Friday, April 21, 2023

ஜம்பை என்ற சிற்றூரில் உள்ள ஸ்ரீ ஜம்புநாதேஸ்வரர் ஆலய பறையன் (பொஆ1202 ) கல்வெட்டு)

 ஒரு கல்வெட்டு சில எண்ணங்கள் !.K Kandaswami

கல்வெட்டு இருக்கும் இடம் : இந்தக் கல்வெட்டு விழுப்புரம் மாவட்டம் , திருக்கோவிலூர் வட்டம் , ஜம்பை என்ற சிற்றூரில் உள்ள ஸ்ரீ ஜம்புநாதேஸ்வரர் ஆலயத்தின் தென்புறச் சுவரில் உள்ளது .
கல்வெட்டின் காலம் : இந்தக் கல்வெட்டு “ திரிபுவனச் சக்கரவர்த்திகள் “ மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரின் ( பொது யுகம் 1178 – 1218 ) இருபத்து நான்காவது ஆட்சியாண்டின் ( பொது யுகம் 1202 ) காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு .




கல்வெட்டின் செய்தி : ஜம்பை திருகோவிலில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ தான்தோன்றீஸ்வர நாயனாருக்கு ( மூலவர் ) , காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆலயத்தின் தேவரடியார் பெண்மணியும் கிளியூர் மலையமான் அழகியான் ஆகாரசூரனான இராசகம்பீர சேதிராயர் ( திருக்கோவிலூர் மலையமான் அரச வம்சத்தார் போலும் ! ) அவர்களின் அணுக்கியார் ( அரசரின் நெருங்கிப் பழகுபவர் – தோழி ) ஆகிய “ புண்ணியம்செய்தாள் “ என்பவரின் மகளுமாகிய “ அழகியபெருமாள் “ என்பவர் மூலவருக்கு புரட்டாசி நாளில் ஸ்வாமியை எழுந்தருளப் பண்ணுவதற்காக ஆகும் செலவுக்கு நிவந்தமாக ( Trust ) வருவாய் நிமித்தம் ஒரு நிலத்தை , அதன் எல்லைகளை சரியாகக் அந்தக் கல்வெட்டில் குறித்து தானமாக – ஓர் அறக்கொடையை நிறுவி ( Endowments ) வழங்கினார் .
இந்த அறக் கொடையை அந்தக் கல்வெட்டில் பதிந்து , பின்னர் ஓர் ஓம்படைக் கிளவியையும் குறித்துள்ளார் .
கல்வெட்டுக்களில் ஓம்படைக்கிளவியின் கூற்றுக்களில், கல்வெட்டில் கூறப்படும் தானங்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு , இத்தானத்தைப் பாதுகாப்பதனால் ஏற்படும் நன்மைகள், அவ்வாறு செய்யாமல் விடுவதனால் அல்லது அத்தானத்துக்குக் இடையூறு செய்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்ற விபரங்கள் இடம்பெறும். இவ்வாறான விளைவுகள் அவ்வாறு குந்தகம் செய்வோருக்கு அச்சத்தையோ, அவமானத்தையோ ஏற்படுத்தும் வகையில் அமைவது உண்டு.
இந்தக் கல்வெட்டிலும் ஓம்படைக்கிளவியாக பின்வரும் வரிகள் காணப்படுகின்றன :
- “ இந்தத் தானம் சந்திர – சூரியர் உள்ளளவும் ( சந்திராத்தி வரை ) நிலைபெற்று இருக்கவேண்டும் . அவ்வாறு இந்த நிவந்தத்தை செய்யாமல் போகிறவர்கள், கங்கை முதல் குமரி வரை உள்ள அனைத்து பாவமும் அவனுக்கு வந்து சேரும். நரகங்களில் உள்ளனவாகிய - கீழ் நரகத்திலிருந்தும் மீள முடியாது ( நரகங்கள் பல எண்ணிகையில் உள்ளன . சிவஞானமாபாடியம் காண்க ) . அவன் மனைவி பறையனுக்கு போய்ச் சேரட்டும் ( இது ஒரு வசைச் சொல் என்று கருதுகிறேன். ) . இது பந்மாஹேஸ்வர ரக்க்ஷை. “ என்ற வரிகள் உள்ளன .
குறிப்பு : அடைப்புக் குறிக்குள் உள்ளன என்னுடைய விளக்கங்கள் .
