Sunday, September 29, 2024

சரஸ்வதி -ஒரு நதியின் மறைவு – சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு

 

சரஸ்வதி -ஒரு நதியின் மறைவு – சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு

q

அன்புள்ள ஜெ.

நான் ”சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு” ஆசிரியர் – மிஷல் தனினோ (மொழிபெயர்ப்பு –வை.கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம்) புத்தகத்தை வாசித்தேன்.

இந்த புத்தகம், இலக்கியம், பாரம்பரியம், நிலவியல், புதைபொருள் ஆய்வுகள், காலநிலை சாஸ்திரம் மற்றும் பல அறிவியல்களின் வண்ணமயமான ஊடுபாவுகளால் நெய்யப்பட்டுள்ளது.

இலக்கியம்,தத்துவம்,அறிவியல் போன்ற எந்த துறையில் ஆர்வம் இருப்பவராக இருந்தாலும், அவர்களுக்கு வரலாற்று உணர்வின் அவசியத்தை  நீங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளீர்கள். அதை நான் 2014 ஊட்டி சந்திப்பிலும், கோவையில் நடந்த பகவத்கீதை உரையிலும் அதை நான் நேரடியாக உங்கள் மூலம் உணர்ந்துள்ளேன். அந்த வகையில் இந்த புத்தகம் மிக முக்கியமானதாக எனக்கு பட்டது. இந்த புத்தகம் இந்தியாவின் முன் வரலாற்று காலகட்டத்தை (PRE HISTORIC PERIOD) பற்றி மிக விரிவாக ஆராய்கிறது. காணாமல் போன சரஸ்வதி நதியை கண்டடைவதுடன் முதல் பகுதி தொடங்குகிறது. அதற்கு நூலாசிரியர் மூன்றுவிதமான சான்றுகளை எடுத்துக்கொள்கிறார் 1. இலக்கிய சான்று 2. உள்ளுர் நம்பிக்கைள் மற்றும் கதைகள் 3. பல்வேறு துறையை சேர்ந்த அறிவியல் ஆய்வுகள்.

குறிப்பாக இலக்கியச்சான்றை பற்றி குறிப்பிடும் போது இலக்கியத்தில் மிகை மதிப்பீடுகளும் தொன்மமாக்கலும் இருக்கும். ஆனால் இலக்கியம் சாராம்சத்தை பெரும்பாலும் மாற்றுவதில்லை. அந்த வகையில் இலக்கியத்தையும் எடுத்துகொள்கிறார்.

முதல் பகுதியில் 1788ல் புராதான சரஸ்வதியின் துண்டாடப்பட்ட பகுதியான கக்கர் நதியின் குறிப்புகளை கொண்ட பிரிட்டிஷ் மேஜரின் புத்தகத்தோடு தொடங்கி 2006ல் ஐ.எஸ்.ஆர்.ஒ விஞ்ஞானிகளின் செயற்கைகொள் மூலம் கண்டடைந்து வரையப்பட்ட புராதான சரஸ்வதியின் நதியின் வரைபடத்தை வரையும் வரை தொடர்ந்தது. சரஸ்வதி நதியின் இருப்பையம் காலத்தையும் நிறுவுகிறார் ஆசிரியர்.

இரண்டாவது பகுதியில் 1924ல் ஜான் மார்ஷல், தயா ராம் ஷானி, மது ஸ்வரூப் வத்ய ஆகியவர்களின் துணையோடு ஹரப்பா மொஹஞ்ஜோதரோ நாகரிகத்தை அகழ்வாய்வின் மூலம் கண்டடைகிறார். இந்திய சுதந்திரத்தின் போது 40 அகழ்வாய்விடங்களாக இருந்த்து தற்போது தோராயமாக 3000-3500 இடங்களாக அதிகரித்துள்ளது.

ஹரப்பா காலகட்டம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. (முற்காலம், முழுவளர்ச்சி காலகட்டம், பிற்காலம்). முதலில் சிந்து சமவெளி நாகரிகமாக இருந்தது பின்பு சரஸ்வதி படுகையிலும் குஜராத் பகுதியிலும் (60%) அதிகமான அகழ்வாய்விடங்கள் இருந்ததால் சிந்து சரஸ்வதி நாகரிகமாக மாறியது. ஹரப்பாவாசிகள் அப்போதிருந்த எகிப்து மெசபடோமியா நாகரிகங்களோடு வணிக தொடர்பு வைத்திருந்தார்கள். ஹரப்பா நாகரிகம் 8 லட்சம் ச.கி.மீ பரப்பளவில் இருந்திருக்கிறது. இப்போதிருக்கும் இந்தியாவின் கால் பகுதியாகும். இவ்வளவு பெரிய பரப்பாக இருந்தும் அங்கு இராணுவம் அரசர் இருந்ததற்கான எவ்விதமான சான்றும் கிடைக்கவில்லை. இது ஒரு பெரும் புதிர்தான். ஹரப்பா நாகரிகத்திலிருந்த முக்கியமான நான்கு நகரங்களின்(பனவாலி,காலிபங்கன்,லோத்தல்,தோவிரா) கட்டமைப்பு மிக விரிவாக ஆராயப்படுகிறது.ஹரப்பா நாகரிகம் மறைந்ததற்கான மூன்று காரணங்களை குறிப்பிட்டு அதில் சுற்றுப்புறச்சூழலில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சுற்றுபுறச் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் சரஸ்வதி நதி பல துண்டுகளாக பிரிந்து பின்பு அது வறண்டது. அத்தோடு சரஸ்வதி நதிகரையில் தோன்றி வளர்ந்த ஹரப்பா நாகரிகம் மறைந்ததா அல்லது தொடர்ந்ததா என அடுத்த பகுதியில் விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர். இவ்வளவு விரிவான ஆராய்ச்சிகள் நடந்திருந்தாலும் நமது பாடதிட்டத்தில் 1930ல் நடந்த ஆய்வு முடிவுகளே மாணவர்களுக்கு இன்றும் பாடமாக உள்ளது. மேலும் அதீத மனித செயல்பாடுகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதலால்  3000 வருட கங்கை சமவெளி நாகரிகம் 21ஆம் நூற்றாண்டு முடிவுக்கு வரக்கூடும் என எச்சரிக்கை செய்து இந்த பகுதியை நிறைவு செய்கிறார்.

மூன்றாவது பகுதியை ஹரப்பா நாகிரிகத்திற்கும் பின்பு வந்த சரித்திரகால கங்கை சமவெளி நாகரிகத்திற்குமுள்ள தொடர்பை மிக விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர். மேற்கண்ட இரண்டு நாகரிகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறும் பல்வேறு அறிவியல் மற்றும் மொழியில் அறிஞர்களின் கருத்தகளை முன்வைத்து அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார். பல்வேறு விஷயங்களில் குறிப்பாக நகரஅமைப்பு மற்றும் கட்டிடக்கலை, ஹரப்பாவில் பின்பற்றபட்ட எடைகளும் அளவுகளும், தொழில்நுட்பமும் சின்னங்கள், எழுத்துகள், மதம் சார்ந்த வாழ்க்கை, மற்றும் கலாச்சார ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாகரிகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளையும் தொடர்ச்சியை மிக விரிவாக ஆராய்கிறார்.

ராஜேஷ் கோச்சர் என்ற வானசாஸ்திர இயற்பியல் நிபுணர் (ASTROPHYSICIST) கி.பி 2000 தில் வெளியிடப்பட்ட ஆய்வுமுடிவுகளும் அதை தொடர்ந்த வரலாற்றிஞர் இர்ஃபான் ஹபீப் வெளியிட்ட கட்டுரையும் சரஸ்வதி நதியை சாட்சி கூண்டிலிருந்து குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறது. (ஏற்கெனவே 1883ல் இந்தியவியலாளரான எட்வர்ட் தாமாஸ் இந்த ஆரிய படையெடுப்பை வலியுறுத்தியுள்ளார்) மேற்கண்டவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை மிக விரிவாகவும் ஆழமாகவும் பல்வேறு அறிஞர்கள் மற்றும் ஆய்வுகளின் துணைகொண்டும் மறுதலிக்கிறார் மிஷல் தனினோ. இந்த விவாதம் விஷ்ணுபுரம் நாவலில் வரும் ஞானவிவாத களத்தையும், வெண்முரசு பன்னிருபடைகளத்தில் ராஜஸுயப்பகுதியில் வரும் ஞான விவாதத்தை நினைவு படுத்துகிறது.

