காஞ்சிக் கடிகை
பல்லவர் கோநகரமாக விளங்கிய காஞ்சிபுரம் கல்வியில் சிறந்த மாநகரமாகத் திகழ்ந்து வந்தது. காஞ்சிபுரத்தில் இருந்த கல்வி நிலையம் கடிகா (Giatika கடிகை) எனப்பட்டது. கடிகை என்ற சொல் கடிகா என்ற வடசொல்லின் தற்பவமாகும். ‘கட்’ என்ற தாதுவினின்று தோன்றியது இச் சொல்; இத் தாது ‘ஆழ்ந்து வேலை செய்’, ‘சுறுசுறுப்பாக இரு’ என்ற பொருள்படும்; எனவே கடிகா என்பது ‘ஆழ்ந்து அறிவுபெற முயலும் இடம்’ என்று பொருள்படக்கூடும் என்று ஆய்வாளர் கூறுகிறார்கள். கீல்ஹார்ன் என்பார் கடிகா என்பதைக் கோஷ்டி என்ற சொல்லுடன் தொடர்புபடுத்திக், கடிகா என்பது தூய பிராம்மணர்களின் கூட்டத்தைக் குறிக்கும் என்பர்.
காஞ்சிக் கடிகையின் பழமை
ஏறத்தாழக் கி. பி. 345 முதல் 370 வரை மயூரசர்மன் என்ற கதம்பகுல அரசன் ஆண்டு வந்தான். இவன் விர மறையவன். இவன் ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த நாடுகளைக் கைப்பற்றி ஆண்டவன். இவனுடைய பிரபவுத்திரன் (கொட்பேரன்) காகுத்ஸவர்மன் எனப் பெறுவான். இவன் பல்லவரை அறவே வெறுத்தவன். இவனது கல்வெட்டு ஒன்று தாளகுண்டாவில் கிடைத்துள்ளது. தாளகுண்டா, மைசூர்ப் பகுதியில் சிமோகா ஜில்லாவில் சிகார்பூர் தாலுகாவில் உள்ள ஊராகும். இவ்வூர்க் கல்வெட்டில்,“ மயூர சன்மன் காஞ்சிக் கடிகையில் படித்தான்” என்று சொல்லியிருக்கிறது. ஏறத்தாழக் கி.பி. 360இல் இது நிகழ்ந்திருக்கலாம். எனவே 4-ஆம் நூற்றாண்டிலேயே வேற்றுநாடுகளினின்று காஞ்சிபுரத்துக்குப் பிறர் வந்து கல்வி கற்கக்கூடிய அளவு பழமை பெருமையும் பொருந்தியிருந்தது இக் காஞ்சிக் கடிகை என்று கொள்ளலாம்.
எத்தகைய கல்வி
மயூரசர்மன், தார்க்குக'னாகக் காஞ்சிக்குச் சென்றான் என்று சொல்லப்படுகிறது. (கடிகாம் விவேச தார்க்குகா:). தார்க்குகன் என்பது யாசகன் என்று பொருள்படும். இதனால் அறிவை யாசித்தற்கு மயூரசன்மன் சென்றான் என்று தெரிகிறது. மயூரசன்மன் தான் மட்டும் செல்லவில்லை; தன் ஆசிரியன் வீரசர்மனுடன் சென்றான். பிரவசனம் முழுவதையும் கற்க விழைந்து அங்கு இருவரும் சென்றனர். (அதி ஜிகாம்ஸுஹ் ப்ரவசநம் நிகிலம்.) இதனால் வேதங்களைப் பிரவசனம் செய்யச் சென்றமை அறிய வருகிறது. பிரவசனம் செய்தலாவது கூர்ந்து ஆய்ந்து கற்பது என்று பொருள்படும். ஆசிரியனும் மாணவனும் ஆகிய இருவரும் வேதங்களில் ஆராய்ச்சிக் கல்வி கற்றற்பொருட்டுச் சென்றனர்போலும். பல்லவ மன்னனுகிய நந்திவர்மனது காசாக்குடிச் செப்பேடுகளும், கடிகையில் நான்கு வேதங்களும் கற்பித்தனர் என்று கூறுகின்றன. (சாதுர்வேத்யமவீவ்ருதத் ஸ்வகடிகாம் பூதேவ தாபக்திதா.) எனவே காஞ்சி கடிகாவில் வேத ஆராய்ச்சிக் கல்வியே கற்பிக்கப் பெற்றது என்பது தெளிவு.
கடிகையும் பல்லவ அரசரும்
காஞ்சிக் கடிகா பல்லவ அரசரது மேற்பார்வையில் இருந்தது. அவர்களுடைய ஆதரவிலேயே சிறப்புடன் திகழ்ந்தது. பல்லவ அரசர் யாவரும் அதனைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வந்தனர். அதனிடத்தில் பெருமதிப்பு வைத்திருந்தனர். பல்லவர் ஆதரவில் திகழ்ந்த இக் கடிகையில் கதம்ப அரசைத் தோற்றுவித்த மயூரசர்மன் (முன்னர்க் கூறியது போலப் படிக்க வந்தவன்) முற்றக் கற்க முடியாதவனானான். ஒரு சமயம் பல்லவருடைய குதிரைச் சேகவனுக்கும் மயூரசர்மனுக்கும் கடுமையாகச் சண்டை மூண்டது. “அந்தோ! இந்தக் கலியுகத்தில் பிராமணர்கள் கூடித்திரியரைக் காட்டிலும் வன்மை குறைந்தவராகவே இருக்கிருர்களே! என்னதான் தாம் குருவைத் தொழுது சீராக வேதத்தைப் படித்தாலும் பிரமசித்தி பெற அரசனது உதவியைத்தானே நாட வேண்டியிருக்கிறது? இதனினும் துன்பந் தரத்தக்கது யாது?” என்று அந்தக் குதிரைச்சேகவன் ஏளனமாகப் பேசினானாம். இதனைக் கேட்டதும் மயூரசர்மன் கொதித்து எழுந்தான்; குசையும் சமிதையும் கற்களும் சுருக்கும் நெய்யும் பிறவும் ஏந்தும் கையில் ஒளி பொருந்திய வாளை ஏந்தினான்; பல்லவனுடைய காவலர்களை வென்று, காஞ்சியை விட்டு ஸ்ரீபர்வதம்வரை பரவியுள்ள அடவியில் புகுந்து சென்றான்.
பல்லவரின் தொடர்ந்த ஆதரவு பல்லவர்க்கும் மயூரசர்மனுக்கும் விரோதம் இருந்தமையால்தான் மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்தது; மயூரசர்மனும் பிரமசித்தி அடையாது ஓடவேண்டியவனானான்
ஏறத்தாழக் கி. பி. 400க்குச் சிறிது முற்பட்ட காலத்தில் கந்தசிஷ்யன் என்ற பல்லவ அரசன் இருபிறப்பாளர்தம் கடிகாவைச் சத்தியசேனன் என்ற அரசனிடமிருந்து மீட்டான் என்று வேலூர்ப்பாளையப் பட்டயம் பகர்கின்றது. ‘ஸ்கந்த எலிஷ்ய லததொ பவத்விஜா நாம் கடிகாம் ராஜ்ஞாஹ ஸத்ய ஸேநாஜ் ஜஹாரய:’ (S. I. I. Vol. II, Part V, P. 508, 112-13) என்பது பட்டயத்தில் கண்டது. எனவே நான்காம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சிக் கடிகா பகைவர் கைவசப்பட்டுக் கலங்கியது; கந்த சிஷ்யன் (கி.பி. 400-436) மீண்டும் அதைக் கைப்பற்றி நன்னிலையில் அமைத்தான்; பின்னர் இக்கடிகை 8-ஆம் நூற்றண்டின் இறுதி வரையில் சிறந்து விளங்கியது.
சிம்மவிஷ்னு காலத்தில் (கி. பி. 575-615) பாரவி என்னும் சிறந்த வடமொழிப்புலவர் காஞ்சிபுரத்துக்கு வரவழைக்கப் பெற்றார் என்று அவந்திசுந்தரி கதா கூறுகிறது.
