Wednesday, December 14, 2022

புகழூர் தமிழ் பிராமி கல்வெட்டுகளும் சேரன் செங்குட்டுவன் காலமும்

புகளூர் பிராமி 

https://ponkarthikeyan.wordpress.com/2019/05/31/pugalur-bhrami-chera-kings/தென்னிந்தியாவில் கிடைக்கப்பெற்ற பிராமி எழுத்துகள் சங்க இலக்கியங்களின் காலக்கட்டத்தோடு ஒப்பிட்டுக் கூறப்பட்டாலும் சங்க கால அரசர்களைப் பற்றிய குறிப்புகள் குறைவாகவே காணப்படுகின்றது. மாங்குளம் கல்வெட்டு சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பாண்டிய அரசனான நெடுஞ்செழியன் எனும் பெயரைக் குறிப்பிடுகிறது. மாக்கோதை , குட்டுவன் கோதை , கொல்லிரும்பொறை போன்ற சேர மன்னர்களின் பெயர் பொறித்த நாணயங்கள் கிடைத்துள்ளன. பானை ஓட்டினில் பெருங்கிள்ளி பெயரைக் கண்டிருக்கிறேன். ஜம்பை கல்வெட்டு அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறிப்பிடுகிறது.

இது போலவே புகளூரில் இரு கல்வெட்டுகள் மூன்று தலைமுறைப்பெயர்களைக் குறிப்பிடுகிறது. அம்மூவரின் பெயர்களைக் கொண்டு அவர்களை சேர மன்னர்களென உறுதி செய்துள்ளனர்.

https://ta.wikipedia.org/s/vdy


” முதா அமண்ணன் யாற்றூர் செங்காயிபன் உறை(ய்)
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் 
பெருங்கடுங்கோ மகன் ளங்
கடுங்கோ ளங்கோ ஆக அறுத்த கல்”

யாற்றூரைச் சேர்ந்த மூத்த அமணனான செங்காயிபன் என்பானுக்கு ஆதன் செல்லிரும்பொறையின் மகன் பெருங்கடுங்கோவின் மகனான இளங்கடுங்கோ கற்படுக்கை செய்தளித்ததைக் குறிப்பிடுகிறது. இளங்கடுங்கோ இளங்கோ எனக் குறிப்பிடப்படுவதால் அவன் இளவரசு பட்டம் பூண்டிருந்திருக்கலாம். யாற்றூர் கரூர் அருகேயுள்ள ஆத்தூராக இருக்கலாம். தமிழ் பிராமி கல்வெட்டுகளில் சில கல்வெட்டுகளே யாருக்காக செய்தளிக்கப்பட்டது என்பதை கூறுகின்றது.

இளங்கடுங்கோ, இளங்கோ என்னும் சொற்களில் இகாரம் குறிப்பிடப்படாமல் எழுதப்பட்டுள்ளது. அய்யனார் குளம் பிராமி எழுத்துகளிலும் இவ்வாறே “குணாவின் ளங்கோ” இகாரம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இம்மூன்று மன்னர்களையும் கருவூரைத் தலைநகராகக் (?) கொண்டு ஆண்ட இரும்பொறை மரபின் சேர அரசர்களாக கருதப்படுகிறார்கள். பதிற்றுப்பத்தின் ஏழாம் எட்டாம் ஒன்பதாம் பத்திற்கான அரசர்களின் பெயர்களோடு ஒப்பிட்டு அவ்வரசர்கள் இவர்களாகவே இருத்தற் கூடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

செல்வ கடுங்கோ வாழி ஆதன் – ஆதன் செல்லிரும்பொறை

பாலை பாடிய பெருங்கடுங்கோ / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – பெருங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ / குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை – இளங்கடுங்கோ

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் வஞ்சி முற்றம் பொருநை நதிக்கரையில் இருந்தது ( புறம் 387 ). அமராவதி ஆற்றின் பழம்பெயர் ஆண் பொருநை.









https://www.tamilvu.org/ta/tdb-titles-cont-inscription-html-kollirumpurai-coins-280455

