Sunday, September 20, 2020
சங்க இலக்கியம் தொகுத்த உவேசாவின் நேர்மையும் - இழிவான திராவிட கயமை புலவர்களும்
பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா ? | பொ.வேல்சாமி
விருப்பு வெருப்புகளைத் தாண்டி தரவுகளுடன் எடுத்துரைப்பதே சரியான ஆய்வுமுறை. இது எதிர்கருத்து உள்ளவர்களுக்கு மட்டுமல்ல. ஒத்த கருத்துள்ளவர்களுக்கும் பொருந்தும்.
உங்களைச் சந்தித்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. திராவிடச் சிறகுகள் என்ற அமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற நிகழ்வில்
தோழர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சை இன்று பார்த்துக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பேச்சில் அவரால் குறிப்பிடப்படுகின்ற அடிப்படைத் தரவுகளில் பல சரியானவைகளாக இல்லாமல் பிழையாக இருந்தன. சிறந்த வரலாற்று அறிஞர் என்று நண்பர்களால் பாராட்டப்படுகின்ற தோழர் செந்தலை ந கவுதமன் பேச்சைக் கேட்டு அதிர்ந்தேன். ஆதாரம் இல்லாத இத்தகைய பேச்சுகளை ஐயா அவர்கள் பேசுவது நியாயமா?
1. சர் வில்லியம் ஜோன்ஸால் (28.09.1746 – 27.04.1794) வடமொழி நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் அவரால் செய்யப்பட்ட அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உடனடியாக ஜெர்மன் மொழியிலும் இத்தாலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இவற்றின் விளைவாக வடமொழி பற்றிய அறிவு ஐரோப்பா முழுமையும் பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றார். வில்லியம் ஜோன்ஸ் வடமொழி நூல்கள் எல்லாவற்றையும் மொழிபெயர்க்கவில்லை. அந்தக் காலத்தில் வேதங்கள் உள்பட பல முக்கியமான வடமொழி நூல்களைப் பற்றி ஐரோப்பியர்களுக்கு எதுவும் தெரியாது.
2. 1812 இல் எல்லீஸால் திருக்குறள் “முழுமையும்” அச்சிட்டு வெளியிடப்பட்டதாக செந்தலை கவுதமன் கூறுகின்றார். எல்லீஸால் வெளியிடப்பட்டது திருக்குறளின் அறத்துப்பால் மட்டுமே. முழுநூலும் அல்ல என்பது குறி்ப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல திருவள்ளுமாலையையும் நாலடியாரையும் இணைத்து எல்லீஸ் வெளியிட்டதாகத் தோழர் கூறுகின்றார். அப்படி எல்லீஸ் வெளியிடவில்லை.
திருக்குறளின் 110 வது பாடலாகிய “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்..” என்று தொடங்கும் குறளுக்கு விரிவுரை எழுத வந்த பரிமேலழகர் 34 புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகின்றார். அந்த மேற்கோளில் பார்ப்பார் தப்பிய என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பை எல்லீசும் மேற்கோள் காட்டி பிராமணர்களை ”the murder of Brahmans” என்று ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதியை விளக்குவதற்கு புறநானூறு 34 வது பாட்டை மேற்கோள் காட்டுகிறார். அந்த மேற்கோள் உள்ள புறநானூற்று பாடல் வரிகளில் “குரவர் தப்பிய” என்ற வரிகள் உள்ளன. இதே பாடலுக்கு (புறநானூற்றில் 34 வது பாட்டுக்கு) உரை விளக்கம் கூற வந்த “உரைவேந்தர் அவ்வை துரைசாமிபிள்ளை” அவர்கள்,
“குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்குமெனத் திருத்தப்பட்டிருக்கிறது. இத்திருத்தம் பரிமேலழகர் காலத்தேயே செய்யப்பட்டுளதென்பது திருக்குறளுரையாற் காணப்படுகிறது.” என்று கூறுகின்றார். இப்படியான தரவுகள் இருக்கின்ற போது புறநானூற்றுப் பதிப்பில் 34 வது பாட்டில் “பார்ப்பார் தப்பிய” என்று உ.வே.சா திருத்தி விட்டார் என்று செந்தலை கவுதமன் கூறுவதை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது.?