இரு நாகரிகங்களுக்கும் இடையேயான ஒற்றுமையையும் தொடர்ச்சியையும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெளிவான சித்திரத்தை கொடுத்த பிறகும் ஒரு அறிவியலாளராக புத்தகத்தை முடிக்கிறார் மிஷல் தனினோ. அவருடைய வார்த்தைகளில்

”சரஸ்வதி நதியின் பரிணாம வளர்ச்சியின் பாதை மிகவும் சிக்கலானது நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அதன் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தையும் நம்மால் துல்லியமாக கணக்கிட முடியாது. வருங்காலத்தில் புவியியல், புராதன காலநிலை சாஸ்திரம், ஐசோடோப்புப் பரிசோதனைகள், புதைபொருள் ஆய்வுகள் போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆராய வேண்டியுள்ளது.”

இறுதியாக இந்த புத்தகம் கீழ்கண்ட விஷயங்களில் ஒரு தெளிவை கொடுக்கிறது.

  •  ஆரியபடையெடுப்பு ஒன்று நிகழ்ந்த்தற்கான எவ்விதான அறிவியல் சான்றும் இல்லை என்பதன் மூலம் அதை நிராகரிக்கிறார்.
  •    வேத இருண்ட காலம் (VEDIC DARK AGE) ஒன்று இல்லை என நிராகரிக்கிறார்.
  • சரஸ்வதி செழுமையாக ஒடியபோது தான் அதன் கரைகளில் வேதம் உருவாக்கபட்டது. சரஸ்வதி செழுமையாக ஒடிய காலம் கி.மு 3000 – 2500. ஆகவே ஹரப்பா காலமும் வேத காலமும் ஒன்றுதான் என நிறுவுகிறார்.
  •   காந்தி முன்னிறுத்திய மையமில்லா அரசுக்கான ஆணிவேர் சமணத்தின் பங்கு என வாசித்திருந்தேன் (இன்றைய காந்தி) இந்த புத்தக வாசிப்பு சரித்திரத்திற்குகால கட்டத்திற்கு முன்பே இருந்திருக்கிறது என்கிற முடிவை நோக்கி நகர்த்துகிறது.
  •    இலக்கியதின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

 

இந்த புத்தகத்தில் நான் தொகுத்துக் கொண்ட விஷயங்களை சற்று விரிவாக எழுதியுள்ளேன்.

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு- சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு.

மிஷல் தனினோ இந்நூலின் ஆசிரியர். இவர் பிரான்ஸில் 1956ல் பிறந்தவர். இந்திய கலாசாரம் நாகரிகம் ஆகியவைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டபடி தன் 21வது வயதிலிருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.

இந்த நூல் மூன்று பகுதிகளாக உள்ளது. முதல்பகுதியில் காணாமல் போன சரஸ்வதியை கண்டடைந்த வரலாற்றையும் இரண்டாவது பகுதி அந்த நதியில் தோன்றிய இந்தியாவின் முதல் நாகரிகத்தை பற்றியும் மூன்றாவது பகுதி சரஸ்வதி நாகரிகத்திற்கும் கங்கை சமவெளி நாகரிகத்திற்கும் உள்ள தொடர்பை பற்றியும் பேசுகிறது.

காணாமல் போன சரஸ்வதி

1788 முதல் 2006 வரை பல்வேறுதுறையை சேர்ந்த அறிஞர்களின் ஆய்வுகளும். கட்டுரைகளும் தற்போது துண்டு துண்டாக பிரிந்து பல்வேறு நதிகளாக உள்ள சரஸ்வதியின் பழையபாதையை முடிவு செய்கிறது. அதை ஆசிரியர் ஒரு நாவலுக்குரிய அம்சத்தோடு பதிவு செய்திருக்கிறார். அந்தப் பாதையின் சில உச்ச புள்ளிகள்.

  • 1788 ல் சர்வேயர் ஜெனரல் மேஸஸ் ரென்னெல் வெளியட்ட MEMOMERIS OF A MAP OF HINDUSTAN  என்ற புத்தகத்திலும் மற்றும் 1812ல் லெப்டினட் கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய “துண்டாடப்பட்ட ராஜஸ்தானின் வரலாறும் பழம்பொருட்களம்” என்ற புத்தகத்திலும் சரஸ்வதியின் ஒரு பகுதியான கக்கர் நதியை பற்றிய குறிப்பு வருகிறது.

 

  • 1844ல் மேஜர் எப். மெக்கீஸன் பவல்பூருக்கும் சிர்ஸாவிற்கும் உள்ள பாதையை பற்றி சமர்பித்த ஆவணம் மிக முக்கியமானது. இந்த பாதையானது வரலாற்றில் முன்பே பலரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. கி.பி. 1037ல் கஜினி முகமது மகன் முதலாம் மசூத்தால் படையெடுப்பதற்கும், கி.பி. 1338ல் அரபுநாட்டு பயணி இபின் பாதஷா டில்லி செல்வதற்கும், கி.பி. 1398ல் தைமூர் படையெடுப்பிற்கும் இந்த பாதையை பயன்படுத்தியுள்ளார்.

 

  • 1855ல் பிரெஞ்சு ஆய்வாளர் லூயி விவயன் தெஸான் மார்த்தான் ஒரு A STUDY ON TH EGOGRAPHY AND THE PRIMITIVE PEOPLE OF INDIA’S NORTH WEST ACCORDING TO VEDIC HYMNS” ஆய்வு கட்டுரையை சமர்பித்தார். அது 1860 புத்தகமாக வெளிவந்தத்து

 

  • 1886ல் பிரிட்டீஷ் புவியியலாளர் R.D. OLDHAM சரஸ்வதியின் மறைவுக்கான காரணம் பூகம்பமே என யூகித்தார்.

 

  • ஹென்றி ஜார்ஜ் ராவர்டி வெளியிட்ட கட்டுரை ஹக்ரா நதி (இது துண்டாடப்பட்ட சரஸ்வதி நதியாகும்) கி.பி 14ஆம் நூற்றாண்டு வற்றியதாக குறிப்பிடுகிறார்.

 

  • மார்க் ஆரல் ஸ்யின் (1862-1944) 20 ஆம் நூற்றாண்டின முக்கியமான அகழவாராய்ச்சியாளர். பூகோளவியல் நிபுணர். இவர் முன்வரலாற்று காலகட்ட ஆராய்ச்சியின் முன்னோடி ஆவார்.  1917ல் ”ரிக் வேதத்த்திலுள்ள சில நதிகளின் பெயர்கள் பற்றி” என்ற கட்டுரையில் நதி ஸ்துதி ஸுக்கத்த்தில் பட்டியலிடப்பட்டுள்ள நதிகளை அடையாளம் காட்டுகிறார. இவர் மூன்று விதமான சான்றுகளை முதன்முதலாக ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டார். அவைகள்
  1. ரிக்வேதத்தில் சொல்லப்பட்ட செய்திகள்
  2. உள்ளுர் மக்களிடையே நிலவி வந்த நம்பிக்கைகள்
  3. ஆகழவாராய்வு முடிவுகள்
  • கி.மு.1900ஆண்டுக்கு பிறகு நிகழ்ந்த ஒரு பெரிய பூகம்பம் யமுனையின் அருகிலிருந்த நிலப்பரப்பை 20 முதல் 30 மீட்டர் உயரத்திற்கு தூக்கிவிட்டது என்று K.S. வாத்திய என்ற புவியில் அறிஞர் குறிப்பிடுகிறார். அந்த பூகம்பம் PAVANTO SAHIB VALLEY வழியாக செல்லும் பிளவில் ஏற்பட்டது. இன்றும் அந்த பூகம்ப பிளவு செயல்நிலையில் இருக்கிறது. இதனால் யமுனைநதியின் தடம் மாறியுள்ளது.
  • மேற்கண்ட படம் மூன்று ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானிகளால்(ஜே.ஆர்.ஷர்மா, ஏ.கே.குப்தா, பி.கே.பத்ரா 2006ல் வெளியிடப்பட்டது இது சரஸ்வதியின் புராதன நதித்தடங்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இதில் சரஸ்வதி நதியின் பாதை தெளிவான ஒற்றைத்தடமாக இருக்கவில்லை. இந்தப் பகுதியின் வரலாறு எத்தனை சிக்கலானது என்பதையே இது காண்பிக்கிறது

 

