Tuesday, November 13, 2018


குறள் 373:   ஊழ்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் 
உண்மை யறிவே மிகும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
மு.வரதராசனார் உரை:
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை:
பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).
பரிமேலழகர் உரை:
நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். 'காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.).
மணக்குடவர் உரை:
நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும். மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், அவனுக்குப் பின்னும் தன் ஊழாலாகிய பேதைமை (அறியாமை) அறவே மேற்பட்டு நிற்கும்.
Translation: 
In subtle learning manifold though versed man be, 
'The wisdom, truly his, will gain supremacy.
Explanation: 
Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.a

 குறள் 401:   கல்லாமை
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய 
நூலின்றிக் கோட்டி கொளல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.
மு.வரதராசனார் உரை:
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.
பரிமேலழகர் உரை:
அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும், நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கோளல் - தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல். 
(அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை 'கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்' (நற்.3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். 'புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி' (நாலடி.155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.).
மணக்குடவர் உரை:
கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல். அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்: கோட்டி கொளல்- 'புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தனக்கு அறிவு நிரம்புதற்குக் காரணமான நூல்களைக் கல்லாத ஒருவன், அவையில் ஒன்றனைச் சொல்லுதல், ஆடுகின்ற அரங்கினை அமைக்காமல் உண்டை (பகடைக்காய்) உருட்டியது போன்றதாகும்.
Translation: 
Like those at draughts would play without the chequered square, 
Men void of ample lore would counsels of the learned share.
Explanation: 
To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.
 குறள் 410:  கல்லாமை
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் 
கற்றாரோடு ஏனை யவர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.
மு.வரதராசனார் உரை:
அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
சாலமன் பாப்பையா உரை:
விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.
பரிமேலழகர் உரை:
விலங்கொடு மக்கள் அனையர் - விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்; இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர். 
(இலங்குநூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல் . விலங்கின்மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர்அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால்அவர் மக்கட்பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர்; விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர். இது கல்லாதார் விலங்கென்றது.
Translation: 
Learning's irradiating grace who gain, 
Others excel, as men the bestial train.
Explanation: 
As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.
 குறள் 440:  குற்றங்கடிதல்
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் 
ஏதில ஏதிலார் நூல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 
தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.
மு.வரதராசனார் உரை:
தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.
பரிமேலழகர் உரை:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின், ஏதிலார் நூல் ஏதில் - பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம். (அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.).
மணக்குடவர் உரை:
காதலிக்கப்பட்ட யாவற்றின்மேலுஞ் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின் பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது, அயலாம். நூலென்பது அவர்கற்ற கல்வி.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தாம் விரும்பிய (காதலித்த) பொருள்கள் யாவையென்று தமது விருப்பத்தினைப் பகைவர் அறிந்து கொள்ளாதபடி அனுபவிக்க வல்லவனானால், அப்பகைவர் தன்னை வஞ்சிக்க என்னும் எண்ணம் பழுதாகிவிடும்.
Translation: 
If, to your foes unknown, you cherish what you love, 
Counsels of men who wish you harm will harmless prove.
Explanation: 
If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.
 கொடுங்கோன்மை  குறள் 560: 
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.
மு.வரதராசனார் உரை:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
சாலமன் பாப்பையா உரை:
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.
பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். 
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
Translation: 
Where guardian guardeth not, udder of kine grows dry, 
And Brahmans' sacred lore will all forgotten lie.
Explanation: 
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.
நூல் (10)

நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
  அஞ்சுமவன் கற்ற நூல் - குறள் 73:7
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
  அமைவு அரண் என்று உரைக்கும் நூல் - குறள் 75:3
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
  பண்பு உடையாளர் தொடர்பு - குறள் 79:3
மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை
  அணியுள் திகழ்வது ஒன்று உண்டு - குறள் 128:3

 முதல்

 
 நூலாருள் (1)
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3

 முதல்

 
 நூலும் (1)
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
  தெற்று என்க மன்னவன் கண் - குறள் 59:1

 முதல்

 
 நூலொடு (2)
மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
  யா உள முன் நிற்பவை - குறள் 64:6
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
  நுண் அவை அஞ்சுபவர்க்கு - குறள் 73:6

 முதல்

 
 நூலோர் (2)
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 33:2
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
  வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1

 முதல்

 
 நூலோர்க்கும் (1)
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
  எ பால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3

 முதல்

 
 நூற்கும் (1)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  நின்றது மன்னவன் கோல் - குறள் 55:3

No comments:

Post a Comment