Tuesday, August 23, 2022

கோவில்களில் அர்ச்சகர் நியமனம்-தீர்ப்பும் வழிகளும்

அர்ச்சகர் உள்ளிட்ட கோயில் ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம், அறங்காவலர் அல்லது தக்காருக்கு மட்டுமே உள்ளது; ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களுக்கு, அர்ச்சகர் நியமன விதிகள் பொருந்தாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறநிலையத் துறை கோவில் ஊழியர்கள் பணி விதிகளை, 2020ல் தமிழக அரசு ஏற்படுத்தியது. அதில், கோவில்களில் அர்ச்சகர் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க தகுதிகள் வரையறை செய்யப்பட்டன.குறிப்பிட்ட சில விதிகளை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் முத்துகுமார், சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.ஆகம விதிகளை, சடங்குகளை புறக்கணித்து விதிகள் வகுக்கப்பட்டு இருப்பதாகவும், இதை பின்பற்றி, ஆகமப்படியான கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்க முடியாது எனவும், மனுக்களில் கூறப்பட்டது.


இம்மனுக்கள், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தன. ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், வழக்கறிஞர் பி.வள்ளியப்பன்; மற்றவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர்கள் ஆர்.பார்த்தசாரதி, என்.ஆர்.வெங்கடேஷ், பி.ஜெகநாத் ஆகியோரும்; அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆகியோரும் ஆஜராகினர்.
latest tamil news
மனுக்களை விசாரித்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:கடந்த 2020ல் ஏற்படுத்திய விதிகளில், அறங்காவலர் மட்டுமின்றி தக்காரும், நியமன அதிகாரியாக வரையறுக்கப் பட்டுள்ளது. அறநிலையத் துறை சட்டப்படி, அறங்காவலர்கள் இல்லாதபோது, தக்கார் நியமிக்கப்படுகின்றனர்.அர்ச்சகர் நியமனங்களை மேற்கொள்ள, அறங்காவலர்களுக்கு தான் உரிமை உள்ளது என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அறங்காவலர்கள் இல்லாதபோது, கோவில் செயல்பாடுகளை ஒருவர் கவனிக்க வேண்டும்.
எனவே, அவர்களின் அதிகாரங்களைச் செயல்படுத்த, தக்கார் நியமிக்கப்படுகிறார். அதனால், நியமன அதிகாரியாக விதிகளில் குறிப்பிடப்பட்டவர்களை, சட்டத்துக்கு எதிரானதாக கூற முடியாது.அதேநேரம், காலவரையின்றி தக்கார் நீடிக்கக் கூடாது. விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான், கோவில் நிர்வாகம், அறங்காவலர்கள் வசம் இருக்கும்.அர்ச்சகர் நியமனங்களுக்கு தகுதி, வயது, 7 மற்றும் 9 வது விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு சான்றிதழ் வகுப்பு அர்ச்சகர் பணிக்கு தகுதியாகவும்; பல ஆண்டுகள் பூஜை செய்வதில் அனுபவம் இருந்தாலும், உரிய தகுதி இல்லை என்றால், அவர்களை நியமிக்க முடியாது எனவும் விதிகளில் கூறப்பட்டுள்ளது.இந்த விதிகளை சட்டவிரோதமானது எனக் கூற முடியாது. ஏனென்றால், இந்த விதிகள் அர்ச்சகர்களுக்கு மட்டுமின்றி, இதர பணியிடங்களுக்கும் பொருந்தும்.எனவே, இந்த இரண்டு விதிகளையும் ரத்து செய்தால், அர்ச்சகர் தவிர்த்து, மற்ற பணிகளுக்கான நியமனங்களில், வழிகாட்டுதல்கள் இல்லாமல் போய் விடும்.அதேநேரம், ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களுக்கு, இந்த விதிகள் பொருந்தாது.
ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை பொறுத்தவரை, ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் சேஷம்மாள் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தான் அமல்படுத்த வேண்டும்.எனவே, ஆகம விதிகளின்படியான கோவில்களுக்கு, ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க முடியும். அறங்காவலர்கள் அல்லது தக்கார் தான் அர்ச்சகரை நியமிக்க முடியும்; அறநிலையத் துறை அல்ல. ஆகமப்படி அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றால், தனிநபர் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம்.ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களை அடையாளம் காண வேண்டியதுள்ளது.
எந்த ஆகமப்படி கட்டப்பட்டுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.எனவே, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் ஐவர் குழுவை நியமிக்க, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. குழுவில், சென்னை சமஸ்கிருத கல்லுாரி நிர்வாக குழு தலைவர் என்.கோபாலசாமி இடம்பெற வேண்டும்.தலைவரின் ஆலோசனையுடன், ஒரு மாதத்துக்குள், இரு உறுப்பினர்களை அரசு நியமிக்க வேண்டும்.
அலுவல்சாரா உறுப்பினராக அறநிலையத் துறை கமிஷனர் இருக்க வேண்டும்.இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களுக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற கோவில்களுக்கு அல்ல.ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளதா; எந்த ஆகமப்படி கட்டப்பட்டுள்ளது என்பதை, ஐவர் குழு அடையாளம் காணும். அந்த ஆகமப்படி, அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும்; விதி 7 மற்றும் 9ன்படி அல்ல.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
 