கொல்லிரும்புறைக் காசுகள் 

சங்க காலச் சேரர் கொல்லிப்புறை,- கொல்லிரும்புறைக் காசுகள்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

சங்க காலத் தமிழகத்தை ஆட்சிபுரிந்த மூவேந்தர்களுள் சேர மரபினரும் ஒருவர். சேர மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் விரிவாகக் குறிப்பிடுகின்றன. சேர மன்னர்களின் பெயர்களில் ஆதன், குட்டுவன், இரும்பொறை, கோதை போன்ற பின்னொட்டுக்கள் பெரும்பாலும் இடம்பெறுகின்றன.

பொதுவாக சேரர் காசுகளின் சின்னங்களும் எழுத்துப்பொறிப்புக்களும்

பாண்டியர் காசுகளைப் போன்று சேரர் நாட்டிலும் வட இந்திய முத்திரைக்காசுகளுடன் , சேரர்கள் தமது வில், அம்புச் சின்னங்களைப் பொறித்துள்ள முத்திரைக் காசுகளும் கிடைக்கின்றன. பெரும்பாலும் சேரர்களது காசுகளின் ஒரு பக்கம் அவர்களது குலச் சின்னமான நாணேற்றப்பட்ட வில்லுடன் அம்பு இடம்பெறும். மறு பக்கம் கோட்டுருவ யானை, அம்பு பூட்டிய வில், மும்முகடு, மீன்கள், நதி போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன. சங்ககால அரசர்களுள் தங்கள் பெயர்களில் காசுகளை அதிகம் வெளியிட்டிருப்பது சேரர்களே. சேரர் காசுகள் பெரும்பாலும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகைகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. ஒரு சில தஞ்சாவூர், மதுரை, திருக்கோயிலூர் , மடிகேரி (கருநாடகம்), ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றன.

கொல்லிப்புறை-கொல்லிரும்புறை

உலோகம்:

கொல்லிப்புறை, கொல்லிரும்புறைய் ஆகிய இரு காசுகளும் செப்பு உலோகத்தாலானவையாகும்.

மொழி: தமிழ்

எழுத்து: சங்க காலத்தமிழ் எழுத்து (தமிழி)

அளவு: இக்காசு 2.2 செ.மீ. விட்டமும் 6.7 கிராம் எடையும் உடையது


முன்புறம்: ஒரு தோரணவாயிலின் மத்தியில் ஒரு வீரன் அல்லது மன்னன் உருவம் நிற்கும் நிலையில் வலது கையில் வாள் ஏந்தியவாறு காட்டப்பட்டுள்ளது. தோரணவாயிலின் மேற்புறம் காசின் விளிம்பில் “கொல்லிப்புறைய்” என்ற வாசகம் தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

பின்புறம்: காசின் பின்புறம் சேர அரசின் சின்னமான வில் அம்பு உள்ளது.

குறிப்பு : இக்காசுகள் தனியார் சேகரிப்பில் உள்ளதால் மொத்தம் எவ்வளவு காசுகள் கிடைத்துள்ளன, எல்லா காசுகளின் எடையும் ஒரே அளவினதாக உள்ளதா? என்பன போன்றவை ஐயத்திற்குரியன.

பதிற்றுப்பத்து, சேரர்களைப் பற்றி அறிய உதவும் மிகச்சிறந்த ஆதார நூல் ஆகும். இதில் இருவழி மரபினர் குறிப்பிடப்படுகின்றனர். ஒன்று இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும், அவன் தம்பி பல்யானைச்செல்கெழு குட்டுவன் , அவனது மக்கள் களங்காய்கன்னி நார்முடிச்சேரல், கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோரைக்கொண்ட ஒரு மரபாகும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தந்தை உதியஞ்சேரல் என்று கூறப்பெறுகின்றான். எனவே இவ்வழி உதியன்சேரல் வழி எனக்கொள்ளலாம். மற்றொரு வழியினர் செல்வக்கடுங்கோ வாழியாதன், இவன் மகன் பெருஞ்சேரல் இருப்பொறை, குட்டுவன் இரும்பொறை. குட்டுவன் இரும்பொறையின் மகன் இளஞ்சேரல் இரும்பொறை ஆகிய இவர்கள் குறிப்பிடப்பெறுகின்றனர். செல்வக் கடுங்கோ வாழியாதனின் தந்தை அந்துவன்சேரல் இரும்பொறை ஆவார். எனவே இவர்களை பொறையன் அல்லது அந்துவன் சேரல் வழியினர் எனக் கூறலாம். இவ்வழியினருடன் மற்ற இலக்கியங்களில் குறிக்கப்பெறும் அரசர்களையும் நோக்குகையில் சேரர்கள், சேரன், சேரலாதன், கோதை, குட்டுவன், இரும்பொறை என்று குறிப்பிடப்பெறுகின்றனர்.

