திருக்கழுக்குன்றத்துச் சிவபெருமானுக்குப் பல்லவ அரசர் ஸ்கந்த சிஷ்யன் வழங்கிய இறையிலியை வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவர் உறுதி செய்தார். அதை நான் குணவன் மகன் புத்தன் கேட்டபடி மீண்டும் உறுதி செய்கிறேன் என்று தொண்டை நாட்டை வென்ற முதலாம் ஆதித்த சோழன் ஆணையிட்ட கல்வெட்டு.
ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 27ஆவது களத்தூர்க் கோட்டத்துத் தன்கூற்று திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமானடிகளுக்கு இறையிலியாக ஸ்கந்தசிஷ்யன் குடுத்தமையில் அப்படியே வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையரும் அப்பரிசே ரஷித்தமையில் அந்துறையான் குணவன் மகன் புத்தன் விண்ணப்பத்தினால் பூர்வராஜாக்கள் வைத்தபடியே வைத்தனன் ராஜகேசரிவர்மனேன், இத்தர்மம் ரஷித்தார் அடி என் முடி மேலின.
வாதாபிகொண்ட நரசிம்மர் 620 களில் அப்பர்பெருமான், சம்பந்தர்பிரான் காலத்தவர். ஸ்கந்த சிஷ்யர் 320 வாகில் ஆண்ட ஸ்கந்தவர்மர் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
ஆக 320 களிலேயே திருக்கழுக்குன்றத்து சிவாலயம் வழிபாட்டில் இருந்தமை உறுதியாகிறது.
சங்க இலக்கியங்களில் பொ.யு மு ஒன்று முதல் பொ.யு ஒன்று வரையான காலகட்டத்ததாகக் கருதப்படும் நூல்களில் திருச்செந்தூர், திருவெஃகா இரண்டு தலங்களும் குறிப்பிடப்படுகின்றன.
காலத்தால் பிந்தையதானாலும் பழைய ஆவணங்களை உறுதி செய்வதால் கல்வெட்டுகள் மூலம் காலம் தெரியும் தமிழகத்தின் மிகப் பழைய ஆலயமாகத் திருக்கழுக்குன்றம் திகழ்கிறது.
நமது பாடல்பெற்ற, மங்களாஸாஸநம் ஆன ஆலயங்கள் அனைத்துமே காலத்தால் பல்லாயிரமாண்டு பழமையானவைகளே.
வரலாறு சான்று என்று வருகையில் அதன்படி காலத்தால் முற்பட்ட சான்றுகள் என்ற அளவில் குறிப்பிடப்படுகிறது. அவ்வளவே.
பி.கு. டாக்டர் Ravichandran KP கருத்து. தேவார முதலிகளால் பாடப்பெற்ற மலைக்கோவிலை இராஜசிம்ம பல்லவன் கற்றளியாக்கினார்.
எனது கருத்து. நமக்கு இன்று கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் கற்றளியாக மாற்றப்பட்ட முதல் தேவாரத்தலமும் திருக்கழுக்குன்றம் எனலாம்.
This temple is more than 1600 years old!
திருக்கழுக்குன்றமாகிய உலகளந்தசோழபுரத்தில் இன்று நிறைவான ஆனந்தம்!
கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் - திருப்புகலூர்எச்சமே ஆனாலும் ஏற்றமிகு பெருமை கொண்ட பழங்கோயில்சோழநாட்டல் உள்ள திருப்புகலூர் என்னும் திருத்தலத்தில்தான் திருநாவுக்கரசு பெருமானார் (அப்பர்) தம் நிறைவுப் பதிகத்தைப் பாடியருளினார். சிவஜோதியில் ஒன்றுங்காலை அவர் பாடிய திருப்பதிகத்தில், ‘‘காவார்ந்த பொழில் சோலைக் கானப்பேராய் கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின் பூவார்ந்த பொன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே’’ என்று குறிப்பிட்டு கழுக்குன்றத்து உச்சியாய் காணப்பெறுகின்ற சிவபெருமானின் அருட்காட்சியை விவரித்துள்ளார். செங்கற்பட்டிலிருந்து கடல்மல்லை எனப்பெறும் மகாபலிபுரம் செல்லும் சாலையில் 14 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது. பல்லவர் கல்வெட்டுகளில் களத்தூர் கோட்டத்துத் தன்கூற்றுத் திருக்கழுக்குன்றம் எனவும், சோழர் கல்வெட்டுகளில் தொண்டை மண்டலத்துக் களத்தூர் கோட்டத்து உலகளந்த சோழபுரம் என்றும் இவ்வூர் குறிக்கப்பெற்றுள்ளது. புராண நூல்கள் இவ்வூரினை வேதகிரி, வேதாசலம், கழுகாசலம், கதலிவனம், ஆதிநாராயணபுரம், ருத்திரகோடி என்ற பெயர்களால் குறிக்கின்றன. கழுகாசல மகாத்மியம், வேத கிரீசுவராஷ்டகம் போன்ற வடமொழி நூல்களும், அந்தகக்கவி வீரராக முதலியார் எழுதிய கழுக்குன்றத்து புராண நூலும், அவரே எழுதிய திருக்கழுக்குன்றத்து உலா என்ற நூலும் இத்தலத்தின் புராணப் பெருமைகளை சீர்பட உரைக்கின்றன. திருக்கழுக்குன்றத்தில் ஐந்து சிவாலயங்கள் உள்ளன. வேதகிரியாம் மலையுச்சியில் அமைந்த வேதகிரீஸ்வரர் அல்லது திருக்கழுக்குன்ற முடைய நாயனார் திருக்கோயில், அம்மலையுச்சிக் கோயிலுக்கு செல்லும் வழித்தடத்தில் இடையே காணப்பெறும் குடைவரைக் கோயிலான ஒரு கல்மண்டபம் அல்லது மலைமேல் மூலத்தானத்துப் பெருமானடிகள் எனப்பெறும் இவ்விரண்டு கோயில்களும் மலை சார்ந்த சிவாலயங்களாகும். முதற்கோயிலான மலையுச்சிக் கோயிலை இரண்டாம் நரசிம்ம பல்லவன் என்னும் ராஜசிம்ம பல்லவன் எடுத்தான். அக்கோயிலின் கருவறையில் லிங்கப்பெருமான் திருமேனிக்குப் பின்புறம் சிவபெருமான் உமாதேவியோடும், குழந்தை முருகனோடும் திகழும் எழிலார் சிற்பக் காட்சியைக் காணலாம். அருகே திருமாலும், பிரம்மனும் இடம் பெற்றுள்ளனர். மலைப்பாதைத் தடத்தில் காணப்பெறும் ஒரு கல்மண்டபம் எனப்பெறும் மலைமேல் மூலத்தானத்துப் பெருமானடிகளின் திருக்கோயிலை முதலாம் நரசிம்ம பல்லவன் குடபோகக் கோயிலாக அமைத்தான். இங்கு திகழும் முதல் நரசிம்ம பல்லவனின் கல்வெட்டு இக்கோயிலின் திருப்பெயராக ‘‘ஸ்ரீமலைமேல் மூலத்தானத்துப் பெருமானடிகள் திருக்கோயில்’’ எனக் குறிக்கின்றது. இவை இரண்டும் சிறிய ஆலயங்களே. ஊரின் நடுவே நாற்புறமும் ஏழுநிலைகளையுடைய பெரிய திருக்கோபுரங்களையும், இரண்டு திருச்சுற்று களையும், இரண்டாம் திருச்சுற்றில் சிவகங்கைத் தீர்த்தம் என்னும் திருக்குளத்தை உள்ளடக்கிய பெரிய மதிலோடு காணப்பெறும் ‘தாழக்கோயில்’ எனப்பெறும் பக்தவத்சலேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தின் வடப்புறம் தெற்கு