Friday, November 27, 2020

இறைவன் சிவ பெருமான், - பார்வதி மடியில் குழந்தை முருகர். பல்லவர் காலம்

அம்மாவின் மடியில் அழகு முருகன்.

7 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு.
காஞ்சி கைலாசநாதர் கோவில்.
பரமேச்வரனுக்கு குகன் ( முருகன்) பிறந்தது போல்...
பரமேச்வரனுக்கு இராசசிம்மன் பிறந்தான்.
( இராசசிம்மனின் தந்தை பெயர் பரமேஷ்வரன்)

 நன்றி தொல்லியல் அறிஞர் மாரிராஜன் https://www.facebook.com/induven.palus/posts/1622268427943927?comment_id=1622285737942196&reply_comment_id=1622296754607761&__cft__[0]=AZWKSzX9N5ecmOt1FenRSvNigbqcDxdnXgVfoQzUvl3o_O45TvCMhnvo6HBWtglvkKsu-Mo93mII9YsU0iURfGfMnNW5I-XoK5-4jUZBWOFDKR7sp__orZaZUyoX3VSP5BQdamXUp_i1ut9qSeinN3MJ6p5xs9tE1XzwSkee8l5VTdpawOiI42xtfWXmRSa5V8s&__tn__=R]-R

பரிபாடல் : "மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள், ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை! காஅய் கடவுட்_சேஎய்! செவ்வேள்! சால்வ! தலைவ!" இப்பாடலில் முருகனின் பிறப்பு பற்றி கூறும்போது ஆறு_தலைகளும் (ஆறுமுகன்) பன்னிரண்டு தோள்களும் கொண்டவன் என்றும், பகலவன் போல ஒளி மிக்கவன் என்றும் தாமரையில் பிறந்தவன் என்றும், அழிக்கும் கடவுள் சிவபெருமானின்_மகன் என்றும் கடுவன்_இளவெயினனார் முருகனின் தந்தை சிவபெருமான் தான் என்பதை அழகாக எடுத்துரைக்கிறார்...! அடுத்ததாக அதே பரிபாடலில் உமையுடன் சிவபெருமான் சேர்ந்தே முருகப்பெருமான் அவதரித்தார் என்பதையும் கடுவன் இளவெயினனார் எடுத்துரைக்கிறார்...! "உமையொடு புணர்ந்து, காம வதுவையுள், அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு" இப்படி பரிபாடலில் இரண்டு இடங்களில் முருகனின் பெற்றோர்கள் யார் என்பதை கூறிய நமது முன்னோர்கள் சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையிலும் அழகாக எடுத்தியம்புகின்றனர்....! "நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல், சாலகத்து ஒல்கிய கண்ணர், 'உயர் சீர்த்தி ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழாக் கால்கோள்' என்று ஊக்கி" அதாவது நீல மலர் மொட்டு வரிசையாகக் காற்றில் ஆடுவது போல சன்னல் வழியாகக் கண்ணை நுழைத்து இவனைப் பார்த்த மகளிர் சிவபெருமானின் மகன் முருகனுக்கு இன்று காப்புக்கட்டுத் திருவிழா என்று சொல்லிக்கொண்டு விரைந்தோடி வந்து இவனைப் பார்த்தனர் என்று மருதன்_இளநாகனார் முருகனின் தந்தையாக சிவனை குறிப்பிடுகிறார்....! சிவ_பார்வதியின் மைந்தன்தான் முருகன் என்பதை இந்த திடீர் தமிழர்கள் தூக்கி பிடிக்கும் திருமுருகாற்றுப்படையே அழகாக எடுத்துரைக்கிறது👇👇👇 "ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே" அதோடு திருமுருகாற்றுப்படைக்கு விளக்க உரைகள் அருளிய காலத்தில் எழுதப்பட்ட மூத்த உரைகளிலேயே முருகனை சிவ மைந்தனாகவே சுட்டி உள்ளனர்....! "முருகனே! செந்தில்முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்" சிவனை முழுமுதற் கடவுளாக பாவித்து திருமந்திரம் இயற்றிய திருமூலரோ முருகனே சிவன் என்று ஏந்திப்பாடுகிறார்...! "ஆறு முகத்தில் அதிபதி நானென்றும் கூறு சமயக் குருபரன் நான்னென்றும் தேறினர் தெற்குத் திருவம் பலத்துள்ளே வேறின்றி அண்ணல் விளங்கி நின்றானே" என்று ஆசான் திருமூலர் பாடுகிறார். அதாவது சிவனும், முருகனும் வேறுபாடின்றி விளங்கினர் எனத் தெளிவாக எடுத்துக் கூறினார்.....! அதோடு👇 "உந்திக் கமலத்து உதிக்தெழும் சோதியை அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர் அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின் தந்தைக்கு_முன்னே_மகன்_பிறந்தானே. என்றும்....! "எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால் மைந்தன் இவன் என்று மாட்டிக் கொள்வீரே" என்றும் தந்தைக்கே முன்னவனாக பாவித்து கூடுகிறார் திருமூலர்....! இறுதியாக அருணகிரிநாதரின் இந்த திருப்புகழ் வரிகளின் பொருளையும் படித்த பின்னர் முருகனின் தாய் தந்தை யார்? என்ற கேள்விக்கு பதிலை முருக பக்தர்களிடமே எடுத்தியம்ப வேண்டுகிறேன்....! பழனி_திருப்புகழ்: (திருவாவினன்குடி) "நாத விந்துக லாதீ நமோநம வேத_மந்த்ரசொ_ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி" (அதாவது வேத மந்திரங்களின் சொரூபனாம் முருகன்) "நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம பரசூரர்" (பார்வதி மைந்தனே பாம்பை காலால் அடக்கி மைலை வாகனமாக கொண்டவன் முருகனாம்) "சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ" (அசுரர்களை வதம் செய்து திருவிளையாடல்கள் புரிந்தவனாம்) "தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்" (தெய்வானையை மணவாட்டியாக கொண்டவன் முருகனாம்) "ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத" ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக வயலூரா "ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி லையிலேகி" "ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே" (திரு ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமான் முருகனாம்) ஆக எந்த ஒரு ஆரிய புராணங்களுக்கும் செல்லாமல் வெறும் தமிழ் இலக்கியங்களை வைத்து அதுவும் சங்க இலக்கியங்களை முன்னிறுத்தி சிவ பார்வதி மைந்தன் தான் முருகன் என்பதை நிறுவியாச்சு....! -பா இந்துவன்.

Friday, November 20, 2020

2500 வருட தொன்மையான முருகன் கோவில் ஹரியானாவில் பிஹோவா ஸ்ரீகார்த்திகேயா மந்திர்

சிவபெருமானின் புதல்வரால் மட்டுமே தனக்கு மரணம் நேரிடவேண்டும் என்ற வரத்தைப் பிரம்மாவிடம் கேட்டுப்  பெற்று, தேவர்களைத் துன்புறுத்திய தாருகாசுரனை வதம் செய்வதற்காக சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து அக்னி சொரூபமாக அவதரித்தவர் முருகப் பெருமான். சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாகத் தோன்றிய அவரை கார்த்திகைப் பெண்கள் அறுவர் அம்மலர்களிலிருந்து அன்போடு தூக்கி எடுத்து வளர்த்தபோது அவர் ஆறு முகங்களுடன் கூடிய ஷண்முகப் பெருமானாக பக்தர்களுக்கு அருட் பாலித்தார்.

https://en.wikipedia.org/wiki/Kartikeya_Temple,_Pehowa



கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயர் என்று முருகப் பெருமானைப் போற்றி வணங்குகிறோம். விநாயகப் பெருமானுக்கும், முருகப் பெருமானுக்கும் இந்தியா முழுவதும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. நாம் இங்கு விநாயகப் பெருமானை பிரம்மச்சாரியாக வழிபடும்போது, வட மாநில மக்கள் இவரை சித்தி புத்தி என்ற இரு தேவியரோடு வழிபடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் முருகப் பெருமானை வள்ளி தேவசேனா சமேதராக  பக்தர்கள் வழிபட்டாலும், வட மாநிலங்களில் கார்த்திகேயன் என்ற பெயரில் தேவியர் இன்றி பிரம்மச்சாரியாகவே வழிபடுகின்றனர்.

