Sunday, December 7, 2025

இராஜாதித்தன் வீரமரணம்- ஆதகூர்க் ( Atkur ) கல்வெட்டு & சோழர் செப்பேடு தரும் இரு வேறு செய்திகள்

 வீரமரணம் ஒன்று – அது தரும் இரு வேறு வரலாற்றுச் செய்திகள் !

இராஷ்டிரகூட ( Rashtrakuta ) வேந்தன் கன்னரத்தேவன் என்ற மூன்றாம் கிருஷ்ணனுக்கு ( Kannara ( a ) Krishna III 939 – 967 C.E. ) உடன் பிறந்த தமக்கை ஒருத்தி இருந்தாள் . அவள் பெயர் ரேவகனிமதி ( Revakanimmadi ) . இவள் மேலைக் கங்க நாட்டின்(Western Ganga Dynasty ) அரசன் இரண்டாம் பூதுகனுக்கு (Butuga II 938–961 CE) மணம் முடிக்கப்பட்டு இருந்தாள் .
கிருஷ்ணன் தன்னுடைய பெரும் படையுடன் சோழர்களை இன்றைய வேலூர் மாவட்டம் , அரக்கோணம் வட்டத்தில் உள்ள தக்கோலம் என்ற இடத்தில் பொது யுகம் 949 ஆண்டு எதிர்கொண்டு தாக்கினான் . சோழர்களின் படைகளுக்கு தலைமை தாங்கிய பராந்தக சோழரின் ( Parantaka Chola I (c. 907–955) ) மூத்த மகனும் பட்டத்து இளவரசனுமான இராஜதித்தன் ( Rajadityan ) அந்தப் போரில் யானை மீதே இருந்து எதிரியின் அம்பால் மரணம் அடைந்தான் .
முதலாம் இராஜராஜ சோழரின் ( Raja Raja Chola I ) இருபத்தியொன்றாம் ஆட்சியாண்டின் ஆனைமங்கல செப்பேடு ( பொது யுகம் 1005 ) என்ற பெரிய லெய்டன் ( Leiden ) செப்பேட்டின் சம்ஸ்க்ருத ச்லோகத்தின் இருபதாவது செய்யுள் இராஜாதித்தன் மரணத்தை இவ்வாறு குறிப்பிடுகிறது :
“ சூரியகுலத்திற்கே திலகம் போன்றவனும் வீரனுமான இராசாதித்தன் எல்லாப் புறங்களிலிருந்தும் பாயும் கூரான அம்புகளால் குலைக்க முடியாத கிருட்டிணராசனைப் படையோடு சேர்த்துக் கலங்கடித்தான் . அதன் பிறகு அவனுடைய கூரான அம்புகளால் யானைகளில் இந்திரன் போன்ற யானையின் மீது வீற்றிருந்த படியே நெஞ்சுப் பிளக்கப் பட்டவனாய் மூவுலகிலும் புகழடைந்தவனாய் விமானத்தில் ஏறி வீரலோகங்களை அடைந்தான் “
பெங்களூரு ( Bengalooru ) அருங்காட்சியகத்தில் உள்ள ஆதகூர்க் ( Atkur ) கல்வெட்டு வேறு சில செய்திகளைத் தருகிறது . இராஜாதித்தனைக் கொன்றது மூன்றாம் கிருஷ்ணனின் அம்புகள் என்ற சோழர்களின் ஆனைமங்கலச் செப்பேடு கூறும்பொழுது , இந்தக் கல்வெட்டு வேறு செய்தியைக் கூறுகிறது என்கிறார் A S அல்டேகர் ( A S Alteker ).
1 . முதலில் இந்தக் கல்வெட்டை மொழி பெயர்த்தவர் இராஜாதித்தனைக் கொன்றது மூன்றாம் கிருஷ்ணன் அல்ல என்றும் அவனுடைய மைத்துனர் இரண்டாம் பூதுகன் எனவும் , அதுவும் சோழனை வஞ்சகமாக பேச்சு வார்த்தைக்கு அழைத்து கொன்றான் என்று தவறாக மொழிபெயர்ப்பு செய்யபட்டு புரிந்து கொள்ளபட்டது . இந்த தவறுக்கு காரணம் ப்ளீட் (John Faithfull Fleet (1847 – 21 February 1917) ) என்றும் பின்னர் அவரே இந்த தவறை திருத்தினார் என்றும் அல்டேகர் தன்னுடைய நூலின் அடிக்குறிப்பில் தெரிவித்துள்ளார் .
2 . அல்டேகர் கூறுவது என்னவென்றால் , பூதுகன் வீரமாக இராஜாதித்தன் அமர்ந்து இருந்த யானையின் மீது தாவி ஏறி , அந்த யானையைக் கொன்று விட்டு அந்த அம்பாரியில் இருந்த சோழ இளவரசனைக் குத்திக் கொன்றான் என்பதே .
3 . இறுதியாக சோழரின் செப்பேடு தரும் செய்தியும் , இராஷ்டிரகூடர் கல்வெட்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றியே இந்தப் பதிவு .
முடிவுரை :
சோழ பட்டத்து இளவரசன் இராஜாதித்தன் “ யானை மேல் துஞ்சிய தேவர் ” எனப் பெயர் பெற்றான்.
மூன்றாம் கிருஷ்ணன் தன்னுடைய மைத்துனன் இரண்டாம் பூதுகனின் வீரச் செயலைப் பாராட்டி பனவாசி ( Banavasi ) 12000 , பெல்வோல ( Belvola ) 300 , புரிகேரே ( Purigere ) 300 , பாகேநாடு ( Bagenad ) 70 கின்சுகாத் ( Kinsukad ) 70 ஆகிய பகுதிகளை வழங்கினான் .
ஓர் இளவரசனின் வீர மரணம் – இரு செய்திகளை இரு விதமாக தருகிறது !
References :
1. Rashtrakutas And Their Times- A S Alteker
2. சோழர் செப்பேடுகள் – முனைவர் G சங்கரநாராயணன்
From Surya Sarathi Roy post :-
The 21 copper plates are held together by a bronze ring bearing the seal of Rajendra Chola. A royal charter, or sasana, of the Chola kings, which was lost 300 years ago from Tamil Nadu, is now preserved at Leiden University in the Netherlands. This charter, issued by the Chola kings to a Buddhist vihara, has significant historical importance.
With the Netherlands reconsidering its colonial collections and planning to return over 10,000 artifacts to their source nations or former colonies, art enthusiasts believe it is time for India to make efforts to reclaim this important piece of its heritage.
The charter consists of two sections — one in Sanskrit and the other in Tamil. The 21 copper plates are bound together by a large bronze ring that bears the royal seal of Rajendra Chola. These plates document the genealogy of the Chola dynasty and detail the reign of King Rajaraja I (985-1012 AD), the father of Rajendra Chola (1012-1042 AD).

