Saturday, January 14, 2023

கல்வெட்டு காட்டும் சங்கராந்தி பொங்கல் - பொங்கல் விழா

கல்வெட்டுகளில் பொங்கல் - பொங்கல் விழா -Epigraphist Niranjanadevi
--------------------------------------------------------
கல்வெட்டு காட்டும் சங்கராந்தி
சங்கராந்தியைப் பற்றிய முதல் குறிப்பு சோழப் பேரரசர்களின் கல்வெட்டுகளில் தான் காணப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் இப்பண்டிகையைப் பற்றிய குறிப்பு, கி.பி. பதினோராம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகவே கிடைத்து இருக்கிறது.
பேரரசன் இராஜராஜசோழனுடைய பாட்டன் அரிஞ்சய சோழன் (கி.பி. 956-7) ஆவான். அவனுடைய மனைவி வீமன் குந்தவை எனும் அரசி கல்யாணி, அரிஞ்சயனுக்குப் பிறகு நெடுங்காலம் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அரசி கல்யாணி பற்றி அறிந்து கொள்ள மூன்று கல்வெட்டுகள் உதவுகின்றன. மூன்றும் அரசி கல்யாணி வழங்கிய அறக்கட்டளைகளைத் தெரிவிக்கின்றன. கி.பி. 968-இல் (இராஜராஜன் தந்தையான சுந்தரசோழனின் ஆட்சிக் காலத்தில்) அவள் உடையார்குடியில் உள்ள சிவன் கோயிலுக்கு ஓர் அறக்கட்டளை வழங்கியுள்ளார். சங்கராந்தி அன்று, உடை யார்க்குடி சிவன் கோயிலில் உள்ள “திரு நந்தீசு வரத்துப் பரம சுவாமி''க்குத் திருமுழுக்கு ஆட்டுவதற்காக ஆயிரம் குடம் நீரினைக் கொண்டு வந்து கோயிலில் சேர்ப்பவருக்கு ஊதியம் அளிப்பதற்கு ஒன்றரை ‘மா’ நிலத்தை மானியமாக அக்கோயிலுக்கு அளித்துள்ளார்.
இதிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் சங்கராந்தித் திருநாள் தமிழகத்தின் கோயில்களில் கொண்டாடப்பட்ட செய்தி புலனாகின்றது.
கண்டராதித்த சோழரின் மனைவியான செம்பியன் மாதேவியார், தம் மகன் உத்தம சோழனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. அளவில்) செம்பியன் மகாதேவி சதுர்வேத மங்கலத்தில் (நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஊர்,) “கைலாசமுடைய மகாதேவருக்கு'' ஒரு கற்கோயி லைச் செம்பியன் மாதேவியாரே கட்டினர்.
உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள். `உரட்டை சரஅபயன்' எனப்படும் திரிபுவன மாதேவி. அக்கோயிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளான்.
சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில், நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறார்.
இக்கல்வெட்டின் வாசகத்தில் `உத்தராயண சங்கராந்தி' எனும் தொடரும், `பொங்கல் சோறு' எனும் தொடரும் வருகின்றன. சமயப் போர்வையில் `பொங்கல் விழா' கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது.
`உத்தராயண சங்கராந்தி' சிறப்பித்துப் பேசப்படுவதானால் மாதந்தோறும் `சங்கராந்தி' எனும் ஒருவகை விழா நடைபெற்றதை உய்த்துணரலாம். இதனைச் செம்பியன் மாதேவியினுடைய கல்வெட்டு ஒன்றும் தெரிவிக்கிறது.
இக்கல்வெட்டுச் சான்றுகளால், பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதி முதல், தமிழகத்தின் கோயில்களால் பொங்கல் விழா, `உத்தராயண சங்கராந்தி' பண்டிகையாகக் கொண்டாடப்பட்டமை தெளிவாகிறது. இந்நிலை இந்நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் தொடர்ந்து நீடித்ததைக் காணுகின்றோம்.
பஞ்சு போல வெண்மையாக மேலெழுந்து மேகம் நின்றால் அதற்குப் ‘பொங்கலாடுதல்’ என்று பெயர். அரிசியை நீரில் களைந்து நெருப்பில் கொதிக்க வைத்தால் அது வெண்மையாகப் பொங்கும். அது மேகத்தின் பொங்கலாடுதல் போல இருப்பதால், அந்த உணவுக்கும் பொங்கல் என்ற பெயர் வந்தது.
காவிரிபூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இப்போது, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.
ஆனால், அந்த காலத்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது.
முதன்முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப்போது பொங்கல் ஊரையும், நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது. நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் செழிக்கும் என மக்கள் நம்பிக்கை.
சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு ‘புதியீடு’ என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். ‘புதியீடு விழா’ என்று ஒரு கல்வெட்டு குறிக்கிறது. அதே போல், விவசாயம் சார்ந்த 'புதுயீடு' / முதல் அறுவடை என்பது ஒரு சடங்காக வளர்ந்திருக்கலாம். தை மாதமே அறுவடை ஆரம்பிக்கும் காலம் என்பதால், அறுவடைத் திருநாள் அம்மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்பட்டிருக்கலாம். (இன்றும் இலங்கையில், தைப்பூசம் பிறந்தால் தான் அறுவடை என்பதே பொது வழக்காக இருக்கிறது. மாட்டுப்பொங்கலும் அன்று நிகழ்வதுதான்.
ஆரம்ப கால பதிவுகளில் இந்த பொங்கல் என்ற பெயரானது வானகம், போனகம், திருப்போனகம், பொங்கல் போன்ற சொற்களாக கல்வெட்டுகளில் தோன்றுகிறது.
 திருச்சி திருக்கயிலாயமுடையார் கோவில் கருவறை வடக்குப் பட்டியில் காணப்படும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில்,
“சங்கராந்திகளும், கிரஹணமும், மற்றும் திருக் கல்யாணங்கள் உள்ள் போது” பறை முதலிய வாத்தியங்கள் கொட்ட வேண்டிய முறைமையைத் தெரிவிக்கிறது.
 ராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி. 985 – கி.பி. 1012) ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் விழா எடுக்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தஞ்சையில் கண்டெடுக்கப்பட்டகல்வெட்டில் “திருச் சதயத் திருவிழா பன்னிரெண்டும், கார்த்திகத் திருநாள் ஒன்றும், சங்கராந்தி பன்னிரெண்டும், பெரிய திரு உற்சவம் நாள் ஒன்பதும் ஆக நாள் முப்பத்து நான்கும்” (“கல்லும் சொல்லும்”, பக் 147, இரா. நாகசாமி) என்று குறிப்பிடப்படிருக்கின்றது.
 மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனின் கி.பி. 1013-14ம் ஆண்டுக்குரிய 29ம் ஆண்டு கல்வெட்டு ‘‘ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது ராஜேந்திர சிங்க வளநாட்டு மண்ணி நாட்டு பிரமதேயம் வேம்பற்றூராகிய சோழமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து மகாசபையோம் கையெழுத்து. நம்மை உடைய சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் இவ்வூர் திருவிசலூர் மகாதேவர் ஸ்ரீ கோயிலிலேயே துலாபாரம் புக்கருளின அன்று நம்பிராட்டியார் தந்தி சக்திவிடங்கியாரான உலோக மாதேவியார் இரண்ய கர்ப்பம் புக்கருளி இத் திருவிசலூர் மகாதேவர்க்கு அக்காரடலை அமுதுக்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இக்காசு நானூற்று ஐம்பத்தெட்டும் இத்திருவிசலூர் மகாதேவர் சேனாபதிகள் மூலபரதரான சண்டேஸ்வரர் பக்கல் மகாசபையோம் கொண்ட இக்காசு நானூற்று ஐம்பத்தெட்டும் கொண்டு கடவோம் கொண்ட பரிசாவது...’’ என்று கூறி பின்பு சாசன விளக்கம் விரிவுற எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.
சோழ சக்கரவர்த்தி ராஜராஜ சோழரின் பட்டத்தரசியான லோகமாதேவியார் தன் கணவர் திருவிசலூர் கோயிலில் துலாபாரம் ஏறியபோதுதான் ஹிரணியகர்ப்பம் புகுந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டபோது திருவிசலூர் ஈசனுக்கு அந்நாள் முதல் தொடர்ந்து சந்திரன், சூரியன் உள்ளளவும் நாள்தோறும் அக்காரடிசில் எனப்பெறும் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக நானூற்று ஐம்பத்தெட்டு பொற்காசுகளை கோயிலில் முதலீடு செய்தார். அத்தேவியார் முதலீடு செய்த பொன்னை வேம்பற்றூர் ஊர்ச்சபை கடனாகப் பெற்றுக் கொண்டு, அதற்குரிய வட்டியிலிருந்து அப்பணியை மேற்கொள்வதாக இந்த சாசனத்தில் கையொப்பமிட்டு உறுதி அளித்துள்ளனர். அக்கார அடிசிலுக்காக (சர்க்கரைப் பொங்கல் நிவேதனத்திற்காக) அளித்த நானூற்று ஐம்பத்தெட்டு பொற்காசுகளுக்குரிய வட்டியிலிருந்து நாள்தோறும் இருநாழி செந்நெல் அரிசி, ஒருநாழி துவரம் பருப்பு, நாலுநாழி பசும்பால், ஒரு உழக்கு நெய், பன்னிரண்டரை பலம் சர்க்கரை மற்றும் நாற்பது வெற்றிலை, பத்து பாக்கு, இருபது வாழைப்பழம் ஆகியவையும் அளிக்கப்பட வேண்டும் என்று இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இவை தவிர அன்றன்றைக்கு பொங்கல் சமைக்க புதுப்பானை அளிக்கும் குயவர்க்கு உரிய ஊதியம், விறகுக்கு உரிய செலவு, திருவமுது சமைக்கும் ஊழியனுக்கு உரிய ஊதியம் ஆகியவையும் அந்த வட்டிப் பணத்திலிருந்தே அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது.
 முதலாம் ராஜேந்திரன் காலத்து திருவொற்றியூர் கல்வெட்டு `புதியீடு விழா’ எனப் பொங்கலைக் குறிக்கிறது. (புதியீடு என்பது முதல் அறுவடை). தமிழக விவசாயத்தில் தொடர்ந்து நிலவும் இருவகை உற்பத்தி முறைகளை (மருதம்/முல்லை வேளாண் முறைகள்) ஒரே பண்பாட்டின் கீழ் பொருத்தமுற இணைப்பதில் தமிழர் அடைந்த வெற்றியின் சின்னமே பொங்கல்விழா.
கங்கைகொண்ட இராஜேந்திரசோழனின் காளத்திக் கல்வெட்டில் மகர சங்க்ரமணப் பெரும் பொங்கல் என்ற குறிப்பு உள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தைப்பொங்கல் தினத்தில் ராஜேந்திரசோழன் தனது பரிவாரங்களோடு காவிரியில் புனித நீராடியதற்கான ஆதாரக் கல்வெட்டு கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
“கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு அருகில் உள்ளது பெலகோலா. இங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் ஒன்று உள்ளது. காவிரியைத் தழுவிச் செல்லும் இந்த சிவாலயத்தின் தீர்த்தத் துறைக்கு வலம்புரி தீர்த்தம் என்று பெயர். இந்த கோயிலுக்கு தினமும் சிறப்புப் பூஜைகள் நடப்பதற்கு ராஜேந்திர சோழன் நிவந்தங்களை (மானியங்களை) அளித்துள்ளார். அங்கு உள்ள ‘ஹனகன்னட கல்வெட்டு’ இந்தத் தகவல்களைச் சொல்கிறது. இப்பகுதியை, தனது ஆளுமைக்குள் வைத்திருந்த ராஜேந்திரன், இப்பகுதியின் மகாதண்ட நாயகனாக பஞ்சவன் மாராயன் என்ற பட்டத்துடன் விளங்கி இருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தை முதல் நாளானது டிசம்பர் 23-ம் தேதியே வந்திருக்கிறது. மேலை நாட்டவர்களின் வானியல் அடிப்படை நாள்காட்டிகளில் (காலண்டர் முறை) தவறுகள் இருந்ததே இதற்குக் காரணம். 1582-ம் ஆண்டில்தான் மாதத்தின் நாட்களை, கோள்களின் அடிப் படையில் கணக்கிட்டு சரிசெய்தார்கள். இதன்படி, சக வருடம் 934 பரிதாபி ஆண்டு உத்தராயண சங்கராந்தியான தை முதல் நாளில் ராஜேந்திர சோழன் தனது பரிவாரங்களோடு பெலகோலா வலம்புரி தீர்த்தத்தில் புனித நீராடியதாக கல்வெட்டு தகவல் சொல்கிறது. இதற்கு சரியான ஆங்கில ஆண்டுக்குறிப்பானது கி.பி.1012 டிசம்பர் மாதம் 23-ம் தேதி செவ்வாய்கிழமை என்பதாகும். இதேபோல் வங்க தேசத்தை வென்ற ராஜேந்திர சோழன், எந்த இடத்தில் இருந்து கங்கை நீரை எடுத்து தமிழகம் கொண்டு வந்தார் என்பதற்கான ஆதாரமும் தெரியவந்துள்ளது. மூலகங்கை, பாகீரதி என்றெல்லாம் சொல்லப்படும் கங்கை நதியில் இருந்து சரஸ்வதி, யமுனை நதிகள் இணையும் புனிதத் துறைக்கு திரிபேணி (திரிவேணி சங்கமம்) என்று பெயர். இங்கு இருந்துதான், சோழப்படைகள் கங்கை நீரை எடுத்து வந்திருக்கின்றன என்பதற்கான சான்றுகளும் கிடைத்திருக்கின்றன என்கிறார்.