சரஸ்வதி நதியை பற்றி வேதம் மற்றும் புராண இலக்கியங்களின் குறிப்புகள்

  • ரிக் வேதத்தில 45 ஸ்லோகங்களில் 72 தடவையாக சரஸ்வதி நதியை பற்றி உள்ளது. அதில் மூன்று ஸ்லோகங்கள் சரஸ்வதி நதிக்காக மட்டும் உள்ளது.
  • ரிக் வேதத்தின் நதி ஸ்துதி ஸுக்கத்த்தில் வேதகாலத்தின் 19 நதிகளை ஒன்றன் பின் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. இந்த ஸுக்கதத்தின் 5, 6 பிரிவில் சரஸ்வதி நதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • வேதகாலத்திற்கு பிறகு பல நூற்றாண்டு காலத்திற்கு பிறகு வந்த ப்ராமணங்களிலும் மகாபாரத்த்திலும் சரஸ்வதி நதி விநாசனம் (த்ருஷதியும் சங்கமிக்கும் இடத்திற்கு கிழே இன்றை இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் உள்ளது) என்ற இடத்தில் மறைந்த்தாக குறிப்பிடப்படுகிறது.
  • மகாபாரத்த்தில் உதத்ய மகரிஷியின் கதை சரஸ்வதி நதியின் மறைவை விளக்குகிறது.
  •    கி.பி. 6ஆம் நூற்றாணடில் வராஹமித்ர்ரால் எழுதப்பட்ட ப்ருஹத் சம்ஹிதையில் சரஸ்வதி நதி விநாசனம் சிறிய அளவில் பாய்ந்துள்ளது என குறிப்பு வருகிறது.
  •      பலராமர் மூலம் யமுனை நதி தடம் மாறியுள்ள கதை மகாபாரதத்தில் உள்ளது.
  •    சட்லஜ் (சுதத்ரி) நதி பலநூறாக பிரிந்த்தை குறிப்பிடும் வஷிஷ்டர்- விஸ்வாமித்ரர் கதையும் மகாபாரதத்தில் உள்ளது.
  •  12 வருட பஞ்சகாலமும் அதனால் ஆயிரக்கனக்கான ஏரிகள் வற்றியைதை பற்றியும் மகாபாரதம் பேசுகிறது.

1

 

அகழ்வாராய்வு மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த முடிவுகளும் வேதம் மற்றும் இலக்கியங்களின் குறிப்புகளும். சரஸ்வதி நதியின் இருப்பையும்  மற்றும் மறைவை பற்றிய கருத்துகள் கிட்ட தட்ட ஒரேமாதிரியாக உள்ளது.

படம் 2.2 நதி ஸுக்த்த்தில் குறிப்பிடப்பட்டுள்ள நதிகளின் வரைபடம்

 

இந்தியாவின் முதல் நாகரிகம்

1843ல் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம்மால் பரிந்துரைக்கப்பட்டு 1871ல் இந்திய அகழ்வாராய்ச்சி துறை ஆரம்பிக்கப்பட்டது கன்னிங்ஹாம் இந்திய சரித்திரகால அகழ்வாராய்வுக்கு முன்னோடி ஆவார். இவர் 1853 மற்றும் 1856ல் ஹரப்பா பகுதிகளை பார்வையிட்டார். 1871ல் இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தலைவராக அவர் ஹரப்பாவை பார்வையிடும் போது முன்பு கண்ட பிரமாண்ட புராதானக் கோட்டைகளின் மதில்கள் காணமற் போய்விட்டன என்றும், 160 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட லாகூர் – முல்தான் ரயில் பாதைக்கு அவை அஸ்திவாரக் கற்களாகப் பயன்படுத்துவிட்டன என வேதனையுடன் எழுதியிருந்தார்.

1902ல் இந்திய வைஸ்ராய் கர்ஸ்ன்பிரபுவால் ஜான் மார்ஷல் என்பவர் அகழ்வாராய்ச்சித்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1909லும் பின்னர் 1914 லிலும் ஜான்மார்ஷல் தன் உதவியாளர்களை ஹரப்பாவிற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்தார். . 1917ல் தயா ராம் ஷானி என்ற சமஸ்கிருத மொழிப்புலவரும் கல்வெட்டெழுத்து ஆராய்ச்சியாளராகிய அவர் ஹரப்பா பகுதியை ஆய்வு செய்தார். 1921ல் ஹராப்பாவில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. 1924ல் மது ஸ்வரூப் வத்ஸ என்பவரை மொஹஞ்ஜோதரோவில் அகழ்வாய்வுக்கு அனுப்பிவைத்தார். 800 கி.மீ தொலைவிலுள்ள ஹரப்பாவிலும் மொஹஞ்தரோவிலும் ஒரே மாதிரியான முத்திரைகளும் சுட்ட செங்கற்களையும் சுட்டி காட்டினார். இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ஜான் மார்ஷல் ILLUSTRATED LONDON NEWS இதழில் 20 செப். 1924ல் சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றிய கட்டுரையாக வெளியிட்டார். (1917ல் இத்தாலியை சேர்ந்த இந்தியவியலாளர் LUJGI PIO TESSITORY காலிபங்கனில் அகழ்வாராய்ச்சியை தொடங்கினார். அப்போது கிடைத்த சில முத்திரைகளை அவர் ஜான் மார்ஷலுக்கு தெரிவித்திருந்தால் இந்திய முதல் நாகரிகத்த்தை கண்டுபிடித்தவராகியிருப்பார். இவர் 1919ல் தன்னுடை 32வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்)

ஹரப்பா நாகரிகம் 8 லட்சம் சதுர கி.மீ பரப்பளவில் இருந்திருக்கின்றது.  இது இன்றைய இந்தியாவின் கால் பகுதியாகும். ஆனால் ராணுவம் இருந்த்தற்கான எவ்வித சான்றும் கிடைக்கவில்லை. இது ஒரு ஆச்சர்யமான விஷயம் தான்.

1947 அகழ்வாய்விடங்க் 40 ஆக இருந்தது 1960ல் 100, 1979ல் 800, 1984ல் 1400, 1999- 2600ஆகவும் தற்போது 3700 ஆகவும் உயர்ந்துள்ளது.

GREGORY POSSESL என்ற அமெரிக்க அகழ்வாராய்ச்சியாரள் ஹரப்பாவில் மிகவிரிவாக ஆய்வு நடத்தியிருக்கிறார. 2600 ஆய்வுபகுதிகளை பற்றிய கெஜட்டியரை 1999ல் வெளியிட்டுள்ளார்.

ஹரப்பா நாகரிகத்தை பற்றிய சில குறிப்புகள்

  •   மொஹஞ்ஜோ-தரோ நகரத்தின் மக்கள் தொகை 40 ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை இருக்கலாம் என மதிப்பிடுகிறார் (GREGORY)
  • வரலாற்றுக்கு முந்தைய எகிப்திலோ மெசபடோமியோவிலோ கோயில்களும் அரண்மைனைகளுமே பிரமாண்டமாக இருந்தது. ஆனால் மொஹஞ்ஜோதரோவிலோ ஹரப்பாவிலோ அற்புமாக கட்டப்பட்டவை எல்லாம் மக்களுக்காகத்தான்.
  •  மெசபடோமிய அரசர்கள் ஹரப்ப நகைகளை மிகவும் விரும்பினர். இவர்கள் மெலூஹா என்று குறிப்பிடுவது சிந்து சமவெளி நாகரிகத்தைதான் இருக்கும் என பல அறிஞர் குறிப்பிடுகிறார்கள்.
  •  ஹரப்பா நாகரிகத்தில் மொஹஞ்ஜோ தரோ, ஹரப்பா , கன்வேரிவாலா (காலிஸ்தான்) ராக்கிகாட் (ஹரியானா), தோலவிரா (கட்ச்ரண்) ஆகிய ஐந்து நகரங்களை மையமாக கொண்டு ஒன்பது விதமான அதிகார மையங்கள் (DOMAIN) இருந்ததாக கிரிகரி சொல்கிறார். அவருடைய பார்வையில் இந்த அரசியல் அமைப்பானது ஒருவகையில் குழுமத் தன்மை கொண்ட ஒன்று “ ஒற்றை அரசருக்கு பதிலாக பல்வேறு குழுக்களை கொண்ட (அ) தலைவர்களை கொண்டது என்று சொல்கிறார் (GREGORY)
  •  கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் இரண்டாயிரம் கி.மீ. கொண்ட ஹரப்பா நாகரிகத்தில் ராணுவம் இல்லை. அரசர் இல்லை. இது ஒரு பெரும் புதிர்தான்.
  •  இது வரை செய்த அகழ்வாராய்ச்சி ஒட்டுமொத்த ஹரப்பா நிலப்பரப்பில் 5%  ஆகும்.
  •  முக்கிய நகரங்கள் 1. மொஹஞ்ஜோதரோ (200-300 ஹெக்டேர்கள்) 2. ராக்கிகரி (105 ஹெ.) 3. பனவாலி (10 ஹெ) 4. காலிபங்கன் (12 ஹெ) 5. ரங்கப்பூர்-குஜராத் (50 ஹெ) 6. லோத்தல் (7ஹெ) 7. தோலவிரா – (48ஹெ) 8. கன்வேரிவால்-கோலிஸ்தான் – 80 ஹெ.

ஹரப்பாவின் காலகட்டம் பற்றி பல்வேறு அறிஞர்கள் கால வரையரை

நாகரிக கட்டம்சக்ரவர்த்திகெனோயர்கிரிகரி பொஸ்ஸல்
முற்கால ஹரப்பா3500-27005500-26003600-2600
முழு வளர்ச்சி ஹரப்பா2700-20002600-19002500-1900
பிற்கால ஹரப்பா2000-13001900-13001900-1300

 

புகழ்பெற்ற வராலற்று அறிஞரும் பிகானீர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர்தார் கே.எம். பணிக்கர் சிபாரிசால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மத்திய அரசால் இந்திய பகுதிகளில் ஆராய்ச்சி தொடர்ந்தது.

சுதந்திரத்திற்கு பிறகான அகழ்வாராய்ச்சி சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகமாக மாற்றியது.

ஹரப்பா அகழாய்வு இடங்கள் சதவீத அடிப்படையில்

சரஸ்வதி படுகை32%
குஜராத்28%
பலுசிஸ்தான்11%
சிந்து9%
பிற20%
பாகிஸ்தானின் பஞ்சாப்5%

 

கிரிகரி பொஸ்ஸல் மூன்று கட்டங்கள் தொடர்பாக நடந்த அகழ்வாராய்ச்சி,பூகோள ஆய்வுகளின் முடிவுகள் (பெரிதும் வில்ஹெம்மினுடையது) ஆகியவற்றை ஒன்று சேர்த்த ஒரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறார்.

  1. கி.மு. 3000 வரை சரஸ்வதியும் அதன் உபநதியாக இருந்த யமுனாவும் சட்டெலஜ்ம் கரைபுரண்டு ஒடின. இது ஆரம்ப காலகட்டத்தை சேர்ந்தது
  2. முழுவளர்ச்சி கட்டதின் ஏதோ ஒரு நேரத்தில் யமுனா நதி கங்கை நதித்தொடரால் இழுக்கபட்டுவிடுகிறது. இதன் விளைவாக த்ருஷ்வதியும் சரஸ்வதியின் மத்திய பாகமும் வறண்டு போயின. சட்லஜ் மேற்கு நோக்கி (ரூபாருக்கு அருகில்) வழிமாறிச் சென்றது. அதன் கிளைகள் ஹனுமான்காட் பகுதிக்கும் ஃபோர்ட் அப்பாஸுக்கும் இடையில் கக்கர்-ஹக்ராவின் பல இடங்களில் சங்கமித்தன.
  3. நகர்மயத்துக்ப் பிந்தைய காலகட்டத்தில் (கி.மு 2000-1500) சட்லெஜ் மேலும் வழிமாறி ஃபோர்ட் அப்பாஸுக்குக் கீழ்பகுதயில் ஹக்கராவை சந்திக்கிறது.சரஸ்வதி நதிக்கும் அதன் உபநதிகளுக்கும் அவற்றின் மேற்பகுதகளில் மழை பெய்தால் மட்டுமே நீரோட்டம் இருக்கும் என்ற நிலை உருவானது.

புதிய தளங்கள்

இந்த பகுதியில் முக்கியமான  நான்கு ஹரப்பா நகரங்களின் அமைப்பை விவரித்துள்ளார்.

பனவாலி  – 10 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த ஹரப்பா நகரம் ஹரியாணாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் கக்கர் நதியின் ஒரு பழைய படுகையின் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1970ல் இங்கு அகழாய்வுகள் நடத்தி ஆர்.எஸ். பிஷத் சொல்கிறார் . பனவாலி ஒரு மாநிலத்தின் தலைநகராகவே ஒரு முக்கியமான அரசு நிர்வாகத் தலைமையகமாகவோ இருந்திருக்கும். மேலும் சிந்து சமவெளி நாகரிக்க் காலத்தில், சரஸ்வதியின் நதிக்கரையில் ஒரு வளம்  மிகுந்த வர்த்தக மையமாகவும் இது இருந்திருக்க வேண்டும். இந்நகரில் ஆரம்பத்தில் 1x2x3 அளவிளான  செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது பின்பு நகர்மயமாக்கப்பட்ட கால கட்டத்தில் 1x2x4 அளவினாளான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.. இங்கு ஒரு வீட்டின் பிரதான அறையில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தன. WASH BASIN கொண்ட முழுமையான ஒரு குளியலறை கூட இங்கு காணப்பட்டது. அக்னி பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலும் இருந்துள்ளது சந்தேகமின்றி தெரிகிறது

காலிபங்கன் – இது பனவாலியிலிருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ளது. நதியின் தடத்தில் கீழே வந்தால் கக்கர் நதியின் இடது கரையிலுள்ளது. இதன் நகர அமைப்பு மொஹஞ்ஜோதாரோவை போலவே இருக்கிறது (2:1 விகித்த்தில் 240 x120 m). இதன் நகரமைப்பை பார்க்கும் போது ஹரப்பாவின் பொறியியலாளர்களும் திட்ட வரைவாளர்களும் ஒவ்வொரு விஷயத்திலும் துல்லியமான விகதங்களையே பின்பாற்றியிருக்கிறார்கள், தெருக்களின் அகலம் 1.8m, 3.6m, 5.4m. 7.2m என 1:2:3:4  என்ற அளவில் வெகு துல்லியமாக ஜியோமதி வகையில் அதிகரித்துச் செல்கின்றன. நகரின் தென்பகுதியில் நான்கு திசைகளிலுமாக செங்கற்கள் உபயோகித்து கட்டப்பட்ட பெரிய மேடைகள் நிறையக் காணப்பட்டன. பி.கே. தாப்பர், பி.பி. ஜோஷி ஆகியோருடன் இணைந்து ஆய்வு நடத்திய பி.பி. லாலை பொருத்த வரையில் இந்த இடம் மதச்சடங்குகள் நடத்துவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் . இதற்கு சான்றுகளும் கிடைத்துள்ளன. இங்குள்ள வீடுகளில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. மதரீதியான சடங்குகளை செய்யும் போது மிருகங்களை பலிகொடுக்கப்பட்டிருக்கலாம் (1.5 x 1m  குழியில் மான் கொம்பும் வேறு மிருகங்களின் எலும்புகளும் காணப்பட்டுள்ளது).

லோத்தல் – குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து 70 கி.மீ தென்மேற்காக கிளைநதியான பொகாவேவுக்கு அருகில் இருக்கிறது. இங்கிருந்த 23 கி.மீ தொலைவிலுள்ள GULF OF CAMBAYவில் சபர்மதி நதி கலக்கிறது. இந்த நகரை சுற்றிலுமுள்ள வெளிப்புற மதில் 12 மீ முதல் 21 மீ வரை கனத்தில் இருந்த்து. இது வெள்ளத்தை தடுப்பதற்காக இருக்கலாம். இது பனவாலி நகரத்தின் அமைப்பை ஒத்திருக்கிறது. நகரின் கிழக்கு பாகத்தில் 217 மீ x 36 மீ நீர்நிலை (BASIN) நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய இடம். இதில் 1.5 மீ முதல் 1.8 மீ வரை கனமுள்ள லட்சக்கணக்கான சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இது DOCKYARD ஆக இருந்திருக்கலாம் என அகழ்வாய்வாளர் S.R. ராவ் யூகிக்கிறார்.

தோலவிரா – இந்த நகரம் 1966ல் ஆய்வாளர் ஜே.பி. ஜோஷியால் கட்ச் ரண் பகுதியிலிருக்கும் காதர் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு 20 வருடங்களுக்கு பிறகு ஆர்.எஸ்.பிஷத் தலைமையில் இங்கு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஹரப்பாவின் முழு வளர்ச்சிக் கட்டத்தில் கடல் காயல் போல இருந்திருக்கிறது. அதில் படகுகளும் கப்பல்களும் எளிதல் செல்ல முடிந்திருக்கும் (கி.மு. 1 ஆம் நூற்றாண்டு வரை இந்த நிலை ஒரளவு தொடர்ந்தது என்பதை கிரேக்க ஆவணங்களிலிருந்து அறிகிறோம்).

தோலவிராவில் அனைவரையும் வியப்பில் ஆழத்தக்கூடியதாக இருக்கிறது. காரணம்

  1. இதன் வித்தியாசமான நகமைப்பு. 47 ஹெக்டேர் பரப்பளவு உள்ளது. கோட்டை கொத்தளங்கள் காலிபங்கனை போன்று 4 மடங்கு பெரியவை. வெளிக்கோட்டை பரப்பு காலிபங்கனை போலவே (120மீ x 120 மீ) இருந்த்து. நகரமைப்பு 3 பகுதிகளை கொண்டது (மொஹஞ்ஜோதரோவில் 2 பகுதிகள் மட்டுமே) இந்நகரில் ஒரு பெரிய மைதானம் இருந்த்து (283 மீ x 47மீ) 6:1 விகிதம் லோத்தலை போலவே. இங்கு மட்டும்தான் கருங்கல் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  2. நீர் சேமிப்பு இந்நகரில் சிறப்பாக இருந்த்து. பாறையை குடைந்து நீர்தேக்கம் இங்கிருக்கிறது

கோட்டைவயின் வடக்கு வாசலுக்கு அருகிலிருந்த ஓர் அறையில் கண்டுபிடிக்கபட்ட 3 மீ நீளமுள்ள ஒர் கல்வெட்டு படிகத்தால் செய்யப்பட்ட 35 செ.மீ உயரமுள்ள பத்து குறியீடுகள் ஒரு பரப்பளவில் செதுக்கப்பட்டுள்ளன. இது அனைத்து தரப்பு மக்களாலும் படிக்கும் படியாக இருந்திருக்க வேண்டும் ஆகவே கல்வி அனைத்து தரப்பையும் சேர்ந்திருக்கிறது என யூகிக்கலாம்.

