திருவள்ளுவமாலை -17: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் - Mugaiyalur Sirukarunthumbiyar
உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே செயற்பால – வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
எப்பா வலரினும் இல்
வாழ்வின் வழிகாட்டியான திருக்குறளினும் சிறந்த நூல் ஒன்று உண்டு என்று எந்தப் புலவருஞ் சொல்ல மாட்டார். எனவே நாம் செய்ய வேண்டியது அந்த திருக்குறளை கற்றி உள்ளத்தால் சிந்த்திது அறிந்து அதை மற்றவர்களுக்கும் உரைத்துத் தெளிதலே.
இ-ள். வள்ளுவனார் முப் பாலின் மிக்க மொழி உண்டு எனப் பகர்வார் எப் பாவலரினும் இல் - திருவள்ளுவரது திருக்குறளின் மேற்பட்ட நூலொன்று உளதென்று சொல்ல வல்லவர் எவ்வகைப்பட்ட புலவருள்ளும் இல்லை; செயற்பால உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத் தெள்ளுதல் அன்றே - ஆதலால், நாம் இந் நூலைக் குறித்துச் செயக் கடவன ராம் இதன் பொருளைச் சிந்தித்துக் கொள்ளுதலும், சிந்தித்துப் பிறர்க்கு அதனைச் சொல்லுதலும், பிறராலே சொல்லப்பட்ட அதனைத் தெளிதலும் அன்றே!
'மொழி' ஆகு பெயர். ஒப்பது வடமொழி வேத மிருத்தலின் மிக்க மொழி யென்றும், தமிழின் மாத்திரமன்றி வடமொழி முதலியவற்றி னுள்ள புலவரையும் தழுவுதற்கு எப் பாவலரினுமென்றும் அறிவொப்புக் காண்டற்கு உரைத்ததனைத் தெள்ளுதலென்றும், கூறினார். உள்ளுத லெனவே கேட்டலும், தெளிதலெனவே அவ்வா றொழுகலும் அடங்கின. இது பயிற்சி செய்தொழுகுமாறு சொல்லியபடி.(௰௭)
(கு-உ) உள்ளுதல்- நினைத்தல். உள்ளி உரைத்தல்-நினைத்துப் பிறர்க்குக் கூறுதல். உரைத்ததனைத் தெள்ளுதல்-பிறர் கூறியதை ஆராய்தல். மிக்க- சிறந்த. எப்பாவலரினும்-எவ்வகைப்பட்ட புலவரிலும்.
No comments:
Post a Comment