 திருவள்ளூர் வீரராகவ கோவிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றின் படி, சோழ மன்னன் குலோத்துங்கன் பொங்கல் விழாவிற்கு சிறப்பாக நிலங்களை கோவிலுக்கு பரிசாக அளித்து வந்தார். கல்வெட்டில் விஷ்ணுக்கு பொங்கல் வரவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
 சிதம்பர சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயிலுள்ள கல்வெட்டொன்று இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1243- கி.பி.1279) காலத்தில் கயிலாயத்தேவன் என்பவன் தைப்பூச நாளில் பொங்கலமுது படைக்க மூலதனமாக பெரும்பற்றப்புலியூர் கீழ்ப் பிடாகை கிடாரங்கொண்ட சோழப்பேரிளமைநாட்டு எருக்காட்டுச் சேரியான சோழ நல்லூர்ப்பால் சோழபாண்டியன் என்ற பெயருள்ள நிலத்தையும், அங்குள்ள கொல்லைக் குளத்தில் செம்பாதி நிலத்தையும் அளித்திருந்தான் என்று கூறுகின்றது.
 கல்வெட்டுகளில் மகர சங்காராந்திப் புண்ணிய காலத்தில் தீர்த்தமாடித் தானங்கள் கொடுத்ததாக விஜயநகரம் கிருஷ்ணதேவராயர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இன்றைய தைப் பொங்கல், சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுவது தெரியும். ஆனால், துவக்க காலகட்டங்களில், சந்திரனுக்குத் தான் தை மாதம் மட்டுமின்றி, பிற மாதங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது வரலாறு.
தமிழகத்தில், துவக்க காலங்களில், சந்திரனின் வளர்ச்சி, தேய்வை அடிப்படையாக வைத்தே, நாள் கணக்கீடு ஏற்பட்டது. அதன் பின், சூரியனின் நகர்வை அடிப்படையாக கொண்ட கணக்கீடு வந்திருக்க வேண்டும்.
சௌரமான கணக்கீட்டில் மகர சங்கராந்தி:
சௌரமானக் கணக்கின்படி, ஓராண்டில், இரண்டு விஷுக்கள், இரண்டு அயனங்கள் வருகின்றன. ஆண்டை, ஒரு வட்டமாக கணக்கிட்டால், முதல் 90 டிகிரி, சித்திரை விஷூ; அடுத்தது ஆடி அயனம்; மூன்றாவது ஐப்பசி விஷூ; நான்காவது மகர சங்கரமணம் அல்லது தைப்பிறப்பு.
வேதத்திலும், உத்தராயனத்தை ஒளிக்காலம் எனவும், தட்சிணாயனத்தை இருட்காலம் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. மகாபாரதத்தில் வேறொரு குறிப்பு காணப்படுகிறது. அதன்படி, ரத சப்தமி என்பது, மாசி மாத வளர்பிறை சப்தமி தான் என்றும், அன்று தான், சூரியன் வடக்கு நோக்கி திரும்புகிறது என்றும் மகாபாரதம் கூறுகிறது. அந்த நாளில்தான் பீஷ்மர் உயிர் துறந்தார். இவற்றின் அடிப்படையில் பார்த்தால், தை மாதப் பிறப்பு எப்போது உத்தராயனத் துவக்கமாக மாறியது எப்போது என, தெரியவில்லை.
பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் விட்ட தவறு இதுவே. மாதக்கணிப்பில் மட்டும் சூரியவழிக்கு மாறிவிட்டு, சந்திரவழிப் பெயர்களை அப்படியே மாற்றாமல் பயன்படுத்தி வந்தது. ஆனால் சூரியவழி மாதங்களை தவறாக சந்திரவழி மாதங்களின் பெயர் கொண்டு அழைத்ததால் ஏற்பட்ட விபரீதம்.








இராசிகளில் சூரியனின் நிலையை வைத்துக் கணிக்கும் மாதங்களை இராசிகளின் பெயரிலேயே அழைத்தார்கள். உதாரணமாக, சூரியன் மேட இராசியில் நிற்கும் முப்பது நாட்களும் 'மேட ஞாயிறு' என்று அழைக்கப்பட்டது.
இப்படி, பன்னிரண்டு இராசிக்கும் பன்னிரண்டு ஞாயிறுகள் சேர்ந்தது ஒரு ஆண்டு. ஆனால், சந்திர வழியில் ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை, ஒரு திங்கள். பன்னிரண்டு திங்கள்கள் சேர்ந்தது ஒரு ஆண்டு.
