Monday, October 21, 2024

தமிழர் பாரம்பரிய பண்டிகை தீபாவளி தொன்மையும் -மா.மாரிராஜன்.

தீமையை அழித்து நன்மை பிறந்த நாள் ...

இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது.தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன.
தீபாவளியை தீ ஔி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள்.தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர்.
தீபாவளி பண்டிகை,தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன புராணங்கள்.நம்மில் பெரும்பாலோனோருக்குத் தெரியும் நராகாசூரன் கதை.இதை கிருஷ்ண லீலை என்கிறது புராணம்.
வால்மீகி ராமாயணத்தில் இராமன்,இராவணனை அழித்து விட்டு,தனது வணவாசத்தை முடித்துக் கொண்டு தனது மனைவி சீதை,தம்பி இலட்சுமணன் உடன் அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.அதன் தொடர்ச்சியாக தீபாவளி பிறந்தது என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.வாத்ஸ்யாயனார் எழுதிய நூல், யட்ஷ் ராத்திரி என்று தீபாவளியை குறிப்பிடுகின்றது.
விஷ்ணு புராணம் தீபாவளி அன்று அதிகாலையில் நீராடி மகாலட்சுமி பூஜையை அனுஷ்டித்து தீபங்களை ஏற்றி வீடு நிறைய வைத்தால் லட்சுமி கடாட்சம் கைவர கிடைக்கும் என்கிறது.
ஸ்கந்த புராணம்,சிவன், சக்தியை ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்த நன்நாளினை நினைவு படுத்துவதாக ஸ்கந்த புராணம் கூறுகிறது.
தீபாவளி பண்டிகை எப்போதிலிருந்து கொண்டாடப்பட்டது..?
கி.பி.1117-ல் சாளூக்கிய திரும்புவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் எனும் அறிஞருக்கு தீபாவளி பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது
கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி எனும் மராத்தி நூலில் எண்ணெய் தேய்த்து நீராடுவதைப்பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தீபாவளியை சீக்கியர்களும், சமணர்களும் கூட வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறார்கள்.
1577-ம் ஆண்டு பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கிய தினம் என சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.
சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த நாள் என தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
இந்தியா மட்டுமின்றி,இலங்கை, நேபாளம்,மியான்மர்(பர்மா) சிங்கப்பூர்,மலேசியா,வங்கதேசம்,பிஜி,மற்றம்,பல நாடுகளில் வாழ்பவர்களாலும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீமைகள் ஒழிந்து உலக மக்கள் அனைவருக்கும் நன்மைகள் உண்டாகட்டும்...
அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் புகழ்பெற்று பரவலாக உலக மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை #தீபாவளி ஆகும். தீப + ஆவளி அதாவது தீபங்களின் வரிசை என்பதே இதற்கு சரியான பொருளாக அமைய முடியும்...!
பொதுவாக #இந்துக்கள் பண்டிகைகள் எது வந்தாலும் விடுமுறை தினம் என்ற விமர்ச்சனங்களோடு அது #ஆரியர்களின் பண்டிகை என்றும் தமிழர்களின் பண்டிகை இல்லை என்பதும் பெரும்பான்மை வாதமாக இருக்கிறது. இவ்வளவு கீழ்த்தரமாக பேசும் இவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் ரம்ஜானுக்கும் வாயை கட்டி வைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பதை உணராத இந்துக்கள் இன்றும் நடுநிலையாளர்களாக உள்ளனர்...!
பொதுவாக தீபாவளிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது அதாவது #ராமபிரான் இராவண வதத்திற்கு பின் சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாள் தான் தீபாவளி என்ற கருத்துகளோடு #கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த நாள்தான் தீபாவளி என்ற இரு புராணச் செய்திகள் உலா வருகின்றன....!
