Monday, November 30, 2015

சகிப்புத்தன்மையின்மை! -ஜெயமோகன்

சகிப்புத்தன்மையின்மை!

1
http://www.jeyamohan.in/81384#.VlzuP9IrLIW
என் வாழ்க்கையில் அதிகாரம் என்றால் என்ன என்று நான் கண்கூடாக அறிந்தது 1994 ல் சம்ஸ்கிருதி சம்மான் விருதுக்காக டெல்லி சென்று அங்கே இந்தியா இண்டர்நேஷனல் செண்டரில் இரண்டுநாள் தங்கியிருந்தபோதுதான். அதற்கு முன்னரே இரு அமைச்சகங்களில் எனக்கு அறிமுகமுண்டு, செய்தித்தொடர்பு துறை மற்றும் கலாச்சாரத்துறை. ஆனால் அதிகாரம் தங்கத்தாம்பாளத்தில் பரிமாறப்பட்டிருப்பதை அங்கேதான் பார்த்தேன்.
பெரிய வளாகத்தினுள் அமைதியான சொகுசான பங்களா. புல்வெளிகள். உயர்தர உணவுகள். குடிவகைகள். ஓசையின்றி வெண்புகைபோல நடமாடும் பரிசாரகர்கள்.மேலுதடு அசையாமல் பேசப்படும் வெண்ணை ஆங்கிலம். நாசூக்காக கூந்தல் திருத்தும் உதட்டுச்சாயப் பெண்களின் நிரந்தரமாக வளைந்த புருவங்கள். ஓசையே இல்லாமல் ஆனால் சைகைகளும் முகபாவனைகளும் உரக்க ஒலிக்க கைவிரித்து கட்டித்தழுவி அளிக்கப்படும் வரவேற்புகள்.
அதன்பின் நான் பல நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறேன். ஆனால் இந்தியா இண்டர்நேஷனல் செண்டரின் அந்த ஆடம்பரத்தையும் சொகுசையும் எங்கும் கண்டதில்லை. இந்தியாவில் கலைகளையும், சுதந்திர சிந்தனையையும் வளர்க்கும்பொருட்டு இந்திய அரசின் நிதியுதவியால் உருவான சுதந்திர அமைப்பு அது. அப்போது டாக்டர் கரன்சிங் அதன் தலைவராக இருந்தார் என நினைவு. அவரை அங்கே மாலையில் பார்த்தேன்.
நான் ஆங்கில இதழ்களில் அதுவரை வாசித்தறிந்த அத்தனை முக்கியமான அறிவுஜீவிகளையும் அங்கே பார்த்தேன். யூ.ஆர். அனந்தமூர்த்தி கிட்டத்தட்ட நான்காண்டுகாலமாக அங்கே நிரந்தரமாக தங்கியிருந்தார். கிரீஷ் கர்நாட் சிலநாட்களாக தங்கியிருந்தார். பிரதிஷ் நந்தி போன்ற இதழாளர்கள் மகரந்த் பரஞ்ச்பே போன்ற சிந்தனையாளர்கள். ஷோபா டே போன்ற எழுத்தாளர்கள். எங்குபார்த்தாலும் பெரிய தலைகள்.
அன்று நான் மலைத்துப்போனது உண்மை.கிரிஷ் கர்நாடை கண்டு அருண்மொழி ஓடிப்போய் அறிமுகம் செய்துகொண்டு குதூகலித்தாள். நயன்தாரா ஷெகல் தினமும் அங்கே மதுவருந்த வருவதுண்டு, அன்றும் பார்த்தேன். அன்று என்னுடன் சம்ஸ்கிருதி சம்மான் வாங்கிய இருவர், ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அனாமிகா ஹக்ஸர் அங்கே வழக்கமாக வருபவர்கள் என்பதை கண்டேன்
முரட்டு கல்கத்தா ஜிப்பாவும் கோலாப்பூர் சப்பலும் அணிந்தவர்கள். குட்டிக்கண்ணாடி போட்டவர்கள். காதி புடவை கட்டி தூவெண்நரை படரவிட்ட பெண்கள். ஒருவர் கபிலா வாத்ஸ்யாயன் என்றார்கள். பபுல் ஜெயகர் வருவார் என்றார்கள். எங்கே பார்த்தாலும் இலக்கியப்பேச்சுக்கள். கலைவிவாதங்கள்.
Ve.sa-front-page