ராஜசிம்மன் (கி. பி. 685-705) என்ற பல்லவ அரசன் காலத்தில் பல்லவப் பெருநாட்டில் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. பாரவியின் பேரனாகிய தண்டி பஞ்சக்கொடுமையை (அவந்தி சுந்தரி கதாஸாரம் என்ற நூலில்) பின்வருமாறு கூறுகிறார்,
சோழ பாண்டிய நாடுகள் பஞ்சக் கொடுமையால் மிக்க துயருற்றன. பெண்கள் புறக்கணிக்கப்பட்டனர். அக்கினி ஹோத்திரங்கள் நிறுத்தப் பெற்றன. நெற்களஞ்சியங்களில் நெல் இல்லையாயிற்று. வீடுகளிலிருந்து மக்கள் விரட்டப்பட்டனர். பெருமை அழிந்தது. மரங்கள் வெட்டுண்டன. செல்வர் கொலையுண்டனர். கெளசிகியின் மகனாகிய தண்டியின் உற்றார் உறவினர் சிலர் மாண்டனர். சிலர் நீங்கினர். தண்டியும் வாழ வழியின்றிக் கையில் பணமுமின்றி நாடெங்கும் சுற்றி அலேயலானான். பஞ்சம் நீங்கியபிறகு காஞ்சிக்கு வந்தான். அவந்திசுந்தரி கதை நூலை எழுதினான்.
பஞ்சத்தினால் சீரழிந்த கடிகையை ராஜசிம்மன் மீண்டும் நன்னிலையடையச் செய்தான். இதனையே வேலூர்ப்பாளையப் பட்டயம், “நரஸிம்ஹவர்மா புநர் வ்யாதாத்யோ கடிகாம் த்விஜா நாம்” என்று கூறுகிறது. (இதில் நரசிம்மவர்மன் என்றது ராஜசிம்மனேயே ஆகும்.)
இங்ங்ணம் சீர்செய்யப் பெற்றதும் கடிகை மீண்டும் நன்கு நடைபெறலாயிற்று. ஏறத்தாழ 705-இல் ராஜசிம்மன் இறந் தான். அவன் மகன் இரண்டாம் பரமேசுவரன் 710 வரை ஆட்சி செய்து அவனும் இறந்தான். அவனுக்கு அடுத்துப் பல்லவப் பேரரசை ஏற்று நடத்தத் தக்க அரசன் இல்லை. அப்பொழுது கடிகையாரும் பிறரும் இரண்யவர்ம மகாராஜன் என்பவனைக் கண்டு தமக்கோர் அரசனைக் கேட்டு, அவன் மகனையே (பல்லவமன்னாகிய நந்திவர்மனை) அரசனாகப் பெற்றனர். அந்நாளில் இக்கடிகையாருள் ஒருவர் தரணி கொண்ட போசர் எனப் பெற்றார். இவரை ‘வித்தாகமிகர்’ அதாவது ஆகமங்களில் சிறந்த அறிவு படைத்தவரென்று கூறுவர்.
இரண்யவர்ம மகாராஜன், தன் மகன் பன்னிரண்டு வயசுப் பாலகனாயிற்றே, எங்ஙனம் அவனை அரசனுக்குவது என்று மயங்க, இந்தத் தரணிகொண்ட போசர் இரண்யவர்ம மகாராஜனிடம், ‘பல்லவமல்லன் அரசாள்வதற்கு தவம் செய்திருக்கிறான்; அஞ்சவேண்டா’ என்று கூறி உடன்படுமாறு செய்தார். பின்னர் யானைத்தலே போன்ற மகுடங்களைக் கொணர்ந்து அளித்தபொழுது இரண்யவர்மன் திகைக்கத் தரணிகொண்ட போசர், “இவை களிற்றின் தலையல்ல; நின் மகனுக்குரிய மகுடங்கள்; ஏற்றுக்கொள்க” என்று கூறி ஏற்குமாறு செய்தார். பின்னர்க் காஞ்சிக்கு அழைத்துச்சென்று நந்திவர்மன் என்று பெயர் சூட்டிப் பல்லவமல்லனே அரசனாக்கினார். இங்ஙனம் கடிகையாரும், அவர்களுள் ஒருவராகிய தரணிகொண்ட போசரும் ஏறத்தாழக் கி. பி. 710-இல் அரசனைத் தேர்ந்தெடுப்பதில் பெரும்பங்கு கொண்டனர். (காஞ்சி புரம் வைகுண்டப் பெருமாள் கோயில் சிற்பங்களின் கீழ் உள்ள கல்வெட்டுத் தொடர்கள் இவற்றைக் கூறுகின்றன. S. I. I. Vol. IV, ST6:or 135 பார்க்க; 37 of 1888).
