Sunday, September 6, 2020

எண்ணாயிரம்-நான்மறை கல்வி ராஜேந்திர சோழன் கல்வெட்டு

விழுப்புரத்திற்குப் பக்கத்தில் சின்னஞ்சிறு கிராமமாய் வறுமைக் கோலம் பூண்டு வாடிக்கிடக்கும் எண்ணாயிரம், சரியாகத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செழிப்பும் வனப்புமாய்ச் செம்மாந்திருந்த ஊர். தமிழ்நாட்டின் மதிப்பைத் தாம் எழுப்பிய இராஜராஜீசுவரத்தின் வழி விண்முட்டச் செய்தாரே முதல் இராஜராஜர், அந்த மாமனிதரின் பெயரைக் கொண்டிருந்த மகத்தான மண். ஆம், எண்ணாயிரத்தின் அன்றைய பெயர் இராஜராஜ சதுர்வேதிமங்கலம்.
 
முதல் இராஜேந்திரர் காலத்தில் இவ்வூரில் பல திருக்கோயில்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் இராஜராஜ விண்ணகரம். அழகிய நரசிங்கப் பெருமாள் கோயிலாய்ப் பிற்காலத்தில் பெயர் மாற்றம் பெற்ற இத்திருக்கோயில் இன்று இடிந்து சிதிலமாகி, பார்ப்போர் கண்களில் இரத்தத்தை வரவழைக்கும் நிலையில் உள்ளது.

 

எண்ணாயிரம் கல்விச் சாலை.

ராஜராஜ சதுா்வேதி மங்கலம் என்ற எண்ணாயிரம் தலத்தில் வேதங்கள் கற்பிப்பதற்காக இராஜேந்திர சோழன் காலத்தில் வேதக்கல்லூரி நடத்தப்பட்டுள்ளது. இக்கல்லூாிக்காக இம்மன்னன் 300 ஏக்கா் நிலத்தைக் கொடையாக வழங்கியுள்ளான். வேதபாடசாலையில் பயிலும் மாணவா்களுக்குத் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. வேத பண்டிதா்களுக்கான இக்கல்விச் சாலையில் 270 இளநிலை மாணவா்க ளும் 70 முதுநிலை மாணவா்களும் 10 ஆசிாியா்களும் இருந்துள்ளனா்.

இங்குள்ள வேதக்கல்லூரியில் மாணவா்களுக்கு ரூபாவதார இலக் கணமும், ரிக், யஜுா், வாஜசனேய சாமவேதமும், சண்டோக சாமவேதமும், தலவாகர சாமவேதமும், அதா்வண வேதமும், பெளதாயன கல்ப சூத்திரம், பெளதாயன ஞான சூத்திரம் ஆகியவை கற்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வேத பாடசாலையில் கல்வி உதவித் தொகையாக இளநிலை மாணவா்களுக்கு நாள்தோறும் ஆறு நாழி நெல்லும் முதுநிலை மாணவருக்கு பத்து நாழி நெல்லும் கொடுக்கப்பட்டுள் ளது. இக்கல்விச் சாலையில் பணிபுரிந்த வேதாந்தப் பேராசிரியருக்கு நாளொன் றுக்கு ஒன்றரைக் கலம் நெல் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

மீமாம்சமும், வியாகரணமும் சொல்லிக் கொடுத்த ஆசிரியா்களான நம்பிகளுக்கு ஒரு கலம் நெல்லும் மற்ற ஆசிாியா்களுக்கு முக்கால் கலம் அல்லது முக்குறுணி நெல் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது.

தானியமாக வழங்கப்பட்ட இந்த ஊதியம் தவிர வேதாந்தப் பேராசிரியா் நீங்கலாக எல்லா ஆசிரியா் மற்றும் முதுநிலை மாணவா்களுக்குத் தங்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. வேதாந்தம் கற்றுக் கொடுத்துப் பணம் சம்பாதிப்பது தடை செய்யப்பட்டிருந்ததால் வேதாந்தப் பேராசிரியா்களுக்கு மட்டும் தங்கம் வழங்கப்படவில்லை.

  

இராஜராஜ சதுா்வேதி மங்கலத்து (எண்ணாயிரம்) சபையாா் இக் கல்லூரியில் பயின்ற மாணவா்களுக்கு உணவு வழங்குவது என்றும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஏற்பாடு செய்வதென்றும் அரசாங்க அதிகாரி ஒருவன் முன்னிலையில் முடிவு செய்துள்ளனா்.

மேற்கண்ட அனைத்துத் தகவல் களும் எண்ணாயிரம் அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில் சுவற்றில் கல்வெட்டுகளாக வடிக்கப்பட்டுள்ளன.