நோக்கியவாறு அரைவட்ட அமைப்புடைய கருவறையுடன் ‘திருவாபரணக் கொட்டடி’ என்றழைக்கப்பெறும் ஒரு சிவாலயம் உள்ளது. உள்ளே சிவலிங்கம் இல்லை என்றாலும் வெளிப்புறம் கோஷ்டங்களில் கணபதியார், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மன், துர்க்கையார் திருமேனிகள் உள்ளன. இத்திருமேனிகள் இடம் பெற்றுள்ள கோஷ்டங்களுக்கு இடையே முதல் ஆதித்த சோழன், முதற்பராந்தக சோழன், ராஷ்டிரக்கூட மன்னன் கன்னர தேவன், பின்வந்த சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. அக்கல்வெட்டுகள், அக்கோயிலைப் பெருமானடிகள் இறைவனை ‘திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமூலஸ்தானத்து பெருமானடிகள்’ என்று குறிக்கின்றன. மேலும் அங்கு காணப்பெறும் கற்களில் அவை மீண்டும் வரிசையில் அடுக்கப்பெறுவதற்கான எண் குறியீடுகளும் உள்ளன. இந்த திருவாபரண கொட்டடி என அழைக்கப்பெற்ற பழைய ஆலயம் தற்போது இவ்வாலயத்து அலுவலக அறையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு காணப்பெறும் முன்னர் குறிக்கப்பெற்ற முதலாம் ஆதித்த சோழனின் கல்வெட்டில் இவ்வாலயத்தில் இடம் பெற்றிருந்த திருக்கழுக்குன்றத்து பெருமானடிகளுக்கு முற்காலத்தில் பல்லவ மன்னனான ஸ்கந்த சிஷ்யன் இறையிலியாக நிலதானம் அளித்திருந்ததும், பின்னர் அக்கொடையை வாதாபிகொண்ட நரசிம்ம பல்லவன் காத்ததும், அதே அறக்கொடையை புத்தன் என்பவன் விண்ணப்பித்ததால் தொண்டை மண்டலத்தைக் கைக்கொண்ட ஆதித்த சோழன் தன் ஆட்சியின் 27ம் ஆண்டில் (கி.பி.898ல்) அப்படியே இரட்சித்தான் என்பதும் கூறப் பெற்றுள்ளன. பல்லவ மன்னன் ஸ்கந்த சிஷ்யன் என்பான் ஏறத்தாழ கி.பி.4ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவன். அவன் காலத்தில்தான் காஞ்சிபுரத்தில் கடிகையிருந்தது. முதலாம் மகேந்திர பல்லவனுக்கும், அப்பரடிகளான திருநாவுக்கரசர்களுக்கும் சில நூற்றாண்டுகளூக்கு முன்பு வாழ்ந்த ஸ்கந்த சிஷ்யன் என்ற பல்லவ முன்னவன் காலத்திலேயே திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீமூலஸ்தானமுடையாருக்கு திருக்கோயில் இருந்திருக்கிறது. அக்கோயிலுக்கு அப்பேரரசன் அளித்த கொடையை வாதாபிகொண்ட முதல் நரசிம்ம பல்லவன் (கி.பி.639-668) உறுதி செய்து காத்தான் என்பதும், பின்னாளில் முதல் ஆதித்த சோழன் கி.பி.898ல் அதே அறக்கட்டளையை இரட்சித்துப் போற்றினான் என்பதும் இக்கல்வெட்டு கூறும் செய்தியாகும். ஏறத்தாழ 600 ஆண்டுகளாக ஒரு கோயிலின் அறக்கட்டளை பல அரசர்களால் காப்பாற்றப்பெற்று வந்தது என்பதை இச்சாசனம் கொண்டு அறிய முடிகிறது. அதோடு, திருக்கழுக்குன்றத்தில் உள்ள இவ்வாலயம் நான்காம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது என்பது உறுதியாகின்றது. முற்பட்ட பல்லவர் காலத்தில் செங்கற் கோயிலாக இருந்த இக்கோயிலை ஆதித்த சோழனுக்கு முற்பட்ட பிற்காலப் பல்லவ அரசனொருவன் கற்றளியாகப் புதுப்பித்துள்ளான். அதில் முதல் ஆதித்தனின் கல்வெட்டு முதற் கல்வெட்டாக இடம் பெற்றது. திருக்கழுக்குன்றத்தில் உள்ள கல்வெட்டுகளில் குறிக்கப்பெற்றுள்ள சிவாலயங்கள் எவை என்பது குறித்து 