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பிட்ட விஷயம் யாதெனில்..
அரசு கோயில் ஊழியர்களை நியமனம் செய்ய விதிகளை அரசாணை மூலம் பிறப்பித்தது. இந்த மோசடி அரசாணையில் உள்ள விதிகள் அர்ச்சகர்களுக்கு பொருந்தாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து கோயில் உள் துறை பணியாளர்களுக்கும் பொருந்தும் என நம்புகிறேன்.
இதன் மூலம் நேரடியாக நியமனம் செய்யும் அதிகாரத்தை அரசு இழந்துள்ளது.
ஆனால் அறங்காவலர்கள் மூலமோ / மோசடி தக்கார் மூலமோ நியமனம் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை.
சட்டத்தில் நேரடியாக செய்ய முடியாத ஒன்றை மறைமுகமாகவும் செய்ய இயலாது.
வழக்கு உச்ச நீதிமன்றம் நோக்கி பயணிக்க உள்ளது.
  


 ஓய்வுபெற்ற நீதிபதி மாண்பமை திரு. சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து,
தமிழகத்தில் எந்தக் கோயில்கள் எல்லாம் ஆகமகோயில் அல்லது ஆகமம் பின்பற்றப்படுகிறது என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இடப்பட்டுள்ளது...
எவையெல்லாம் ஆகமகோயில் அல்லது ஆகமம் பின்பற்றப்படுகிறது என கணக்கெடுத்தால்... தமிழகத்தில் 99% ஆகம கோயிலே ஆகும்...
அதாவது எப்பொழுது ஒரு கோயில் கருவறை // அர்த்தமண்டபம் / கோபுரம் // விமானம் /ஸ்தூபி (கலசம்) என அமைக்கப்படுகிறதோ, அப்பொழுதே அது ஆகமக்கோயிலாகிவிடுகிறது... காரணம் ஆகமங்களில் மட்டுமே கோயில் கட்டுமானம் + பூஜைகள் பற்றிய தகவல்கள் குறிப்புகள் உள்ளன...
இதன்படி பார்த்தால் சைவ / வைணவ ஆலயங்களை தாண்டி மாரி / காளி // ஐயனார் / முனிஸ்வரன் என்ற கிராம தேவதை கோயில்களும் கோபுரம் / விமானம் / ஸ்தூபி / மண்டபம் என அமைக்கப்பட்டிருந்தால் அதுவும் ஆகமக்கோயிலே ஆகும்...
ஏன், மடங்கள் அமைப்பு / மடங்களில் இருந்த குருவின் திருவுருவ பிரதிஷ்டை / மடங்களில் நடக்கும் சமாதி பிரதிஷ்டைகளும் ஆகமங்களின்படியே ஆகும்...
எனவே ஆகமக்கோயில் என கணக்கெடுத்தால் இங்கே 99% கோயிலும் ஆகமகோயிலே ஆகும்...
எங்கேனும் விமானம் / கோபுரம் இல்லாமல் வானம்பார்த்த வெட்டவெளியில் உள்ள கோயிலை வேண்டுமானால் ஆகமக்கோயில் அல்ல என கூறலாம்...
எனவே ஆகம கோயிலா என்று கணக்கெடுப்பதை விட,
பூஜை உரிமை எந்த சம்பிரதாயப்படி அல்லது எந்த மரபுக்கு என்பதே வழக்கின் மையமான கோரிக்கை என்பதால்,
1) ஆகமங்களின்படி கும்பாபிஷேகம் / பூஜை நடக்கும் கோயில் எவை?
2) ஆகமங்களின்படி பிரதிஷ்டை நடத்தப்பட்டு, மற்ற வழி பூஜை நடக்கும் கோயில் எவை....
