை' என்று சொன்னேன். இன்னும் முழுமையான ஆய்வுகளுக்குள் நாம் செல்ல வேண்டியுள்ளது. 2008-ம் ஆண்டில் இருந்து முழுக்க சங்க இலக்கியங்களைப் படித்தேன். பின்னர், அது குறித்து முழுமையான ஆய்வில் ஈடுபட்டபோதுதான், ' அவை முழுக்க நாட்டுப்புறப் பாடல்களே' என்ற முடிவுக்கு வர முடிந்தது. 

களப்பிரர் காலம் தமிழ்நாட்டின் ஒளிர்ந்த காலம் என்றும் எழுதினேன். ' செழியன் என்பது பாண்டியன் வெளியிட்ட நாணயம் அல்ல. வணிகர்கள் வெளியிட்ட நாணயம்தான்' என்று எழுதினேன். என்னுடைய தரவுகளில் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். நமது நாட்டில் ஆய்வுகள் வளர வேண்டும். விமர்சனக் கலை வளர வேண்டும். முன்னத்தி ஏர் பிடித்து இழுக்க வேண்டும். இயக்கம் சார்ந்தவர்களோ, பேராசிரியர்கள் சொன்னதற்காக சோரம் போய்விடக் கூடாது" என்கிறார் முனைவர்.துளசி ராமசாமி. 

திருக்குறள் சர்ச்சை குறித்து, காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர்.ஹாஜாகனியிடம் பேசினோம். " திருக்குறள் குறித்தும் திருவள்ளுவர் குறித்தும் காலம்காலமாக பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ' அவர் மயிலாப்பூரில் பிறந்ததார்; வாசுகி அவருடைய மனைவி' என்பதற்கெல்லாம் எவ்வித ஆதாரமும் இல்லை. திருக்குறள் மட்டுமே உண்மையானது. 'புலால் மறுத்தல், அறத்தைப் பேசுதல் போன்றவற்றால் அவை சமண முனிவர்களால் எழுதப்பட்டது' என்கிறார்கள். முனைவர்.துளசி ராமசாமி எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசுகிறார் என்று தெரியவில்லை. கண்ணதாசன்கூட, ' இடைச்செருகலாக சிலவற்றை குறளில் சேர்த்துள்ளனர்' என்கிறார். மனித குலத்திற்கு வழிகாட்டும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை குறித்து வள்ளுவம் பேசுகிறது. நிலைத்த புகழ்பெற்ற நூல்கள் மட்டுமே இந்த நான்கையும் பேசும். திருக்குறளை எழுதியது ஒருவரா? பலரா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உதாரணமாக, ஐங்குறுநூறு நூலை எடுத்துக் கொண்டால், பல புலவர்கள் சேர்ந்து பாடிய பாடல்களைக் காணலாம். ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான எழுத்து நடை இருக்கும். 

ஆனால், வள்ளுவத்தைப் பொறுத்தவரையில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான ஆழம் இருக்கிறது. பலர் சேர்ந்து எழுதியிருந்தால், இப்படியொரு ஆழமான தொனி அமைந்திருக்காது. அதேபோல், திருக்குறளுக்கு உதாரணம் காட்டுவதற்கு, குறளைத் தவிர வேறு ஒரு நூல் இல்லை. தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகளும் குறளில் இல்லை. குறிப்பிட்ட மதம், இனத்திற்காக வள்ளுவம் எழுதப்படவில்லை. பல பேர் சேர்ந்து எழுதியிருந்தால் குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டிருக்கும். சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சேர்ந்தவர். ஆனால், சிலப்பதிகாரத்தில் சமணக் கருத்துக்கள் இல்லை. அதனாலேயே, குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படுகிறது. குண்டலகேசியில் புத்த மதக் கருத்துக்கள் தூக்கலாக இருந்தாலும், சிலப்பதிகாரம் அளவுக்குப் பெயர் பெறவில்லை. திருக்குறள் ஒரு நல்ல இலக்கியம். சமண முனிவர்களால் எழுதப்பட்டிருந்தால், சமணர்களே திருக்குறளைப் போற்றி பாதுகாத்திருப்பார்களே?" என்கிறார் விரிவாக.

-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment