Saturday, April 17, 2021

" சதுர்வேதிமங்கலம் "

 " சதுர்வேதிமங்கலம் "

 

ஆத்தீ...
இந்தப் பெயரை கேட்டாலே நாம் ஒவ்வொறுவருக்கும் ஒவ்வொறுவிதமான தாக்கங்கள்.
ஐயோ..
பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்.
வாரி வாரி வழங்கினார்கள். ஆற்றின் கரையோரம் நிலம் வழங்கப்பட்டது. விளைச்சல் முழுவதும் அவர்களுக்கே.. பிராமணர்களுக்கு வரி இல்லை... வசதியாக வாழ்ந்தார்கள்.. சோழர்கள் காலத்தில் நடந்த பிராமணர் குடியேற்றம்...
இன்னும்..இன்னும்...
உஷ்.. அப்பாடா..
இவைகள் எல்லாம் உண்மையா..?
பிறகு..?
பெயரே சதுர்வேதிமங்கலம். பிறகென்ன டவுட்டு.. எந்த கல்வெட்டைப்
பார்த்தாலும் சதுர்வேதிமங்கலம்
தானே....
பிராமணர் குடியிருப்புதானே...
சரிதான்..
எந்த கல்வெட்டைப்
பார்த்தாலும் சதுர்வேதிமங்கலம்தான்..
ஆனால்..
சில கேள்விகள்..
சதுர்வேதிமங்கலம் எவ்வாறு அமைக்கப்பட்டது.? என்ன விதிமுறை.? பிராமணர் மட்டும் இருந்த குடியிருப்பா.? போகிற போக்கில் பிராமணர்களுக்கு வாரி வழங்கப்பட்ட நிலமா.? ஒரு சதுர்வேதிமங்கலத்தின் மொத்த கட்டமைப்பு எவ்வாறு இருந்தது.?
இந்தக் கேள்விகளுக்கு பிரபல ஆய்வாளர்கள் கூட விளக்கம் அளிக்க விரும்பவில்லை.. விளக்கம் அளிக்கப் போதுமானத் தரவுகள் இருந்தும் ஆய்வாளர்கள் விளக்கம் அளிக்கவில்லை..
சதுர்வேதிமங்கலம். சோழர்காலத்தில் நடந்த பிராமணர்குடியேற்றம்.
என்றளவில் கடந்து சென்றார்கள்...
சதுர்வேதிமங்கலம் ஒன்றின் மொத்தக் கட்மைப்பு எவ்வாறு இருந்தது...?
விரிவாக விளக்கமாக பார்க்கலாம்..
அதற்கு முன்பாக ஒரு விடயத்தை அழுத்தமாக நினைவூட்ட வேண்டியது அவசியமாகிறது..
சதுர்வேதிமங்கலம் என்னும் பிராமணர் குடியிருப்பு சோழர் காலத்தில் ஆரம்பமானது அல்ல. அதற்கு முந்தைய பாண்டியர் காலத்திலும் சதுர்வேதிமங்கலம் இருந்தது. அதற்கு முந்தைய பல்லவர் காலத்திலும் இருந்தது..
இப்போ...
சதுர்வேதிமங்கலம் ஒன்றின் கட்டமைப்பு...
கி.பி.1020 இல்...
இராஜேந்திரச் சோழனால் வழங்கப்பட்ட கரந்தைச் செப்பேடு..
திரிபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம்.... 1080 பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலதானம்..
எதே..?
1080 பிராமணர்களா...? என்று அதிர்ச்சியடையாமல் முழுமையாக இந்த ஆவணத்தை வாசித்தால் கீழ்க்கண்ட விபரங்கள் கிடைக்கிறது..
இராஜேந்திரசோழன், தனது தாயின் பெயரால் திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலம் என்னும் அக்கிரகாரத்தை உருவாக்கினான். ஐம்பத்தொரு சிற்றூர்களை அறங்களில் சிறந்த அந்தணர்கள் 1081 பேருக்கு வழங்கினான்.
நல்வழியை உபதேசிப்பதில் நிலையான மதிகொண்ட அந்தணர்களுக்கு நிலதானம் வழங்கினான்.
அதாவது..
செம்பங்குடி, குளப்பாடு, முதலிய
51 கிராமங்களில் 1080 பிராமணர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது.
அதாவது ஒரு கிராமத்தில் சராசரியாக 21 பிராமணர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது.
இனி இந்த கிராமங்கள் அனைத்தும் திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலம் என்றுதான் கல்வெட்டில் இடம்பெறும்.
சராசரியாக 1500 மக்கள் தொகை உள்ள ஒரு கிராமத்தில் 21 பிராமணர்கள் குடியேற்றம்..
ஊரின் பெயரோ திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்.
இந்த நிலங்களின் அளவு என்ன.? வருவாய் என்ன.? என்ன நிபந்தனை..?
51 ஊர்களில் உள்ள காணியுடையாரை.. அதாவது நில உரிமையாளர்களைத் தவிர்த்து.. அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் மட்டும் அளவீடு செய்யப்படுகிறது..
அவ்வாறு அளந்ததில்..
3135 வேலி நான்கரை மா முந்திரிகை கீழ் முக்கால் மற்றும் இரண்டுமா மூன்றரைக் காணிக்கீழ் மூன்று மா மற்றும் மூன்று காணி நிலம்... அரசுக்கு சொந்தமானது..
இந்த அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த கோவில்கள், திருமுற்றம், நந்தவனம், சுடுகாடு, ஆறு, குளம், வாய்க்கால், கம்மாள மற்றும் பறைசேரி, ஸ்ரீகோவில், பிடாரி கோவில்...இந்த நிலங்களின் அளவு..
619 வேலி யும் கொஞ்சமும். இந்த பொது இடங்களுக்கான நிலங்களும் கழிக்கப்பட்டு..
அதாவது அரசுக்கு சொந்தமான நிலத்திலிருந்து
பொதுவிடங்களான நிலத்தை கழித்தால்...
2115 3/4 வேலி..சொச்சம்...
இந்த நிலம்தான் 1080 பிராமணர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
சராசரியாக ஒரு பிராமணருக்கு 2 வேலி நிலம்... அவ்வளவுதான்.
இந்நிலங்களின் மொத்த வருவாய்..
ஆண்டுக்கு 51050 கலம் நெல்.. 32 - 1/2 காசு..
சராசரியாக ஒரு பிராமணருக்கு கிடைக்கும் வருவாய் வருடத்திற்கு 100 கலம் நெல்..
பெரியகோவிலில் கணக்கெழுதும் ஊழியர் ஒருவரின் ஊதியம் வருடத்திற்கு 200 கலம் நெல். இதில் பாதிதான் சதுர்வேதி மங்கல பிராமணர்களின் வருவாய்..
இந்த வருவாய்க்கும் முதல் 8 ஆண்டுக்கு வரியில்லை. 8 ஆம் ஆண்டில் கால்வரி. 9 ஆம் ஆண்டில் அரைவரி.
10 ஆம் ஆண்டு முழுவரியும் சதுர்வேதிமங்கல பிராமணர்கள் செலுத்த வேண்டும்..
நிலங்களின் அளவு, விலக்கப்பட்ட நிலங்களின் அளவு, 1080 பிராமணர்களின் முழு விபரம் .. பிடி சூழ்தல் எல்லைகள்...
விரிவான விபரங்களை பதிவு செய்துள்ளனர்..
இதுதான் சதுர்வேதிமங்கலம் ஒன்றின் முழுமையான கட்டமைப்பு...
இந்த விபரங்களிலிருந்து என்ன முடிவுக்கு வரலாம் ...?
சதுர்வேதி மங்கலம் என்பது முழுக்க முழுக்க வாரி வழங்கப்பட்ட நிலம் அல்ல. எந்த ஒரு குடிகளின் நிலமும் பறிக்கப்பட்டு பிராமணர்களுக்குத் தரவில்லை. அரசுக்கு சொந்தமான நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டது. பொது இடங்களான ஆறு வாய்க்கால், குளம், கோவில், சதுர்வேதி மங்கலத்தில் அடங்காது.
பிராமணர்களின் நிலங்களுக்கும் வரி உண்டு..
அன்புடன்...
மா.மாரிராஜன்..
Refrence ..
கரந்தைச் செப்பேடு.-சி.கோ.தெய்வநாயகம்.
சோழர் செப்பேடுகள்.-முனைவர்.க.சங்கரநாரயணன்.

No comments:

Post a Comment