எவ்வாறெனினும் கிடைக்கப்பெற்றிருக்கும் நாணயங்களின் அடிப்படையில் நோக்குகையில் (கொல்லிப்புறை, கொல்லிரும்புறை) குட்டுவன் கோதை, மாக்கோதை) "பொறை", கோதை" என்ற இரு குடிப் பெயர்களே குறிப்பிடப்பெறுகின்றன. எனவே அது தொடர்பான செய்திகளைக் காண்போம்

பொறை அல்லது இரும்பொறை

பொறை என்றால் கல், பாறை, சிறுகுன்று, மலை என்று பொருள்படும். இரும்பொறை என்பது பெரிய பாறை என்று பொருள். கொல்லிப்புறை, கொல்லிரும்புறை என்ற பெயருடன் எந்த அரசர்களும் காணப்பெறவில்லை. புகழூர் கல்வெட்டில் மட்டுமே, செல்லிரும்பொறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சொல் கொல்லிரும்புறையை குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே இந்நாணயத்தினை இவர் வெளியிட்டிருக்கலாம் எனக் கூறவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் இலக்கியங்களில் பல இரும்பொறைகள் குறிப்பிடப்பெறுகின்றனர். தகடூர் எறிந்த கோப்பெருஞ்சேரல் இரும்பொறை . இவன் கொல்லிமலை கூற்றத்தில், பல வேற்படைகளோடு வந்த அதியமானோடு இருபெரு வேந்தரையும் சேர்த்து வென்றுள்ளான். பகைவரின் முரசு , குடை, அணிகலன் ஆகியவைகளைக் கைப்பற்றியுள்ளான். போர்க்கள வேள்வி செய்துள்ளான். தகடூரை அழித்து அதன் மதிலைக் கைப்பற்றியுள்ளான். எனவே, "தகடூர் எறிந்த" என்ற அடைமொழி கொண்டுள்ளான். ஒருகால் கொல்லிமலையை வென்றதனால் அதன் வெற்றிச் சிறப்பை வெளிப்படுத்தும் பொருட்டு இவர் "கொல்லிரும்பொறை" என்று பெயர் பொறித்த நாணயத்தை வெளியிட்டிருக்கலாம்.

சேரமான் கருவூர் ஏறிய ஓள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை உம்பற் காட்டில் ஆட்சி செய்து கொண்டிருந்த கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கொங்குநாட்டுக் கருவூருக்கு வந்து அரியணையேறி அரசு புரியலானான். ஒரு வேளை இவனே கருவூர் வந்து ஆளத்துவங்கிய முதல் சேர அரசனாக இருக்கலாம், என மயிலை வேங்கடசாமி கருதுகின்றார். மேலும் இவர் புகழூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் "பெயர்" இவனையே குறிப்பதாக்க் கருதுகிறார்.