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில  மக்கள் முருகப் பெருமானை  ஐந்து தலை நாக ரூபத்தில் நாக சுப்பிரமணியர் என்றே வழிபடுகின்றனர். கர்நாடகாவில் உள்ள மூன்று முக்கிய சுப்ரமணியத் தலங்களான குக்கே, காட்டி மற்றும் நாகலமடகே ஆலயக் கருவறைகளில் சர்ப்ப ரூபமாக அவர் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. ஹரியானா மாநிலம், குருக்ஷேத்ரா மாவட்டம், பிஹோவா என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகார்த்திகேயா மந்திர், வட மாநிலங்களில் உள்ள மிகப் பிரபலமான முருகன் ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 

மஹாபாரத நிகழ்வுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலம். இங்கு மஹாவிஷ்ணுவின் அம்சமாக, வேனன் என்ற மன்னன் வழியில் அவதரித்த பிருது மன்னர், பூமியிலிருந்து செல்வங்களைப் பெற்று மக்களுக்கு அளித்த பெருமைக்குரியவர். இவர் பெயராலேயே பூமிக்கு பிருத்வி என்ற பெயர் ஏற்பட்டதாம். சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்து, தன் முன்னோருக்கு சிரத்தையுடன் பிருது சக்கரவர்த்தி ஈமக் கடன்களைச் செலுத்தியதால் இந்த இடம் அவர்  பெயரால் பிருது டக் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் பிஹோவா, பேவா, பிவோ என்ற பெயர்களில் மருவியிருப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது.

பிருது சக்கரவர்த்தியின் தந்தை, தான் சரஸ்வதி நதிக்கரையில்தான் உயிர் துறக்க வேண்டும் என்று விரும்பியதால், பிருது அவரை இத்தலத்திற்குக் கூட்டி வந்தார் என்றும், அவர் மறைவிற்குப் பின்னர் ஆற்றின் கரையில் பல நாட்கள் அமர்ந்து கடுமையான விரதங்கள் அனுஷ்டித்து தன் தந்தைக்கு மிகவும் சிரத்தையுடன் பிதுர்க் கடன்களைச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த பிருது சக்கரவர்த்தியின் நினைவாகவே பிஹோவா நகரம் கிபி 895ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி நதிக்கரையில் அமைந்திருந்த இந்த பிஹோவாவில் உள்ள தீர்த்தம்,

ஆதி தீர்த்தம் எனவும் காசி, கயா, பிரயாகை போன்ற புனித தீர்த்தங்களுக்கு நிகரானதாகவும் போற்றப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் புனித நீராடி தர்ப்பணம், பிண்ட தானங்கள் செய்தால் பித்ருக்கள் மோட்சத்தை அடைவர் என்ற நம்பிக்கை உள்ளது. சரஸ்வதி சரோவர் எனப்படும் இந்த தீர்த்தக் குளத்தின் கரையில் பிருது மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிருது மஹேஷ்வர் மற்றும் அருகில் உள்ள 'கார்த்திகேயர் ஆகியோர் பித்ருக்கள் மோட்சம் செல்வதற்கு சாட்சியாக விளங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இத்தலமும், தீர்த்தமும் சீக்கியர்களுக்கும் புனிதமானவையாகத் திகழ்கின்றன.

எனவே ஆயிரக் கணக்கான சீக்கியர்களும், இந்துக்களோடு இந்த தீர்த்தத்தில் நீராடுவதைக் காணமுடியும். ஆஷாட மாதம், மிருகசீர்ஷ நட்சத்திர நாளன்றும், சைத்ர கிருஷ்ண துவாதசி முதல் அமாவாசை வரையிலுமான நாட்களிலும் இத்தலத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டு சரஸ்வதி சரோவர் குளக்கரையில் திதி, தர்ப்பணம், பிண்ட தானம் போன்றவற்றைச் செய்தால் முன்னோர்கள் மோட்சம் அடைவர் என்ற நம்பிக்கையில் லட்சக் கணக்கான மக்கள் இங்கு கூடுகின்றனர்.


கைலாயம் சென்ற நாரதர் தன் கையில் இருந்த அரிய மாங்கனியை சிவ-பார்வதியிடம் கொடுக்க, அதைப் பெறும் பொருட்டு விநாயகருக்கும், முருகப் பெருமானுக்கும் இடையே உலகைச் சுற்றி வரும் ஒரு போட்டி நடைபெற்றது என்றும், விநாயகப் பெருமான் தன்  தாய் தந்தையை வலம் வந்து மாங்கனியைப் பெற்றுக் கொள்ள, தன் மயில் மீது உலகைச் சுற்றி வந்த முருகப் பெருமான் இது அறிந்து கோபித்து  ஆண்டியாக பழனிமலையில் குடியேறினார் என்றும் தமிழ்நாட்டில் வழங்கும் புராணக் கதைகள் நாம் நன்கு அறிந்தவையே.