அதோடு #பார்வதி_தேவி மேற்கொண்ட கேதார கௌரி விரதம் முடிவுற்ற நாள் தான் தீபாவளி என்பதோடு #மகாவீரர் முக்தி அடைந்த நாள்தான் தீபாவளி என்ற சமணர்களின் நம்பிக்கைகளும் இங்குண்டு. பாரத நாட்டில் உருவான சமணர்கள், சீக்கியர்கள் முதற்கொண்டு அனைவராலும் கொண்டாடும் ஒரு தேசிய பண்டிகை தான் தீபாவளி...!
முதலாவதாக தமிழகத்தில் இப்பண்டிகையானது #விஜயநகர பேரரசின் காலத்தில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டுகளிலேயே கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கான சான்றாக திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டும், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேடும் உள்ளன என்று வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளா் #குடவாயில்_பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்....!
இதை தெளிவுபடுத்தும் விதமாக வேங்கடபதி ராயர் காலத்திய கல்வெட்டில் திருப்பதி கோவிந்த ராஜ பெருமாளுக்கு தீபாவளி நிவந்தம் கொடுத்தது குறித்த கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு கூறுவதாவது ஆண்டு முழுவதும் உள்ள விழாக்களுக்கு யார் யார் என்னென்ன நிவந்தம் அளித்தார்கள் என்றும் என்னென்ன பண்டிகைகளுக்கு அவை அளிக்கப்பட்டது என்பது குறித்த முழுமையான அக்கல்வெட்டில் தீபாவளி பண்டிகையை குறித்தும் வருகிறது....!
"மங்கலம் உண்டாக்கட்டும் ! சாலிவாகன சக வருஷம் 1518 , துர்முகி வருஷம் , சித்திரை மாதம் , ரோகினி நட்சத்திர மேஷ நாளில் இரண்டாம் நாள் திங்கட்கிழமை அன்று , ( 19- 4 – 1596 CE ) ஸ்ரீ வேங்கடபதி தேவ மகாராயரின் ஆட்சிக் காலத்தில் இராமாபுரம் என்ற ஊரில் வசிக்கும் வணிகர்களில் ஒருவரான தம்பி செட்டி மகனாகிய சிலம்பிடையார் செட்டியின் பெயராலே திருமலைக் கோவில் ஸ்தலத்தார்களாகிய நாங்கள் வழங்கிய இந்த கல்வெட்டு சிலாசனம் என்னவென்றால் :
உங்களிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட 140 பொற்காசுகளுக்கு ஈடாக திருப்பதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளுக்கு கீழ்கண்ட விழா நாட்களில் உபயம் செய்வதாக ஒப்புக் கொள்ளுகிறோம்"
இதன் கீழ் பல்வேறு விழா நாட்கள் ( ஸ்ரீ ஜெயந்தி விழா , தீபாவளி விழா , கார்த்திகை விழா , மார்கழி விழா ) என பல்வேறு விழாக்கள் , குறிப்பிடப்பட்டு அந்த நாளில் என்ன என்ன அமுதுப்படிகள் ஸ்வாமிக்கு செய்தருள வேண்டும் என உள்ளது...!
முக்கியமாக இதில் தீபாவளி அன்று நிவந்தம் செய்யப்படும் பொருட்களாக👇👇👇
"4 பணம் மதிப்புள்ள அமுதுப்படி , 1 பணம் மதிப்புள்ள 2 நாழி பச்சைப் பயிறு , 1 / 4 வீசை மதிப்புள்ள வெல்லம் – 1 திருப்பணியாரம் செய்ய , 1 பலம் சந்தனம் , 50 பாக்கு மற்றும் 100 வெற்றிலை – இவை எல்லாம் தீபாவளி அன்று ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அமுதுப்படியாக செய்ய ஒப்புக் கொள்ளுகிறோம்" என்பதுபோன்ற குறிப்புகள் உள்ளது...!