மேற்குறித்த பல்லவமன்னனாகிய நந்திவர்மனது ஆட்சிக் காலத்தில் சாளுக்கிய அரசனாகிய இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியின்மேல் படையெடுத்து வந்தான்; பல்லவரை முறியடித்துக் காஞ்சியில் நுழைந்தான்; கைலாசநாதர் கோயிலின் செல்வத்தைக் கண்டு வியந்தான்; ராஜஸிம் ஹேச்வரக்ருஹம்’ எனப்பெற்ற அக்கோயிலின் செல்வத்தை அக்கோயிலுக்கே அளித்தான். இதனை அக்கோயில் முன் மண்டபத் துாணில் கண்ட கல்வெட்டில் குறித்தான்; அன்றியும், ‘இதனை அழிப்பவர்களும், இவ்வரசனால்ல் அளிக்கப் பெற்ற தருமத்தை நிலைகுலையச் செய்பவரும் கடிகையிலுள்ள மகாஜனமான்களைக் கொன்றவர் புகும் உலகில் புகுக’ என்றும் எழுதியிருக்கிறான். இதனால் கடிகையாரிடம் பல்லவப் பகைவனாகிய விக்கிரமாதித்தனுக்கு இருந்த பெருமதிப்பு விளங்குகிறது. இதில் கடிகையாரை மகாஜனமான் என்று கூறியிருப்பது அறியத்தக்கது.
படித்தவர் யார்?
மயூரசர்மன் என்னும் வீர மறையவனும், அவன் ஆசிரியராகிய வீரசர்மனும் கற்றற் பொருட்டுக் காஞ்சிக் கடிகைக்கு வந்தனர். காசாகுடிப் பட்டயம், “ஸ்வகடிகாபூதேவதாம்” அதாவது பிராமணர்களை யுடையது கடிகை என்று கூறுகிறது. வேலூர்ப்பாளையப் பட்டயம் “கடிகாம்த்விஜநாம்” அதாவது இருபிறப்பாளர் கடிகை என்று கூறுகிறது. எனவே காஞ்சிக் கடிகையில் படித்தவர் பிராமணர்களே யாதல் கூடும். -
கடிகையின் அளவு
இக் கடிகையில் கற்றவர் எத்தனைப் பேர் என்று அறிவதற்குத் தக்க சான்றுகள் இல்லை. எனினும் காஞ்சிக் கடிகையில் பன்னுாறு மாணவர்கள் உயர்கல்வி கற்றிருத்தல் வேண்டும் என்றும், பல பேராசிரியர்கள் இருந்திருத்தல் வேண்டும் என்றும் கொள்ளுதலில் தவறில்லை. பல்லவ மன்னனுகிய இரண்டாம் நந்திவர்மனுடைய 62-ஆம் ஆண்டுக்குரிய திருவல்லம் சாஸனம் ஒன்றில் (S. 1. 1. Vol. 111, Part , P. 91). “இது அழித்தான் கடிகை ஏழா இருவரையும் கொன்ற பாவத்தில் படுவான்” என்று காணப்படுகிறது, ‘ஏழாஇருவர், என்றது ‘ஏழாயிரவர்’ என்பதாகும். இது இக்கல்வெட்டின் காப்புரைகளுள் ஒன்று. இதனால் கடிகையாரைக் கொல்வது ‘பார்ப்பார்த் தப்பிய கொடுமை’யினும் பாவமிக்கது என்ற கருத்து அறியவரும். இங்குக் கண்ட கடிகை ஏழாயிரவர் என்றது காஞ்சிக் கடிகையாரையே குறித்ததாதல் வேண்டும்’ இவ் வல்லம், காஞ்சிக்கு அண்மையில் இருப்பது. இந்நந்திவர்மனை அரசனுக்குவதில் பெரும்பங்கு கொண்டவர் காஞ்சிக் கடிகையார். இரண்டாம் விக்கிரமாதித்தனது கைலாசநாதர் கோயிலிலுள்ள கன்னடக் கல்வெட்டும் இங்ங்னமே காப்புரை கூறுகிறது, எனவே திருவல்லம் கல்லெழுத்துக் காப்புரையில் கண்ட கடிகை ஏழாயிரவர் காஞ்சிக் கடிகையாரே
ஆவர் எனலாம். தில்லை மூவாயிரவர், அஷ்டஸகஸ்ரம், (இரட்டபாடி ஏழரை இலக்கம், முந்நீர்ப் பழந்தீவு பன்னிராயிரம்) என்று எண்ணோடு பொருத்திக் குறித்தாற்போலக் கடிகையாரும் கடிகை ஏழாயிரவர் எனப்பெற்றனர். ஆகையால் காஞ்சிக் கடிகையில் ஏறத்தாழ ஏழாயிரம் பேர் இருந்தனர்போலும். (டாக்டர் ஸி. மீனாட்சி அவர்கள் திருவல்லம் கல்லெழுத்தில் குறிக்கப்பெற்றவர் வல்லத்துக் கடிகையார் என்று கருதுவர்.)