Saturday, December 6, 2025

சங்க இலக்கியத்தில் ராமாயண செய்திகள்- கொடூர அரக்கன் ராவணன்

சங்க இலக்கியத்தில் ராமாயண செய்திகள்- கொடூர அரக்கன் ராவணன்

பாட்டுத் தொகை நூல்கள் அகம் - புறம் எனக் காதல் மற்றும் வீரம் முக்கியப்படுத்தி இயற்றப்பட்டவை. அதில் புலவர் உவமையாக ஒரு விஷ்யத்தைக் கூறினார் எனில் அது மக்களுக்கு பரவலாக அறிந்துள்ள விஷயத்தை எடுத்து தன் கருப்பொர்ளைக் கூறினர். பண்டைத் தமிழர்கள் வாழ்க்கை, இறை நம்பிக்கை - வழிபாடு மெய்யியல் போன்ற விஷயங்களை சங்க இலக்கியம் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது. 

அவற்றில் ராமாயணச் செய்திகள் பற்றிக் காண்போம்.
புலவர்க்கு சோழ அரசன் தந்த தங்க நகைகளை தன் குழந்தைகள் மாற்றி அணிந்ததை அரக்கன் ராவணன் கடத்திச் சென்றபோது- சீதாப் பிராட்டி ராமபிரான் தேடி வரும்போது வழி காட்டத் தான் அணிந்த நகைகளை தூக்கிப் போட, அதை சுக்ரீவனோடு இருந்த வானரங்கள் மாற்றி அணிந்ததோடு பொருத்தி பாடினார் புலவர் 
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது. புறநானூறு_378
“அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே” - புறநானூறு 378
கடும் போர்த்திறம் கொண்ட ராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை கொடூர அரக்கன் ராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டு கொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம் தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது என்று உவமை கூறுகிறார்.

சீதையை ராவணன் தூக்கிச் செல்லும் காட்சி பொமு.1ம் நூற்றாண்டு சுடுமண் சிற்பம்

A terracotta plaque with scene of abduction from the Ramayana, Chandraketugarh, 1st century BCE – 1st centuryCE

சோழ வேந்தன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி நாட்டை விரிவாக்கும் நோக்கத்தில் வஞ்சிப் பூச் சூடி, செருப்பாழி என்னும் கோட்டையை அழித்துத் தனதாக்கிக் கொண்டான். அந்த வஞ்சிப் போரைப் புலவர் பாடினார். அது கேட்ட வேந்தன் புலவர்க்கு அவர் அறிந்திராத அரிய அணிகலன்களை வழங்கிச் சிறப்பித்தான். அதனைப் பார்த்த புலவரின் பெருஞ் சுற்றத்தார் விரலில் அணிய வேண்டிய அணிகலனைக் காதில் மாட்டிக்கொண்டனர். காதில் அணியவேண்டியவற்றை விரலில் மாட்டிக் கொண்டனர்.
இடுப்பில் அணியவேண்டியவற்றைக் கழுத்தில் மாட்டிக் கொண்டனர். கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டியனவற்றை இடுப்பில் கட்டிக்கொண்டனர். கடும் போர்த்திறம் கொண்ட ராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை கொடூர அரக்கன் ராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டு கொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம் தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது என்று உவமை கூறுகிறார்.
பொருள்: போர்க்குணம் கொண்ட ராமன் உடன் வந்த அவன் மனைவி சீதையை, தன் வலிமை மிகுந்த கரங்களை கொண்ட அரக்கன் கவர்ந்து சென்றான் என #ஊன்பொதி_பசுங்குடையார் ராமாயண கதையை நமக்கு விளக்குகிறார் புறப்பாடலில். அன்றே இராவணனை அரக்கனாகத்தான் சுட்டியுள்ளனர்.

#கலித்தொகை - [பாடல் 38 வரிகள் 15]

|| இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிருதலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன்போல ||

பொருள்: இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன், உமையவளுடன் வீற்றிருந்தான். அப்போது, பத்துத் தலைகளை உடைய அரக்கர் தலைவன் இராவணன், காப்புப் பொலியும் தன் வலிமையான கைகளை, மலையின் கீழே புகுத்தி, அதை தூக்க முயன்றான்; எடுக்க முடியவில்லை. அதனால் மலையின் கீழ் சிக்கி வருந்தினான். என அரக்கன் இராவணன், எம்பெருமான் வீற்றிருந்து அருளும் கைலாயத்தை அசைக்கக் கூட முடியவில்லை; ஆனால் தன் ஆணவத்தால் முயன்றான் என்பதை, கலித்தொகை சொல்கிறது.