 

இவ்வளவு ஆராய்சிகளுக்கு பிறகும் சிந்து சமவெளி நாகரிகம் சிந்து சரஸ்வதி நாகரிகமாக மாறியதற்கு பிறகும் நமது பள்ளி மாணவர்கள் 1930களில் தெரியவந்த விஷயங்களையே இன்றும் நமது பாடத்திட்டத்தில் படித்துகொண்டிருக்கிறார்கள்.

ஹரப்பா நாகரிகம் அழிந்ததற்கான மூன்று வித கருத்துகள்.

  1. வெளியிலிருந்து வந்த ஆக்ரமிப்பாளர்கள் சிந்து சமவெளி நாகரிகங்களை அழித்தனர்
  2. அரசியல் (அ) பொருளாதார பிரச்சனைகள்
  3. சுற்றுப்புறச் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால்.

நூலாசிரியர் 3வது காரணத்தால் ஹரப்பா நாகரிகம் அழிந்திருக்கும் என முடிவுக்கு வருகிறார். இதற்கு அகழாய்வு, புவியியல் மற்றும் இலக்கியச் சான்றுகளையும் காட்டுகிறார்.

சட்லெஜ் நதி திசை மாறியதால் சரஸ்வதியின் நீரோட்டம் வற்றியது. சிந்து நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்த்து. இதன் காரணமாக சிந்து பிரதேசத்தில் வெறும் ஆறு பிற்கால ஆய்விடங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த இரண்டாவது பகுதியை ஒரு எச்சரிக்கையோடு முடிக்கிறார் மிஷல் தனினோ (நூலாசிரியர்).

கங்கை யமுனை, பிரம்மபுத்ரா உட்பட இமயமலை பனியாறுகளால் நீர்வரத்து பெறும் நதிகள் அனைத்தும் பெரும் அபாயத்தை சந்திக்கவிருக்கின்றன. 30 முதல் 50 ஆண்டுகளுக்குள் மேற்கண்ட நதிகள் மழையை மட்டும் சார்ந்திருக்கம் நிலை ஏற்படும். ஹரப்பாவில் ஏற்பட்டதோ இயற்கை நிகழ்வு ஆனால் புவி வெப்பமயமாதல் முழுக்க முழுக்க மனிதர்களால் இழைக்கப்படுவது.ஹரப்பா வாசிகளுக்காவது குடியேற மற்ற பகுதிகள் இருந்தன. 3000 வருட கங்கைச் சமவெளி நாகரிகம் முடிவுக்கு வரும் நூற்றாண்டாக 21ம் நூற்றாண்டு இருக்கக்கூடும். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இன்னும் சில ஆண்டுகள் நம் கையில் இருப்பதை சூழிலியலாளர்களின் மிகுந்த நம்பிக்கைவாதிகளாக இருப்பவர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடு அவசியம் என முடிக்கிறார்.

பகுதி 3 சரஸ்வதியிலிருந்து கங்கை வரை

பல்வேறு துறையை சேர்ந்த அறிஞர்கள் சரஸ்வதி நாகரிகத்திற்கும் கங்கை நாகரிகத்திற்கும் சம்பந்தமில்லை என் கூறியுள்ளார்கள. அவர்களின் சில கூற்றுகள் முன்வைத்து இந்த பகுதியை ஆரம்பிக்கிறார் நூலாசிரியர்.

ரொமிலா தாப்பர் – இவர் புராதான இந்திய பற்றிய ஆய்வுகளுக்காக புகழ் பெற்ற வரலாற்று அறிஞர். இவர் சமீபத்தில் வெளிட்ட புத்தகத்தில் ஹரப்பா நாகரிகம் தொடர்ந்தது என்பதற்கான சான்றுகள் இல்லை என்கிறார். இவரது கோட்பாட்டின் படி, ஹரப்பா கலாசாரம் அங்குமிங்குமாகச் சில இடங்களில் தொடர்ந்திருக்கலாம். ஆனால் ஹரப்பா உலகம் முழுவதாகச் சிதறிவிட்டது என்கிறார்.

ஷெரின் ரத்னாகர் .-ஹரப்பா கலாசாரம் உண்மையிலேயே முடிவுக்கு வந்துவிட்டது எனச் சொல்கிறார். சிற்பக்கலை, கட்டிடக்கலை, கடல் வழிப்பயணம் ஆகிய அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டன என்கிறார்.

அமலானந்தகோஷ் – இவரும் இந்த தொடர்ச்சியின்மையையே குறிப்பிடுகிறார்.

மார்டிமர் வீலர் – ஹரப்பா நாகரிகத்த்தையும் கங்க சமவெளிநாகரிகத்தையும் வேத இருட்டுக்காலம் (VEDIC DARK AGE)  என்று ஒன்று பிரித்ததாக குறிப்பிடுகிறார்.

பெர்னாரட் சர்ஜண்ட் – இவர் பிரெஞ்சு அறிஞர்- ”சிந்து சமவெளி நாகரிகம் இந்திய நாகரிகத்தின் நேரடியான மூல நாகரிகம் அல்ல. சமீபத்தில் வந்து சேர்ந்த வேத ஆரியர்களால் ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படும் கங்கைச் சமவெளி நாகரிகம்தான் இந்திய நாகரிகத்தின் “நேரடியான மூல நாகரிகம்“ என்கிறார். ஹரப்பா இந்தியாவுக்கும் சரித்திரகால இந்தியவுக்குமிடையே மாபெரும் தொடச்ச்சியின்மை இருக்கிறது என்கிறார். தொர்ச்சியின்மை என்ற வார்த்தைதான் ஆக்ரமிப்பு கருத்தை முன்வைப்பவர்களின் முக்கிய ஆயுதம் ஆகும்.

வரலாற்றிஞர் மற்றும் அகழவாராய்ச்சியாளர் STUART PIGGOT. ஆய்வாளர் A.L. பாஷம், அமெரிக்காவை சேர்ந்த சமஸ்கிருத மொழிப்புலவர் மைக்கேல் விட்ஸெல் ஆகியவர்கள்  வேத இருண்ட காலம் என்ற கருத்தை ஓப்புக்கொள்கிறார்கள.

இருநாகரிகத்திற்கும் உள்ள வேற்றுமையை ஒப்புக்கொள்ளாத அறிஞர்களின் கூற்றுகள்.

கிரிகரி பொஸ்ஸல் – இவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர். சிந்து சரஸ்வதி நாகரிகத்தின் முடிவு என்பதற்கு பதிலாக உருமாற்றம் என்கிறார்.

ஜிம் ஷாப்பர் – பிற்கால ஹரப்பா காலகட்டத்தை உள்ளுர்மய காலகட்டம் என்ற புதிய பதத்தை பயன்படுத்தி அழைக்கிறார்.

கெனோயர் – ஹரப்பா நாகரிகத்தின் முடிவு என்ற ஒன்று இல்லை மாறாக அது தொடர்ச்சியில் மாற்றம் என்கிறார்.

மிஷல் தனின்னோ (நூலாசிரியர்) இரு நாகரிகங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்யலிடுகிறார்.

நகரஅமைப்பு மற்றும் கட்டிடம்

  1. நகரங்களை சுற்றியுள்ள கோட்டை கொத்தளங்கள் அகழிகைகள் ஹரப்பா காலகட்டத்தை போலவே வரலாற்று காலகட்டத்திலும் தொடர்கிறது.  (மதுரா, கௌசாம்பி (யமுனை கரை) ராஜ்காட் (வாராணாசி அருகில்), சிசுபால்காட் (புவனேஸ்வருக்கு அருகில்) உஜ்ஜெயனி (இந்தூருக்கு அருகில்), ராஜ்கிர், வைசாலி (பிஹார்) ). கௌடில்யரின் “ அர்த்த சாஸ்திரத்தில் அகழிகைகள் அமைப்பது தொடர்பான விரிவான யோசனைகள் கூறப்பட்டுள்ளது.

 

2.பனவாலி அரைவட்ட வடிவ கோவில் போல் கி.மு 200ல் கட்டப்பட்ட அட்ரஞசிக்கேடா (ஆக்ராவிற்கு 90 கி.மீ வடகிழக்கிலுள்ளது) அதே போல நீளஅகல விகிதங்களுடம் உள்ளது.