பழைய சந்திர வழியில் பார்த்தால்,தை மாதம் பிறப்பது, தைப்பௌர்ணமியில் - தைப்பூசத்தில்! அன்று தான் பெண்கள் தைந்நீராடல் செய்து, தமது மார்கழித்திங்கள் பாவை நோன்பை நிறைவு செய்கிறார்கள். ஆண்டாள் மார்கழி இறுதியில் பெண்கள் உண்பதாகச் சொல்லும் அதே நெய்ப்பாற்சோற்றையே, தைப்பூசமன்று பெண்கள் 'நெய்ப்பூசும் ஒண்புழுக்கல்' கொண்டாடுவதாக சம்பந்தர் பாடியிருக்கிறார். இப்படிப் போகும் போது தான், சங்க இலக்கியங்கள் புகழும் தைமாதமும், நமது இன்றைய தைமாதமும் வேறுவேறு என்பது தெரியவருகிறது.
இனி காலக்கணிப்புக் குழப்பத்தோடு தை மாதம் சந்திர வழியிலிருந்து சூரியவழிக்கு மாற்றமுற்றதையும் சிந்திக்கவேண்டும்.
சந்திரவழியை நாட்காட்டியாக கைக்கொள்ளும் மரபு இன்றும் ஆந்திரா முதல் பல இடங்களில் உள. ஆனால் அது இன்று ஒரு வளர்பிறை பிரதமை தொட்டு அமாவாசை வரையான காலமாகவே கணிக்கப்படுகிறது. இதை சாந்த்ரமானம் என்கின்றனர். நமது நவராத்திரி, விநாயகசதுர்த்தி இவையெல்லாம் சாந்த்ரமானப்படியே அனுசரிக்கப்படுகின்றன. சந்திரவழிக் காலக்கணிப்பில் அமாந்தம், பூர்ணிமாந்தம் என்று இரு வகை உண்டு. ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்தை ஒரு மாதமாகக் கணிப்பது அமாந்தம். அதையே இரு பௌர்ணமிகளுக்கு இடையே கணிப்பது பூர்ணிமாந்தம். இன்று பல இடங்களில் அமாந்த முறை நாட்காட்டியே பயன்படுகிறது.
ஆக, காலக்கணிப்பு மாற்றத்தின் ஊடாக,
1. மகர சங்கிராந்தி (சூரிய வழிபாடு),
2. பழைமையான அறுவடைத்திருநாள்
ஆகிய இரு கூறுகளின் ஒன்றித்த வடிவமே இன்றைய தைப்பொங்கல் என்றே நாம் கொள்ளலாம்.
கல்வெட்டுகளில் தைப்பூச நாளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தை மாதத்தில் தைப்பூச நாளை மிகச் சிறந்த நாளாகச் சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் கொண்டாடியிருக்கிறார்கள். இன்றைய பொங்கல் விழா மரபு 300ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்கியிருக்கலாம் எனக் கணிக்கலாம்.
பெரியபுராணத்தில், மள்ளர்கள், இந்திர தெய்வத்தை தொழுது நாற்று நட்டதாக, சேக்கிழாரின் குறிப்புகளில் இருந்து தை மாதப் பிறப்பு, சோழர் காலத்தில் பெரிய விழாவாக கொண்டாடப்படவில்லை எனத் தெரிகிறது.
விஜயநகர பேரரசின் காலத்தில், அது பெரிய விழாவாக மாறியிருக்கலாம். தஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
(கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அப்பே ஜே.எ. டுபாய்ஸ் Abbe J.A. Dubois எனும் போர்ச்சுக் கீசியர் இந்தியாவிற்கு வந்தார். அவர் தென்னிந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இந்து மக்களிடையே அவர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்'' (Manners and Customs of the Hindoor) எனும் நூலினை எழுதியுள்ளார். அதில் தென்னகத்தில் கொண்டாடப்படும் `பொங்கல் விழாவினை' நன்கு சித்திரித்துள்ளார். உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும், சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு அது கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, பொங்கல் விழாவை, நான்கு நாள்கள் கோலாகலமாக நம் மக்கள் கொண்டாடினர். இன்று பெரிதும் `இருநாள் விழா'வாக மாறிவிட்டது. ஆனால், அப்பே டூபாய் வந்த காலத்தில், நான்கு நாள்கள் பொங்கல் விழா தொடங்குவதற்குப் பல நாள்களுக்கு முன்னரே அதற்குரிய ஏற்பாடுகள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் செய்யப்பட்டதாம். வீடுகளைப் பழுது பார்த்தல் குடிசைகளில் புதிய கூரை வேய்தல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டனராம். தேவையில்லாத தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் பொங்கல் விழாவின் தொடக்க நாள் அன்று, விடியற்காலையில் வீட்டு முற்றத்தில் தீயிலிட்டுக் கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததை, “சொக்கப்பனை'' கொளுத்தி விழாவினைத் தொடங்கினர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியால், தமிழருடைய `துப்புரவு மனப்பான்மை' வெளிப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பொங்கல் நாளன்று சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாட்டையும், பொங்கல் படையலையும் அவர் பாராட்டியுள்ளார். மறுநாள் மாடுகளுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களையும், ஊர்ப் பொது இடத்தை மக்கள் கூடி, அவற்றிற்கு வழிபாடு செய்ததையும் சுட்டத் தவறவில்லை. மறுநாள், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள் காளையாட்டுப் போட்டிகளிலும் `மஞ்சு விரட்டு' போன்ற வீர விளையாட்டுகளிலும் பேரார்வத்தோடு ஈடுபட்டதை அவர் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் அவர் கண்ணோட்டப்படி ஏழை எளிய மக்களின் பெருந்திருவிழாவாகப் பொங்கல் திருநாள் விளங்கியமை இனிது புலனாகின்றது.
அதேபோல், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “வலங்கை இடங்கை வரலாறு” என்ற நூலில், மகர சங்கராந்தி அன்று, சுவாமி புறப்பாடும், தேவதாசியர் நடனமும் நடந்ததாக குறிப்பு உள்ளது.
இருபதாம் நூற்றாண்டில், பெண்ணாகடத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், முதன் முதலாக, பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அச்சிட்டார். அதன் பின், தைப் பொங்கலுக்கு, தமிழர் திருநாள் என்ற அடையாளம் மெல்ல மெல்ல வந்து சேர்ந்தது. ஐரோப்பியர் வருகையால், நமது அன்றாட நடவடிக்கைகள், ஆங்கில காலண்டர் கணக்கின்படி அமைய நேரிட்டது. அதனாலும், தைப் பொங்கலுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.