3) குறிப்பிட்ட மரபுதான் பூஜைஉரிமைக்கு என்ற விதி இல்லாத கோயில் எவை....
என கணக்கெடுக்க வேண்டும்...
இவற்றில் முதல் இருவகை கோயிலிலும் பூஜை உரிமை எந்த மரபுக்கு உண்டு என்றபடியான ஒரு தெளிவான கணக்கெடுப்பு தான் தேவை...
ஏனெனில் தமிழகத்தில் இந்த அர்ச்சகர் பிரச்சனை என்பது சுமார் 100 ஆண்டுகளாக ஒரு தொடர் பிரச்சனையாக இருந்துகொண்டிருக்கின்றது...
இதனால் பல பாரம்பர்ய அர்ச்சககுடிகள் கடந்த 100 ஆண்டுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்... பல அர்ச்சகுடி குடும்பங்கள், நாடோடிகளாக உலவுகின்றனர்...
1) ஆகமப்படி பூஜை நடக்கும் கோயில்கள் எனும்பொழுது அவற்றில் பெரும்பாலும் சிவ / வைணவ ஆலயங்கள் வந்துவிடும்... பல முருகர் ஆலயங்களும், அடிப்படையில் சிவாலயமே ஆகும்...
இந்த சைவ / வைணவ ஆலயங்களில் பூஜை உரிமை எந்த மரபுக்குரியது என்பது தெளிவாக்கப்பட வேண்டும்...
அதாவது இந்த மரபே இக்கோயிலில் பூஜைஉரிமை என தெளிவாக்கப்படவேண்டும்...
அதாவது இவை ஒவ்வொரு கோயிலுக்கு தனிதனியாக ஆவணரீதியாக தெளிவாக்கப்பட வேண்டும்.
2) அடுத்து இரண்டாவது வகை,
ஆகமப் பிரதிஷ்டை. ஆனால் பூஜை உரிமை மற்ற மரபுக்கு - என்ற கோயில்கள் எவை எவை என கணக்கெடுக்க வேண்டும்...
அதாவது கிராமங்களில் பெரும்பாலும் மாரியம்மன், ஐயனார் கோயில் பிரதிஷ்டை அதாவது கும்பாபிஷேகம் ஆகமப்படியே.....
ஆனால் பூஜை உரிமை பூசாரிகளுடையது...
மேல்மலையனூர் / சிறுவாச்சூர் / வெக்காளியம்மன் என தமிழக அளவில் பல பெரிய கோயில்களில் பிரதிஷ்டை ஆகமப்படியே நடக்கின்றது... ஆனால் பூஜை உரிமை வேறு மரபுக்கு... அதாவது பூசாரிகுடிகளுக்கு..
திருவானைக்கா ஆகமப்படி பிரதிஷ்டை.. பூஜை உரிமை வேறு மரபு... இப்படியாக உள்ளவை...
ஏன் சைவமடங்களில் கூட பிரதிஷ்டை ஆகமப்படியே... ஆனால் பூஜைஉரிமை மடாதிபதிகளுடையது...
3) மூன்றாவது வகை கோயில்களும் தமிழகத்தில் சில உள்ளன.. அங்கே, குறிப்பிட்ட மரபுக்குதான் பூஜை உரிமை என்று இல்லாத பொதுவகை கோயில்....
இப்படியாக மூன்றுவகை கணக்கெடுப்பு செய்தால் தெளிவான வழி பிறக்கும் என்பது எனது எண்ணம்...
இவையன்றி, ஆகமங்களில் இல்லாத, பௌராணிகப்படியான தேவதைகளாகிய தர்மராஜா கோயில் /அர்ஜுனன் கோயில் / அரிச்சந்திரன் கோயில் என பிராணப்பிரதிஷ்டை வகை கோயிலும் உள்ளன.. ஆனால் இவை, கிராம மக்கள் அல்லது குலதெய்வ மக்கள் கட்டுப்பாட்டில் உள்ளவை...
சிவார்ப்பணம்.
- தில்லை கார்த்திகேயசிவம் -

No comments:

Post a Comment