3. செந்தலை கவுதமன் அவர்களின் பேச்சில், ஆறுமுக நாவலர் திருக்குறளைப் பதிப்பிக்கவில்லை என்று கூறுகிறார். 1861 இல் பாண்டித்துரை தேவரின் தந்தையார் பொன்னுசாமி தேவரின் உதவியாலும் வேண்டுகோளின்படியும் திருக்குறள் பரிமேலழகர் உரையின் பிழைநீக்கி பதிப்பித்துள்ளார். தொடர்ந்து அவர் காலத்திலேயே (1875) இரண்டாம் பதிப்பாகவும் திருக்குறள் வெளிவருகிறது. ஆறுமுகநாவலின் மறைவுக்கு பின்னர் (1879) பல பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 1861 இல் ஆறுமுகநாவலரால் முதன் முதலாக வெளியிடப்பட்ட இந்நூலின் 110 பாட்டின் பரிமேலழகர் உரை விளக்கத்தின் புறநானூறு 34 வது பாடல் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் “பார்ப்பார் தப்பிய” என்ற வரிதான் உள்ளது. அதன் அடிக்குறிப்பில்தான் பாடபேதமாக “குரவர் தப்பிய” என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லீஸ் அவர்களும் ஆறுமுகநாவலர் அவர்களும் சமகாலத்தவர்கள் என்பதுபோல தோழர் பேசுகின்றார். எல்லீஸ் மறைந்தது 1819 ம் ஆண்டு. எல்லீஸ் மறைந்து 3 ஆண்டுகள் கழித்து 1822 இல் ஆறுமுகநாவலர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்னல் மெக்கன்சியை எல்லீஸ் தமிழ்ச் சுவடிகளைத் திரட்டுவதற்குப் பணி அமர்த்தினார் என்று குறிப்பிடுகின்றார். கர்னல் மெக்கன்சி எல்லீஸால் பணி அமர்த்தப்படவில்லை. கர்னல் மெக்கன்சி தமிழ் ஏட்டுச்சுவடிகள் மட்டுமல்லாது வடமொழிச் சுவடிகள் தெலுங்குச் சுவடிகள் கல்வெட்டுகள் என்று பலவற்றையும் தொகுத்தவர். அவர் தொகுத்த தெலுங்குச் சுவடிகள் தமிழ்ச் சுவடிகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னால் குறிப்பிடப்படும் செய்திகளுக்கான ஆதாரங்களின் படங்களை இணைத்துள்ளேன். தோழர்கள் கவனமாகப் பார்க்கவும்.
தோழர் செந்தலை கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சையும் இணைத்துள்ளேன்.
04.05.2020 எனது பதிவில் தோழர் மே.து.ராசுகுமார் அவர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு…
நண்பர்களே…
தெ.பொ.மீ., பேராசிரியர் துரை அரங்கனார் போன்ற பல பேராசிரியர்களுக்கு ஆசானாக விளங்கிய கோ.வடிவேல் செட்டியார் 1904 இல் திருக்குறள் பரிமேலழர் உரையை தன்னுடைய விளக்கத்துடன் இரண்டு பாகமாக வெளியிட்டுள்ளார். அந்த நூலிலும் பார்ப்பார் தப்பிய என்ற பாடம்தான் உள்ளது.
அடுத்த வந்த காலங்களில் 34 வது புறநானூற்றுப் பாடலை நாம் தொல்காப்பியம் புறத்திணையியல் இளம்பூரணர் உரையில் மேற்கோளாகக் காண்கிறோம். தொல்காப்பியம் அகத்திணையியல் புறத்திணையியல் ஆகிய இரண்டு பகுதிகளையும் பேராசிரியர் நமச்சிவாய முதலியார் 1920 லும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை 1921 லும் முதல்முதலாக அச்சில் கொண்டு வருகிறார்கள். அந்த நூல்களில் இந்தப் புறநானூற்றுப் பாடல் மேற்கோளாக வருகின்றது. பேராசிரியர் நமச்சிவாயர் பதிப்பிலும் தேசபக்தர் வ.உ.சி பதிப்பிலும் “பார்ப்பார் தப்பிய” என்ற பாடம்தான் உள்ளது. “குரவர் தப்பிய” என்ற பாடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிகச் சிறந்த பழந்தமிழ்நூல்கள் பலவற்றை, அன்றைய காலத்தில் தமிழ்நாட்டு அறிஞர்களால் மதிக்கப்பட்ட பேராசிரியர்களைக் கொண்டு பதிப்பித்து வெளியிட்டதனால் புகழ்பெற்ற “மர்ரே” நிறுவனத்தார் வெளியிட்ட புறநானூற்றுப் பதிப்பிலும் “பார்ப்பார் தப்பிய” என்ற பாடமே உள்ளது