 

  1. பொது பயன்பாட்டுக்கான கட்ட்டங்கள் மிகப்பெரிய அளவிலாக கட்டப்பட்டிருத்தல். (மொஹஞ்ஜோதரோவிலுள்ள 5×4 தூண்கள் கொண்ட மண்டபம் போல் பாடலிபுத்திரத்திலுள்ள மண்டபமும் 10×8 தூண்கள் கொண்டது)

 

  1. ஹரப்பா வீடுகள் நடுவில் ஒரு முற்றமும் இதைச்சுற்றி மூன்று பக்கங்களில் அறைகளும் , நான்காம் பக்கத்தில் ஒரு அகன்ற நுழைவாயில் உள்ளது. இதே அமைப் அலகாபாத்த அருகிலுள்ள “பிடா“(BHITA) வில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

5.காலிபங்கனில் வீட்டுதளங்களில் உபயோகிக்கப்பட்ட மண்ணும், அடுப்புகரியும் சேர்ந்த விஷேச கலகை 4500 வருடங்களுக்கு பிறகு இன்றும் காலிபங்கனை சுற்றியுள்ள வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது

  1. ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட விளக்கு மாடங்கள் இன்றும் பாகிஸ்தானி பிராக் பகுதி வீடுகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது

7.தோலவிரா – 2000 ஆண்டிற்கு பிறகான காம்பல்யாவின் கோட்டை அமைப்புகள் வேறுபட்ட இரு நகர்புறக்கட்டடங்களை இணைக்கும் சங்கலியின் ஒரு கண்ணி ஆகும்.

8.ஒன்றுக்கொன்று செங்குத்தாக வெட்டிச்செல்லம் தெருக்களின் அமைப்பு. (மொஹஞ்ஜோதரோவிலுள்ள அதன் திட்ட அமைப்போடு காந்திரத்தின் சிர்கபா நகரமும். நேபாளத்தலுள்ள 15ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட திமி நகரஅமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.)

 

எடைகளும் அளவுகளும்

  1. ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட எடை அமைப்புகள் அர்த்த சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் எடை அமைப்பிற்கு ஆதாரமாக இருக்கிறது. மேலும் “குந்துமணி” என்ற ஒரு மிகச் சிறிய விதையை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் அர்த்த சாஸ்திரக் காலத்தில் மற்ற எடைகளின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது . இதே மதிப்புக்ள ஹரப்பா காலத்தில் பின்பற்றப்பட்ட எடைகளோடு வெகுவாக பொருந்துகின்றன என்று அளவியல் நிபுணர் (METROLOGIST) வி.பி.மெய்ன்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  2. வி.பி. மெய்ன்கர் அவரது சக ஆய்வாளர் எல.ராஜுவும் துல்லியமாக கணக்கிட்டு 1.78 செ.மீ என்பதை ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட அடிப்படை அலகாக குறிப்பிடுகிறார்கள். இது அர்த்த சாஸ்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அங்குலத்தோடு ஒத்துபோகிறது

அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள்

1 அங்குலம் = 8 குந்துமணியின் நீளம் = நடுவிரலின் அதிக பட்ச அகலம்=1.78 செ.மீ

108 அங்குலம் =  1 தண்டம் (தனுஷ்) = 1.92 மீட்டர்

10 தண்டம் = 1 ரஜ்ஜு = 19.2 மீட்டர்

2 ரஜ்ஜு  = 1 பரிதேசம் = 38.4 மீட்டர்

(நேபாளத்தின் திமி நகரின் தெருக்களுக்கிடையெ உள்ள தூரம் 38.4 மீ ஆகும்)

1.9 மீ என்பது தோலவிராவின் நகரஅமைப்புக்கு அடிப்படையாக இருக்கிறது என மிஷல் தனினோ குறிப்பிடுகிறார் 108 ஐ தேர்தெடுத்த்தில் வானசாஸ்திரக் கணக்கீடுகளுக்கும் பங்கு இருந்திருக்கலாம. சூரியனுக்கும் பூமிக்குமிடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தின் அடிப்படையில் 108 மடங்காக உள்ளது என்று விஞ்ஞானியும் இந்திய வரலாற்று அறிஞருமான சுபாஷ் கக் கூறுகிறார்

  1. டில்லியிலுள்ள இரும்பதூணின் அளவுகள் தோலவிரவின் அடிப்படையான அலகான 1.92மீ அடிப்படையில் உள்ளது. அவ்வாறு பார்க்கும் போது தோலவிராவில் பின்பற்றப்கட்ட விகிதங்களே இத்தூணிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சின்னங்கள் மற்றும் சிலைகள்

  1. சிலை வடிவமைப்பதற்கு பயன்படுத்திய LOST WAX CASTING  என்று மெழுகு அச்சுமுறை இன்றும் தமிழ்நாட்டிலுள்ள சுவாமி மலையில் பயன்படுத்தப்படுகிறது.
  2. ஹரப்பில் பயன்படுத்தப்பட்ட ஸ்வஸ்திக் முத்திரை, முடிவிலாத எட்டு. ஒன்றை வெட்டிக்செல்லும் வட்டங்கள் (புத்த கயாவிலுள்ள போதி சிம்மாசனத்தின் உச்சத்தில் இதேசின்னம் உள்ளது). யுனிகார்ன் போன்ற சின்னங்கள் சரித்திரகாலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு சான்று கிடைத்துள்ளது.
  3. காளை உருவம் இல்லாத ஹரப்பா முத்திரைகளோ, மண்பாண்டங்களோ இல்லை. ரிக் வேதமும் இந்த காளையையே பிற எல்லாவற்றையும் விட புகழ்ந்து பாடுகிறது.

 

எழுத்துக்கள்

  1. சிந்து சமவெளி குறியீடுகளுக்கும் கங்கை சமவெளியில் கிடைத்துள்ள நாணயங்களில் காணப்பட்ட உருவங்களுக்கும் இடையில் பொதுவான அம்சங்களை சவிதா சர்மா முன்வைத்துள்ளார். சிந்து சமவெளி சித்திர எழுத்து கி.மு 1800 வாக்கில் மறைந்த்து. பிராமி எழுத்தோ (கி.மு 5ஆம் நூற்றாண்டு)  அகர வரிசையினால் ஆனது. சிந்து சமவெளி எழுத்தோ சித்திர எழுத்துகள். அனைத்து இந்திய எழுத்துகளுக்கும் பிராமிதான் மூலவடிவம். ஆனால் 19ஆம் நூற்றாண்டிலிருந்த பெரும்பாலான அறிஞர்கள் பிராமி எழுத்துகள் வேறொன்றிலிருந்தோ (அ) செமிட்டிக் எழுத்திலிருந்தோ உந்துதல் பெற்ற உருவான ஒன்றாக சொல்கிறார்கள் (அதிலும் அராமிக் மொழியில் இருந்து உருவானதாக பிற்கால ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்) ஆனால இது வெறும் யூகமாகவே இருந்து வருகிறது. இந்த யூகம் சிந்துசமவெளி நாகரிக எழுத்துகள் பிந்தைய சரித்திர கால எழுத்துகளில் தாக்கம் செலுத்தியியருக்காலம் என்ற ஆய்வை தீவிரமாக மேற்கொள்ளவிடாமல் தடுக்கிறது. சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட கூட்டெழுத்துகள் , உச்சரிப்பை மாற்றும் அடையாளங்கள் பிராமி முறையிலும் பயன்படுத்தப்படுகின்றன.