ஆனால் பெஹோவா கார்த்திகேயர் ஆலயத்தின் பின்னணியிலும் இதே கதையைக் கூறுவதோடு, திரிலோகப் பரிக்ரமா  சென்ற முருகப் பெருமான் தனக்கு மாங்கனி கிட்டாமல் போகவே, தன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு இங்கு வந்து தனியே கோயில் கொண்டார் என இந்தத் தலபுராணம் சொல்கிறது!  தன் தாயிடம் கோபித்துக் கொண்டு பிரம்மச்சாரியாகக் கோயில் கொண்டுள்ளதால் இங்கு கார்த்திகேயர் ஆலயத்திற்குள் நடுத்தர வயதுப்  பெண்மணிகளுக்கு  அனுமதியில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆயினும் சபரி மலை போன்றே சிறுமிகளும், வயது முதிர்ந்த பெண்களும்  இந்த ஆலயத்திற்குள் சென்று வழிபடலாம்.

வசிஷ்டர் போன்றே தனக்கும் பிரம்ம ரிஷி பட்டம் கிடைக்கவேண்டும் என்று விஸ்வாமித்திரர் தவம் இயற்றி இறுதியாக அந்தப் பட்டத்தைப் பெற்ற புனித தலம் இந்த பெஹோவா என்று கூறுகின்றனர். மஹாபாரதப் போரோடு இந்த ஸ்ரீகார்த்திகேயர் ஆலயத்திற்கு இருக்கும் தொடர்பும் குறிப்பிடத்தக்கது. பதினெட்டு நாட்கள் நடைபெற்ற மஹாபாரதப் போர் இங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குருக்ஷேத்ராவில் நடைபெற்றதாக ஐதீகம் உள்ளது. இந்தப் போரில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் தம்முடைய 18 லட்சம் வீரர்களை இழந்தனர். இதனால் மிகவும் மனச் சஞ்சலமடைந்திருந்த யுதிஷ்டிரர் கிருஷ்ண பகவானின் அறிவுரைப்படி மறைந்த மாவீரர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடையவேண்டி இந்த கார்த்திகேயர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டு இரண்டு நந்தா விளக்குகளை ஏற்றி வைத்தாராம். 

தற்போதும் இந்த ஆலய வளாகத்தில் காணப்படும் கல்லினால் வடிக்கப்பட்ட இரண்டு விளக்குகள் யுதிஷ்டிரரால் ஏற்றி வைக்கப்பட்டவை என்றும், இதனாலேயே, பாரதப் போர் நடைபெற்று 4500 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்த ஆலயமும் 4500 ஆண்டுகள் பழமையானது என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். காசி, கயா, பிரயாகை போன்ற தலங்களுக்கும் முற்பட்டதாக இத்தலத்தை பக்தர்கள் பெருமையோடு கூறுகின்றனர். மார்க்கண்டேய புராணம், வாமன புராணம் போன்ற புராணங்களில் இத்தலம் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். 

மேலும் இந்த ஊருக்கு  பிதுர்கடன்களைச் செலுத்த வந்தவர்களின் பெயர், கோத்திரம், ஊர் பற்றிய விவரங்கள் 4500 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்தன என்றும், இஸ்லாமியப் படையெடுப்பின்போது அந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டன என்றும், தற்போது 400 ஆண்டுகளுக்கான விவரங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. காசி, கயா செல்வது போன்றே இந்த பிஹோவா தலத்திற்கும் இந்தியா முழுவதிலுமிருந்து யாத்திரிகர்கள் வருகை தருகின்றனர். இங்கு முன்னோர்களுக்கு பிதுர்கடன்கள் செய்து, கார்த்திகேயப் பெருமானை வழிபட்டால் அவர்கள் ஆன்மா சாந்தி அடைந்து, அவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏழாவது நூற்றாண்டில் இந்தியா வந்த சீன யாத்திரிகர் யுவான் சுவாங்,