மேலும், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சித்தாய்மூா் சிவாலயத்து இறைவன் பொன்வைத்தநாதருக்கு ஆண்டுதோறும் தீபாவளி நாளில் சிறப்பு அபிஷேகம் செய்ய அப்பகுதியில் உள்ள பல கிராம மக்களும், அரசு அலுவலா்களும் சோந்து தாங்கள் பெறும் கூலியிலிருந்து கூலிப்பிச்சையாக ஒரு சிறு தொகையை இறைவனுக்கு அளித்து பல விழாக்களை நடத்தியுள்ளனா்....!
அதில் ஒரு விழாதான் தீவாளி அபிஷேக விழா என கி.பி. 1753 டிசம்பா் ஏழாம் தேதி எழுதப்பட்ட இச்செப்பேடு குறிக்கிறது.
இதன்படி, சித்தாய்மூா் மாகாணத்திலிருந்த நத்தப்பள்ளம், பள்ளியமூலை, புதூா், பனங்காடி, சூரமங்கலம், உத்திரங்குடி, தரகுமருதூா், அகரமணக்கால், மடப்புரம், பள்ளிச்சந்தம், கோமளக்கோட்டை, குடிபாதி, நெடுஞ்சேரி, கூமூா், கீரக்களூா், ஆதிரங்கம், செம்பியமணக்குடி, கோயில்துறை, ஈசனூா், முள்ளிகுடி, நரிக்குடி, சிங்களாத்தி, கிராமபேறு, முத்தரசநல்லூா், சம்பிருதி, முசுமு என அனைத்து ஊராரும் சாதி வேறுபாடின்றி சித்தாய்மூா் பொன்வைத்தநாதா் என்ற இறைவனுக்கு தீபாவளி அபிஷேகம் உள்ளிட்ட விழாக்களை நடத்தியுள்ளனா்.....!
தமிழகத்தை தாண்டி கிபி ஏழாம் நூற்றாண்டில் அதாவது1300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை 40 வருடங்கள் ஆண்ட #ஹர்ஷவர்தனன் எனும் பேரரசரால் எழுதப்பட்ட #நாகானந்தம் எனும் நாடக நூலில் தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன...!
1000 ஆண்டுகளுக்கு முன்பு இராஷ்டிரக்கூட மன்னனான #மூன்றாம்_கிருஷ்ணனின் செப்பேட்டில் தீபாவளி கொண்டாடப்பட்ட தகவல் உள்ளது. அதாவது #பார்வதி_தேவி கோயிலில் விளக்கேற்றும் உற்சவத்தை #தீபாவளி என்று குறிப்பிட்டு தானம் வழங்கியுள்ளனர்....!
(கல்வெட்டு தகவல் : தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன், கே. கந்தசாமி அவர்கள்)
மேற்கூறிய சான்றுகளின் அடிப்படையில் தீபாவளி பண்டிகையானது தமிழகத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பும், தமிழகத்தை தாண்டி 1300 ஆண்டுகளுக்கு முன்பும் கொண்டாடப்பட்டது என்பதை ஏற்கலாம்....!
மற்றபடி ஸ்கந்த புராணத்திலும், பிரம்ம புராணத்திலும், பத்ம புராணத்திலும் கூட தீபாவளி குறித்த தகவல்கள் உண்டு என்பது கூடுதல் சிறப்பு. உதாரணமாக👇👇👇
"தைலே லக்ஷ்மீர்ஜலே கங்கா தீபாவல்யாஶ்சதுர்தஶீம்|
ப்ராத: ஸ்நானம் ஹி ய: குர்யாத்யமலோகம் ந பஶ்யதி"
(புராணச் செய்திகளை தந்தவர் #கௌதம்_காளிதாஸ்)
ஆகவே இருள் நீங்கி தீபங்களின் வரிசையால் ஒளி மிளிர்வதைப்போல் என்றென்றும் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க, துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, தீபாவளி நல்வாழ்த்துகள்...!

தீபாவளிக் குறித்து சில தொல்லியல்த் தகவல்கள்..
தீபாவளி எப்போதிருந்து கொண்டாடப்படுகிறது.?