2

மதம் சார்ந்த வாழ்க்கை

  1. பசுபதி உருவத்தை ஜான்மார்ஷல் ஆதி சிவனாக பார்த்தார். ஜான்மார்ஷல் சிவனை திராவிட கடவுள்களாக பார்த்ததை மிஷல் தனினோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை, காரணம் ரிக் வேதத்தில் சிவன் ருத்ரன் என்ற பெயரிலும் யஜுர் வேத்த்தில் சிவன் என்ற பெயரிலேயே இடம் பெற்றிருக்கிறது.
  2. ஹரப்பாவில் ஒரு எருமைமாடு கொல்லப்படும் காட்சி பல வில்லைகளில் காணப்படுகிறது. வேதத்திலும் எருமை பலி புகழ்ந்து பேசப்படுகிறது. இந்த ஹரப்பா வடிவம் துர்க்கா தேவி மஹிஷாஸுரனை கொல்லும் சம்பத்தை நினைவூட்டுகிறது என் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்
  3. ரிக்வேதம் கொம்பை பல இடங்களில் குறியீட்டு வாசகமாக பயன்படுத்தியுள்ளது. இது உள்அர்த்தங்களை புரிந்து கொள்வதற்கான சூட்சமத்தை தருகிறது.  ரிக்வேதத்தில் ஸவிதார் என்ற சூரியதேவன் “உண்மை என்ற தனது கொம்பை எங்கும் பரப்புகிறான்“ என்று அது சொல்கிறது. இந்த உருவக குறியீட்டை வரைய ஒற்றை கொம்பு மிருகத்தை விட பொருத்தமான வேறு எதுவம் இருக்க முடியாது.
  4. அக்னி வழிபாடு – ஹரப்பா, மொஹஞ்ஜோதரோவில் தேவி வழிபாடு பிரபலமாக இருந்திருக்கிறது. சரஸ்வதி பிரதேசத்திலும் குஜராத்திலும் அக்னி வழிபாடு நடைபெற்றிருக்கிறது. பனவாலியில் தகூஷிணாக்னி (அரைவட்டவடிவ ஹோமகுண்டம்). லோத்திலில் ஆஹவானியம் (சதுர வடிவ ஹோமகுண்டம), காலிபங்கனில் காரஹபத்யம் (வட்டவடிவ ஹோமகுண்டம்) மேற்கண்ட மூன்றும் தோலவிரவிலும் காணப்படுகிறது. பிற்காலத்தில் எழுதப்பட்ட சுல்ப சூத்திரங்கள் வேதகுண்டங்களின் அளவுகளை விவரமாக எடுதுரைக்கிறது.
  5. ஹரப்பாவில் புதைமாடம் H-ல் கிடைத்த வண்ணமயில் பறவையின் உடலுக்குள் படுத்தநிலையில் மனித உடல் இருக்கிறது.  இதற்கு இறந்த மனிதர்களின் உடல்கள் புழுக்களும் பறவைகளும் குறிப்பாக மயில்களும் தின்றன என்ற மகாபாரத வாக்கியத்தை கோசம்பி சுட்டிகாட்டுகிறார். ஹரப்பா வாசிகளுக்கு மறுபிறவியில் நம்பிகை இருந்திருக்கிறது ஆனால் இறந்தவர்களை விட உயிர் வாழ்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

கலாச்சாரம்

  1. ஹரப்பாவில் சமூகம் சார்ந்த அதிகாரப் பரவலாக்கம் (செயல்பாடுகளும் கூட) வேற்றுமையில் ஒற்றுமை என்ற அம்சம் இருந்தது. ஆளும் வர்க்கம் என்ற ஒன்று இல்லாதிருந்த்து, கங்கை சமவெளி நாகரிகத்தின் தொடக்க காலங்களிலும் இப்படிப்பட்ட சமூக அமைப்புதான் நிலவியது. தர்மம், அர்த்த, காம, மோட்சம் ஆகிய நான்கு குறிக்கோள்கள்தான் சரித்திர இந்தியாவின் கலாசார அடித்தளமாக விளங்கின. வர்த்தகத்தையம் செல்வத்தையும் பெருக்கியதன் மூலம் மேற்கண்ட மூன்று குறிக்கோள்களை ஹரப்பாவாசிகள் நடைமுறைபடுத்தியிருக்கிறார்கள் (இராணுவத்தை பயன்படுத்தாமல்), யோக, தியான முறை மூலம் மோட்சத்தை அடைவதிலும் ஆர்வமாக இருந்திருக்க வேண்டும் என யூகிக்கலாம்

 

சி.கெனோயர் சொல்லும் சாராம்சம் ” சிந்துநதி நாகரிகத்திற்கும் பிந்தைய சரித்திரகால நாகதரிகத்திற்கும் இடையே நிறைய தொடர்புகள் இருக்கின்றன. பழைய விவசாய முறைகள், மேய்ச்சல் வழிமுறைகள் தொடர்கின்றன. மண்பாண்ட தயாரிப்பு முறைகள் பெரிய அளவில் மாறவில்லை. நகைகள் வேறு விலையுயர்நத பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதில் ஒரே மாதிரியான செயல்முறைகளும் வடிவமைப்புகளும்தான் பின்பற்றப்படுகிறனற்ன. ஆகவே சரித்திரத்துக்கும் முந்தைய காலத்தையும், சரித்திர காலத்தையும் பிரிக்கும்  இருண்ட காலம் என்று ஒன்று உண்மையில் இல்லை” என்கிறார்.
ஆய்வாளர் டி.பி.அக்ர்வாலின் கருத்து ” ராஜஸ்தான் பெண்மணிகள் இன்று அணியும் வளையல்கள் , அதன் பாணி , உச்சி வகிட்டில் சிந்தூரம் இட்டு கொள்வது யோகா, இருபடிநிலையிலான எடையும் அளவுகளும், வீடுகளுக்கான அடிப்படைக் கட்டுமான வழிமுறைகள் ஆகிய அனைத்துக்கமே சிந்து சமவெளி நாகரிக்காலத்தில் வேர்களைக் காணமுடியும். மிகவும் விசித்தரமான விஷயம்தான் என்றாலும் இதுதான் உண்மை. ஹரப்பாவாசிகளின் கலாசார, மத பழக்க வழக்கங்கள் பிந்தைய இந்திய கலாசாரத்திக்கு அஸ்வதிவாரமாக அமைந்திருகின்றன.”

ஸ்டுவர் பிக்காட் மேற்கிலிருந்து வந்தவர்களால் மூர்க்கமாக ஹரப்பா சிதைக்கபட்டதற்கான எந்த ஒரு தடயமும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்.

” இரு நாகரிகங்களுக்கும் இடையிலான 700 வருடகாலம் என்பது  சீர்குலைந்து போன இருண்ட காலமல்ல மாறாக மறு ஒருங்கிணைப்புக்கும் விரிவாக்கத்திற்குமான காலம்.ஆகவே இருண்ட காலம் (VEDIC DAR AGE)  என்று முன்பு சொன்ன கருத்தாக்கங்கள் இன்று காலாவதியாகிவிட்டது ” என்று ஜிம் ஷாஃபர்  உறுதியாக சொல்கிறார்.

வேதகாலம் கி.மு 2500 – 3000சார்ந்த்து என்கிறார் மிஷல் தனினோ

இவ்வாறு பல அறிவியல் மற்றும் இலக்கிய சான்றுகளின் அடிப்படையிலும் பல்வேறு துறையை சேர்ந்த அறிஞர்களின் முடிவுகளின் அடிப்படையிலும். இரு நாகரிகத்திற்குமான தொடர்ச்சியையும் ஒற்றுமையையும் என  நிறுவுகிறார் நூலாசிரியர் மிஷல் தனினோ.

3

ஆப்கானிஸ்தானிய சரஸ்வதி

1883ல் இந்தியவியலாளரான எட்வர்ட் தாமஸ் ”உண்மையான சரஸ்வதி பாய்ந்தோடிய பகுதி பஞ்சாப் சமவெளி அல்ல தெற்கு ஆஃப்கானிஸ்தானின் ஹெல்மண்ட நதிதான் அது என்று வாதிட்டார். ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து தெற்கு நோக்கில் புலம் பெயர்ந்து வந்த வழியில் ஹெல்மண்ட நதிக்கரையில் சிறிது காலம் தங்கினார்கள். அதன் பிறகு இந்திய உபகண்டத்தில் நுழைந்து தங்களுடைய கிழக்கு நோக்கியுள்ள பயணத்தை தொடருகையில், சிந்து நதியையும் அதன் கிளை நதிகளையும் கடந்து சென்று கடைசியில் சர்சுதி நதியை அடைந்தனர். தாமஸைப் பொறுத்தவரையில் இந்த நதி எப்பொழுதுமே அளவில் சிறியதாகதான் இருந்திருக்கிறது. ஆனால் ஆரியர்கள் தாங்கள் கடந்து வந்த ஆஃப்கானிய பிரமாண்ட நதியின் நினைவைப் போற்றும் வகையில் “ சரஸ்வதி” என்ற பெயரை இந்தச் சிறிய நதிக்கு சூட்டினார்கள் என்கிறார்.

இந்த உணர்சிமயமான காட்சிகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு புனைவுத்தன்மை நீக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்பட்டு சரஸ்வதி-ஹக்ராஅடையாளப்படுத்தலை மறுதலிக்கும் சிலரால் முன்வைக்கபடுகிறது.அவர்களில் ஒருவர் வானசாஸ்திர இயற்பியல் நிபுணர் (ASTROPHYSICIST) ராஜேஷ் கோச்சர். 2000ல் இவர் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இது தொடர்பான அழுத்தமான கோட்பாட்டை முன் வைக்கிறது. இதற்கு ஒரு வருடத்திற்குள் சரஸ்வதி சாட்சிக் கூண்டிலிருந்து குற்றவாளிக் கூண்டுக்கு இழுத்துச் செல்லபட்டுவிட்டாள். இந்திய மத்தியகாலம் பற்றிய  வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபீப் எழுதிய கட்டுரையின் தலைப்பே அதன் தீர்மானத்தை சுட்டுவதாக இருந்த்து. கட்டுரை தலைப்பு ”சரஸ்வதி நதியைக் கற்பனை செய்து பார்த்தல் – அடிப்படை அறிவின் தற்காப்பு வாதம். (IMAGINING RIVER SARASVATHI – A DEFENCE OF COMMON SENSE )”.