சிவபெருமானின் திருவடிகளாகிய பாரிஜாத மலா்களின் மீது மொய்க்கும் வண்டாகத் திகழ்ந்த மன்னன் இராஜேந்திர சோழன் சைவ, வைணவ பேதம் பாராமல் ஶ்ரீஅழகிய நரசிம்மப் பெருமான் கோயிலுக்கும் பல திருப்பணிகள் செய்துள்ளது போற்றுதலுக்குரியது ஆகும்.


நினைக்கமுடியாத அளவிற்கு இண்ரு நிலை தாழ்ந்து போய்விட்ட இந்த இராஜராஜ விண்ணகரில் இராஜேந்திர சோழன் காலத்தில் புகழ் பெற்ற கல்லூரியொன்று இயங்கி வந்தது. அந்தக் கல்லூரியில் எத்தனை மாணவர்கள் பயின்றனர், எவ்வளவு ஆசிரியர்கள் இருந்தனர், என்னென்ன பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன என்பன பற்றியெல்லாம் விரிவான செய்திகளை, விரிசல் விட்டுப்போயிருக்கும் சுவர்களில், விக்கித்து நிற்கும் வரித் தொடர்பற்ற கல்வெட்டுகள் வேதனையோடு எடுத்துரைக்கின்றன.
 
இருநூற்று எழுபது பட்டப் படிப்பு மாணவர்களும் எழுபது பட்டமேற்படிப்பு மாணவர்களும் பயின்ற இக்கல்லூரியில் பல்வகைப் பாடங்களையும் பயிற்றுவிக்கத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பன்னிருவர் இருந்தனர். இவர்கள் அனைவர்க்குமாய்ச் சேர்த்து ஆண்டுதோறும் பத்தாயிரத்து ஐந்நூற்று ஆறு கலம் நெல்லும் அறுபத்தொன்றரைக் கழஞ்சுப் பொன்னும் செலவிடப்பட்டது.
இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அரசோ, பல்கலைக்கழகமோ, நகராட்சியோ மேற்கொண்டிருக்கவில்லை. ஒரு கிராம சபையே மிக ஒழுங்குடன் இதைச் செய்துவந்திருக்கிறது. அந்நாளைய ஊரவைகளின் செயல்திறமைக்கு இது ஒன்றே போதுமான சான்றாகும்.

 
ஆண்டுதோறும் நேரக்கூடிய இந்தச் செலவுகளைத் தொடர்ந்து சரிக்கட்ட வாய்ப்பாக, வருடம் தோறும் இத்தொகையை வருவாயாகத் தரவல்ல 45 வேலி நிலத்தை இராஜராஜ சதுர்வேதிமங்கலத்துச் சபையார் இக்கல்லூரியை நடத்திவந்த கோயிலுக்குக் கொடையளித்தனர். இன்றைக்கு வங்கிகளில் வைப்பு நிதி போட்டு வட்டி பெறுவது போல், இந்த நிலம் வைப்பு நிதியாகக் கொள்ளப்பட்டு இதன் விளைச்சல் கல்லூரிச் செலவுகளை ஈடுகட்டும் வட்டியாகப் பெறப்பட்டது.
இது போல் திரிபுவனையில் ஒரு கல்லூரி, பார்த்திவசேகரபுரத்தில் ஒரு கல்லூரி, திருவாவடுதுறையில் மருத்துவக் கல்லூரி என்று அந்நாளைய கோயில் கல்லூரிகளின் பட்டியலைக் கல்வெட்டுகள் வளத்துக்கொண்டே போகின்றன. கல்வி வளர்த்த இந்தக் கோயில்கள் மனித நேயத்துடன் மருத்துவச் சாலைகளையும் நடத்தின.

எண்ணாயிரம் நரசிம்மர்


திருவரங்கத்தில் ஒய்சளர் காலத்தில் தன்வந்தரி மருத்துவமனை மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. இறைவனே, 'இவர் நம் மருத்துவர்' என்று பெருமைப்படுத்திய கருடவாகன பட்டர், கஷாயம் கொடுத்தே நோய்களை நலப்படுத்தியதாகக் கல்வெட்டுப் பேசுகிறது. ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்குமாய் நடத்தப்பட்ட ஆதுலர் சாலைகளைப் பற்றிப் பல கல்வெட்டுகள் பேசுகின்றன.

நலிந்தோரை நோக்கி நேசக்கரம் நீட்டிய கோயில்களை இன்று இந்த நலிந்தவர்கள்கூடத் திருப்பிப் பார்ப்பதில்லை. தேவையானவர்களைத் தேடித் தேடிப் படிப்பறிவு ஊட்டிச் சரியான குடிமக்களாக மாற்றித் தந்த கோயில்களை மக்கள் மறந்துவிட்டனர். வரலாற்றை உருவாக்கி வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் திருக்கோயில்கள் அழிந்துவிட்டால் தமிழக வரலாற்றுக்கு வரிவடிவங்களே இல்லாமல் போய்விடும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=359
https://tamilnadu-favtourism.blogspot.com/


 

No comments:

Post a Comment