அந்த ஆடம்பரம் என்னை அச்சுறுத்தியது, உயர் அறிவுஜீவித்தனம் அன்னியமாக்கியது. மறுநாள் என்னைக் கண்ட வெங்கட் சாமிநாதன் அதை உடனே ஊகித்துக்கொண்டார். ‘யோவ் இதிலே முக்காவாசிப்பேர் சரியான காக்காக்கூட்டம். டெல்லியோட அதிகாரமையங்களை அண்டிப்பொழைக்கிற ஸ்நாப்ஸ். பலபேர் வெறும் பவர் புரோக்கர்கள். நீ மதிக்கிறமாதிரி உண்மையான ஆர்ட்டிஸ்ட் ஒண்ணுரெண்டு இருக்கலாம். அவனும் இங்க இருந்திட்டிருக்கமாட்டான். ஒடீருவான்”
“இவங்கதான் அத்தனை கல்ச்சுரல் விஷயங்களையும் தீர்மானிக்கிறாங்க. உலகத்தில உள்ள அத்தனை விஷயங்களப்பத்தியும் ஒருமணிநேரம் அழகான ஆங்கிலத்திலே சரியான ஜார்கன் எல்லாம் போட்டு பேசமுடியும். ஆனா அறுபத்தி ஒண்ணாம்நிமிஷம் முதல் சாயம்போக ஆரம்பிச்சிரும். ஒரெளவும் தெரியாது. பெரும்பாலும் பழைய பெருங்காய டப்பா” வெங்கட் சாமிநாதன் சொன்னார்
“அத்தனைபேரும் ஆளுக்கு நாலஞ்சு டிரஸ்ட் வச்சிருப்பாங்க. செர்வீஸ் ஆர்கனைசேஷன் , கல்ச்சுரல் ஆர்கனைசேஷன்னு இருக்கும். கான்ஃபரன்ஸிலே இருந்து கான்ஃபரன்ஸுக்கு பறந்திட்டிருப்பாங்க.கவர்மெண்ட் பங்களாவில ஒரே ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்காக தங்க எடம்குடுத்தாப்போரும், கெளப்பவே முடியாது. டெல்லியிலே மட்டும் எப்டியும் அஞ்சாயிரம் பங்களாக்களை ஆக்ரமிச்சு வச்சிட்டிருக்குது இந்தக்கூட்டம்” சாமிநாதன் சொன்னார் “இதே மாதிரி இன்னொரு அதிகாரமையம் இருக்கு ஜே.என்.யூ. அங்கியும் இதே கதைதான்”
“கவர்மெண்ட் இவங்களை கெளப்பிவிடமுடியாதா?” என்றேன். “பொதுவா கவர்ன்மெண்ட் அப்டி நினைக்கிறதில்லை. ஏன்னா இந்தக்கூட்டம் நேரு காலம் முதலே வந்து ஒட்டிக்கிட்டது. ஒருத்தரை ஒருத்தர் சப்போர்ட் பண்ணுவாங்க. அப்பப்ப சில ஐ.ஏ.எஸ் காரங்க முயற்சி பண்ணினாலும் அங்க போய் இங்கபோய் காலை கைப்பிடிச்சு கெஞ்சி கூத்தாடி தப்பிச்சிருவாங்க”
“அதோட இன்னொண்ணும் இருக்கு” என வெங்கட் சாமிநாதன் சொன்னார். “இவங்க வெறும் ஒட்டுண்ணிகள் மட்டும் இல்ல. இவங்களுக்கே பெரிய பவர் ஒண்ணு உண்டு. பெரும்பாலானவங்க முற்போக்கு இடதுசாரி ஆளுங்க. பாத்தேல்ல?’ நான் வியந்து “ஆமா” என்றேன்.
“உலகம் முழுக்க செமினார்கள் வழியா அறியப்பட்டவங்க. இந்தியாவிலே எது நடந்தாலும் உலகப்பத்திரிகைக்காரங்க இவங்ககிட்டதான் கேப்பாங்க. காங்கிரஸ் கவர்மெண்டுக்கு ஒரு லெஃப்டிஸ்ட் முகமூடிய உண்டுபண்ணி குடுக்கிறதே இவங்கதான். அப்டிப்பாத்தா இவங்களுக்கு செலவழிக்கிற தொகை ரொம்ப கம்மி” என்றார் வெ.சா “இவங்க இந்தியாமேலே உக்காந்திட்டிருக்கிற வேதாளங்க. யாராலயும் எதுவும் செய்யமுடியாது. இந்தியாவில எது சிந்தனை எது கலைன்னு தீர்மானிக்கிறவங்க”
நான் பலமுறை இந்தியா இண்டர்நேஷனல் செண்டருக்கும் அதைப்போல டெல்லியில் உள்ள நாலைந்து கலாச்சார மையங்களுக்கும் சென்றிருக்கிறேன். மலையாள இதழாளர்களுடன். அவர்களுக்கு வதந்தி பொறுக்கிச் செய்தியாக்க உகந்த இடங்கள் இவை. அந்திக்குப்பின் மது தலைக்கு ஏறும்போது ரகசியங்களே இல்லை
ஆனால் இவர்கள் எழுதித்தள்ளும் ஆங்கிலநாளிதழின் நடுப்பக்கக் கட்டுரைகளை அரிய ஞானச்செல்வங்களாக கருதி அவற்றின் அடிப்படையில் அரசியல் பண்பாட்டு விவாதங்கள் செய்பவர்கள் மேல் எப்போதுமே ஒரு பரிதாபம் எனக்குண்டு. உண்மையான அரசியலை ஒருபோதும் அவர்கள் அறிவதில்லை. எளிய பற்றுநிலைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுத்து கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்.
முன்பு இதைப்பற்றி எழுதியபோது ஃபர்கா தத் ஒரு பவர் புரோக்கர் அன்றி வேறல்ல என எழுதினேன். என் நண்பர்களே எப்படி அப்படி ஒரு முற்போக்குப் போராளியைப்பற்றி எழுதலாம் என என்னிடம் சண்டையிட்டனர்.நல்லவேளை சிலநாட்களிலேயே அந்தம்மாள் டாட்டாவிடம் பேசிய தரகுவேலையின் விவகாரங்கள் நீரா ராடியா டேப் வழியாக வெளிவந்தன.
[என்னாயிற்று அந்த வழக்கு என எவருக்கேனும் தெரியுமா? ஃபர்கா தத்தை அவரது முற்போக்கு பீடத்திலிருந்து ஒருமாதம்கூட கீழிறக்க அந்த அப்பட்டமான வெளிப்படுத்தல்களால் இயலவில்லை. டெல்லியின் வல்லமை அப்படிப்பட்டது]
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக அந்த அதிகார வளையம் மீது கை வைக்கப்பட்டிருக்கிறது. கீழ்மட்டத்தில் இதற்கான எச்சரிக்கைகள் ஆறுமாதமாக அனுப்பப் பட்டிருக்கின்றன. சென்றவாரம் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் சகிப்புத்தன்மை சடாரெனக் குறைந்து அறிவுஜீவிகள் கொந்தளித்தெழுந்ததன் உள்விவகாரம் இதுதான் போலும்.
JatinDas
உதாரணமாக நடிகை நந்திதா தாஸின் தந்தை ஓவியர் ஜதீன் தாஸ் டெல்லியின் மிகமிக முக்கியமான பகுதியில் அரசு பங்களாவை பல ஆண்டுக்காலமாக இலவசமாக பயன்படுத்திவருகிறார். அவரை வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது அரசு. நந்திதா தஸ் சகிப்புத்தன்மை குறைந்துவருவதாக கொந்தளித்து நாளிதழ்களில் எழுதுவதும் தொலைக்காட்சிகளில் பேசுவதும் வேறெதற்காக? சகிப்புத்தன்மைக்கான தற்கொலைப்படைப்போராட்டம் மேலும் வலுப்பெறவே வாய்ப்பு
மோடி தவறான இடத்தில் கையை வைத்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன். உலக மீடியாவில் இந்தியாவை சீரழிக்க இவர்களால் முடியும். இங்கு ரத்த ஆறு ஓடுவதாக ஒரு சித்திரத்தை மிக எளிதாக உருவாக்குவார்கள். தொழில்துறைத்தயக்கங்களை உருவாக்கவும் சுற்றுலாத்துறையை அழிக்கவும் இவர்களால் முடியும். இவர்களுக்கு இந்தியாவில் இன்று மாற்றே இல்லை என்பதே உண்மை. இவர்களை சகித்துக்கொள்வதே இன்று இந்தியாவுக்கு இன்றியமையாதது. மோதியின் சகிப்பின்மை ஆபத்து.

கி.மு. 3-ம் நூற்றாண்டு - சங்ககால மன்னர் அதியமான் பெயர் பொறித்த நாணயம்

 சங்ககால மன்னர் அதியமான் பெயர் பொறித்த நாணயம்; நாணயவியல் கழக தலைவர் ‘தினமலர்’ இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடிப்பு
http://www.dailythanthi.com/News/State/2015/11/29042806/Ancient-coins-with-Adhiyaman-names-discovered.vpfசென்னை, 

சங்ககால மன்னர் அதியமான் பெயர் பொறித்த கி.மு. 3-ம் நூற்றாண்டு நாணயத்தை, நாணயவியல் கழக தலைவர் தினமலர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சங்க இலக்கியம்

அதியமான் நெடுமான் அஞ்சி, சங்ககால குறுநில மன்னன். அதியமானின் ஊர் தகடூர். இப்போது அவ்வூரின் பெயர் தர்மபுரி. அதியமான் குறித்து புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றினை போன்ற சங்க இலக்கியங்களில் பல புலவர்கள் பாடியுள்ளனர்.

அதியமான் மழவர் இனத்தை சேர்ந்தவன். குதிரைகளைக் கொண்ட மழவர், குறும்படை மழவர், கடுங்கண் மழவர், செங்கண் மழவர், கல்லா மழவர், போர்த்திறன் கொண்ட மழவர் என்று சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறிகிறோம். அதியமானின் முன்னோர், முற்றிலும் நீரால் சூழப்பட்ட பகுதிகளிலிருந்து வந்ததாகக் கருதப்படுகின்றனர்.

அலெக்சாண்டர் படையெடுப்பு

தற்போது பாகிஸ்தானில் ஓடும் ஜீலம், சீனாப், ரவி ஆகிய நதிகளின் இடைப்பட்ட மிக வளமான பகுதியை ‘மாலவாஸ்’ என்ற பழங்குடியினர், தொண்மை காலத்தில் ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்கள் மிக போர் குணம் கொண்டவர்கள். 

கிரேக்க பேரரசன் அலெக்சாண்டர் படையெடுத்தபோது, இந்த பழங்குடியினர் போரில் தோல்வியுற்று, தங்கள் நாட்டைவிட்டு, ராஜஸ்தான் வழியாக மத்திய இந்தியாவிற்கும் பின் பிற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கும், அதியமானின் முன்னோர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால், அதை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை.