 இராவண அனுக்கிரக மூர்த்தி; கலித்தொகை- 38 காட்டும் உவமை செழிப்பான நாட்டைக் காட்ட உவமையாக கூறப்பட்டு உள்ளது.
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
ஐ_இரு தலையின் அரக்கர் கோமான்
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல 5
இமய மலையை வில்லாக வளைத்த சிவபெருமான், ராமபிரான் முன்னோர் மோட்சத்திற்காக  கங்கை ஆறு பூமிக்கு  பாய தன் தலை மேல் ஏற்றதால் ஈரமான சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை அரக்கர் தலைவன் இராவணன் தொடி அணிந்திருந்த தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அம்மலையை எடுக்க முயல; முடியாமல் துன்புற்றான். அதுபோல ஒரு நிகழ்வு. வேங்கை மரம் பூத்திருந்தது. அது புலி போல் தோன்றியது. அதன் மீது சினம் கொண்டு மதம் கொண்ட யானை வேங்கை அடிமரத்தில் குத்தியது. குத்திய கொம்பை அதனால் பிடுங்க முடியவில்லை. மலையின் குகைகளில் எதிரொலி கேட்கும்படி முழங்கியது. இப்படி யானை முழங்கும் நாட்டை உடையவன் நீ. நாட! கேள்.  
ராமாயண உத்திர காண்டத்தில் இந்த கதை உண்டு. தன் கை சிக்கிய போது தசக்ரீவன் பெருத்த கூச்சல் எழுப்பியதால் ராவணன்( உயர் குரலோன்) எனப் பெயர் வந்தது
திருஞானசம்பந்தர் தேவாரம், திருமறைக்காட்டுப் பதிகம்- இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,
“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே” 
ராவணன் கைலாய மலை மீது தன் புஷ்பக விமான பரக்க இயலாமல் போக அங்கு இருந்த நந்தியிடம் காரணம் கேட்க சிவபெருமான் - உமை அம்மையோடு உள்ளதைக் கூற - ராவணன் கேலி செய்ய நந்தி குரங்குகளால் அழிவாய் எனச் சாபம் கொடுத்தார், ராவணன் கைலாயத்தையே தூக்க முயல அங்கு இருந்த உயிர்கள், குலுங உமை அம்மையும் கலங்க சிவபெருமான் தன் விரலால் அழுத்த - ராவணன் உண்மை உணர்ந்து வருந்து சிவபெருமானை வணங்கி சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடிட, சிவபெருமானிடம் தன் நித்திய வணக்கத்திற்கு ஆதம லிங்கம் தர - அதை எடுத்துச் செல்லும் வழியில் கோகர்ணத்தில் கீழே வைக்க அங்கேயே அந்த லிங்கம் உள்ளதாம்.
1. கம்போடியாவில் பந்தியாய் சிரே 10ம்  நூற்றாண்டு  சிவாலய சிற்பம்
2.ராவன அனுக்கிரக மூர்த்தி
3 எல்லொரா சிற்பம்
4.  திருவண்ணாமலை
5. ஹொய்சாளர் அளபேடு




(அரக்கன் ராவணன் தன்னைத் தேரில் தூக்கிச் சென்ற போது தேடி வரும் ராமர் வழி தெரிய தான் அணிந்த மாலைகளை வீசி எரிந்திட அந்த நகைகளை எங்கே அணிவது தெரியாமல் மாற்றி அணிந்தமையால் அக்கோவில் குரங்கணி அம்மன் கோவில் எனப்படும்)


பண்ருட்டியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் 
இராவண அனுக்கிரக மூர்த்தி /Ravananugraha-murti

 தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோயில் ஆகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்[1]. இத்தலம் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றென சிவபெருமான் திரிபுரம் எரித்த தலமாகக் கருதப்படுகிறது.

⚜️இலங்கை அரசனான இராவணன், தீவிர சிவபக்தன் ஆவார். இவர் தேரில் செல்லும் போது இமயம் எதிர்பட அதனை பெயர்க்க அசைத்தார். சிவபெருமானின் அருகில் இருந்த உமையம்மை, அஞ்சினாள்.



2. ‘வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே’
- கடுவன் மள்ளனார் (அகம் 70 - வரிகள் 13 முதல் 17 வரை)

உவமை: தோழி சொன்னாள், “ஆம் தலைவி. பாண்டியரின் தொல்முது கோடியான கடற்கரை ஊரில் பல விழுதுகளை உடைய ஆலமரம் ஒன்று இருந்தது. காலம் காலமாய் அதில் வாழ்ந்து வந்த பறவைகளின் அடங்காத கீச்சொலியால் அந்த ஊரே அமைதியின்றி இருந்தது. சீதையைத் தேடி அந்த ஊருக்கு வந்த போரில் வெற்றி கொள்ளும் பண்பினரான ராமன், தம் நண்பர்களுடன் கூடிச் சீதையைத் தேடும் வழிமுறைகளை ஆராய முயன்ற போது பறவைகளின் அடங்காத ஒலி இடையூறாய் விளைந்தது. பார்வையாலோ, இதழ் விரித்து எழுப்பிய ஓசையாலோ ராமர் அந்தப் பேரொலியை ஒரு நொடியில் அடங்கச் செய்தாராம். அதைப் போலத்தான் நம் பெற்றோர் உனக்கும் அவருக்கும் திருமணம் என்றதும் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த ஊர் வாயும் அடக்கிவிட்டது”.
(கோடி = தனுஷ்கோடி - தொன் முது கோடி, கவுரியர் = பாண்டியர்).