இந்தக் கல்வெட்டிலிருந்து சில எண்ணங்கள் நமக்கு வருகின்றன :
1. முன்னரே நான் சில பதிவுகளில் – கல்வெட்டுகளில் – தேவரடியார் பெண்மணிகள் , மானியங்களைப் பெற்றுக்கொண்டு , திருக்கோவில்களில் சிவபுண்ணிய வாழ்வு நடாத்தி வந்தபோதும் , தங்களுடைய பதிபுண்ணியச் செயலை ஈட்டும் விதமாக சிவாலயங்களுக்கு தானங்கள் செய்து வந்தனர் என்றுக் குறித்துள்ளேன். இது ஓரளவு அவர்களின் பொருளியல் சுதந்தரம் குறித்த ஒரு செயலாக உள்ளது . இந்தக் கல்வெட்டில் தானம் வழங்கியவர் அந்தத் தேவரடியார் பெண்மணியின் மகள் என்றாலும் கூட , அவர் சுயேச்சை யாக தானம் வழங்கும் அதிகாரம் படைத்தது இருந்தார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம் .
2 . தேவரடியார் பெண்மணிகள் பற்றிக் கல்வெட்டுகளில் குறிக்கப்படும் பொழுது “ இன்ன ஊரைச் சேர்ந்தவர் “ என்றோ “ இந்தப் பெண்மணியின் மகள் ” என்றோ பெரும்பாலும் தங்களைப் பற்றிக் குறிப்பிடுவர் . மற்றபடி இல்லறத்தில் இருக்கும் பெண்கள் தானங்களை இவ்வாறு வழங்கி கல்வெட்டில் குறிப்பிடும் பொழுது “ இன்னாருடைய - மகள் , மனைவி அல்லது அன்னை ” என்றே குறிப்பிடுவார்கள் . தேவரடியார்கள் – “ பதியிலார் ” என்ற வழக்கத்தை ஒட்டி இவ்வாறு குறிப்பிடும் வழக்கம் இல்லை . சில தருணங்களில் தேவரடியார் பெண்மணிகள் “ இன்னாரின் நெருங்கியவர் / அணுக்கியார் ” என்ற அவர்களின் மணவாழ்வு அதனைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் குறித்தும் குறிப்பிடுவர் . இந்தக் கல்வெட்டும் தானம் கொடுத்தவரின் அன்னை “ புண்ணியம்செய்தாள் ” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு முக்கியமான விஷயம் . ஆக தேவரடியர்கள் மணவாழ்வு அல்லது தங்களுக்கு விருப்பமான நாயகருடன் சேர்ந்து வாழும் உரிமை குறித்த அதிகாரம் இந்தக் கல்வெட்டில் காணப்படுகின்றது . முதலாம் இராஜேந்திர சோழனின் அணுக்கியார் “ நக்கன் ( சிவாலய தேவரடியார் பெண்மணி ) பரவை அம்மையார் ” குறித்த வரலாற்றுச் செய்திகள் அன்பர்களுக்கு நினைவுக்கு வரலாம் .
3 . இந்தத் தானத்தை வழங்கிய புண்ணியம்செய்தாளின் மகள் அழகியபெருமாள் என்ற பெண்மணியும் ஒரு தேவரடியார் பெண்மணியா - என்பதனை இந்தக் கல்வெட்டில் உறுதி செய்து கொள்ள முடியவில்லை .
4. Breaking India Forces ( BIF ) எனப்படும் திராவிடர்கள் / Urban Naxls / டுமீளர்கள் இன்னம் பிறர் பல்லாண்டுகளாக கூறிவரும் விஷயம் ஒன்று உண்டு . “ இந்தியா என்பது ஒரு தேசமல்ல . அது தேசிய இனங்களின் சிறைக்கூடம் . இது வெள்ளைக்காரன் வந்து பலவந்தமாக பிணைத்த ஒரு தேசம் . எனவே தமிழ்நாடு தனியே பிரிய வேண்டும் , அது போல அனைத்து தேசிய இனங்களும் ” என்ற கூக்குரல் / கதறல் பல ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டு வருகிறோம் . இந்த காலத்தால் மிகப் பழைய இலக்கியமான புற நானூற்றில்இருக்கும் இந்த பாடலின் பொருளை இந்த BIF அறிந்திருக்க மாட்டார்கள் : அந்தப் பாடல் கீழே :