பொங்கல் பண்டிகையின் வேறு பெயர்கள்
• தமிழகத்தில் அறுவடைத் திருநாளை பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம். மற்ற மாநிலங்களில் வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.
• கேரளாவில் – சேர வம்சத்தின் மூலம் தமிழர்களுடன் வரலாற்று கலாச்சாரம் பகிர்ந்து கொள்ளும் கேரளா மாநிலத்தில், பொங்கல் திருவிழா நாளில் பால்-அரிசி-வெல்லம் உணவு சமைத்தல், சமூக வருகைகள் மற்றும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்துதல் உள்ளிட்ட சடங்குகள் கேரள சமூகங்களில் கடைபிடிக்கப்படுகின்றன. வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் பொங்கல் திருவிழா வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை நாள் ஆகும். திருவனந்தபுரம் (கேரளா) அருகே உள்ள ஆட்டுக்கல் பகவதி கோவிலுக்கு வருடாந்திர பெண்களின் மிகப்பெரிய “ஆட்டுக்கல் பொங்கலை யாத்திரை” குறிப்பாக குறிப்பிடத்தக்கது. கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் 2.5 மில்லியன் பெண்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பெண்களின் கூட்டமாக ஆட்டுக்கல் பொங்கலை யாத்திரை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
• ஆந்திராவில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.
• பஞ்சாப்பில் லோஹ்ரி என்று கொண்டாடப்படுகிறது. அன்று இனிப்பு அரிசி, சோளப் பொரி ஆகியவற்றை தீயிலிட்டு கிராமியப் பாடல்களைப் பாடி மகிழ்வர்.
• குஜராத்தில் மகரசங்கராந்தி அல்லது உத்ராயன் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
• மகாராஷ்டிராவில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. எந்தோவன் என்ற மானுடவியல் அறிஞர், தன் பழங்குடிகள் பற்றிய நூல் ஒன்றில், 1927ல் குறிப்பிட்டுள்ளார். அப்போதைய பாம்பே மாகாணத்தில், காந்தேஷ் பகுதியில், பவ்ரா என்ற பழங்குடியினர், 'நாகதீபாவளி' கொண்டாடினர். நள்ளிரவில் மூங்கில் கழியில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு, ஆடவர் குழு ஊரை வலம் வருகிறது. குழுவை இரண்டு ஆடவர் வழிநடத்துவர். குழு ஒவ்வொரு வீட்டின் முன்பும் போய் நிற்கும். வீட்டின் பெண்கள், ஆடவரின் நெற்றியில், தீப்பந்தத்தின், முனையில் உள்ள கறுப்பு எண்ணெயை. வழித்து, திலகமிட்டு, மதுபானம் அளித்து அனுப்புவர். விடிந்த உடன், மாடுகளுக்கு அரிசி, தானியம் கலந்த பொங்கல் படைப்பர். இன்றும், இரவில் தான் போகி கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலையும் இதன் தொடர்ச்சியாக காணலாம்.
மகாராஷ்டிரத்தில் பொங்கலன்று, இரு நபர்கள் சந்தித்தால், பரஸ்பரம் வண்ண தானியங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். மராட்டியர்களும் பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். அப்போது மராட்டியர்கள் எள்ளுருண்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். முதல் நாள், போகிப் பண்டிகை அன்று மராட்டியர்கள் எள் சேர்த்து கேப்பை மாவில் ரொட்டியுடன் காய்கறி கூட்டும் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பின் சாப்பிடுகிறார்கள். இரண்டாம் நாள், சங்கராந்தி அன்று வெல்லம் சேர்த்து எள்ளுருண்டை செய்கிறார்கள். கூடவே ஏதாவது ஓர் இனிப்பும் செய்து பழம், கரும்பு ஆகியவற்றைப் படைக்கிறார்கள். எல்லோருக்கும் எள்ளுருண்டை கொடுக்கிறார்கள். மனிதர்கள் சமாதானமாக இருக்க உறுதி எடுக்கிறார்கள். மூன்றாம் நாள், கிங்கராந்தி அன்று எண்ணெயில் பொரித்தெடுத்த வடை செய்கிறார்கள். பவுஷ் (தை) மாதம் குளிராக இருக்கும். அதனால் உடலுக்குச் சூடு அளிக்கும் எள்ளைச் சேர்த்துக் கொள்கிறார்கள். மராட்டிய மக்கள் பொங்கலின்போது பெண்களுக்கு குங்குமம் மற்றும் எள்ளுருண்டை வழங்குவது வழக்கம். அப்போது ‘தித்திப்பாகப் பேசு, சண்டை போடாதே!’ என்று கூறுகிறார்கள்.
• ஹிமாச்சலப் பிரதேசதில் மஹா சாஜி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
• மேற்கு வங்காளத்தில் பௌஷ் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
• உத்திரப் பிரதேசதில் கிச்செரி என்று கொண்டாடப்படுகிறது.
• கர்நாடகாவில் சுகி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
• ஜார்க்கண்ட் - டில் சக்ராத் அல்லது கிச்ச்டி என்றும்,
• பீகாரில் பிகு என்றும்,
• ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உத்தராயன் எனவும்,
• ஹரியானாவில் மாஃஹி எனவும் கொண்டாடப்படுகிறது.
• இலங்கையில், அறுவடை முடிந்த பின் 'களவட்டிப்பொங்கல்' (களம் வெட்டிப் பொங்கல்) வைத்து சூரியனுக்கும் பூமிதேவிக்கும் நன்றி சொல்லும் மரபு உண்டு.
• அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ‘போகாலி பிஹு’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அறுவடை முடிந்த வயல்களில் கொட்டகைகள் போட்டு, முதல் நாள் இரவு இளைஞர்கள் விருந்து உண்பர். மறு நாள் காலையில் கொட்டகைக்கு தீ வைப்பதுடன் அறுவடைத் திருநாள் ஆரம்பமாகிறது.
