Monday, November 30, 2015

கி.மு. 3-ம் நூற்றாண்டு - சங்ககால மன்னர் அதியமான் பெயர் பொறித்த நாணயம்

 சங்ககால மன்னர் அதியமான் பெயர் பொறித்த நாணயம்; நாணயவியல் கழக தலைவர் ‘தினமலர்’ இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடிப்பு
http://www.dailythanthi.com/News/State/2015/11/29042806/Ancient-coins-with-Adhiyaman-names-discovered.vpfசென்னை, 

சங்ககால மன்னர் அதியமான் பெயர் பொறித்த கி.மு. 3-ம் நூற்றாண்டு நாணயத்தை, நாணயவியல் கழக தலைவர் தினமலர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சங்க இலக்கியம்

அதியமான் நெடுமான் அஞ்சி, சங்ககால குறுநில மன்னன். அதியமானின் ஊர் தகடூர். இப்போது அவ்வூரின் பெயர் தர்மபுரி. அதியமான் குறித்து புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றினை போன்ற சங்க இலக்கியங்களில் பல புலவர்கள் பாடியுள்ளனர்.

அதியமான் மழவர் இனத்தை சேர்ந்தவன். குதிரைகளைக் கொண்ட மழவர், குறும்படை மழவர், கடுங்கண் மழவர், செங்கண் மழவர், கல்லா மழவர், போர்த்திறன் கொண்ட மழவர் என்று சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறிகிறோம். அதியமானின் முன்னோர், முற்றிலும் நீரால் சூழப்பட்ட பகுதிகளிலிருந்து வந்ததாகக் கருதப்படுகின்றனர்.

அலெக்சாண்டர் படையெடுப்பு

தற்போது பாகிஸ்தானில் ஓடும் ஜீலம், சீனாப், ரவி ஆகிய நதிகளின் இடைப்பட்ட மிக வளமான பகுதியை ‘மாலவாஸ்’ என்ற பழங்குடியினர், தொண்மை காலத்தில் ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்கள் மிக போர் குணம் கொண்டவர்கள். 

கிரேக்க பேரரசன் அலெக்சாண்டர் படையெடுத்தபோது, இந்த பழங்குடியினர் போரில் தோல்வியுற்று, தங்கள் நாட்டைவிட்டு, ராஜஸ்தான் வழியாக மத்திய இந்தியாவிற்கும் பின் பிற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கும், அதியமானின் முன்னோர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால், அதை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை.

வணிகரிடம் நாணயம்

சங்ககால சேர, சோழ, பாண்டியர் மலையமான் நாணயங்கள், கடந்த 30 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதியமான் பெயர் பொறித்த நாணயத்தை கண்டுபிடித்து வெளியிட்டேன். அதே ஆண்டில் கோவையைச் சேர்ந்த ஒரு வணிகரிடம், சில நாணயங்களை வாங்கி ஆய்வு செய்தபோது, ஒரு சில செம்பு நாணயங்களில், காரீயத்தால் மேல் பூச்சு பூசப்பட்டு, நாணயங்கள் தெளிவில்லாமல் இருந்தன.

காரீயத்தை அகற்ற வேண்டுமானால் லேசாகத் தீயில் காட்டவேண்டும். அப்போது அந்த காரீயப் பூச்சு இளகிவிடும். அவ்வாறு இளகிய நிலையில் இருக்கும்போது, அந்த பூச்சை சுரண்டி அகற்றவேண்டும். தீயில் காட்டும்போது சில நேரங்களில் நாணயம் வெடித்து துண்டு துண்டாகிவிடும். இந்த இடர்பாடுகளுக்கு இடையில், பல நாட்கள் சுத்தம் செய்தபின், நான் சுத்தம் செய்த நாணயம் செம்பினால் செய்யப்பட்டது என்பதை அறிந்தேன்.

நாணயத்தின் அமைப்பு 

நாணயத்தின் முன்புறம் யானை வலப்பக்கம் நோக்கி நிற்கிறது. அதன் முன் ஒரு கொடிக்கம்பம் உள்ளது. நாணயத்தின் மேல் விளிம்பின் இடப்பக்கத்தில் ஒரு ‘சுவஸ்திக்’ சின்னமும், இடப்பக்கத்தில் ஒரு ‘சுவஸ்திக்’ சின்னமும், அதன் அருகில் ‘டவுரின்’ சின்னமும் உள்ளது. யானையின் மேல் பகுதியில் அதியமான் என்ற பெயரில், நான்கு எழுத்துகள், பிராமி எழுத்து முறையிலும், ஓர் எழுத்து தமிழ்- பிராமி முறையிலும் உள்ளன.

பின்புறம் நாணயத்தின் அடிப்பகுதியில், ஆறு ஒன்று அச்சாகியுள்ளது. தேய்ந்த நிலையில் இருப்பதால், முழுமையாகத் தெரியவில்லை. ஆற்றில் இரண்டு மீன்கள் இருக்கின்றன. 

நாணயத்தின் மத்தியில் குதிரை ஒன்று வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. குதிரையின் முன்பகுதியில், போர் வீரன் ஒருவன் நின்று கொண்டிருக்கிறான். போர் வீரனின் ஒரு கையில் கேடயமும், மறு கையில் வாள் போன்ற ஆயுதத்தையும் வைத்திருக்கிறான். போர் வீரன் தன் தலையில் அணிந்திருக்கும் தொப்பி போன்ற கவசத்தில், கிரேக்கப் போர் வீரர்கள் அணியும் அலங்கார முடி அமைப்பு உள்ளது. இந்த நாணயத்தின் காலம் கி.மு. 3-ம் நூற்றாண்டாகக் கருதலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment