Wednesday, June 3, 2015

P.S.சுப்பிரமணிய சாஸ்திரியார் -தமிழ் மொழிநூல் வல்லுநர்

தமிழில் முதல் முனைவர்ப்பட்ட ஆய்வேடு இது. தமிழ்இலக்கணக்கொள்கைவரலாறும் அதன் சமற்கிருத இலக்கண உறவும். 1930இல் முனைவர்ப்பட்டம் பெற்றவர்.பிசாசு. அதாவது பி.சுப்பிரமணிய சாஸ்திரியார். 1934 இல் வெளிவந்தது. இவர்யார்? 

முதன்முதலில் தொல்காப்பியத்தை மொழிபெயர்த்தவர் பின்னங்குடி சா.சுப்பிரமணிய சாஸ்திரி. முன்பே ஒரு கட்டுரையில் இவரை நாம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். முதலில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் பின்னர் திருவையாறு அரசர் கல்லூரியிலும் தமிழ்ப்பேராசிரியராக இருந்த சுப்பிரமணிய சாஸ்திரியார், தொல்காப்பிய எழுத்ததிகார மொழிபெயர்ப்பை 1930இலும், சொல்லதிகார மொழிபெயர்ப்பை 1937இலும், பொருளதிகார மொழிபெயர்ப்பை 1945இலும் வெளியிட்டார்.



திருச்சிராப்பள்ளி ஆண்டாள்தெருவில் வாழ்ந்தவர். திருவையாறு அரசர் சமஸ்கிருத தமிழ்க்கல்லூரி சமற்கிருத பேராசிரியர், முதல்வர், திருச்சி பிசப்ஹீபர்கல்லூரி கீழைமொழித்துறைப்பேராசிரியர் சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ் பேரகராதி  துணைஆசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பேராசிரியர். இவரின் தமிழ்மொழிநூல். சிறந்த tamil philology நூல். The comparative grammar of tamil, tamil phonology, தொல்காப்பிய எழத்து ,சொல், ஆராய்ச்சியுரைகள் நுண்மாண் நுழைபுலம் உடையவை. சமற்கிருத சார்பு இருந்தாலும் தமிழின் தனித்தன்மைகளைச்சுட்டிகாட்டியுள்ளார்.இவர் திருவையாறு அரசர்கல்லூரி முதல்வர். இந்த நூலில் பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து, வீரசோழியம் என்ற வடநூல் சார்ந்த இலக்கணச்சிந்தனை, பாணினீயம், நிருக்தா, கயாதரம், கச்சாயனம் போன்ற வடநூல்ஒப்பீடு உண்டு. தொல்காப்பியத் தனித்தன்மையும் கூறுகிறார். இவர் தமிழ்வளர்த்த பார்ப்பனர்களில் ஒருவர். இவர் வாழ்ந்த போது இவர் இலக்கண அறிவைக்கண்டுயாவரும் அஞ்சி இவர் பிசாசு என்பர். பி.சா.சு. நூல்களை மீண்டும்‌ அச்சேற்றல் புதிய தலைமுறைக்குஉதவும்.