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இருப்பினும் பக்தவத்சலேஸ்வரர் கோயிலில் உள்ள திருவாபரண கொட்டடியே (தற்காலத்திய அலுவலகக் கட்டிடம்) மிகப் பழமையான ஆலயத்தின் எச்சமாகும். தற்போது தென்புறம் நோக்கி அமைந்துள்ள இக்கஜபிருஷ்ட விமானம் மேலே சிகர அமைப்பு இல்லாமல் தட்டையான கூரையுடன் காணப்பெறுகின்றது. இக்கட்டுமானத்தின் மேற்கு திசையில் அமைந்த இரு கோஷ்டங்களில் முறையேகணபதியார், யோக பட்டத்துடன் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி திருமேனிகளும், வடபுறம் நோக்கி அமைந்த கோஷ்டத்தில் அமர்ந்த கோல பிரம்மனும், துர்க்கையும் காணப்பெறுகின்றனர். இவ்வமைப்பு முறை ஆகம கோயில் கட்டுமானத்திற்கு மாறுபட்டதாகும். இதே ஆலயத்தை அப்படியே நாம் கிழக்கு நோக்கி திருப்பி அமைப்போமாயின் தென்புறம் கணபதியார், தட்சிணாமூர்த்தியும், மேற்கு திசையில் திருமாலும், வடதிசையில் பிரம்மனும், துர்க்கையும் இடம் பெறுவர். இது ஆகம கட்டுமான அமைப்பாகும். எனவே இவ்வாலயம் பண்டு பல்லவர், சோழர் காலத்தில் கிழக்கு நோக்கி அமைந்திருந்த பூர்வ கோயிலாகும். ஸ்கந்த சிஷ்யன் காலத்தில் செங்கற் கட்டுமானமாய் இருந்து பின்பே கற்றளியாக மாற்றப்பட்ட ஒன்றாம். பின்னாளில் மிகவும் விரிவுபடுத்தப்பெற்ற பக்தவத்சலேஸ்வரர் கோயிலை எடுத்த பிற்கால அரச மரபினர் பழைய கோயிலின் கற்களில் எண்கள் இட்டுப் பிரித்து அதனைக் கோயில் வளாகத்திற்குள்ளேயே தெற்கு நோக்கியவாறு மீண்டும் அமைத்துள்ளனர். அதனால் கோஷ்ட தெய்வங்களும், கல்வெட்டுகளும் இடம் மாறாமல் அப்படியே அமைந்துள்ளன. அவர்கள் அவ்வாறு பிரிக்கும்போது ஒவ்வொரு கல்லிலும் இட்ட தமிழ் எண்களை இன்றும் நாம் காணமுடிகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் பண்டு இவ்வூர் அருகே திகழ்ந்த கிழக்கு நோக்கி அமைந்திருந்த சிவாலயத்தைப் பிரித்து எடுத்து வந்து அம்மன் கோயிலாக அமைத்துள்ளனர். அப்போது ஆகம விரோதமாய் அமைந்த கோஷ்ட தெய்வங்கள் சிலவற்றை அகற்றியுள்ளனர். இருப்பினும் பழைய சிற்ப அமைப்புகளின் எச்சங்களையும், சிதைவுபெறாத கல்வெட்டுச் சாசனங்களையும் நாம் அங்கு காணலாம். திருக்கழுக்குன்றத்தின் பாடல் பெற்ற பழைய சிவாலயம் திசை மாறியுள்ள தற்போதைய அலுவலக கட்டிடமே. திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமூலஸ்தானத்து பெருமானாரடிகளின் இவ்வாலயத்தில் எழிலுறு கட்டுமானத்தையும் கோஷ்ட சிற்பங்களையும் கண்டு தரிசித்தபின்பு பக்தவத்சலேஸ்வரர் மூலத்தானத்தையும், ஆமை மண்டபத்தையும் பிற கோயில் களையும் வலம் வந்து கண்டு மகிழலாம். மேலும் ஆலயத்திற்கு கிழக்கில் உள்ள சங்கு தீர்த்தமும், அதற்கு அடுத்தேயுள்ள ‘ருத்திரகோடி’ என்ற வைப்புத் தலமும் திருக்கழுக்குன்றம் செல்வோர் தரிசிக்க வேண்டியவையாகும். முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் http://www.thirukalukundram.in/Thirukazhukundram%20Temple%20%20Kalvetukal.html https://www.kamakoti.org/tamil/5part44.htm http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2241&id1=50&id2=18&issue=20141016 |
No comments:
Post a Comment