Thursday, August 8, 2019

தொல்காப்பியம்காலம்பொ.ஆ. 8ம் நூற்றாண்டே

'மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்





தொல்காப்பியப் பார்வையில் 'எழுத்து' - முனைவர் த. கண்ணன்

தமிழ் மொழியில் எழுத்திற்கென தனித்ததொரு இலக்கணம் உள்ளது. எனினும், 'எழுத்து' என்பதற்கான பொருள் நன்கு உணரப்படாமலே இருக்கின்றது. எனவே, எழுத்து என்பதற்கான பொருளைத் தொல்காப்பியப் பார்வையில் விளக்குதல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

எழுத்திற்கான பொருள்கள்

எழுத்து என்பதை விளக்கும் பல்வேறு பகுதிகள் இரண்டு விதமாக அமைகின்றன. அவையாவன,
1. எழுதப்படுதலின் எழுத்தாயிற்று 2. எழுப்பப் படுதலின் எழுத்தாயிற்று என்பனவாகும்

இவற்றை, ' இவ்வெழுத்தென்னும் பெயர் முதன் முதல் மக்கள் மொழிகளைத் தோற்றி வருங்காலத்து அவர்கள் தம் கருத்தைப் பிறருக்குப் பேச்சு முறையால் உணர்த்தாமல் தரையிலும் ஓலை முதலியவற்றிலும் அவ்வொலிகளை எழுதிக் காட்டத் தொடங்கிய காலத்துப் பெற்ற காரணப் பெயராதல் வேண்டுமென்பது 'எழுதப்படுதலினெழுத்தே' என வரும் பழைய சூத்திரத் தொடராற் புனலாம்' என்றும் 'எழுத்தாவது கட்புலனாகா உருவுங் கட்புலனாகிய வடிவுமுடைத்தாக வேறு வேறு வகுத்துக் கொண்டு தன்னையே யுணர்த்தியுஞ் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையாம்'1 என்றும் விளக்கிக் கூறுவர்.

தொல்காப்பியப் பார்வை
'தொல்காப்பியம்' தமிழ் மொழியின் தனிப்பெரும் சிறப்பாகும். இந்நூலினை அடுத்து குறிப்பிடத்தகுந்த எழுத்திலக்கணநூல் 'நன்னூல்' ஆகும். இந்நூல்களுக்கு இடையே ஒற்றுமையும் வேற்றுமையும் காணப்படுகின்றன. எனினும், எழுத்திலக்கணப் பகுதிகளை ஆராயும் உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் ஒன்றன் கருத்தை மற்றொன்றிடத்துள் புகுத்திக் காண்கின்றனர். இதனால் ஒரு நூலின் நுட்பமான பகுதிகள் வெளிக்கொணரப்படாமல் போகின்றன. எனவே தொல்காப்பிய நூற்பாக்களை மட்டும் கொண்டு எழுத்தென்பதற்கான பொருளை வரையறுப்பது அவசியமாகிறது.

எழுத்துக்களின் எண்ணிக்கை

தொல்காப்பியம் குறிப்பிடும் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆகும். இதனை,
'மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்
இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது
அறுநான்கு ஈற்றொடு நெறிநின்று இயலும்'
( தொல்.எழுத்.103: 1 – 3)
என்னும் நூற்பா உணர்த்தும். இம் முப்பத்துமூன்று எழுத்தையும் தொல்காப்பியம் இரண்டாகப் பிரிக்கின்றது. அவை 1. அகரம் முதலா னகரம் இறுதியாகிய 30, 2. சார்ந்து வரல் மரபினையுடைய மூன்று ஆகும். ( தொல்.எழுத்.1,2)
இம் முப்பத்துமூன்று எழுத்துக்களுள் வரிவடிங்கள் மூப்பத்தோர் எழுத்திற்கே உள்ளன. குற்றியலிகரம், குற்றியலுகரம் என்ற இரண்டிற்கென தனி வடிவங்கள் இல்லை. இவற்றால், வடிவம் உள்ளனவும் வடிவம் இல்லாதனவும் எழுத்தெனக் கூறப்பட்டுள்ளதால் எழுத்தெனக் கொள்வதற்கு வடிங்கள் முக்கியம் அல்ல என்பது விளங்கும்.





உயிர்மெய்யெழுத்துக்கள்
தொல்காப்பியம் உயிர்மெய் எழுத்திற்கான வடிவங்களை,
'புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உருவு உருவு ஆகி அகரமோடு உயிர்த்தலும்
ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும்
ஆஈர் இயல உயிர்த்தல் ஆறே' ( தொல்.எழுத்.17 )