• ஜப்பானிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாம், ‘பொங்கலோ பொங்கல்!’ என்பது போல், ஜப்பானியர் ‘ஹங்கரோ ஹங்கரோ’ என்று குரல் எழுப்புவர். அன்று கோயில்களில் தேர் இழுக்கும் வழக்கமும் உண்டு. நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது போல ஜப்பானில் ‘குதிரைப் பொங்கல்’ கொண்டாடுகிறார்கள். அன்று குதிரையை அலங்கரித்து, மலர் மாலைகள் சூட்டி, இனிப்புக் கொடுத்து போற்றுகிறார்கள்

கல்வெட்டுகளில் பொங்கல் - பொங்கல் விழா -4
--------------------------------------------------------
சங்கராந்தி என்பது தென் கிழக்காசியா முழுதும், இந்தியாவில் தென் குமரி முதல் வட இமயம் வரை, கொண்டாடப்படுகிறது.
• தாய்லாந்து, லாவோஸ் ஆகிய இரண்டு நாடுகளில் ‘சொங்ராங்’ (சங்கராந்தி) என்ற பெயரில் இதைக் கொண்டாட கதை சொல்லப்படுகிறது.
தர்மாபரணன் என்ற ஒரு அறிவாளி வாழ்ந்து வந்தான். அவன் ஏழு வயது முதலே பேரறிஞன். இளம் வயது மேதை; பறவைகள் மிருகங்கள் பேசுவதை அறிந்தவன். அவன் மீது அந்த நாட்டின் மன்னன் கபிலபிரம்மனுக்கு ஒரே பொறாமை. அவனை போட்டிக்கு அழைத்தான். கபிலனுக்கு ஏழு பெண்கள்/புதல்விகள்.
“நான் ஒரு விடுகதை போடுவேன். நீ சரியான பதில் சொன்னால், நானே என் தலையை வெட்டிக் கொள்வேன்; அப்படிச் சொல்லவில்லையானால் நீயே உன் தலையை வெட்டிக் கொள்ள வேண்டும். சரியா?” என்றான் கபிலன்.
உடனே சரி என்று தலை அசைத்தான் தர்ம ஆபரணன்.
விடுகதை இதுதான்:-
மனிதனுடைய ஜீவன் காலையில், நண்பகலில், மாலையில் எங்கே உளது?
தர்மன் இதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தான்; அவனுக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவை இது பற்றி என்ன பேசிக்கொள்கின்றன என்று ஒட்டுக் கேட்டான். விடையும் கிடைத்து விட்டது.
நேராக கபிலனிடம் சென்று இதோ தயார் என்றான்
என் கேள்விக்கு என்ன பதில்? என்றான் மன்னன் கபிலன்.
தர்மன் சொன்னான்:–
காலையில், மனிதனின் ஜீவன் முகத்தில் உளது; ஆகையால்தான் நாம் துயில் எழுந்தவுடன் முகத்தைக் கழுவுகிறோம். மதியம், நமது ஜீவன் மார்பில் உளது;ஆகையால்தான் சந்தனம் பூசுகிறோம். மாலையில், நமது ஜீவன் காலில் உள்ளது.
ஆகையால்தான் படுக்கைக்கு போகும் முன் கால் கழுவிவிட்டு படுக்கச் செல்கிறோம்.
இதைக் கேட்டவுடன் கபிலன் தன் தலையை வெட்டிக்கொண்டான். அதைச் சீவிய வேகத்தில் தலை காற்றில் பறந்தது.
கபிலனது ஏழு மகள்கள், இந்தத் தலை பூமியில் விழுந்தால் பூமி எரிந்து கருகிவிடும்; காற்றில் இருந்தால் அனல் காற்றால் பூமி வறண்ட பாலைவனம் ஆகி விடும்; கடலில் விழுந்தால் அது வற்றிப் போய்விடும். ஆகையால் மேருமலை மீதுள்ள குகையில் வைப்போம். ஒவ்வொரு ஆண்டும் முறைவைத்து அதைப் பாது காப்போம் என்று நினைத்தவர்கள் எழுவரும் முடிவு செய்தனர். ஆண்டுக்கு ஒரு முறை சங்கராந்தி தினத்தன்று அதை ஊர்வலமாக எடுத்துச் செல்வோம் என்று முடிவு செய்தனர்.
காலப்போக்கில் அந்த ஏழு பெண்களுக்கும் பிடித்த உடை, உணவு, வாஹனம், தோற்றம் ஆகியவற்றை தாய்லாந்து மக்கள் கற்பித்தனர்; ஏழு நங்கைகளையும் வாரத்தின் ஏழு கிழமைகளுக்கு சொந்தம் ஆக்கினர். அவர்கள் கையில் ஆயுதம் அல்லது ஒரு பொருளைக் கொடுத்தனர்.
சங்கராந்தி நாள் எந்தக் கிழமையில் ஏற்படுகிறதோ அந்த கிழமைக்கு உரிய மங்கையின் கையில் என்ன உள்ளது, அவள் என்ன ஆடை அணிந்திருக்கிறாள்? அதன் வர்ணம் என்ன? போன்ற அம்சங்களை வைத்து அந்த ஆண்டில் என்ன நடக்கும் என்பதை மக்கள் ஆரூடம் கூறினர்.
இந்த வழக்கத்தை இப்பொழுதும் மதுரை சித்திரைத் திருவிழாவில் காணலாம். கள்ள அழகர் (விஷ்ணு) என்ன நிற ஆடை உடுத்தி, வைகை ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்றவாறு மழை அறுவடை, நாட்டின் வளம் இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பச்சைப் பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால் பசுமை மிக்க அறுவடை இருக்கும் என்பது போல தாய்லாந்தில் கையில் வாளேந்திய சிவப்பு நிற மங்கைக்கு உரிய நாளில் சங்கராந்தி ஏற்பட்டால் யுத்தம் போர் மூளும் என்று தாய் மக்கள் நம்பினர்.
லாவோஸ் நாட்டில் அன்றைய தினம் மேருமலையைப் போல மணற் கோபுரங்களைக் கட்டி, அதற்கு மஞ்சள் ஆடை உடுத்தி, தோரணம் கட்டி, பூஜை புனஸ்காரங்களைச் செய்து நைவேத்யம் படைத்து வணங்குவர். அந்த படைப்புப் பொருட்களை புத்த பிக்ஷுக்களுக்கு வழங்குவர்

மாட்டுப் பொங்கல்
-----------------------
அடுத்த நாள் அன்று தனக்கு உதவிய மாடுகள், ஏற்கலப்பை போன்ற விவசாயத்திற்குப் பயன்பட்ட எல்லா பொருள்களுக்கும் நன்றி செலுத்தும் நாள் மாட்டுப் பொங்கல் ஆகும்.