இர்ஃபான் ஹபீபை பொறுத்தவரையில் சரஸ்வதி நதி என்ற ஒன்று ஒருபோதும் இருந்த்தே இல்லை. அது வெறும் ரிஷிகள் மற்றும் நம்முடைய கற்பனைகளில் இருக்கும் நதி மட்டுமே ஆகும். இந்தக் கட்டுரையின் முடிவில் ஹபீப் இந்த விஷயத்தில் தன் கருத்தியலையும் புகுத்துகிறார். ”சர்ஸ்வதி நதி ஒரு காலத்தில் மகத்தானதாக இருந்த்து என்று சொல்வது திராவிட மற்றம் ஆரியர்கள் அல்லாதவர்களிடமிருந்து சிந்து (சரஸ்வதி) சமவெளி கலாசாரத்தை தட்டிப் பறிப்பதற்கு சமமானது” என்கிறார்.

இப்படி வாதிடுவதன் மூலம் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய ஆரிய-திராவிட இனப்பாகுபாட்டை மீண்டும் உயிர்பிக்கப் பார்க்கிறார் ஹபீப். நல்லவேளையாக இன்றைய மானுடவியல் நிபுணர்களும் மரபியல் நிபுணர்களும் அதை நிராகரித்துவிட்டிருக்கிறார்கள்.

ராஜேஷ் கோச்சர் மற்றும் இர்ஃபான் ஹபீப் ன் குற்றசாட்டுகளை அத்தியாயம் 11ல் நூலசிரியர் விரிவாக விளக்கி ஆய்வு முடிவுகளையும், அறிஞர்களின் துணை கொண்டும் நிராகரிக்கிறார்.இந்த விவாதம் விஷ்ணுபரத்தில் வந்த ஞான விவாத்த்தையும். பன்னிருபடைகளத்தில் ராஜஸுயத்தில் நடந்த விவாத்த்தை நினைவு படுத்துகிறது.

11வது அத்தியாயத்தின் இறுதயில் இந்த ஆய்வின் சிக்கல்தன்மையை பற்றி மிஷல் இவ்வாறு கூறுகிறார்.

”சரஸ்வதி நதி பற்றிய நம் ஆய்வுகளின் மூலம் ஒரு விஷயம் தெளிவாக தெரியவந்திருக்கிறது. அது மற்றெல்லா இடங்களையும் போலவே இங்கும் உண்மை நிலைமையை அறிவது அத்தனை எளிதல்ல. பனிக்காலத்தின் கடைசிக் கட்டம் முதல் சட்டென்று வறண்டுபோன கி.மு.1900 வரை திட்டவட்டமாக வரையறுக்கப்ட்ட ஒரு பாதையில், தடையின்றி பாய்ந்தோடிய ஒரு மாபெரும் நதி இருந்திருக்கவில்லை அதன் பரிணாம வளர்ச்சியின் பாதை மிகவும் சிக்கலானது நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அதன் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தையும் நம்மால் துல்லியமாக கணக்கிட முடியாது. வருங்காலத்தில் புவியியல், புராதன காலநிலை சாஸ்திரம், ஐசோடோப்புப் பரிசோதனைகள், புதைபொருள் ஆய்வுகள் போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆராய வேண்டியுள்ளது.”

இறுதியாக சரஸ்வதி நதியை சுட்டிக்காட்டும் ஆறு அறிஞர்களின் வரைபடங்களை கொண்டு 11வது அத்தியாயத்தை நிறைவு செய்கிறார்.

 

4

 

இதுவரை நாம் பார்த்து வந்ததை இவ்வாறு தொகுத்து இறுதி அத்தியாத்தில் முடிக்கிறார்.

  • ஆரம்பத்தில் யமுனையும் சரஸ்வதியும் அருகருகே இருந்தன.
  • யமுனை நதி நீரும் சட்லெஜ் நதி நீரும் கலந்த்தால் சரஸ்வதி கரைபுரண்டு ஓடி கட்ச் ரண் பகுதயில் கடலில் கலக்கிறாள்.
  • பின்பு பூகம்பம் போன்ற நிகழவால் சரஸ்வதியை விட்டு பிரிகிறாள். பிறகு சரஸ்வதி த்ருஷதியும் சங்கமிக்கும் இடத்திற்கு கிழே இன்றை இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் விநாசனம் என்ற இடத்தில் மறைகிறாள்.
  • சட்லெஜ் நதி சரஸ்வதியில் இணைவது மாறியதாலும், பருவமழை குறைவதும் ஷத்ரானாவுக்கும் கோலிஸ்தானுக்கமிடைய மிகப்பெரிய வெற்றிடம் உருவாகிறது.
  • பிற்கால ஹரப்பா மக்களும் அவர்களுக்கு பிறகு வந்தவர்களும் (சிவப்பு வண்ண மண் பாண்டங்கள் காலகட்டம், வண்ணச் சுடுமண் கால கட்டம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்) கிழக்கு நோக்கி புலம் பெயர்கிறார்கள்.
  • கங்கை சமவெளியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயத்தை வாழ்வாதாரமாக்க் கொண்டிருந்த மக்களுடைய குடியிருப்புகள் காணப்பட்டிருக்கின்றன.
  • அவர்களும் அங்கு புதிதாக வந்த குடியேறிய பிற்கால ஹரப்பாவாசிகளுடைய கலச்சார சங்கம்ம் நடத்திருக்க வேண்டும்.(இது தொடர்பாக மிகக் குறைவான ஆவணங்ளே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த சங்கமத்தின் விளைவாக கி.மு.முதலாயிரம் ஆண்டில் அந்த பிரதேசம் நகர்மயமாகியிருக்க வேண்டும்.
  • பிற்கால ஹரப்பாவாசிகள் புலம் பெயர்ந்தாலும் சரஸ்வதி நதியை மறக்கவில்லை அதன் புனிதத்ன்மையை யமுனை கங்கைக்கு கொடுத்தனர். முப்பெரும் நதி தேவிகள் உருவாகி ஒரு புனித திரிவேணி சங்கம் உருவானது. உலகப்புகழ் பெற்ற கும்பமேள நடக்கும் புண்ணிய ஸ்தலமாக மாறியது.
  • பல வழிகளில் கங்கைச் சமவெளி நாகரிகம் சிந்து சரஸ்வதி நாகரிகத்தின் மறு அவதாரமாயிற்றோ அப்படியே கங்கையும் சரஸ்வதியின் மறு அவதாரமாக மாறிவிட்டாள்.

தொன்ம உலகில் பாய்ந்த நதியை நாம் பூமிக்கு கொண்டுவந்துவிட்டோம். இவள் காணாமல் போய்விட்டாள். ஆனால் மறக்கப்படவில்லை. வறண்டுபோனாலும் கூட அவள் “வாக்கு மற்றும் உத்வேகத்தின் மறு அவதாரமாக மதிப்பில் உயர்ந்துவிட்டிருக்கிறாள். அந்த நதியின் கடைசி துளியும் வறண்டுவிட்டது. ஆனால், அவள் ஒவ்வொருவருடைய உண்மையான சிந்தையிலும் வாக்கிலும் வசித்திருப்பாள். ஒரு நாளும் வற்றப் போவதில்லை அந்த நதியின் ஊற்று. “உனது புனித நீர் ஒட்ட மொத்த பிரபஞ்சத்தையும் நிரப்புகிறது“ என்று மகாபாரத்த்தில் வசிஷ்ட மகரிஷி சரஸ்வதியை பார்த்துக் கூறுகிறார்.

முடிவற்ற மறு பிறவியை விளக்க இதைவிடச் சிறந்த உருவகம் இருக்கவே முடியாது.

இறுதியாக ரிக் வேத்த்தின் சரஸ்வதி ஸ்துதி ஸ்லோகத்தோடு புத்தகத்தை நிறைவு செய்கிறார் நூலாசிரியர் மிஷல் தனினோ.

ஹரப்பாவின் மூன்று காலகட்டத்தின் சரஸ்வதி நதியின் வரைபடம்

5

தற்போது இங்கிலாந்து ஐரோப்பா பயணத்திலிருப்பீர்கள. தங்கள் பயணம் சிறப்புற வாழ்த்துகள்.

இந்த புத்தகதின் கருத்துக்கு இசைவான (அ) வேறுபட்ட படைப்புகளோ கட்டுரைகளோ வந்திருந்தால் பரிந்துரைக்கவும்.

 

இப்படிக்கு

ரா.சந்திரசேகரன்.

No comments:

Post a Comment