சான்றுகள் அதிகம் இல்லை என்றாலும்..
கி.பி. 7 ஆம் நூற்றாண்டில்.. ஹர்சவர்த்தனர் எழுதிய நாகானந்தம் என்னும் நூலில் தீபஉற்சவம் என்று தீபங்களின் அணிவரிசை குறிப்பிடப்படுகிறது.
கி.பி. 939 -967 வரை ஆட்சி செய்த இராஷ்டிரக்கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் செப்பேடு.
பார்வதி தேவி கோயிலில் விளக்கேற்றும் உற்சவத்தை தீபாவளி என்று குறிப்பிட்டு தானம் வழங்கியுள்ளனர்.
கி.பி. 10 நூற்றாண்டு..
பிரபலமான Saundatti inscription. மகாவீரர் முக்தியடைந்த நாளை தீபம் ஏற்றி தீபாவளியாக கொண்டாட எண்ணெய் தானம் வழங்கப்பட்டது.
11 ஆம் நூற்றாண்டு.
பாரசீகப்பயணி அல்ஃபருனி அவர்கள் எழுதிய பயணக்கட்டுரை ஒன்றில்.. கோவில்கள், வீடுகளில் விளக்கேற்றி புத்தாடை அணிந்து தீபாவளி கொண்டாடினார்கள்..
இந்தத் தொல்லியல் ஆவணங்களில் தீபாவளி நாள் எது என்பதையும் அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
New moon in the month of karthika..
அதாவது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளை தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளனர்..
அதாவது இன்று நாம் கொண்டாடும் திருக்கார்த்திகை நாளைத்தான் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால்..
இன்று நாம் ஐப்பசி மாத அமாவாசை நாளை தீபாவளியாகக் கொண்டாடடுகிறோம். இன்றிலிருந்து 15 ம் நாள்தான் திருக்கார்த்திகை..
இந்த 15 நாள் பின்னடைவு எவ்வாறு வந்தது என்று தெரியவில்லை.
கி.பி. 1117 ல் சாளுக்கிய அரசன் ஒருவர், சாத்யமர் என்னும் அறிஞர் ஒருவருக்கு தீபாவளி பரிசு வழங்கியதாக ஒரு கல்வெட்டு செய்தி உண்டு என்கிறார்கள்.
தமிழகத்தில்..
காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் கல்வெட்டு.
விஜயநகர சதாசிவராயர் காலம்.
கி.பி. 1558.
கோவிலில் நூறுநாட்கள் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றி மிக விரிவானத் தகவல் உள்ளது.
மார்கழித்திருநாள், தைத்திருநாள், ஆழ்வார் திருநாள், திருக்கார்த்திகை, தீவிளித் திருநாள்.. என்று விழாக்கள் கொண்டாடப்பட்டன.
தீவிளி நாள் என்பது இன்றைய தீபாவளியே என்பது பெரும்பாலான
ஆய்வாளர்கள் முடிவு.
இந்த நாளுக்கு வழங்கப்பட்ட நிவந்தங்களின் பட்டியல்..
திருமுன் குத்து விளக்கேற்றுவதற்கு நெய்.. அமுது செய்ய அரிசி , பயிறு, நெய்.
கறியமது பொறிக்க நெய், மிளகு, சீரகம், வெந்தயம், புளி ,தயிர்.
பலகாரங்களின் பட்டியல்...
அப்பப்பம், அதிரசம், கொதி, வடை, சுகியான், தோசை, பணியாரம்..
இந்த கல்வெட்டுச்சான்றே தமிழகத்தில் தீபாவளி பண்டிகை என்பதன் முதல் சான்று என்பது அறிஞர்கள் முடிவு...
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்...
அன்புடன்..
மா.மாரிராஜன்.
Refrence ..
1. Studies in the religious life of ancient medival india. P. 128 - 129
2. Religious institutions and cults in the decon
A.D. 600- 1000 P.38

No comments:

Post a Comment