(கிருஷ்ண-பலராமர் காசு. இந்திய-கிரேக்க மன்னரால் 2200 ஆண்டுகளுக்கு முன்)
3. “இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல”
- கபிலர் / திணை - குறிஞ்சி
இமய மலையை வில்லாக்கி வளைத்தவர் சிவபெருமான், அவன் கங்கை ஆறு பாயும் ஈரச் சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு
சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை கொண்டவனான அரக்கர் தலைவன் ராவணன் தொடி அணிந்திருந்த தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அந்த மலையை எடுக்க முயன்றான்.


அடுத்து தேவாரம் சொல்வதை பாருங்கள்👇

_____________

#அப்பர்தேவாரம்

|| அரக்க னார்தலை பத்து மழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை புள்ளிருக்கு வேளூர்
விருப்பி னால்தொழு வார்வினை வீடுமே ||

இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்குவேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும்.

#திருஞானசம்பந்தர்தேவாரம்

|| பெருக்குஎண்ணாத பேதைஅரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத் தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்துஏத்த
முருக்குண்ணாது ஓர் மொய்கதிர்வாள்தேர் முன்ஈந்த
திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே ||

பொருள்: அன்போடு வழிபட்டால் ஆக்கம் பெறலாம் என்று எண்ணாத அறிவிலியாகிய அரக்கன் இராவணன், கயிலையைப் பெயர்த்த போது அதன்கீழ் அகப்பட்டு நெருக்குண்டு நல்லறிவு பெற்று, விரிந்த புகழை உடைய தன் திருவடிகளை அவன் நெஞ்சினால் நினைந்து போற்றிய அளவில், அவனுக்கு அழிக்கமுடியாத,ஒளியினை உடையவாளையும் தேரையும் முற்காலத்தில் வழங்கியருளிய சிவபிரான் வீற் றிருக்கும் தலமாகிய திருக்கண்ணார் கோயில் என்று கூறுவார் சிவலோகம் சேர்வர்.

இதிலும் சம்பந்தர் 'அறிவிலி, அரக்கன்' இராவணன் என்றே சொல்கிறார். சிவபெருமான் அவனுக்கு வழங்கிய சந்திரஹாசம் எனும் வாளினைத்தான் குறிக்கிறார்...!

மீண்டும் அப்பர் தேவாரம்👇

|| கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற வீச னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே ||

பொருள்: பொன்னும், வயிரமும் முற்பட்ட சிறந்த இரத்தினங்களும் உடைய கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்துவிடும் அகந்தையுற்ற மனத்தானாய் அரக்கன் ஓடிவந்து, அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலே பார்வதி அச்சம் கொள்ளப் பாவ மில்லாதவனாய் நிலைபெற்று, எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான், விரலைச் சற்று ஊன்றிய அளவிலே அரக்கனாகிய இராவணன் அலறிக் கொண்டு செயலற்றுக் கீழே விழுந்தான். எம் பெருமான் நிலைபெற்ற உள்ளத்தனாய் விரலை அழுந்த ஊன்றி இருந்தானாயின், மீண்டும் இராவணன் கண்விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது.


மேற்கண்டபடி சைவ, தமிழ் சங்க இலக்கியங்களின் தடத்தின் வழியேயும் இராவணன் அரக்கனே. கயிலாயத்தை ஆணவத்தால் அசைக்கப் முற்பட்டு சிவனால் அழுத்தப்பட்டு அலறி வீழ்ந்தவன். இதுதான் அவனது பிம்பம்.



(ஹேலியோடோரஸ் தூண் (Heliodorus pillar) சாஞ்சிக்கு அருகில் விதிஷா நகரம்,
இத்தூண், இந்து சமயத்திற்கு மதம் மாறியவரும், சுங்கப் பேரரசில், இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவரும், கிருஷ்ண பக்தருமான ஹேலியோடோரஸ் (Heliodorus (votive erector) என்பவரால், பொமு 113இல் பகவான் கிருஷ்ணருக்காக நிறுவப்பட்டது. கிருஷ்ணர் கோயில் முன் அமைந்த இத்தூணின் உச்சியில் கருடச் சிற்பம் அமைந்துள்ளது.)4. திருப்பரங்குன்றத்து குகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஓவியக் கலைகளில் அகலிகை பற்றிய குறிப்பு:

“என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,
இரதி காமன், இவள் இவன்’ எனாஅ,
விரகியர் வினவ, வினா இறுப்போரும்;
‘இந்திரன், பூசை: இவள் அகலிகை;
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது’ என்று உரைசெய்வோரும்”

திருப்பரங்குன்றத்து முருகப் பெருமானை வணங்கிய பிறகு, மக்கள் இந்த ஓவிய மண்டபத்தில் சென்று அங்குள்ள ஓவியக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்கள் என்றும், வரையப்பட்டிருந்த ஓவியங்களில் காமன், ரதி, அகலிகை, அவளிடம் சென்ற இந்திரன், கௌதம முனிவன், அவனைக் கண்ட இந்திரன் பூனையுருவங் கொண்டோடியது முதலிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன என்றும், அவற்றைக் கண்டவர் ‘இது என்ன, இது என்ன’ என்று அறிந்தவர்களைக் கேட்க, அவர்கள் இது இது இன்னின்ன ஓவியம் என்று விளக்கிக் கூறினார்கள் என்றும் நப்பண்ணனார் கூறுகிறார்:
-நப்பண்ணனார்