கடிகையின் செல்வ நிலைமை
பல்லவ அரசர்களது மேற்பார்வையிலும் பாதுகாப்பிலும் காஞ்சிக் கடிகை இருந்தது. ஆகவே செல்வத்திற்குக் குறையே இருந்திருக்க முடியாது. கடிகையார்க்கு என்று நிலபுலங்கள் இருந்திருத்தலும் கூடும்; இது ஒரு கல்லெழுத்தினின்று (285 of 1921; 119 of S. I. I., Vol. xii)தெரிய வருகிறது. இது கோப்பெருஞ்சிங்கனது 5-ஆம் ஆண்டு (கி.பி. 1240-க்குரிய) ஆத்தூர்க் கல்வெட்டு. இதில் "கடிகை யார் இறையிலி நிலம் மூன்றேகாலும்’ என்றுள்ளது. மூன்றேகால் என்பது மூன்றேகால் வேலி நிலத்தைக் குறிக்கும் இறையிலி நிலம் என்றமையின், இறையிலி ஆக்கியது இதற்கு முன்னரே என்று அறியலாம். 13-ஆம் நூற்ருண்டில் கடிகையார் இல்லாதவராயினர். எனினும் இறையிலி நிலம் அவர் பெயராலேயே அமைந்திருந்தது போலும். இதனுல் காஞ்சிக் கடிகையார்க்குச் சொந்தமான நிலங்களும் இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி.
காஞ்சியில் எங்கு இருந்தது
காஞ்சிபுரத்தில் இக்கடிகை எவ்விடத்தில் அமைந்து இருந்தது என்பதும் ஒரு நல்ல கேள்வி. வேதாகமங்களைப் படிப்பிக்கும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் பண்டைக் காலத்தில் கோயில்களில் அமைந்திருந்தன என்பது யாவரும் அறிந்தது. எனவே காஞ்சிக் கடிகையும் காஞ்சிபுரத்தில் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றில் இருந்திருத்தல் வேண்டும். கச்சிநெறிக் காரைக்காடு, கச்சி ஏகம்பம், திருமேற்றளி என்பன காஞ்சிக்கோயில்களுள் மிகப் பழமை வாய்ந்தவை. இவற்றுள் முதலிரண்டைச் சம்பந்தரும், பின் இரண்டை அப்பரும், கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் பாடியுள்ளனர். ஐயடிகள் காடவர் கோனும் க்ஷேத்திரத் திருவெண்பாவில் கச்சி ஏகம்பத்தைப் பாடியுள்ளார். எனினும் அப்பர் திருமேற்றளியைப் பாடுங்கால் ‘கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர்’ என்று குறிப்பிட்டுள்ளார்; ஆகவே மிகப் பழங்காலத்தில் கச்சி மேற்றளியில் கடிகை இருந்திருத்தல் வேண்டும் என்று ஊகிக்கலாம்; துணிந்து கூற இயலாது.
அப்பர் காலத்துக்குப் பிற்பட்ட ராஜசிம்மனால் கைலாச நாதர் கோயில் கட்டப்பெற்றது. அங்கு விக்கிரமாதித்தனது கல்வெட்டு இருக்கிறது என்றும் அக் கல்வெட்டை அழிப்பார் கடிகையாரைக் கொன்றவர் புகும் உலகில் புகுக என்று கூறி யுள்ளான் என்றும் மேலே கூறப்பட்டது. கடிகையாரைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டில் கூறியுள்ளமையின், கைலாசநாதர் கோயில் எடுப்பித்த பிறகு, கடிகை அக் கோயிலில் நடைபெற்றது என்றும் கொள்ளலாம். இவ்வூகத்தை உறுதிப்படுத்தத் தண்டியலங்கார மேற்கோள் பாடல் துணைபுரிகிறது. வடமொழித் தண்டி, கைலாசநாதர் கோயில் கட்டிய கொற்றவனாகிய இராஜசிம்மன் காலத்தவர்; ஆனால் தமிழ்த் தண்டியோ பிற்காலத்தவர்; எனினும் மேற்கோள் பாடலில் கண்ட பொருள் கடிகை இருந்த இடத்தை நிர்ணயிக்கப் பெரிதும் துணை புரிகிறது என்பதில் ஐயமில்லை.
