Sunday, September 7, 2025

சேரன் செங்குட்டுவன் (பொஆ. 188 - 243) சிலப்பதிகாரம் காலம்; சங்க இலக்கியம் காலம்

பண்டைத் தமிழகத்தின் மாமன்னன் "கடல் பிறகோட்டிய வேல் கெழு குட்டுவன்" என்ற பட்டத்துடன் பதிற்றுப்பத்து 5ம் பத்து தலைவன் பொஆ 188- 243 வாக்கில் கருர் எனும் வஞ்சியைத் தலைநகராக ஆண்ட மன்னன். இவரே சிலப்பதிகார காப்பிய தலைவனான சேரன் செங்குட்டுவன் எனப்படுகிறது. 
  
சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டம் பொஆ 800 வாக்கில் கடற்கோளில் புதியதாக உருவான நிலப்பரப்பான கொடுங்கல்லூர்- திருவஞ்சைக்களத்தை சுட்டுகிறது. 
 

செங்குட்டுவனுடைய தேர் முதலிய மூன்று படைகளும் சேரநாடு முழுதும் பரந்து அருங்காவல் புரிந்தன. இச் செயலை அறிந்த பரணர் என்னும் நல்லிசைச் சான்றோர்,

“மன்பதை மருள் அரசுபடக் கடந்து
முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்,
ஒளிறுநிலை உயர்மருப் பேந்திய களிறூர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்
தேரொடு சுற்றம் உலகுடன் மூய[4]

என்று பாடிக் காட்டுகின்றார்.

வில்லும் வேலும் வாளும் ஏந்திய படைவீர்ரகள் உடன்வரச் செங்குட்டுவன் கலங்கள் பலவற்றை அணிவகுத்துக் கடலிடத்தே செலுத்தினான்; பகைவர் படை வீரரைச் சுமந்த கலங்கள் வரும் திசையை ஒற்றரால் அறிந்து எதிர்நோக்கிச் சென்று அவருடைய கலங்களைச் சூழ்ந்து நின்று தாக்கலுற்றான். நாற்புறமும் சேரர் கலங்கள் போந்து சூழ்ந்து கொண்டதனால் பகைவர்கள், இடையே அகப்பட்டு எத்துணையோ முயன்றும் மாட்டாது தோற்றனர். பெரும்பாலோர் மாண்டனர்; எஞ்சினோர் சிறைப்பட்டனர். அவர்களுடைய கலம் கொணர்ந்த அரியவும் பெரியவுமாகிய பொருள்கள் செங்குட்டுவன் கைவயமாயின. கடற் போரில் வாகை சூடிக் கரையை அடைந்த செங்குட்டு வனது புகழ் தமிழக மெங்கும் பரந்தது. சோழவேந்தரும் பாண்டி வேந்தரும் அவனைப் பாராட்டினர்.

பரிசிலர் பலர், சேர நாட்டை அடைந்து செங் குட்டுவனது கடல் வென்றியை முத்தமிழ் வழியாலும் இசைத்தனர். தமிழ்நாட்டுச் சோழ பாண்டிய மண்டலங் களில் இருந்த வேந்தர்களையும் செல்வர்களையும் பாடிச் சிறப்பித்து வந்து பரணர் என்னும் சான்றோர், மலையும் கானமும் கடந்து வஞ்சிநகர் அடைந்து செங்குட்டுவனைக் கண்டு,

“மழை பெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்
ஒன்று இரண்டு அல்ல பல கழிந்து திண்டேர்
வசையில் நெடுந்தகை காண்கு வந்திசினே[5]

என்று தொடங்கி, நாளும் குதிரை யூர்ந்து பயின்ற நின் தாள், வெற்றிமுரசு முழங்க, அலைகள் பிசிர் பிசிராக உடையுமாறு “படுதிரைப் பனிக்கடல்” உழந்ததனால் வருந்தா தொழிவதாக என்று வாழ்த்தி, “வேந்தே, வழி வழியாகக் கடற்போர் செய்து பயின்றவன் போல நீ இக் கடற் போரைச் செய்து பெருவென்றி எய்தினாய்;

‘இனியார் உளரோ? நின்முன்னும் இல்லை;
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
விலங்குவளி கடவும் துனிங்கிருங் கமஞ்சூல்
வயங்குமணி இமைப்பின் வேல் இடுபு
முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே[6]

என்று எடுத்தோதிப் பாராட்டினார்.

