Monday, September 2, 2019

ஆலகிராமம் எமதண்டீஸ்வரம் கோவிலில் கிடைத்த கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார்

ஆலகிராமம் எமதண்டீஸ்வரம் கோவிலில் கிடைத்த கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பமே காலத்தால் முந்தையது!


விழுப்புரம் மாவட்டம், மைலம் வட்டாரத்தில் அமைந்துள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில்  வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்துடன் கூடிய பிள்ளையாரின் புடைப்புச் சிற்பம் கல்வெட்டு ஆய்வாளர்களான வீரராகவன், மங்கையற்கரசி தம்பதியரால் கண்டறியப்பட்டது. இந்தச் சிற்பம் பலகைக் கல்லில் செதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிள்ளையார் சிற்பங்களிலேயே இந்தப் பிள்ளையார் சிற்பமே காலத்தால் முந்தையது என்றும் இந்தத் தம்பதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், குன்னக்குடி வட்டாரம் பிள்ளையார்பட்டிக் கோவிலின் ஒரு பகுதி குடைவரைக் கோவிலாகும். மற்றொரு பகுதி பிற்காலத்தில் எடுக்கப்பட்ட கற்றளி ஆகும். குடைவரைக் கோவில் முற்காலப் பாண்டியர்களால் குடைவிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. தென்தமிழகத்தில் அமைந்துள்ள முற்காலப் பாண்டியர் குடைவரைகளில் இக்குடைவரை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்திற்கு இரண்டு அல்லது மூன்று நூற்றண்டுகளுக்கு முன்பிருந்தே பாண்டியர்கள் இக்குடைவரையை உருவாக்கியுள்ளார்கள். இக்கோவிலில் 15 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஒரு சிறு குன்றைக் குடைந்து உருவாக்கிய குடைவரைக் கோவிலில் வடக்கு நோக்கியவாறு காட்சிதரும் கற்பகவிநாயகர் (வலம்புரி விநாயகர்) சிற்பம் இரண்டு மீட்டர் உயரம் கொண்ட சிற்பமாகும். கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு உட்பட்டதாகக் கருதப்படும் இந்த விநாயகரை செதுக்கிய சிற்பி
எக் காட்டூரு-
க் கோன் பெருந் தசன்
என்ற பெயருடையவர் என்று வட்டெழுத்தின் தொடக்க நிலையில் உள்ள இந்தக் கல்வெட்டு சான்று பகர்கிறது. கம்பன் அடிப்பொடி சா.கணேசன் இக்குடைவரை கி.பி. 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது என்று தவறாகக் கருதினார். டாக்டர் இரா.நாகசாமி சிற்ப அமைதியின் அடிப்படையில் இக்குடைவரை பல்லவ மகேந்திரவர்மன் காலத்துக்கு முந்தையது என்று கருதினார். அறிஞர் ஐராவதம் மகாதேவன்:
எருகாட்டூரு –
க் கோன் பெரு பரணன்
என்று படித்துள்ளார். பாண்டிய மன்னன் பெரும்பரணன் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கருதினார். பின்னர் ஆய்வாளர்கள் இக்கல்வெட்டின் எகர எழுத்தின் உட்புறத்திலும் மற்ற ஆறு மெய்யெழுத்துகளின் மேலும் புள்ளிகள் இடப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கருத்தில் கொண்டு இக்கல்வெட்டு கி.பி. 6-ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது என்ற முடிவிற்கு வந்தனர்.