காஞ்சிபுரத்துக் கிழக்கெல்லையில் இப்போதும் வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது; மேற்கில் கைலாசநாதர் கோயில் இருக்கிறது; வடக்கிலும் தெற்கிலும் இரண்டு ஏரிகள். அவற்றுள் ஒர் ஏரிக்குப் பிற்காலத்தில் முடிகொண்ட சோழப் பேரேரி என்பது பெயர். (A. R. No, 35 of 1883); இது காஞ்சிபுரத்தின் வடக்கில் அமைந்தது. தெற்கிலும் ஓரிரண்டு ஏரிகள் இருந்தமை கல்லெழுத்துக்களிற் காண்கிறோம். இனி, காஞ்சிபுரத்தை மயிலுக்கு ஒப்பிட்டுக் கூறிய தண்டி, கடிகை காஞ்சிபுரத்தின் மேற்கில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்; அப்பாடல் வருமாறு :
“ஏரி யிரண்டும் சிறகா எயில் வயிருக்
காருடைய பீலி கடிகாவா - நீர்வண்ணன்
அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே
பொற்றேரான் கச்சிப் பொலிவு.”
இதில் அத்தியூர் என்பது வரதராசப்பெருமாள் கோயில் உள்ள நகரப் பகுதி. இது காஞ்சியின் கிழக்கெல்லையாகும். கடிகாவா என்பது கடிகாவாக என்பதன் ஈறு தொகுத்தல். கடிகா என்பது காஞ்சிக் கடிகை. இங்ஙனம் பொருள் கொள்ளாது, ‘கடி-கா’ எனக் கொண்டு, நறுமணம் பொருந்திய சோலை’ என்றே பொருள் தரப்படுகிறது. சம்பந்தர்,
‘குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குராமரவம்
திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம்’
‘சேலு லாம்பொழில் கச்சி ஏகம்பம்’
‘ஏரினர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம்’
என்ற பகுதிகளில் கச்சிக்கு அடையாகப் பொழிலைக் கூறினார்;
‘கச்சி தன்னுள் திண்ணமாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம்’
‘கச்சி மாநகருள் ஏல நாறிய சோலை சூழ் ஏகம்பம்’
‘கச்சி மாநகருள் மரவம் பொழில் சூழ் ஏகம்பம்’
என்ற இடங்களில் ஏகம்பத்துக்கு அடையாகப் பொழிலைக் கூறினர் ஏகம்பத்துக்கும் மேற்கில் அமைந்ததே கைலாசநாதர் கோயில், சம்பந்தர் காலத்துக்குப் பிறகே கைலாசநாதர் கோயில் இராஜசிம்மனால் கட்டப்பெற்றது. அது இப்பொழுது வயல்வெளிகளின் இடையில் இருப்பினும், அந் நாளில் மாடமாளிகைகளால் குழப்பெற்றிருந்தது. தண்டி, ராசசிம்மன் காலத்தவர். தமிழ்த் தண்டியும் கைலாசநாதர் கோயில் அறிந்தவரென்பது சொல்லாமே அமையும், ஆகவே கைலாசநாதர் கோயில் மேற்கெல்லையாகக் கூறுதலேயே அவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஏகம்பம் சூழ்ந்ததும் அழியத்தக்கதுமான சோலையை மேற்கெல்லையாகக் கூறினர் எனலும் பொருத்தமில் கூற்றாம், கைலாசநாதர் கோயிலக் கூறுவதினும் ஆங்கிருந்த கடிகையைக் கூறுவதற்கும் ஓர் இயைபு உண்டு. மயிலுக்குப் பீலி பெருமையும் பொலிவும் தந்ததுபோலக் காஞ்சிக்குக் கடிகை சிறப்பும் அழகும் அளித்தது. ஆகவே இப்பாடலில் கண்ட கடிகா என்பது காஞ்சிக் கடிகை என்றும், அது காஞ்சிபுரத்து மேற்கெல்லேயில் இருந்தது என்றும் கருதலாம்.
No comments:
Post a Comment