Ananthakrishnan Pakshirajan
திராவிட இயக்கத்தின் அறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு அலைபவர்களில் பலர் எதையும் ஒழுங்காகப் படிக்காமல் கதை விடுவார்கள் என்று நான் சொன்னேன். சொன்னது சரி என்பதை ஒரு விவாதத்தில் திரு வீ அரசு நிறுவியிருக்கிறார்.
இவரைப் போன்றவர்கள் திராவிடத் தம்பிகள் என்ன சொன்னாலும் நம்பி விடுவார்கள், ஆதாரம் போன்ற எளிமையான சமாச்சாரங்களைத் தேட மாட்டார்கள் என்ற உறுதியில் தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நேற்று கொஞ்சம் கூடவே உளறினார்.
சைவம் வைணவம் போன்ற மதங்கள் இயற்கை வழிபாட்டில் இருந்து பிறந்த மதங்களாம். வருண தர்மம் அப்போது இல்லையாம் அவற்றை சுமார்த்த பிராமணர்கள் தமிழகத்தில் புகுந்து மாற்றி விட்டார்களாம். ராஜராஜன் எனவே சைவன்தான் இந்து இல்லை என்கிறார். அதாவது சைவம் மற்றும் வைணவத்திற்கும் வேதத்திற்கும் தொடர்பு இல்லையாம்.
இவர் தமிழ் இலக்கியம் படித்திருக்கிறாரா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. சங்க இலக்கியம் முழுவதும் இந்துக் கடவுள்கள் இருக்கிறார்கள். சிவன் ஆதிரையான்,ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்,மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். குறிப்பாக ஈர்ஞ்சடை அந்தணன்! மதுரைக் காஞ்சி சிவனுக்காக நட்த்தப்பட்ட வேள்வியைப் பேசுகிறது.
“வேதமுதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரியோனே என்று திருமால் அழைக்கப்படுகிறார். தேவார, திருவாசகங்களிலும், ஆழ்வார்கள் பாசுரங்களிலும் வேதங்கள் சொல்லும் இறைவர்கள் இவர்கள்தாம் என்று சொல்லப்படுகிறது. வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது இவர்கள்தாம். எனவே வேதங்கள் இல்லாமல் தமிழில் சிவபெருமானும் இல்லை திருமாலும் இல்லை. ராஜராஜன் இந்த மரபின் நீட்சி, அவ்வளவுதான். இவருக்கு எல்லா மதங்களுக்கும ஊற்றுக்கண் இயற்கை வழிபாடுதான் என்பது தெரியாதது வியப்பில்லை.
அடுத்து இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
இராமலிங்க அடிகளார் ஐந்து திருமுறைகள் எழுதும் வரை சைவராக இருந்தாராம். ஆனால் ஆறாம் திருமுறை எழுதும் போது மாறி விட்டாராம்.
அப்படியா?
ஆறாம் திருமுறை துவங்குவது இவ்வாறு:
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
அவர் வேண்டுவது இது:
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
அவருடைய புகழ்பெற்ற அருட்சோதி தெய்வம் பாடல் இத்திருமுறையில்தான் வருகிறது:
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
அவர் விரும்புவது இது:
• மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.
இராமலிங்க அடிகளார் மதங்களைப் புதைக்க வேண்டும் என்று சொன்னாலும் அவர் விரும்புவது,
பரிந்துரைப்பது சிவானந்தம் என்ற பெரும்போகம்தான்.
தம்பிகள் மத்தியில் அல்லாமல் பொது வெளியில் பேசும்போது கேட்பவர்களில் சிலர் அறிவோடு சிறிதளவாது தொடர்பு கொண்டிருப்பார்கள் என்ற புரிதல் திராவிடப் பேராசிரியர்களுக்கு இருந்தால் நல்லது.