பிஹோவா பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மிகவும் புனிதத் தலமாகக் கருதப்படும் பிஹோவாவில், விலங்குகளைக் கொல்வதும், மாமிச உணவுகள் விற்கப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் கருவறையில் ஸ்ரீகார்த்திகேயர், ஷண்முகராக ஆறு முகங்களோடும் நான்கு கரங்களோடும் முன் இரு கரங்கள் அபய-வரத முத்திரை காட்ட, பின் இடக்கரத்தில் நாகத்துடன் கூடிய உடுக்கை, பின் வலக்கரத்தில் சக்தி ஆயுதம் ஆகியவற்றை ஏந்தி, மயில் மீது ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார். வட இந்தியப் பாணியில் கூரிய நான்கு பட்டை விமானத்துடன், ஒரே ஒரு கருவறையுடன் அமைந்த சிறிய ஆலயம் இது.

சாதுர்மாஸ்யம் எனப்படும் ஆவணி முதல் கார்த்திகை வரை நான்கு  மாதங்களில் (ஜூலை முதல் அக்டோபர்) இங்கு வந்து 'கார்த்திகேயப் பெருமானை தரிசித்தால் வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து, வெற்றி ஏற்படும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. மேலும் செவ்வாய்க் கிழமைகளில்  காலை 7 முதல் 8 மணிக்குள் சிறப்பு வழிபாடுகள்  செய்ய, செவ்வாய் தோஷம் நீங்கும் என்றும்,  அவ்வாறு தொடர்ந்து ஆறு  செவ்வாய்க் கிழமைகள் வழிபட்டால் எதிரிகளின் தொல்லை  தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்தச் சிறிய ஆலயம் காலை 6 முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது. ஹரியானா மாநிலம், குருக்ஷேத்திரா மாவட்டத்தில் உள்ள பெஹோவா பஞ்சாப், ஹரியானா மாநில எல்லையில் மாவட்டத் தலைநகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீபசுபதிநாத் மஹாதேவ் மந்திர், ப்ராசீன தீர்த்தம், ஸ்ரீசரஸ்வதி ஆலயம்,ஸ்ரீதட்சிணாமூர்த்தி - ஹனுமான் ஆலயம் போன்றவை மிகப் பிரபலமான இதர ஆலயங்களாகும்.

 புராணப் பின்னணியும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட பிஹோவாவில் பிருது சக்கரவர்த்தி பிரதிஷ்டை செய்த பிருதேஷ்வர் மஹாதேவ் மந்திர், சரஸ்வதிதேவி எழுந்தருளியிருக்கும் மிகப் பழமையான ஆலயம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் - யுதிஷ்டிரர் மந்திர் ஆகிய முக்கியமான ஆலயங்களும் உள்ளன. ஸ்ரீசரஸ்வதி மந்திரில் காளிதேவி மற்றும் பகளாமுகிக்கு சந்நதிகள் உள்ளன. மிகப்புராதனமான இந்த ஆலய  நுழைவாயிலில் காணப்படும் கங்கா, யமுனா, சரஸ்வதி சிற்பங்கள் கலை நுட்பம் மிகுந்தவை.

ஸ்ரீகிருஷ்ணர்-யுதிஷ்டிர் மந்திரில் ஸ்ரீகிருஷ்ண பகவான் தன் காலடியில் சோகத்தோடு அமர்ந்திருக்கும் யுதிஷ்டிரருக்கு பிஹோவா பற்றி எடுத்துரைப்பது போன்ற அற்புதமான பளிங்கு விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயங்கள் தவிர, பாலாஜி, ஹனுமன்ஜி, லக்ஷ்மிநாராயண்ஜி, மஹாம்ருத்யும்ஜயஜி ஆலயங்களும் உள்ளன. பிஹோவாவிற்கு அருகில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்த இடமாக கீதாஸ்தான் என்ற சிறிய ஆலயம் போற்றப்படுகிறது. முருகப் பெருமான், கார்த்திக் ஸ்வாமி என்ற பெயரில் எழுந்தருளியிருக்கும் பிரபல ஆலயங்கள் ஹிமாச்சல் பிரதேசம் பாரமோர் குக்டி கிராமம், உத்தரகாண்ட் மாநிலம் சம்பா மாவட்டம் மால்கி,  மஹாராஷ்ட்ரா மாநிலம் சதாரா போன்ற இடங்களில் அமைந்துள்ளன.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்

http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4738&id1=50&id2=18&issue=20180916