முதன் முதலில் வெளிவந்தது, தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்புதான். 1930ஜூலையில் இது வெளிவந்துள்ளது. இதில் அவருடைய பெயருக்குக்கீழ் Professor of Oriental Studies, Bishop Heber College, Trichinopoly (on leave), now Assistant Editor, Tamil Lexicon, University of Madras என்ற குறிப்பு காணப்படுகிறது. தமது முகவுரையிலும் அவர் சொல்கிறார்: “திருச்சிராப்பள்ளி பிஷப் ஈபர் காலேஜில் படிக்கும் பி.ஏ. மாணவர்க்கு கால்ட்வெல் துரை எழுதிய திராவிட பாஷையிலக்கணம் கற்பிக்க முதன்முதல் 1919-ம் வருஷத்தில் எனக்கு நேர்ந்தது. அவர் தமிழ்மொழியைப் பற்றிக் கூறுவன தமிழிலக்கண நூல்களிற் கூறியனவாறே உள்ளனவா என்பதை ஆராய 1920-ம் வருஷத்தில் தொடங்கினேன். நன்னூலில் இனவெழுத்து, சார்பெழுத்து முதலியவற்றைப் பற்றிய விஷயங்கள் ஒலிநூல்களுக்கு ஒத்திராமையின், தொல்காப்பியத்தில் எவ்வாறு கூறப்பட்டன என்று அறிந்துகொள்ளத் தொல்காப்பியம் படிக்கத் தொடங்கி எழுத்ததிகாரத்தைப் படித்து அதனில் எனக்குத் தோன்றிய விஷயங்களை பிஷப் ஈபர் காலேஜ் பத்திரிகையில் வெளியிட்டேன்……. சொல்லதிகாரத்தில் உள்ள விஷயங்களை செந்தமிழ்ப் பத்திரிகையில் 1927-ம் வருடமுதல் வெளியிட்டேன்” என அவர் கூறும்போது பிஷப் ஈபர் கல்லூரியில் பணிபுரிந்த செய்தி மட்டுமல்ல, எதற்காகத் தொல்காப்பிய ஆராய்ச்சியைத் தொடங்கினார்.
tholkaappiyam1 tholkaappiyam2
1937ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட ‘தொல்காப்பிய எழுத்ததிகாரம்-குறிப்புரையுடன்’ நூலிலும், “இவ்வுரை எழுத எனக்கு உதவியோர் பலர். அவர்கள் பிஷப் ஹீபர் காலேஜில் கால்ட்வெல் இலக்கணம் படிப்பிக்க இடம்கொடுத்த அக்காலேஜ் பிரின்ஸ்பல் Rev.Allan F.Gardiner அவர்களும்…” எனச் சொல்கிறார். தொல்காப்பிய எழுத்ததிகாரக் குறிப்புரை நூலில் அவரது பெயருக்குக்கீழ், Principal, Raja’s College of Sanskrit and Tamil Studies, Tiruvadi and Formerly Professor of Oriental Studies, Bishop Heber College, Tirchinopoly and Asst.Editor, Tamil Lexicon, University of Madras என்ற குறிப்பு காணப்படுகிறது. இதன் வாயிலாக அவர் பிஷப் ஹீபர் கல்லூரி மூடப்பட்ட பிறகு திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தார் என்பதையும் அறியமுடிகிறது.