இவ்வாறு பாடி வந்த பாணர் கூத்தர் விறலியர் பலருக்கும், செங்குட்டுவன், கடலிற் பகைவர்பாலும் பிற பகைவர்பாலும் பெற்ற அரும்பெரும் பொருள்களை மழைபோல் வரையாது நல்கி, “இனிது புறந்தந்து அவர்க்கு இன்மகிழ்” சுரந்தான். அதனால், அவர்கள் பலரும் அவன் திருவோலக்கத்தே நெடிது தங்கினர். அதனை நேரிற் கண்ட பரணர்,

“கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்டு
உடைதிரைப் பரப்பில் படுகடல் ஒட்டிய
வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே[7]

என்று பாடிச் செங்குட்டுவன் சீர்த்தியைச் செந்தமிழில் நிலைபெறுவித்தார். செங்குட்டுவனது வரையாத வள்ளன்மையால், பாட்டினும் கூத்தினும், வல்லுநர் மாட்டாதவர் என்ற வேறுபாடின்றி, யாவரும் பெரும்பொருள் பெறுவதை. அவருள் இளையர் பலர் கண்டு, தமக்குள்ளே, “இச் செங்குட்டுவன் கல்லா வாய்மையன்” என்று பேசிக்கொண்டனர். இதனைக் கேட்ட பரணர், செங்குட்டுவனைப் பாடிய பாட் டொன்றில்,

“பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி,
ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிக்,
கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ !
‘ஆண்டு நீர்ப் பெற்ற தாரம் ஈண்டு இவர்
கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன் எனத் தத்தம்
கைவல் இளையர்[8]

கூறுகின்றனர் எனக் குறித்து அவனது கொடைமடத்தை எடுத்தோதிச் சிறப்பித்தார்.

செந்தமிழ் வளஞ் சிறந்து திகழும் பரணருடைய நல்லிசைப் புலமையின் பால் செங்குட்டுவனுக்கு மிக்க விருப்பமுண்டாயிற்று. அவரைக் கொண்டு தமிழ் இளைஞர்க்கு அகமும் பொருளுமாகிய பொருணூல் களை அறிவுறுக்குமாறு ஏற்பாடு செய்தான். அதற்காகச் சேர நாட்டு உம்பற்காடு என்ற பகுதியின் வருவாயைப் பரணற்கு நல்கித் தன் மகன் குட்டுவன் சேரல் என்பவனை அவர்பால் கையடைப்படுத்துக் கல்வி கற்பிக்குமாறு செய்தான். பிற்காலத்தே, சேர நாட்டுக் கானப்பகுதி யொன்று பரணன் கானம் என்ற பெயரெய்தி இன்றும் திருவிதாங்கூர் நாட்டில் மினச்சில் பகுதியில் உளது.

ஆசிரியர் பரணர், செங்குட்டுவன் விரும்பியவாறு தமிழ்ப்பணி செய்யுங்கால், களவொழுக்கம் பூண்டு ஒழுகும் தமிழ்த் தலைமகன் இரவுக்குறிக்கண் தலை வேற்றுக்குறி நிகழக் கண்டு அவ்விடம் வந்து அவனைக் காணாமல் சென்ற தலைவி, அவன் மெய்யாக வந்து செய்த வரவுக் குறியையும் வேற்றுக்குறி யென்று நினைந்து வாரா தொழிந்தாள்; தலைமகன் ஏமாற்றம் எய்தித் தன் நெஞ்சை வெகுண்டு, “பெறலருங் குரையள் என்னாள், வைகலும் இன்னா அருஞ்சுரம் நீந்தி நீயே என்னை இன்னற் படுத்தினை; அதனால்,

“படைநிலா விளங்கும் கடல்மருள் தானை
மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஒங்குதிரைப் பௌவம் நீங்க ஒட்டிய
நீர்மாண் எஃகம் நிறத்துச் சென்றழுந்தக்
கூர்மதன் அழியரோ நெஞ்சே[9]"

என்று கூறும் கருத்தமைந்த பாட்டில், செங்குவன் கடலிற் பகைவர் மேல் வேலெறிந்து அவர் பிறக்கிடச் செய்த திறத்தைப் பாடிச் சிறப்பித்துள்ளார். இவ்வாற்றால் செங்குட்டுவனுக்குக் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் என்று பெயர் பிறங்குவதாயிற்று.


சிலப்பதிகாரத்தில் உள்ள பலப்பல புதிய தமிழ் சொற்கள், இலக்கண மாற்றம் இது மிகப் பிற்காலம் எனத் தெளிவாக காட்டுகிறது என்கிறது உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் 5 நூல் ஆய்வுத் தொகுப்பு - "சங்கத் தமிழ்"


  


  

 

No comments:

Post a Comment