இம்மன்னர்கள் மட்டுமின்றி மாந்தரன் பொறையன் கடுங்கோ சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை, சேரமான் மாந்தரன்ஞ்சேரல் இரும்பெறை, சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இவர்களும் பொறை என்ற பின்னொட்டைக் கொண்டுள்ளனர். இவர்களுள் இறுதியாக்க் குறிப்பிடப்பெற்றிருக்கும் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், கொல்லிமலையை வெற்றி பெற்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கியக் குறிப்புகளுடன், இந்நாணயங்களைக் கண்டுபிடித்து தமிழக நாணயவியல் வரலாற்றில் ஒரு புதிய வளர்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர்களது கருத்துகளையும் நோக்குகையில் கருவூர் ஏறிய ஔ¢வாட்கோப்பெருஞ்சேரல் இரும்பொறையே இந்நாணயத்தை வெளியிட்டதாக்க் கூறும் நாகசாமியின் இலக்கிய விளக்கங்கள், தகடூர் எறிந்த கோப்பெருஞ்சேரல் இரும்பொறையும், கருவூர் ஏறிய இரும்பொறை ஆகிய இருவரும் ஒருவரே எனக்கருத வழி வகுக்கிறது. இவரது கருத்தை அடியொட்டி பத்மாவதி, இரும்பொறை காசை வெளியிட்ட அரசன் மாந்தரன் சேரல் இரும்பொறை என்று அனுமானிக்கிறார். சங்க கால அரசர்களின் காசுகளைப் பற்றி சிறந்ததொரு நூலை வெளியிட்டுள்ள ப. சண்முகம் இக்காசுகளை வெளியிட்ட சேர அரசர்களைச் சரியாக அடையாளம் காண்பது தற்பொழுது இயலாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். சேரர்களது தலைநகரம் பற்றிக் குறிப்பிடுகையில் "பொறையன்கொல்லி" என்ற இடத்தை மு.இராகவையங்கார் குறிப்பிடுகின்றார். இது மேலும் ஆராயத்தக்க கருத்தாகிறது.

காலம்

இக்கருத்துக்களை ஒன்று சேர்த்து ஆராயும்போது கொல்லிப்புறை, கொல்லிரும்பொறை என பெயர் பொறிக்கப்பெற்ற இக்காசுகளை ஆர். நாகசாமி குறிப்பிடுவதைப்போல் கொல்லிமலையை வெற்றிக்கொண்ட மன்னர்களே வெளியிட்டிருக்க வேண்டும். சங்க காலத்தின் அடிப்படைச் சான்றாக விளங்கும் இலக்கியங்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. எனவே இவரது கருத்தோடு இலக்கிய ஆசிரியர்களின் கருத்துக்களும் இங்கு ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகிறது. எழுத்தமைதிக்கொண்டு நோக்குகையில் காசிலுள்ள கொல்லிப்புறை, கொல்லிரும்புறை என்ற எழுத்துகளும் புகளூர் தமிழ் பிராமி கல்வெட்டில் உள்ள செல்லிரும்புறை எழுத்துகளும் காலத்தால் ஒத்ததாகவே தெரிகிறது. எனவே கல்வெட்டு பொறித்தவரும் காசு வெளியிட்டவரும் ஒரே அரசரே என்பது ஏற்கத்தக்கது. இதற்கு காலம் கி.பி 2ஆம் நூற்றாண்டென ஐராவதம் மஹாதேவன் கணிக்கிறார். எனவே அனைத்துத் தரவுகளின் அடிப்படையில் இக்காசுகளின் காலம் பொ.ஆ 2 ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கலாம்.

கல்வெட்டுகளில் இடம் பெறும் சேர அரசர்களைப் பதிற்றுப்பத்துப் பாடல்களில் இடம்பெறும் எட்டு, ஒன்பது, பத்தாம் பத்துக்குரிய தலைவர்களாக ஆர். பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்து பெரும்பாலான வரலாற்றறிஞர்களால் இன்று வரை ஏற்கப்பட்டும் உள்ளது.