மாட்டுப் பொங்கலை கன்றுப் பொங்கல் என்றும் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு. மாடுகளைக் குளிப்பாட்டி, அதன் கொம்புகளை சீவி, பளபளக்கும் வகையில் இயற்கை வண்ணம் பூசி, குஞ்சம் அல்லது சலங்கைகள் கட்டிவிட்டு, தோளில் வார்ப்பட்டையிலும் சலங்கைகள் மாட்டிவிட்டு, மாடு தலையை ஆட்டும் போது ஏற்படும் ஒலியைக் கேட்டு ரசிப்பார்கள். மேலும் நாட்டுச் சர்க்கரை, தேங்காய், பழம் எல்லாம் மாட்டுத் தொழுவத்தில் படையல் வைத்து, பொங்கலை பொங்கச் செய்து மாட்டுக்குப் படைத்து வணங்குவார்கள். மாடு உண்டு முடித்த எச்சில் தண்ணீரை "பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல் பட்டிப் பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக" எனச் சொல்லி மாட்டுத் தொழுவம் முழுதும் தெளிக்கும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.
மாட்டுப் பொங்கல் என்பதே கால்நடை சமூகத்தின் பொருளாதாரப் பின்னணியை மையப்படுத்திய திருவிழா.
“மென்புலத்து வயலுழவர் வன்புலத்துப் பகடுவிட்டு”
என்றொரு புறநானூறு பாடல்வரி மருத நிலத்து உழவர்கள், முல்லை நிலத்திலிருந்து மாடுகளை ஓட்டிச் செல்வதாகப் பொருள்.
பிற்கால கல்வெட்டு ஒன்று, முதலாம் இராசராசனின் காலத்தில் அவனுக்கு அடங்கிய சிற்றரசன் ஒருவன், தான் வெற்றிகொண்ட பகுதிகளில் இருந்து 900ஆடுகளைக் கவர்ந்துவந்து காஞ்சிபுரத்தில் உள்ள ஐஞ்சந்தி துர்க்கா படாராகிய கோயிலுக்கு தானமாகக் கொடுத்ததை இந்தக் கல்வெட்டுதான் நேரடியாகச் சொல்கிறது. தொடக்கக் காலத்தில் தானமாக கொடுக்கப்பட்ட ஆடு மாடுகள் இதுபோல் வெற்றி கொண்ட பகுதியிலிருந்து கவர்ந்து வரப்பட்டவையாக இருக்கலாம். பல்லவர் காலத்தில் வணிகர்கள் வந்தார்கள். ஆடு மாடு வணிகம் நடந்தது. அதற்கு முன்பு கவரப்பட்ட கால்நடைகள் தானம் கொடுப்பதற்கும், மருத நிலத்தின் பயன்பாட்டுக்கு விற்பதற்கான பண்டமாகவும் இருந்ததென சொல்ல முடியுமே தவிர, உறுதியான சான்றுகள் இல்லை. சில இடங்களில், குறிப்பாக கொங்குப் பகுதியில் ‘பண்டம்’ எனும் சொல்லால் கால்நடைகளை வழக்கில் அழைக்கும் பழக்கம் இன்றுமுள்ளது.
மரியாதைக்குரிய வழக்கு சொல்லாக பண்டம் என்ற பதம் பயன்பாட்டில் இருந்தாலும் உண்மையில் அவை வணிகப்பொருள் என்பதுதான்.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி சுற்றுப்புற கிராமங்களில், முத்தரையர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர். இவர்களது குலதெய்வமான பச்சைநாச்சியம்மன் சாலுாரில் உள்ளது. மதகுபட்டி சமுதாயத்தினர் ஆண்டுதோறும் தை 2ம் தேதி மாட்டு பொங்கல் அன்று விவசாயத்திற்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் உழைக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செய்வது வழக்கம். சலுகைபுரத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த சாமியாடி நேற்று காலை 11:00 மணிக்கு, ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று வீடுகளில் அவருக்கு காணிக்கை கொடுத்து வரவேற்று, பின்னர், வெண்சேலை அணிந்த பெண்கள் வீட்டில் இருந்து ஊர்வலமாக, மேளதாளம், சங்கு ஒலி எழுப்பி பொங்கல் பானைகளை தலையில் சுமந்தவாறே, மாட்டு தொழுவத்தின் முன் கூடி வெண் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். குல தெய்வம் பச்சை நாச்சியம்மனுக்கு பிடித்த ஆடை வெண்சேலை. பெண்கள் அதை பாரம்பரியமாக உடுத்திதான், கொலுசு, மெட்டி, வளையல் உட்பட எந்தவித ஆபரணங்களும் அணியாமல் பாரம்பரிய முறைப்படி வெண் பொங்கல் மட்டுமே வைத்து வழிபாடு நடத்துவர். விரத காலங்களில் வீடுகளில் உணவுக்காக தாழிப்பது கிடையாது.தொழுவில் சேர்ந்த கரும்பு, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட்டு, அந்த தொகையை கோவில் கணக்கில் செலுத்துவர். அன்று மதியம் அனைவரின் வீட்டிலும் சைவ சாப்பாடு அன்னதானமாக வழங்கப்படும். பிள்ளை வரம் வேண்டி தொட்டில் கட்டியும், திருமண தடை நீங்க வேண்டுதல் வைத்தால், அடுத்த ஆண்டிற்குள் நிறைவேறி விடுமாம்.