5. “ பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல் ’’
பழமொழி நானூறு - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இலங்கை அரசன் ராவணனின் தம்பி வீடணன். இவன் ராமனை நண்பனாகப் பெற்று இலங்கை அரசனானான் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.
6. சிலப்பதிகாரத்தில் திருமால் அவதாரங்களில் ராமரும் துதிக்கப்படுகின்றார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரமும் ராமனைக் கடவுளாகவே கூறுகிறது

“மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!”
- ஆய்ச்சியர் குரவைப் பாடல், மதுரைக்காண்டம்,

7. “தாதை யேவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ” - ஊர்காண்காதை

என, கவுந்தியடிகள் ராமனைப் பற்றிக் கோவலனிடம் கூறுமிடத்து, ராமன் கடவுள் என்பது தமிழகத்தின் புது மொழியல்ல; நெடுமொழி. அதாவது; நீண்ட லமாகவே தமிழ் மக்களிடையே இருந்துவரும் நம்பிக்கை என்றும் கவுந்தியடிகள் கூறுகின்றார்

Sunday, November 30, 2025

மதுரை அழகர் கோவில் - தொ.பரமசிவன் புரட்டுகளும்

 அழகர் கோயில் - தொ.பரமசிவன் (திரு Badri Seshadri அவர்களின் பதிவு)

மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவனின் முனைவர் பட்ட ஆய்வேடு, “அழகர் கோயில்”, மதுரைக் காமராசர் பல்கலைக்கழக வெளியீடாக 1989-ம் ஆண்டு வந்துள்ளது. இதனை மின்கோப்பு வடிவில் படித்தேன்.
இந்தப் புத்தகத்தில் தொ.ப சேகரித்த தகவல்கள் ஒரு பக்கம் என்றால் அவர் முன்வைக்கும் கருத்துகளும் அவருடைய சாய்மானமும் மற்றொரு பக்கம்.
உண்மையிலேயே மிக விரிவாகத் தகவல்களைச் சேகரித்துள்ளார். அதற்கான கள ஆய்வை விரிவாகச் செய்துள்ளார். ஆனால் மிகுந்த பக்கச் சார்புடன் தகவல்களை ஆராய்கிறார். வெளிப்படையாகத் தெரியும் பல விஷயங்களைத் திரிப்பதற்கு அவர் சற்றும் அஞ்சுவதில்லை. அவருடைய சில கருத்துகளைப் பார்ப்போம்:
(1) பௌத்தக் கோயிலாக இருந்த இந்த மலைக்குன்றை வைணவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். இதற்கான வலிய ஆதாரமாக அவர் ஒன்றையுமே காட்டுவதில்லை. மயிலை சீனி வேங்கடசாமிதான் அவருடைய பெரும் ஆதாரம். மயிலையார், கண்ணில் கண்டதையெல்லாம் சமணம் அல்லது பௌத்தம் என்று சொல்வதில் சமர்த்தர். உதாரணமாக உலகிலேயே அவர் ஒருவர்தான் மாமல்லபுரத்தின் பெருந்தவச் சிற்பக் காட்சியை சமணர் சிற்பமாகக் காண்கிறார். அதனைக் குறித்து சிறுநூல் ஒன்றையே எழுதியுள்ளார். மயிலையார் அழகர் கோயில் குறித்துக் காண்பிப்பதைக் கைக்கொள்ளும் தொ.பரமசிவன் குறிப்பிடுவது ஒன்றுகூட எந்த வாதத்திலும் நிற்காதவை.
வட்டவடிவ அடித்தளம் பௌத்த சைத்தியங்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது சிறிதுகூட உண்மையல்ல. நரசிம்மர் பிரதிஷ்டை, ஆழ்வார்கள் மீண்டும் மீண்டும் ‘இது எங்கள் மலை’ என்றெல்லாம் சொல்வது ஆகியவற்றை முன்வைத்து பௌத்த வழிபாட்டிடம் வைணவத்துக்கு மாற்றப்பட்டது என்கிறார். பரிபாடல் இந்தத் தலத்தை வைணவத் தளம் என்கிறது. சிலப்பதிகாரமும் இந்தத் தலத்தை வைணவத் தலமாகவே குறிப்பிடுகிறது. அதற்குமுன்பு இந்த இடம் பௌத்தத் தலமாக இருந்ததற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் மயிலை சீனியாரிடமும் இல்லை, தொ.பவிடமும் இல்லை. ஆனால் இருந்தது, இருந்தது, இருந்திருக்கவேண்டும் என்றெல்லாம் தொ.ப சொல்கிறார். இதுதான் ஆய்வாளருக்கு அழகா?
பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் காணக்கிடைத்தாலும் அவை மக்கள் மதமாக இருந்ததற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகளே இல்லை. கல்வெட்டுகளும் படுகைகளும் பொயுமு காலத்திலிருந்தே இருந்தாலும, அம்மதங்கள் மக்களிடையே நிலவவில்லை என்றே சொல்லவேண்டும். மாறாக மாயோன் வழிபாடு சங்க இலக்கியத்தில் மிகத் தெளிவாக வருகிறது. அது மக்கள் வழிபாடாகவே இருக்கிறது. சிலப்பதிகாரம் சமண மதச் சார்புடைய இலக்கியமாகக் கருதப்பட்டாலும் அதில் வரும் ஆயர்கள் வைணவப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். இது சங்க இலக்கிய முல்லை நில வர்ணனைகளோடு அப்படியே ஒத்துப்போகிறது. பரிபாடல் காட்டும் காட்சியும் இதுவே.
எனவே அழகர் மலையைப் பொருத்தமட்டில் பௌத்த வழிபாட்டிடமாக இருந்து அது வைணவ வழிபாட்டிடமாக மாற்றப்பட்டதாக கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம், நாட்டுப்புறப் பாடல் என எங்குமே இல்லாத ஒன்றை தொ.ப இட்டுக்கட்டுகிறார். இது ஆய்வுமுறைமையே அல்ல.
(2) வைணவ மதத்தைப் பெருந்தெய்வ அந்நிய மதமாகவும் பிராமண சாதி அல்லாதோருக்குத் தொடர்பில்லாத மதமாகவும் தொ.ப சொல்லிச் செல்கிறார். இதை முற்றுமுழுதான உண்மையாக ஏற்றுக்கொண்டதனால் இதற்கு ஆதாரம் தேவையில்லை என்று அவர் கருதுகிறார்போலும். ஆனால் அவரே கொடுக்கும் ஆதாரங்களான பரிபாடல் முதலான சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் ஆகியவற்றால் தொ.பவின் கூற்று மறுக்கப்படுகிறது. அழகர் கோவிலின் ஆண்டார்களுக்கும் (பிராமணர்கள்) அவர்கள்கீழ் இயங்கும் பிராமணர் அல்லாத சமயத்தார்களுக்குமான உறவை தொ.ப கொச்சைப்படுத்துகிறார். இந்த சமயத்தார்கள், வைணவத்துக்கு “ஆள் பிடித்துத் தருபவர்கள்” என்கிறார் தொ.ப. இவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று ஆட்களை அழைத்துவந்து அழகர்கோவில் ஆண்டார்களிடம் திருச்சின்னம் (தோள்களில் சங்கு சக்கரம் பொறித்துக்கொள்வது) பெறவைத்து அனுப்பினார்கள் என்று எழுதுகிறார்.
இராமானுஜ வைணவத்தில் சமாஷ்ரயணம் (https://en.wikipedia.org/wiki/Samasrayana) எனப்படும் இந்தச் சடங்கு சாதி பார்த்து தரப்படுவதில்லை. யார் ஒருவர் தன்னை வைணவராகக் கருதுகிறாரோ அவர் வைணவ ஆசாரியர் ஒருவரிடம் சென்று இந்தச் சடங்குகளைச் செய்துகொண்டு, மந்திர உபதேசம் பெற்று ஶ்ரீவைணவராக வாழலாம். அழகர் கோயிலில் இந்தச் சடங்கு தொடர்ந்து அனைத்துச் சாதியினருக்கும் செய்யப்பட்டுவந்திருந்தது. இதில் பள்ளர், பறையர், கள்ளர், கோனார், வன்னியர், நாயுடு என அனைவரும் உண்டு என்று தொ.பவே சுட்டுகிறார். ஆனால் இதனை மதம் பரப்பும் வேலை என்பதாக முன்வைக்கிறார். இங்கே மதம் பரப்புதல் எங்கிருந்து வருகிறது? இன்றும்கூட வடகலை, தென்கலை வைணவ மடங்கள் இந்தச் சடங்குகளைத் தம்மை நோக்கி வருவோருக்குச் செய்கிறார்கள். ஊர் ஊராகச் சென்று யாரையும் தம்மை நோக்கி வருமாறு அழைப்பதில்லை.
