Saturday, November 10, 2018

கிறிஸ்துவ மாணவருக்கு சீட் தராத சிறுபான்மை நிறுவன சலுகைகள் நிறுத்த வேண்டும்

சிறுபான்மை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை மாநில சிறுபான்மை ஆணைய உத்தரவுக்கு தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

2018-11-11


 
சென்னை: சிறுபான்மைக் கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்கள் சிறுபான்மையினராக இருக்க வேண்டும் என்று வரையறை நிர்ணயம் செய்யும் மாநில சிறுபான்மை ஆணையத்தின் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.   சென்னை உயர் நீதிமன்றத்தில் லயோலா, ஸ்டெல்லா மேரிஸ், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில், “ சிறுபான்மையினர் கல்லூரிகளான எங்கள் கல்லூரிகளைப்போல் தமிழகம் முழுவதும் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1998ல் டிஎம்ஏ பாஸ் பவுன்டேசன் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து வழங்க கடந்த 1998 ஜூன் 17ல் தமிழக அரசு சில வழிகாட்டுதல்களை உருவாக்கியது. அதில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்திற்கு மிகாமல் சிறுபான்மையினருக்கு இடம் தரவேண்டும். அதை நிரப்ப முடியவில்லை என்றால் பொதுவான மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் சேர்க்கை தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. எங்கள் கல்லூரிகள் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல் தகுதியுள்ள அனைத்து பிரிவினருக்கும் சேர்க்கைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், எங்கள் கல்லூரிகளுக்குத் தரப்பட்ட சிறுபான்மை அந்தஸ்து 2007 முதல் 2012 வரை அதாவது 5 ஆண்டுகளுக்கு மட்டுமே என்று 2009 அக்டோபர் 8ம் தேதி தமிழக உயர் கல்வித்துறை ஒரு அரசாணையைப் பிறப்பித்தது.

இது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசாணைக்குத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடும் தள்ளுபடியானது.  இந்நிலையில், கடந்த அக்டோபர் 16ம்தேதி தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் எங்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் 2017 முதல் 2019ம் கல்வியாண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களைக் கேட்டுள்ளது. எங்களை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 50 சதவீத சேர்க்கை சிறுபான்மையின மாணவர்களுக்கு மட்டுமே தரவேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இது விதிமுறைகளுக்கும், சிறுபான்மையினரின் நலனுக்கும் முரணானது. எனவே, சிறுபான்மை ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஐசக் மோகன்லால் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக சிறுபான்மை ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 2 வாரங்களில் பதில் தருமாறும் நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=449247

No comments:

Post a Comment