img_8374
ஆலகிராமம் எமதண்டீஸ்வரம் கோவிலில் கண்டறியப்பட்ட பிள்ளையார் சிற்பம் இரண்டு கைகளுடன் பரியங்க ஆசனத்தில் அமர்ந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. வலக்கை தடி போன்ற ஆயுதத்தையும் இடக்கை ஒடிந்த தந்தத்தையும் பற்றியுள்ளன. தலையில் கரண்டமகுடமும், மேற்கைகளில் கடகமும், முன்கைகளில் காப்பும், மார்பில் உபவீதமாக யக்ஞோபவிதமும், இடையில் ஆடையும், கால்களில் தண்டையும் காட்டப்பட்டுள்ளன.
தற்போது மூலவர் கருவறையை ஒட்டிய அர்த்தமண்டபத்தில் இச்சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் 75 செ.மீ (29 அங்குலம்) உயரம், 40 செ.மீ (15 3/4 அங்குலம்) அகலம் கொண்ட பலகைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் பீடத்தில் 3 வரிகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, பூலங்குறிச்சிக் கல்வெட்டைவிட காலத்தால் பிந்தையது என்றும், பிள்ளையார்பட்டிக் கல்வெட்டை விடக் காலத்தால் முந்தையது என்று ஆய்வாளர்கள் முடிவிற்கு வந்துள்ளனர்.   அதாவது கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகலாம். இக்கல்வெட்டு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று டாக்டர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார். இக்கல்வெட்டின் பாடம் இது:
“பிரமிறை பன்னூரு சேவிக ——–மகன் ——– கிழார் கோன் ———-கொடுவித்து’
இக்கல்வெட்டு பிள்ளையார் சிற்பத்தைச் செதுக்கிய சிற்பியைப் பற்றிக் கூறியதாகலாம்.  ஆலகிராமம் பிள்ளையார் சிற்பத்தின் காலகட்டத்தைச் சேர்ந்த, எழுத்து பொறிக்கப்படாத நிலையில்,  இரண்டு பிள்ளையார் சிற்பங்கள் உத்திரமேரூரிலும், வேளச்சேரியிலும் வழிபாட்டில் இருப்பதாக மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“அரசலாபுரத்தில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட “கோழி நினைவு’ கல்லில் உள்ள கல்லெழுத்தும் செஞ்சி அருகே திருநாதர் குன்றில் உள்ள நிசீதிகை கல்லெழுத்தும், அவலூர்பேட்டை அருகே உள்ள பறையன்பட்டு பாறை மீது வெட்டப்பட்ட நிசீதிகை கல்லெழுத்தும், பெருமுக்கல் கீறல்வரைவுகள் அருகே உள்ள கல்லெழுத்துகள் யாவும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.” ஆலகிராமம்
பிள்ளையார் சிற்பத்துடன் லகுலீசர், இரண்டு பல்லவர் கால ஐயனார், ஜேஸ்டாதேவி  சிற்பங்கள் இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காகத் திருப்பணிகள் மேற்கொண்டபோது பூமியின் அடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பிள்ளையார் படிமக்கலை வரலாற்றில் ஆலகிராமப் பிள்ளையார் புதிய வரவாக ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
ஆலகிராமம் 
திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வர சுவாமி கோவில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், மைலம் வட்டம், ஆலகிராமம் பின் கோடு 604302 கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் மைலத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், ரெட்டணையிலிருந்து 5.6 கி.மீ. தொலைவிலும், கூட்டேரிப்பட்டு ரோடிலிருந்து 6.4 கி.மீ. தொலைவிலும், பெரமண்டூரிலிருந்து 10.3 கி.மீ. தொலைவிலும், திருவம்பட்டிலிருந்து 13.9 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 14.6 கி.மீ. தொலைவிலும், தீவனூரிலிருந்து 14.8 கி.மீ. தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரத்திலிருந்து 29 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 31 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரியிலிருந்து 52 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 144 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 11° 18′ 31.9896” அட்சரேகை N 79° 48′ 58.8996” E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 46 மீ. ஆகும். மைலம் மற்றும் பேரணி இரயில் நிலையங்கள் இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளன.
திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வர சுவாமி கோவில், ஆலகிராமம்
img_8385
திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கோவில் வளாகத்தில் மூலவரான எமதண்டீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவறையில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.  மூலவர் விமானம் சதுரஸ்ர வகையைச் சேர்ந்தது. கருவறை பீடம் சதுரவடிவில் அமைந்துள்ளது. கருவரையினுள்ளும் யாரோ நீரினுள்ளிருந்து வித்தியாசமான மூச்சு விடும் ஒலியைப் போல ஓர் ஒலியை  மக்கள் கேட்டுள்ளார்கள். பிரதோஷ நாளில் இக்கோவில் நந்தி விடும் மூச்சுக் காற்றுக் கேட்பதாகப் பொதுமக்கள் கூறுகிறார்கள். சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் போன்ற நிறைவுநாள் விழாக்களையும் மிருத்யுஞ்சய ஹோமத்தையும் செய்வதற்கு இத்தலம் ஏற்றது. இத்தலத்து சிவன் கால அனுக்கிரக மூர்த்தி ஆதலால் காலசர்ப்ப பரிகாரம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.
மூலவர் கருவறையை ஒட்டி அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபம் ஆகிய அங்கங்களைப் பெற்றுள்ளது. தெற்கு நோக்கிய கருவறையில் திரிபுரசுந்தரி அம்மன் காட்சி தருகிறார். இந்த அம்மன் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு விதமாகக் காட்சி தருவது வியப்பு. மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். கோவில் பிரகாரத்தில் பெயர் தெரியாத சித்தர் ஒருவரின் ஜீவ சமாதி காணப்படுகிறது. சித்திரகுப்தனுக்கும் பிரகாரத்தில் சன்னதி உள்ளது. நவக்கிரக சன்னதி இல்லாத சில கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் தீர்த்தக் குளத்தில் கங்காதேவி உறைவதாக நம்பப்படுகிறது. யமன் இக்குளத்தில் மூழ்கி தன் பாவங்களைக் களைந்ததாக ஒரு புராணக்கதை உள்ளது.  தொகுப்புக் கோவில் என்னும் வகைப்பாட்டில், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவிலை பரம்பரை அல்லாத அறங்காவலர் குழு நிர்வாகிக்கிறது. ஒரு காலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடைபெறும் கோவில்களில் இதுவும் ஒன்று.
குறிப்புநூற்பட்டி
  1. ஆலகிராமம் தமிழிணையம் மின்நூலகம்
  2. இரா. கலைக்கோவன், பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் , வரலாறு.காம்;http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=575
  3. பிள்ளையார்பட்டி விநாயகரை விட ஆலகிராம விநாயகர் மூத்தவர்! தினமலர் ஆகஸ்டு 26, 2016
  4. புள்ளி தந்த பிள்ளையார்! ஐராவதம் மகாதேவன். வரலாறு.காம் http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=607
  5. திண்டிவனம் அருகே தமிழ் வட்டெழுத்துகளுடன் கி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு. தமிழ் இந்து அக்டோபர் 11, 2015
  6. 5th century Ganapathy idol discovered in Villupuram dt. The Hindu October 7, 2015 https://www.thehindu.com/news/national/tamil-nadu/5th-century-ganapathy-idol-discovered-in-villupuram-dt/article7732327.ece

No comments:

Post a Comment