(3) இந்திரனை வழிபட்டுவந்தவர்களை, பலராம வழிபாட்டுமூலமாக கிருஷ்ண வழிபாட்டை நோக்கி இழுத்துவந்தார்கள் என்கிறார் தொ.ப. இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இலக்கியம் காட்டும் சான்று என்ன? சங்க இலக்கியம் மாயோனையும் வழிபடுகிறது, இந்திரனையும் வழிபடுகிறது. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்த பிரச்னையில் இந்திரனுக்கும் மாயோனுக்கும் தகராறு. இந்திரன் தோற்க, இந்திரன் ஏவிய வருணன் தோற்க, மாயோன் வெல்வதுதான் புராணக் கதை. இது நிகழ்விலும் நடக்கிறது. வருணனும் இந்திரனும் மக்கள் வழிபாட்டிலிருந்து காணாமல் போகிறார்கள்.
பரிபாடல் முதற்கொண்டு பலராமனும் கண்ணனும் நப்பின்னையும் இலக்கியத்தில் வந்துவிடுகிறார்கள். சிலப்பதிகாரத்திலும் வருகிறார்கள். இரண்டு இலக்கியங்களும் கண்ணனைத திருமாலோடு சேர்த்துத்தான் பார்க்கின்றன. இவற்றை ஆரியப் பார்ப்பனர்கள் புகுத்துவதில்லை. தமிழர்கள்தான் செய்கின்றனர். பலராம வழிபாடு கண்ணன் வழிபாட்டோடு இணைந்துதான் உள்ளது. இதில் வெளுத்த அண்ணனைவிட, கறுத்த தம்பிக்கே முதலிடம். நாளடைவில் தம்பியே முதன்மைக் கடவுளாகத் தொடர, அண்ணன் வழிபாடு மறைகிறது. இதில் யார் யாரை இழுத்தார்கள். ஏன் இழுக்கவேண்டும்?
ஆழ்வார் பாடல்கள் தொடர்ந்து பலராமனையும் நப்பின்னையையும் சேர்த்தேதான் கொண்டாடுகின்றன. ஆனால் கண்ணனை அதிகமாகக் கொண்டாடுகின்றன. சதித்திட்டங்களை தொ.பதான் தீட்டுகிறார். அவருக்குச் சான்றுகள் தேவையிருப்பதில்லை.
(4) கள்ளர்கள் எவ்வாறு வைணவர்களாக உள்ளனர், அவர்கள் சிறுதெய்வ வழிபாட்டாளர்களாகத்தானே இருக்கவேண்டும் என்று அதிசயப்படுகிறார் தொ.ப. இதில் என்ன பிரச்னையை இவர் கண்டார் என்று புரியவே இல்லை. நீங்கள் முதலிலேயே முடிவு செய்துவிடுகிறீர்கள் - தமிழகத்தில் பிராமணர்களையும் சில உயர்சாதியினரையும் தவிர வேறு யாருமே சிவனையும் விஷ்ணுவையும் வணங்குவதில்லை என்று. ஆனால் கள ஆராய்ச்சியில் தொ.ப இறங்கும்போது, அழகர் மலைக் கள்ளர்கள் வைணவர்களாக உள்ளது தெரிகிறது. அழகர் ஆற்றில் இறங்குவது, அழகருடைய தேர்த் திருவிழா, திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் ஆகியவற்றில் கள்ளர்களே முதன்மையாக ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது. எனவே இதற்கு ஏதேனும் ரகசியக் காரணம் (மதமாற்றம்?) இருக்குமோ என்று தேடு, தேடு என்று தேடுகிறார். தேடினால் எதுவும் அகப்படுவதில்லை.
திருமங்கை ஆழ்வார் கள்ளர் சமூகத்தவர் என்று தொ.பவே தெளிவாகச் சொல்கிறார். [ஶ்ரீரங்கத்தில் முத்தரையர்கள் அவரைத் தங்கள் சமூகத்தவராகப் பார்க்கின்றனர்!] எனவே கள்ளர் சமூகத்தவர் வைணவர்களாக இருப்பதில் என்ன ஆச்சரியம்? ஏன் இருக்கக்கூடாது?
(5) துலுக்க நாச்சியார் கதையை முன்வைத்து வைணவர்களை மேலும் கேவலப்படுத்துதல் தொடர்கிறது. முஸ்லிம் படையெடுப்புகளால் தமிழகத்தின் பெரிய கோவில்களான சிதம்பரம், மதுரை, ஶ்ரீரங்கம் ஆகியவை கொள்ளையடித்து நாசமாக்கப்பட்டன. ஆனாலும் வைணவர்கள் துலுக்க நாச்சியார் கதையை உருவாக்கியிருப்பது, எதிராளியைத் தோற்கடிக்க முடியாவிட்டால் ஒரு கதைமூலம் அவர்களை உறவாளிகளாக ஆக்கிவிடுதலே என்பதனாலாம்.
விஜயநகர ஆட்சிக் காலத்தில் குமார கம்பண்ண உடையார், முஸ்லிம்களைத் தோற்கடித்து, தமிழகக் கோயில்கள் அனைத்தையும் மீட்டுவிடுகிறார். அதன்பின் ஹைதர் அலி, திப்பு சுல்தான் காலத்தில் இந்துக் கோயில்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. (தொ.ப அதனையும் சுட்டிக் காட்டுகிறார்.) இந்தக் காலகட்டம் தவிர, முஸ்லிம்கள் தமிழகத்தில் வைணவக் கோயில்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை. எனவே முஸ்லிம்களுடன் துலுக்க நாச்சியார் வழியே உறவாடி அவர்களுடன் நட்பாக இருக்கவேண்டும் என்ற அரசியல் தேவை வைணவர்களுக்கு இருக்கவில்லை. ஆனாலும் அந்தக் கதைக்கு ஒரு மரபு உண்டு. அதனாலேயே இன்றளவும் தமிழக வைணவக் கோயில்களில் [தமிழகத்தில் மட்டும்] அது புழங்குகிறது. முஸ்லிம் படையெடுப்பால் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்த ஶ்ரீரங்கம் கோயிலில் துலுக்க நாச்சியாருக்கு இன்றளவும் சந்நதி உண்டு. அது ஏன் என்பது தொ.பவுக்குப் புரியவில்லை. ஏனெனில் அவருடைய ஆராய்ச்சிச் சட்டகத்தில் அதற்கு இடமில்லை.
[நாச்சியாரை ‘நாய்ச்சியார்’ என்றே தொ.ப எழுதுகிறார். ஒருவேளை டைப்போவாக இருக்கலாம். ஆனால் ஓரிடத்தில் அல்ல, எங்கெல்லாம் நாச்சியார் வரவேண்டுமோ, அங்கெல்லாம் நாய்ச்சியார்தான்.]
***
தொ.பவின் ஆராய்ச்சிச் சட்டகங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, அவர் தரும் தகவல்களை மட்டும் தொகுத்தால் சில அற்புதமான விஷயங்கள் தென்படுகின்றன.