வாணியம்பாடி பக்கத்தில் உள்ள கேதாண்டபட்டி ஊரில் நடுகல் இருக்குமிடத்துக்கு, மாட்டுப் பொங்கல் அன்று அல்லது மறுநாள் ஏலகிரி மலைமீது உள்ள மக்கள் தங்களின் கால்நடைகளை ஓட்டி வந்து சடங்குகள் செய்வர். அவ்வாறு செய்வதால் வரக்கூடிய வருடத்தில் கால்நடைகள் நோய்வாய்ப்படாமல் பட்டி பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை. தொண்டை மண்டலத்தில் எருதாட்டம், மாடு விடும் விழாக்கள் பொங்கல் நாட்களில் நடப்பவை. குறிப்பாக நடுகற்கள் இருக்கும் மந்தை வெளி / மண்டு பகுதியில் உள்ள மைதானத்தில் இவ்விழா நடைபெறும். பொங்கல் நாட்களில் மற்ற விழாக்களுக்கு முக்கியத்துவம் குறைவு. மாட்டுத் திருவிழா அன்றுதான் பெரும்பான்மையான மக்கள் கூடுவர். கரடிகை போன்ற சில இடங்களில் நடுகல் கல்வெட்டை சுற்றியே மாடுகள் நிறுத்தப்படும். இது வளமை சடங்கின் வெளிப்பாடு. கொங்கு பகுதியில் அதனை பட்டிப் பொங்கல் என்பர். அங்கு ஒவ்வொருவரின் வீட்டிலும் தனித்தனியாக பட்டிப் பொங்கல் வெகு சிறப்பாக சிறிய விழா போலவே நடைபெறும்.
வேளாண்மையோடு பெரிதும் தொடர்பில்லாத அங்குதான் மாடுகளைச் சேற்றில் நடக்கவிடும் முறையும் பின்பற்றப்படுகிறது. தொண்டை மண்டலத்தில் மண்டில் கூடும் விழா தனித்த மேய்ச்சல் சமூக பண்பாட்டின் எச்சம். கால்நடை பொருளாதாரத்தை சார்ந்து இயங்கும் கிராமங்களில் மற்ற பண்டிகைக்கு வருகிறார்களோ, இல்லையோ மாட்டோடு தொடர்புடைய விழாக்களில் தவறாமல் கூடும் வழக்கத்தை இன்றளவும் தமிழகம் கொண்டுள்ளது
From the book "Festivals of Tamilnadu" published in 1980 By Gandhi Vidhyalayam, Thiruchitrambalam, Tanjore dt. and written by M. Arunachalam.

Ravichandran KP 


இந்தியர்களின் ஒப்பற்ற
வானியல் அறிவுக்குச் சான்றாகும் பொங்கல்!
----------------------------------------------------------------------
மார்கழி மாதத்தில் தனுஷ் ராசியில் சஞ்சரிக்கும்
சூரியன் தை முதல் நாளன்று மகர ராசியில்
நுழைகிறது. இந்த வானியல் நிகழ்வானது
மகர சங்கராந்தி ஆகும். தமிழ்நாட்டில் இது
பொங்கல் என்று அழைக்கப் படுகிறது.
மகர சங்கராந்தி என்பது வானவியல் பெயர்.
பொங்கல் என்பது பண்பாட்டுப் பெயர்.
இரண்டும் ஒன்றுதான்! மகர சங்கராந்தி
என்றால், மகர ராசியில் சூரியன் நகர்ந்து
செல்வது என்று பொருள்படும்.
காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம்
போன்ற மாநிலங்கள் உட்பட நேபாளம் இலங்கை
மியான்மர் இந்தோனேஷியா உள்ளிட்ட
வெளிநாடுகளிலும் மகர சங்கராந்தி
கொண்டாடப் படுகிறது. இது தமிழ்நாட்டுக்கு
மட்டும் உரியதல்ல.

மகர சங்கராந்தி என்றால் என்ன?
மகர சங்கராந்திதான் பொங்கலா?
பொங்கல் பண்டிகையின் அறிவியல் பின்னணி என்ன?
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
அறிவியல் ஒளி ஏட்டில் சென்ற ஆண்டு மலரில்
எழுதிய கட்டுரையில் இருந்து.....
****** *********** *************
மகர சங்கராந்தியும் பொங்கலும்!
-------------------------------------------
பூமியைப் பொறுத்தவரையிலான சூரியனின் பாதை என்று தோற்றமளிக்கும் (apparent path of the sun wrt the earth) பாதையில், பூமியைச் சுற்றியுள்ள அண்டவெளியே (space) ராசி மண்டலம் (Zodiac region) ஆகும். இது ஒவ்வொன்றும் 30 டிகிரி கோணம் உள்ள 12ராசிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுஷ், மகரம், கும்பம், மீனம் ஆகியவை தமிழ் மரபுப்படியான பன்னிரு ராசிகள்.
இந்த ராசி மண்டலத்தில், தனுஷ் ராசியைக் கடந்த பிறகு மகர ராசிக்குள் (from Sagittarius to Capricorn) சூரியன் நுழையும் முதல்நாளே மகர சங்கராந்தி ஆகும்.
சங்கராந்தி என்ற சமஸ்கிருதச் சொல் "நகர்ந்து செல்" என்று பொருள்படும். மகர சங்கராந்தி என்றால் "மகர ராசியில் நகர்ந்து செல்" என்று பொருள். சூரியன் எந்த நாளில் மகர ராசிக்கு நகர்கிறதோ அந்த நாளே மகர சங்கராந்தி ஆகும்.
அந்த நாளே தை மாதத்தின் முதல்நாளும் ஆகும். அன்றுதான் பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
மகர ராசி என்பது ஆங்கிலத்தில் Capricorn எனப்படுகிறது.மகரம் என்பது வெள்ளாட்டைக் குறிக்கிறது. வெள்ளாடு போல் உருவம் உடைய நட்சத்திரக் கூட்டமே மகர ராசி ஆகும். மகர சங்கராந்தி என்ற சமஸ்கிருதச் சொல் "வெள்ளாட்டு நகர்வு" என்று தமிழில் பொருள்படும்.
(மகரம் = வெள்ளாடு; சங்கராந்தி = நகர்ந்து செல், நகர்வு). இந்த இடத்தில் மேஷ ராசியின் ஆட்டுடன் மகர ராசியின் ஆட்டை இணைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது.
ராசி மண்டலத்தில், மேஷ ராசிக்கும் (Aries) மகர ராசிக்கும் (Capricorn) ஆடுதான் சின்னம். இரண்டுமே ஆடுகள்தான்.
என்றாலும், மேஷ ராசியின் ஆடு செம்மறி ஆடு
(a ram or an adult male sheep). மகர ராசியின் ஆடு வெள்ளாடு
(a goat or a sea goat with a fish at its tail). பாபிலோனிய கிரேக்க புராணங்களில் இது கடல்வாழ் வெள்ளாடு (sea goat) என்று சிறப்பிக்கப் பட்டது.

No comments:

Post a Comment