என்று விரிவாக எடுத்துரைக்கின்றது. இவ் வடிவங்களைத் தொல்காப்பியம் எழுத்துக்களின் எண்ணிக்கையில் சேர்க்கவில்லை. தொல்காப்பியம் கூறும் முப்பத்து மூன்று எழுத்துக்களுள் இவை இடம்பெறவில்லை. உயிர்மெய் வடிவங்களைக் குறிப்பிட்ட தொல்காப்பியம் அவற்றை எழுத்துக்கள் எனச் சேர்க்கவில்லை. இதனால் வடிவங்களே எழுத்துக்களாகும் என்ற கருத்து பொருந்தாமல் போகின்றது.
அளபெடை
எழுத்துக்கள், தனக்குரிய மாத்திரை அளவில் இருந்து அளபெடுத்தல் அளபெடையாகும். ஓர் எழுத்து அளபெடுத்துள்ளதை உணரும் வகையில் அவ்வெழுத்திற்கு இனமான குற்றெழுத்து அதன் அருகில் குறிக்கப்பெறும். இதனை,
'குன்றுஇசை மொழிவயின் நின்றுஇசை நிறைக்கும்
நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே.' ( தொல்.எழுத். 41 )
என்று கூறுகின்றது தொல்காப்பியம். இதன் அடிப்படையில் அளபெடை, 'ஆடூஉ'
என்னும் முறையில் எழுதப்படுகிறது. இங்கு 'உ' ஓர் ஓசையின் அளவினைக் குறிக்கின்றதே தவிர தனியெழுத்தாக இடம்பெறவில்லை.

ஐகார ஒளகாரங்களின் அளபெடை குறிக்கப்படும் போது அதனுடன் இகர உகரங்களின் வடிவங்கள் குறிக்கப்பெறும் என்பதை,
'ஐ ஒள என்னும் ஆ ஈர் எழுத்திற்கு
இகரம் உகரம் இசை நிறைவு ஆகும்' ( தொல்.எழுத். 42)
என்று கூறுகின்றது தொல்காப்பியம். இங்கு 'இ' 'உ' என்னும் வடிவங்கள் 'ஐ' 'ஒள' என்னும் ஓசையில் ஒலிக்கின்றதேயன்றி இகர உகர ஓசைகளாக ஒலிக்கவில்லை. இவை போன்றே
'அகர இகரம் ஐகாரம் ஆகும்' ( தொல்.எழுத். 54)
'அகர உகரம் ஒளகாரம் ஆகும்' ( தொல்.எழுத். 55)
'அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்' ( தொல்.எழுத்.56)
என்னும் நூற்பாக்களும் நோக்கத்தக்கனவாகும்.
இவற்றால் எழுத்திற்குரிய முதன்மை ஒலியாக இருக்கின்றதே தவிர அதன் வடிவமாக இல்லை என்பது விளங்கும்.
எழுத்தென்பது ஒலிகளே
எழுத்துக்களின் முறை வைப்பை நோக்கும் போது எழுத்துக்களுக்கு ஓசைகளே முக்கியம் என்பதை அறிய முடிகின்றது.
எழுத்துக்களுள் அகர ஆகாரங்கள்; முதலாவதாக வைத்து எண்ணப்படுகின்றன. இதற்குக் காரணம் அகர ஆகாரங்கள் வாயைத் திறக்கும் அளவில்,; பிற முயற்சிகள் இன்றி ஒலிக்கும் இயல்பின. இவற்றைத் தொடர்ந்து அமையும் பிற எழுத்துக்கள் அங்காத்தலோடு பிற முயற்சிகளும் உடையனவாகும்.
உயிரை அடுத்து மெய்கள் கூறப்படுதற்கும் ஒலிப்பு முறைகளே காரணமாகும். அது மட்டுமின்றி மெய் எழுத்துக்கள் தனித்து கூறப்படும் போது அவற்றிற்கு உயிர் எழுத்துக்களின் உதவி தேவையாகின்றது. இதனை, 'மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்' ( தொல்.எழுத்.46.) என்னும் நூற்பாவால் அறியலாம். இவற்றால் எழுத்துக்கள் ஒலிகளின் அடிப்படையில் நோக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டு தொகை செய்யப்பட்டுள்ளன என்பது உணரப்படும்.

முடிவுரை
எழுத்தென்பதற்;கான நேரிய பொருளைத் தொல்காப்பியத்தின் வழி ஆராய்தல் தேவையாகிறது. தொல்காப்பியம் கூறும் எழுத்துக்களின் எண்ணிக்கை, உயிர்மெய் எழுத்திற்கான வடிவங்கள், அளபெடை அமைப்பு எனும் இவற்றை நோக்க எழுத்திற்கு வடிவங்கள் முக்கியம் அல்ல என்பதும் இவற்றுடன் எழுத்துக்களின் முறைவைப்பை நோக்கும் போது எழுத்திற்கு ஒலிகளே முக்கியம் என்பதும் பெறப்படுகின்றது. இவற்றால் எழுத்து என்னும் சொல் எழுதுதல் எனும் பொருளில் அமையவில்லை என்பதும் ஒலிகள் எழுதல் எனும் பொருள் குறித்து அமைந்திருக்க வேண்டும் என்பதும் பெறப்படுகின்றது.

சான்றெண் விளக்கம்
1. க. வெள்ளைவாரணன், தொல்காப்பியம் நன்னூல் எழுத்து ப.17

No comments:

Post a Comment