மூதா அமண்ணன் யாற்று செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்புறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் இளங்
கடுங்கோன் இளங்கோ ஆக அறுத்த கல்
புகளூர் தமிழ் பிராமி கல்வெட்டு

என்பதே வாசகம். இக்கல்வெட்டில் வரும் கோ ஆதன் செல்லிரும்பொறை என்பவரைச் செல்வக்கடுங்கோன் வாழியாதனாகவும் அதற்கு பின் குறிப்பிடும் பெருங்கடுங்கோனைச் செல்வக்கடுங்கோனின் மகன் பாலை பாடிய பெருங்கடுங்கோன் என்றும் பெருங்கடுங்கோவின் மகன் மருதம் பாடிய இளங்கடுங்கோன் என்பவராக அடையாளம் காட்டியுள்ளார். சங்க இலக்கியங்களைத் திறம்பட ஆய்வு செய்துள்ள வ. குருநாதன் மாந்தரம் பொறையன் கடுங்கோ என்றும் கொச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரச்சேரல் இரும்பொறை என்ற மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதனை ஒட்டிய காலத்தவன். இவன் தனது மாந்தருஞ்சேரல் இரும்பொறை என்ற பெயரால் அந்துவஞ்சேரல் இரும்பொறையோடும் மாந்தரம் பொறையன் கடுங்கோன் என்னும் பெயரால் கடுங்கோவெனும் செல்வக்கடுங்கோ வாழியாதனோடும் ஒற்றுமைப் படுத்தப்படுவதைத் தெளிவுற விளக்குகிறார். அத்துடன் இவன் செல்வக்கடுங்கோவிற்கு தம்பி அல்லது தாயத்தினன் என்றும் கூறி அதை உறுதிப்படுத்தும் இலக்கியச்சான்றுகளை வைக்கின்றார். அத்துடன் கல்வெட்டுக்களில் குறிப்பிடும் மூன்று மரபினை ஒட்டி மாந்தருஞ்சேரல் இரும்பொறையின் வழித்தோன்றலே (மகனே) பாலை பாடிய பெருங்கடுங்கோ என்றும் அவனது மகனே மருதம் பாடிய இளங்கடுங்கோ என்றும் தெளிவுற விளக்குகிறார். மாந்தருஞ்சேரல் இரும்புறை மன்னனும் கொல்லிமலையை வெற்றிக்கொண்டுள்ளார். எனவே மாந்தருஞ்சேரல் இரும்பொறையே இக்காசை வெளியிட்ட அரசர் என்பதுடன் கல்வெட்டு பொறித்த அரசரும் இவரே என்பதும் இதனால் ஐயமறத் தெளிவாகிறது.

எழுத்தமைவு

இதை கொல்-இப்-புறை எனப் பிரித்து கொல்லிப்புறை என்றும் படிக்கலாம். மூன்றாவதாக உள்ள எழுத்தை "இ" என்று குறிலாகவும், "ஈ" என்று நெடிலாகவும் படிக்கலாம். நாணயவியலாளர்கள் இதை நெடிலாகவே குறிப்பிடுகின்றனர். இவ்வெழுத்தும் மேலே கூறப்பெற்ற முறையிலேயே கொல்லிரும்புறை எனப் படிக்கப்பெறவேண்டும். ஆனால், பெயரின் இறுதியில் "ய்" என்ற மெய் வந்துள்ளது. இவ்விதம் வருவது தமிழ் பிராமி எழுத்து வடிவங்களுக்குப் புதிதல்ல.

இப்பெயரின் இறுதி எழுத்து பார்வையிட்ட ஒரு நாணயத்தில் தெளிவாக இல்லை. ஆயினும், கிடைக்கப்பபெற்ற மற்ற நாணங்களைக் கொண்டு, இந்நாணயத்திலும், கொல்லிரும்புறை என்றே பொறிக்கப்பெற்றுள்ளது எனக் கருதலாம். மூன்று நாணயங்களையும் நோக்குகையில் மூன்றிலுமே முதல் எழுத்து சிறிது வேறுபட்டே காணப்பபெறுகின்றன. இஃது புகழூர்க் கல்வெட்டெழுத்துக்களை ஒத்திருப்பதால், இந்நாணயங்களுக்கும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பெறுகின்றது. ஆனால் ஆர். கிருஷ்ணமூர்த்தியும் ஆர்.நாகசாமியும் பொ.ஆ முதல் நூற்றாண்டு எனக் கணித்துள்ளனர்.


 

No comments:

Post a Comment