எழுத்ததிகாரக் குறிப்புரை நூலின் பின்னால் சேர்க்கப்பட்டுள்ள Works of Dr.P.S. Subrahmanya Sastri என்ற இணைப்பிலிருந்து அவர் History of Grammatical Theories in Tamil, Tolkappiyam Vol.1 Eluttatikaram with English Commentary, Tolkappiyam Vol.2 Part I Collatikaram with an Elaborate English Commentary, தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் குறிப்புரை யுடன், தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, தமிழ்மொழிநூல், தமிழ்மொழியிலக்கணம், திருக்குறட்குறிப்பு (Part I) ஆகிய நூல் களை எழுதியுள்ளார் எனத் தெரிகிறது. ஒருவேளை இவற்றிற்குப் பின்னும் வேறு நூல்கள் எழுதியிருக்கலாம். அவை எனக்குத் தெரியவில்லை. மேலும் தொல்காப்பியத்தை சாஸ்திரியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்றும் அறிகிறோம்.
இந்நூல்களை அக்கால அறிஞர்கள் எப்படி மதித்துள்ளனர் என்பதற்குச் சில குறிப்புகளும் காணப்படுகின்றன. உதாரணமாக History of Grammatical Theories in Tamil நூலுக்கு லண்டனிலுள்ள பேராசிரியர் ஆர்.எல்.டர்னர், ‘Very valuable work’ என்று பாராட்டியிருக்கிறார். பாரிஸிலுள்ள பேராசிரியர் ஜூல்ஸ் பிளாக்கும் பாராட்டியிருக்கிறார். சிகாகோவின் மொழியியல் பேராசிரியர் லெனார்ட் புளூம்ஃபீல்டு, கோபன்ஹேகனிலிருந்த பேராசிரியர் ஹோல்கர் பெடர்சன் ஆகியோரும் பாராட்டியுள்ளனர். அதேபோலத் தொல்காப்பியம் ஆங்கில விளக்கவுரை நூலினையும் நார்வேயிலிருந்த பேராசிரியர் ஸ்டென் கோனோவும், எடின்பர்கிலிருந்த ஏ.பி.கீத்-உம் பாராட்டியிருக்கின்றனர். இவற்றால் அவருடைய நூல்கள் உலகப்பெரும் ஆராய்ச்சியாளர்களால் எப்படி மதிக்கப்பட்டன என்று தெரியவருகிறது.
இங்கு எடுத்துக்கொண்ட நூல்களின் பெயரும் ‘தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு’ என்றும் ‘தொல்காப்பியம் எழுத்ததி காரம்-குறிப்புரையுடன்’ என்றும் சற்றே மாறுபட்டுள்ளன. குறிப்பு என்பதும் குறிப்புரை என்பதும் இக்கால நோக்கில் நோட்ஸ் என மதிப்பின்றிக் கருதப்பட்டாலும்,இக்குறிப்புரை அவ்வாறானதல்ல. சொல்லதிகாரக் குறிப்பின்கீழ் அவர் A critical Study of Collatikaram with all the available Commentaries என்று கூறுவதும், எழுத்ததிகாரக் குறிப்புரையின்கீழ், with an elaborate commentary என்றிருப்பதும் மிகப் பொருத்தமானவை. காரணம், தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, நிசசயமாகவே ஒரு சிறந்த ஆய்வுநூலாகத் திகழ்கிறது; எழுத்ததிகாரக் குறிப்புரை முன்னூலின் அளவுக்கு ஆய்வுச் சிறப்புடன் அமையவில்லை என்பதோடு அவரே சொல்வது போல ஒரு விரிவான உரையாக அமைந்துள்ளது. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பில் வடமொழி மேற்கோள்களை தேவநாகரி எழுத்தில் தந்துள்ளார். எழுத்ததிகாரக் குறிப்பிலுள்ள வடமொழி மேற்கோள்கள் கிரந்த எழுத்தில் தரப்பட்டுள்ளன. இவற்றையும் நாகரி எழுத்திலேயே தந்திருப்பின் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும்.
சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய சமஸ்கிருத அறிவு தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, பொதுவாகவே மொழிப்பயன்பாட்டினை அறிந்துகொள்ளப் பல இடங்களில் பயன்படுவதனைக் காணலாம். உதாரணமாக, தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பில், 111ஆம் நூற்பாவுக்கு (எனையுருபும் அன்னமரபின மானமிலவே சொன்முறையான) உரையெழு தும்போது,
“இச்சூத்திரத்தில் மானம் என்பதற்குக் குற்றம் என்று எல்லாவுரை களிலும் பொருள்கூறப்பட்டுள்ளது. மானம் என்பதற்குப் பிரமாணம் என்று பொருளேயன்றிக் குற்றமென்று பொருள் இருப்பதாகத் தெரியவில்லை; ஹாநம் என்ற வடமொழியின் தற்பவமாகிய ஆனம் என்பதற்கு, குற்றமென்று பொருளாம். ஆகவே ‘மெல்லெழுத்து மிகினுமானமில்லை’ (எழுத்.341) என்னுமிடத்து மெல்லெழுத்து மிகினும் மானமில்லை என்று பிரித்துப் பொருள்கொண்ட அச்சிட்டோர் இங்கும் ஆனம் என்று ஏட்டிலிருந்ததை மானம் என்று திருத்திக்கொண்டனரோ என்று கருதவேண்டியதாக இருக்கிறது” எனக்கூறி, அதற்கு அடிக்குறிப்பாக,
“சூடாமணி முதலிய நிகண்டுகளில் மானம் என்பதற்குக் குற்றம் என்ற பொருளிருக்கிறது எனச் சிலர் எண்ணலாம். அந்நிகண்டு களில் வடமொழிச் சந்தியைத் தவறாகப் பிரித்து வழங்கிய வேறு சொற்களும் காணப்படுதலின் அஃதொரு காரணமாகாதென்க” என்கிறார்.
இதனையே பின்னர் எழுத்ததிகாரக் குறிப்பிலும் வற்புறுத்தி, 32ஆம் நூற்பா (தம்மியல் கிளப்பின் எல்லாவெழுத்தும் மெய்ந்நிலை மயக்க மானமில்லை) உரையில்,
“மயக்கமானமில்லை என்றவிடத்து மயக்கம் மானம் இல்லை எனப் பதப்பிரிவு காட்டியுள்ளார் பதிப்பித்தோர். பிற்காலத்து நிகண்டுகளில் மானம் என்றதற்குக் குற்றம் என்ற பொருளிருத்தலின் அவ்வாறு செய்தனர் ஆகும். ஆனால் ‘மயக்கம் ஆனம் இல்லை’ என்ற பதப்பிரிவே தக்கதாகும். ஏனெனில் மானம், ஆனம் என்பன மாநம், ஹாநம் என்ற வடமொழிச் சொற்களின் தற்பவமாகும்; வடமொழியில் மாநம் என்றதற்குக் குற்றம் என்ற பொருளில்லை; ஹாநம் என்றதற்கே அப்பொருள் உண்டு”
எனக் கூறியுள்ளார். எனவே தொல்காப்பியத்தில எங்கெங்கெல்லாம் மானமில்லை என வருகின்றதோ அங்கெல்லாம் பிறழ் பிரிப்பு நிகழ்ந்துள்ளது என்பதையும் அறிகிறோம். இம்மாதிரி வெளிச்சமூட்டும் இடங்கள் பலப்பல.
சொல்லதிகாரக் குறிப்பு நூலுக்கு ம.நா.சோமசுந்தரம் பிள்ளை எழுதிய மறுப்புகளைப் படிக்கும்போது அவை பெரும்பாலும் வெறுப்புணர்ச்சியின் காரணமாக எழுதப்பட்டனவாகவே எனக்குத் தோன்றியது. முதல் இருபது பக்கங்களைமட்டும் ஆராய்ந்து அவர் தந்திருந்த இருபது மறுப்புகளில் ஒன்றே ஒன்று மட்டுமே எனக்குப் பொருத்தமாகத் தோன்றியது. “வினைக்கு வேற்றுமையுருபைச் சேர்ப்பின் அது பெயராய்த் தமிழில் ஆகின்றது; அவ்வாறு வடமொழியில் இல்லை” என்பதற்கான மறுப்புரைதான் அது. அநேகமாகப் பிற குறைகளெல்லாம் சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய நடை பற்றியனவே.
இவ்வாறு பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பும், எழுத்ததிகாரக் குறிப்புரையும் வளம் நிறைந்த, ஆழ்ந்த இலக்கண ஆய்வுக்குத் துணைசெய்யக் கூடிய சிறந்த படைப்புகளாக அமைந்துள்ளன. குறிப்பாக, சமஸ்கிருத இலக்கணக் கருத்துகளையும், தமிழ் இலக்கணக் கருத்து களையும் ஒப்பிட்டு ஆராய விரும்புவோர்க்கு இவை மிகச் சிறப்பான கையேடுகளாக உதவக்கூடியவை எனலாம். 

No comments:

Post a Comment