(அ) அழகர் கோவில் மிகவும் தொன்மையானது. ஶ்ரீரங்கம், திருப்பதி இரண்டுக்கும் இணையான தொன்மையைக் கொண்டது. பரிபாடலில் குறிப்பிடப்படும் ஒரே வைணவக் கோயில் இதுவே. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் நான்கு வைணவக் கோயில்களுள் இதுவும் ஒன்று.
(ஆ) சாதி வேற்றுமை இல்லாமல் அனைத்துச் சாதியினருக்கும், தீண்டத்தகாத சாதி என்று சொல்லப்படும் பள்ளர் பறையர் உட்பட அனைவர்க்கும், இந்தக் கோயிலில் வைணவத் திருச்சின்னம் பொறித்தல் நடைபெற்றுவந்துள்ளது. இராமானுஜரின் ஓர் ஆசிரியரான திருமாலை ஆண்டான் காலத்திலிருந்து இது நடைபெற்றுவந்துள்ளது. அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல். அதற்குமுன்னரேகூட நடந்திருக்கலாம்.
(இ) இந்தக் கோயிலின் அனைத்து விழாக்களையும் சுற்றியுள்ள கள்ளர், வன்னியர், பள்ளர், பறையர், கோனார் ஆகியோர், பல நூற்றாண்டுகளாக நடத்திவந்துள்ளனர். இன்றும் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு என்று தெளிவான முறைகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கோயிலுக்குள் செல்லலாம். கோயில் நுழைவு இவர்களுக்கு ஒருபோதும் மறுக்கப்படவில்லை.
(ஈ) கள்ளழகர் என்ற பெயர்க்காரணம் தெளிவாக இல்லை. இது கள்ளர்களுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம். அல்லது கண்ணனை மாயக்கண்ணன், கள்வன் என்றெல்லாம் அழைப்பதனால் இருக்கலாம். அந்தப் பெயர் தொடர்பு இல்லாவிட்டாலுமே, இப்பகுதியின் கள்ளர் சாதியினர் இந்தக் கோயிலுடன் மிக நெருங்கிய தொடர்புகொண்டுள்ளனர்.
(உ) இந்தக் கோயிலுக்கும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கும் தொடர்பு உள்ளது; அதேபோல மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் தொடர்பாக அக்கோயிலுடன் உறவு உள்ளது. கோயில்களுக்கு இடையிலான நெருக்கமான இந்த உறவு, ஒருசில திருவிழாக்களின்போது இன்றும் பின்பற்றப்படுவருகிறது.
திரு Marirajan Rajan அவர்களின் மற்றொரு பதிவு :-
" அழகர் கோயில் "
மதுரை.
அழகர்கோவில்.
மிகவும் பிரபலமான ஒரு பெருமாள் கோவில்.
இக்கோவில் குறித்து வழக்கம்போல் ஒரு வதந்தி.
பௌத்தக் கோவிலாக இருந்ததை வைணவக்கோவிலாகக் மாற்றினார்களாம்.
என்ன ஆதாரம்.?
யார் மாற்றியது.?
எப்போ மாற்றினார்கள்.?
இக்கேள்விகளுக்கு சரியான பதில் கூறுவதில்லை. அவர் சொல்லிட்டாராம். அவர் நூலில் எழுதியுள்ளாராம்.
என்ன எழுதினார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் இது நிச்சயமாகப் பெருமாள் கோவில்தான்.
அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளன.
சங்ககாலம் தொட்டே இவ்வழகர் மலைக்கு திருமாலிருங்குன்றம், இருங்குன்றம், திருமாலிருஞ்சோலை, சோலைமலை, திருவரை எனப் பல பெயர்கள் உண்டு. சிலப்பதிகாரத்தில் திருமால்குன்றம் என இம்மலையின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இம்மலை அடிவாரத்தில் கோயில் கொண்டுள்ள அழகரை (திருமால்), பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
சங்கஇலக்கியமான பரிபாடலில் இக்கோவில் வெகுவாகச் சிறப்பிக்கப்பட்டு ..
இக்கோவிலை திருமாலிருஞ்சோலை என்று பரிபாடல் கூறும்.
பரிபாடல் கூறும் திருமாலிருஞ்சோலை என்பது தற்போதைய அழகர்கோவில்தானா..?
நிச்சயமாக..
பரிபாடலில் வரும் திருமாலிருஞ்சோலை என்னும் பெயர் அப்படியே கல்வெட்டுகளிலும் இருக்கிறது.
முதலாம் இராஜராஜன், குலசேகரபாண்டியன், சுந்தரபாண்டியன் ஆகியோர்களது கல்வெட்டுகளில் பெருமாளின் பெயர்...
" திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமி "
பரிபாடல் என்ன பெயரைச் சொல்கிறதோ அதே பெயர்தான் கல்வெட்டுகளிலும் இருக்கிறது.
பெருமாளுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றியே அனைத்துக் கல்வெட்டுகளும் பதிவு செய்கிறது.
சங்க இலக்கியம் தொட்டு..
ஆழ்வார் பாடல்களிலும்.
சோழர் மற்றும் பாண்டியர் காலக் கல்வெட்டுகளிலும் தொடர்ந்து காணப்படும்
பெயர்...
" திருமாலிருஞ்சோலை "
ஆக..
இக்கோயில் அன்றிலிருந்து இன்று வரை நிச்சயம் பெருமாள் கோவில்தான்.
பௌத்தமாக இருந்து மாறியது என்ற பேச்சுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
இது ஓர் வதந்தி.
மதுரை அழகர் கோவில் ...
பெருமாளின் கருவறையின்மீது எழுப்பப்பட்டுள்ள
விமானம் சோமசந்த விமானம் எனப்படுகிறது. சந்திரனைப்
போன்று வட்ட வடிவமான அழகிய தோற்றத்தை இவ்விமானம்
கொண்டுள்ளது. கருவறைச் சுவர்கள் சிற்ப வேலைப்பாடு மிக்கவை என்றும்...
தளசூத்திர அடிப்படையில் ஆயதவேசரம் என்னும் நீள்வட்டமாக அமைந்த விமானம் என்றும்..
கோவில் கட்டிடக்கலை ஆய்வாளர்கள் வரையறை
செய்கின்றனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீவிமானமும் வட்டவடிவம்தான். லால்குடி
கொத்தமங்கலம் பள்ளிகொண்ட பெருமாள் செங்கற் தளியும் வட்ட வடிவம்தான். மதுரை அழகர் கோவிலும் வட்டவடிவம்தான்.
இலக்கியம்.
ஆழ்வார் சாசனம்..
கல்வெட்டு..
கோயிற் கலை..
மரபு வழிபாடு..
அனைத்தின் தரவுகளும்
மதுரை அழகர் கோவில் பெருமாள் கோவில்தான்
என்பதை உறுதிசெய்கின்றன.
அன்புடன்...
மா.மாரிராஜன்..