Tuesday, December 27, 2022

வேதாரண்யம் - திருமறைக்காடு - Sundar Raja Cholan

வேதாரண்யம் - திருமறைக்காடு - Sundar Raja Cholan

வேதாரண்யம் - திருமறைக்காடு என்பது தவறு 'திருமரைக்காடு' என்பதுதான் சரி.ஏனென்றால் 'மரை' என்றால் மான் என்று பொருள்படும் என்பதாக ரொம்ப காலமாகவே ஒரு கும்பல் பேசி வருகிறது.சுனாமி வந்து போன பிறகு திருச்சி வானொலியில் வேதாரண்யத்தின் பொருளை பற்றி இதே வடிவத்தில் ஒருவர் பேசி நான் கேட்டிருக்கிறேன் அப்போது.



அதன் பிறகு இப்போது தமிழக அரசு ஊர் பெயர்களை தங்லீஷில் எழுதுவது குறித்த மாற்றத்தை கொண்டு வந்த போதுதான் கேட்கிறேன் மீண்டும் இதே குரல்களை.முதலில் ஒன்றை சொல்வதற்கு முன்னால் அதற்கு உண்டான முதல்தர ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் அல்லது மேற்கோள் காட்ட வேண்டும் என்ற அடிப்படை அறிவே இல்லாத தற்குறிகளால் இது மீண்டும் மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது.
வடாரண்யம் - சங்காரண்யம் - சுவேதாரண்யம் - வேதாரண்யம் இதை முறையே ஆலங்காடு,தலைச்சங்காடு,வெண்காடு,
மறைக்காடு என்று தேவாரம் சொல்கிறது.இதனை தல புராணங்களிலிருந்து ஊர் பெயர் வரை ஒன்றோடொன்று இணைந்து 1500 வருடத்திற்கு மேலே கண்ணுக்கு தெரிந்த ஆதாரமாக இலக்கியம்,கல்வெட்டு என்று தெளிவாக இருக்கிறது.
முல்லை வனநாதர்,வில்வ வனநாதர் என்றெல்லாம் பெயர் வைத்து அழைத்தவர்களுக்கு மரைக்காடன் என்று அழைப்பது சிரமமா? பெயர் அதுவல்ல என்பதுதானே இதில் உள்ள உண்மை நமக்கு எடுத்துரைப்பது?
தேவாரத்தை வாசித்தவர்களுக்கு தெளிவாகவே புரியும்.ஒரு ஊரைப்பற்றி சொல்லும் போது அந்த ஊரின் எல்லா வளத்தையும் புகழ்ந்து கொண்டே வருவார்கள் ஆனால் அப்படி புகழப்படுவதை எல்லாம் இறைவனின் பெயராக வைத்து அழைக்க மாட்டார்கள்.தேவாரம் பாடப்பட்டதே அங்கு ஏற்கனவே அந்த தல புராணங்களுடன் வழிபாடுகள் நடந்த இறைவன் மீதுதான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
தேவார மூவர் தொடங்கி ஆங்கிலேய ஆட்சி வரை அந்த ஊரின் பெயராக குறிக்கப்பட்டது திருமறைக்காடு - வேதாரண்யம் - வேதவனம் என்பதுதான்.இது அத்தனையும் முறையான ஆவணங்களாக உள்ளன.
வேதங்கள் நான்கும் வழிபட்டு போன பின்னர் கோவிலின் மூலக்கதவு தாழிடப்பட்டதால் பக்கவாட்டின் வழியே இறைவனை வழிபட்டு வந்த மக்களின் துயரம் தீர சம்பந்தர் பெருமானும் - அப்பர் பெருமானும் ஒன்றாக நின்று பாடி தாழ் திறக்க வைத்த அற்புதம் நிகழ்ந்த ஊர் இது.
இந்த ஊருக்கு அருகே நாலுவேதபதி என்றொரு ஊர் உள்ளது.அதுதான் நான்கு வேதங்களும் மரம்,செடி,கொடிகளாக இருந்து இறைவனை வழிபட்ட இடம் என்கிறார்கள்.அதற்கருகே இருக்கும் புஷ்பவனம் என்ற ஊரில் உள்ள பூக்களைத்தான் இறைவனின் பாதத்தில் அர்ச்சித்து வழிபட்டதாக நம்பப்படுகிறது.
|| சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே ||
இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே! உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக் கொள்ளும் கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு நல்ல வண்ணம் விடை அருள்வாயாக என்று சம்பந்த பெருமானே சொல்கிறார்.
|| கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய்
காலனையும் காலால் கடந்தான் கண்டாய்
புள்ளியுழை மானின் தோலான் கண்டாய்
புலியுரி சேராடைப் புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர் பிறை முடிமேல் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. ||
இதன் பொருள் மறைக்காட்டுள் உறையும் மணாளனான எம்பிரான் கள்ளிகள் படர்ந்த சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவனாய்க் காலனைக் காலால் ஒறுத்தவனாய்ப் புள்ளியை உடைய மான்தோலை உடுத்தவனாய்ப் புலித்தோலையும் ஆடையாகக் கொண்ட புனிதனாய்,வெள்ளி போல ஒளி வீசும் பிறையை முடிமேல் சூடியவனாய், வெண்ணீறு அணிந்தவனாய்த் திருச்செந்தூரை விரும்பும் முருகனுக்குத் தந்தையாய் உள்ளான்..👇
இந்த தலம் அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்த இடம் அதனால் பதிகம் முழுக்கவே மறைக்காட்டுள் உறையும் மணாளனே என்கிறார் அப்பர் பெருமான் இந்த பதிகத்தில் மான் தோலை உடுத்தியவரே என்று தனியாகவும்,மறைக்காடனே என்று தனியாகவும் எடுத்துரைத்திருக்கிறார் என்பது முக்கியமானது.
"மறைவனமமர் தருமபரனே,மறைக்காட்டுறை மைந்தா, மறைக்காடு அமர்ந்தாரே,எழில் வேதவனமே" என்று வேதங்களால் வழிபடப்பட்ட இறைவன் என பதிகம் முழுக்க மேற்கோள் காட்டிக் கொண்டே வருகிறார் சம்பந்தர்.
சோழர் கால கல்வெட்டுகள் பராந்தகன் காலத்தில் இருந்து மூன்றாம் ராஜராஜன் வரை நூறு கல்வெட்டுகளுக்கு மேல் இருக்கிறது.திருமறைக்காட்டு மகாதேவர், திருமறைக்காட்டு ஆள்வார் என்றே இறைவன் போற்றப்படுகிறான்.
முதலாம் ஆதித்த சோழன் தொடங்கி முதலாம் ராஜராஜசோழன் காலம் வரை 'உம்பளநாட்டு பெருந்தேவதானம் திருமறைக்காடு' என்றே அழைக்கப்பட்டுள்ளது.பின்,முதலாம் குலோத்துங்கன் காலத்தில் 'தினசிந்தாமணி வளநாட்டுக் குன்றூர் நாட்டு திருமறைக்காடு' என கல்வெட்டுகள் சொல்கிறது.பின் ஆதித்தன் காலத்து பெயரே நிலைத்துள்ளது.
இன்று அங்கே மான்கள் நிறைய உள்ளது எனவே அது திருமரைக்காடு என்று சொன்னால்,இன்று மயிலாடுதுறையில் நிறைய நாய்கள் இருக்கிறது எனவே இது நாயாடுதுறை என்றா சொல்ல முடியும்? இதையெல்லாம் ஒரு வாதமாக எடுத்துக் கொண்டு பேசும் கூட்டத்தை எத்தனை காலம் சகித்துக் கொண்டு நாமிருப்பது என புரியவில்லை.
மிஷனரிகளின் ஹிந்து வெறுப்பினாலும் அதற்கு உதவிபுரியும் முற்போக்கு,திராவிட கூட்டங்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டும் தமிழகத்தினுடைய வேதத்தொடர்பை சீர்குலைக்க நினைக்கும் கூட்டத்தை நாம் அடையாளங் கண்டு களைந்தெறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

No comments:

Post a Comment