பாடியவர்:காரிகிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
" வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,"
பாடலின் முதல் நான்கு வரிகள் மட்டுமே எடுத்தாளப்பட்டு உள்ளன.
இந்தியா “ அரசியல் தேசியம் “ என உருவானது 1947 ஆம் ஆண்டாக இருக்கலாம் , ஆனால் “ பண்பாட்டு தேசியம் “ என்பது புறநானூற்றுக் காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது .
இந்தக் கல்வெட்டிலும் அது எதிரொலிகின்றது .
// கங்கை முதல் குமரி வரை உள்ள அனைத்து பாவமும் அவனுக்கு வந்து சேரும். நரகங்களில் உள்ளனவாகிய - கீழ் நரகத்திலிருந்தும் மீள முடியாது ( நரகங்கள் பல எண்ணிகையில் உள்ளன . சிவஞானமாபாடியம் காண்க ) // என்ற வரிகளை கல்வெட்டில் காணும்பொழுது ஜம்பை என்றக் கிராமத்தில் உள்ள தானத்துக்கு இடையூறு செய்தால் எங்கோ வட இந்தியாவில் இறைவன் உறையும் இமய மலையில் இருந்து உற்பத்தி ஆகும் கங்கைக் கரையிலிருந்து , தெற்குக் கோடியில் உள்ள கன்யாகுமரிக் கடற்கரை வரையிலும் செய்த பாவத்துக்கு ஆளாக வேண்டும் என ஏன் சாபம் இட வேண்டும் ? . அருகில் இருக்கும் பெண்ணை ஆற்றங்கரை வரை சொன்னால் போதாதா ?
ஆக பண்டைய தமிழரின் சிந்தை பண்பாட்டு தேசிய ரீதியாக இமயக்கங்கை முதல் – கன்னியாகுமரி வரை உள்ளது குறித்து நாம் இறும்பூது எய்தலாம் . எனவே இந்த BIF நச்சு எண்ணம் கொண்டவர்களை ஒதுக்குக என வேண்டுகிறோம் .
5. ஒருவரின் ஜாதி குறித்து இழிவு சொற்களில் பேசுவதும் , எழுதுவதும் இன்றைய நம்முடைய நாட்டில் அரசியலமைப்பு சட்டபடி தண்டனைக்குரிய கடுங்குற்றம் , ஆனால் அதைவிட நமது பொது தர்மத்தின்படியும் ( Ethics ) பெருங்குற்றம் . இந்த நோக்கு நம்முடைய பண்டைய வரலாற்றில் இதேபோல இருந்தன என்று உறுதியாகச் சொல்ல இயலாது . ஜாதி குறித்த வசவு இந்தக் கல்வெட்டில் உள்ள இறுதி வரிகளில் உள்ளன என்பதை அன்பர்கள் கவனிக்கலாம் . நம்முடைய பண்டைய வரலாற்றில் மேன்மைகள் இருந்தன போல மிகக் கீழ்மைகளும் இருந்தன எனபதை நாம் மறக்க இயலாது .
ஆனால் சிலர் இதைவிடுத்து “ முன்னர் ஜாதிகள் தொழிலின் அடிப்படையிலே மட்டும் இருந்தன , பிறப்பின் அடிப்படையில் இல்லை “ என்று சொல்லி வருகிறார்கள் . அவ்வாறு என்றால் இந்தக் கல்வெட்டில் உள்ள இறுதி வரிகளுக்கு எவ்வாறு பொருள் காண்பர் ? இதனைப் பாராட்டாகவா அல்லது இழி சொல்லாகவா ?
நம்மைப் பொறுத்தவரை வரலாற்றை , வரலாற்று ரீதியாவே பார்த்து அதன் மேன்மைகள் மற்றும் கீழ்மைகள் குறித்த ஒரு பொதுச் சித்திரத்தை balanced ஆக உருவாக்கிக் கொள்ளுதல் நலம் !
Reference : South Indian Inscriptions Volume 22 : No 87.
நன்றிகள் :
1 . இந்த கல்வெட்டின் ஒளிநகலை எடுத்து அன்புடன் உதவிய சகோதரி திருமதி Padmapriya Baskaran அவர்களுக்கு .
2 . இந்தக் கல்வெட்டின் சில வரிகளை சரியாக பொருள் கொள்ள எனக்கு அன்புடன் உணர்த்திய ஆசிரியர் - சகோதரி திருமதி Soundari Rajkumar அவர்களுக்கு

No comments:

Post a Comment