வணிகரிடம் நாணயம்

சங்ககால சேர, சோழ, பாண்டியர் மலையமான் நாணயங்கள், கடந்த 30 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதியமான் பெயர் பொறித்த நாணயத்தை கண்டுபிடித்து வெளியிட்டேன். அதே ஆண்டில் கோவையைச் சேர்ந்த ஒரு வணிகரிடம், சில நாணயங்களை வாங்கி ஆய்வு செய்தபோது, ஒரு சில செம்பு நாணயங்களில், காரீயத்தால் மேல் பூச்சு பூசப்பட்டு, நாணயங்கள் தெளிவில்லாமல் இருந்தன.

காரீயத்தை அகற்ற வேண்டுமானால் லேசாகத் தீயில் காட்டவேண்டும். அப்போது அந்த காரீயப் பூச்சு இளகிவிடும். அவ்வாறு இளகிய நிலையில் இருக்கும்போது, அந்த பூச்சை சுரண்டி அகற்றவேண்டும். தீயில் காட்டும்போது சில நேரங்களில் நாணயம் வெடித்து துண்டு துண்டாகிவிடும். இந்த இடர்பாடுகளுக்கு இடையில், பல நாட்கள் சுத்தம் செய்தபின், நான் சுத்தம் செய்த நாணயம் செம்பினால் செய்யப்பட்டது என்பதை அறிந்தேன்.

நாணயத்தின் அமைப்பு 

நாணயத்தின் முன்புறம் யானை வலப்பக்கம் நோக்கி நிற்கிறது. அதன் முன் ஒரு கொடிக்கம்பம் உள்ளது. நாணயத்தின் மேல் விளிம்பின் இடப்பக்கத்தில் ஒரு ‘சுவஸ்திக்’ சின்னமும், இடப்பக்கத்தில் ஒரு ‘சுவஸ்திக்’ சின்னமும், அதன் அருகில் ‘டவுரின்’ சின்னமும் உள்ளது. யானையின் மேல் பகுதியில் அதியமான் என்ற பெயரில், நான்கு எழுத்துகள், பிராமி எழுத்து முறையிலும், ஓர் எழுத்து தமிழ்- பிராமி முறையிலும் உள்ளன.

பின்புறம் நாணயத்தின் அடிப்பகுதியில், ஆறு ஒன்று அச்சாகியுள்ளது. தேய்ந்த நிலையில் இருப்பதால், முழுமையாகத் தெரியவில்லை. ஆற்றில் இரண்டு மீன்கள் இருக்கின்றன. 

நாணயத்தின் மத்தியில் குதிரை ஒன்று வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. குதிரையின் முன்பகுதியில், போர் வீரன் ஒருவன் நின்று கொண்டிருக்கிறான். போர் வீரனின் ஒரு கையில் கேடயமும், மறு கையில் வாள் போன்ற ஆயுதத்தையும் வைத்திருக்கிறான். போர் வீரன் தன் தலையில் அணிந்திருக்கும் தொப்பி போன்ற கவசத்தில், கிரேக்கப் போர் வீரர்கள் அணியும் அலங்கார முடி அமைப்பு உள்ளது. இந்த நாணயத்தின் காலம் கி.மு. 3-ம் நூற்றாண்டாகக் கருதலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முந்து தமிழ் வட்டெழுத்துடன் மூத்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு

முந்து தமிழ் வட்டெழுத்துடன் மூத்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு

First Published : 04 October 2015 01:03 AM IST http://www.dinamani.com/tamilnadu/2015/10/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/article3061448.ece
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஆலகிராமத்தில் எமதண்டீஸ்வரர் கோயிலில் அரிய வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே காலத்தால் முற்பட்ட கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிற்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலகிராமத்து முந்துத் தமிழ் வட்டெழுத்து கற்சிற்பம்: தமிழக வரலாற்றில் கிடைக்கப் பெற்ற பிள்ளையார் சிற்பப் பட்டியலில் மேலும் ஒரு முத்தாய்ப்பாக திண்டிவனம் வட்டம் ஆலகிராமத்தில் எமதண்டீஸ்வரர் கோயிலில் அரிய வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய பிள்ளையார், லகுலீசுவரர், முருகன் சிற்பங்களை கல்வெட்டு ஆய்வாளர்கள் சி. வீரராகவன், மங்கையர்க்கரசி, வீ.ஆர்.சசிதரன் ஆகியோர் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
லகுலீசுவரர், முருகன் சிற்பங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
மூத்த பிள்ளையார் சிற்பம்: இந்த ஊர் சிவன் ஆலயத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது. கருவறையில் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் பிள்ளையார் புடைப்புச் சிற்பம் ஒன்று சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மூத்த பிள்ளையார் சிற்பம் 75 செ.மீ. உயரமும், 40 செ.மீ. அகலத்தில் உள்ள நீண்ட சதுர பரப்பில் புடைப்பாக வெட்டப்பட்டுள்ளது.
பரியங்க ஆசனத்தில் அமர்ந்துள்ள மூத்த பிள்ளையார், இரண்டு கரங்களைக் கொண்டுள்ளார். வலது கரத்தில் தடியை ஆயுதமாகவும், இடது கரத்தில் ஒடித்த தந்தத்தையும், இடையில் ஆடையும், காலில் தண்டையும், மார்பில் புரிநூலும், மேற்கைகளில் (தோளில்) கடகமும், முன்கையில் காப்பும் கட்டப்பட்டுள்ளன. தலையை அலங்கரிக்கும் மகுடம், பூக்கூடையை கவிழ்த்த நிலையில் காட்டப்பட்டுள்ளது.
"பிள்ளையார்பட்டி'க்கு முந்தையது...புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆலகிராம மூத்த பிள்ளையார் அமர்ந்திருக்கும் பீடத்தில் , மூன்று வரிகளில் கல்லெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த் எழுத்தின் அமைதி, பூலாங்குறிச்சி கல்லெழுத்தின் அமைதிக்கு பின்னும், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குடைவரை கோயிலில் உள்ள கல்லெழுத்து அமைதிக்கு முந்தையதும் ஆகும். அதாவது, கி.பி. 4-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும்.
கி.பி. 5-ஆம் நூற்றாண்டு...விழுப்புரம் மாவட்டம், அரசலாபுரத்தில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட "கோழி நினைவு' கல்லில் உள்ள கல்லெழுத்தும் செஞ்சி அருகே திருநாதர் குன்றில் உள்ள நிசீதிகை கல்லெழுத்தும், அவலூர்பேட்டை அருகே உள்ள பறையன்பட்டு பாறை மீது வெட்டப்பட்ட நிசீதிகை கல்லெழுத்தும், பெருமுக்கல் கீறல்வரைவுகள் அருகே உள்ள கல்லெழுத்துகள் யாவும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.
மேற்கூறப்பட்ட கல்வெட்டு பாடங்களுடன் ஆலகிராமத்து மூத்த பிள்ளையார் பீடத்தில் உள்ள எழுத்துகள் ஒப்புநோக்க இதன் காலம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு உரியதாகும் என இந்தக் கல்வெட்டு பாடத்தைப் பார்வையிட்டும், வாசித்தும் "தினமணி' முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் கூறினார்.
ஆலகிராமத்து மூத்த பிள்ளையார் சிற்பத்தில் உள்ள கல்லெழுத்து பாடம் "பிரமிறை பன்னூரு சேவிக --------மகன் -------- கிழார் கோன் ----------கொடுவித்து' இந்தக் கல்வெட்டு வாசகம், இந்தப் பிள்ளையாரை செதுக்கிய சிற்பியைப் பற்றிய கருத்தினைக் கூறுகிறது. கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முந்து தமிழ் வட்டெழுத்துகளுடன் காணப்படும் ஆலகிராம மூத்த பிள்ளையார் இந்திய வரலாற்றுக்கு ஒரு புதிய வரவாகும். ஆய்வில் கண்டறியப்பட்ட முந்து தமிழ் வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய ஆலகிராமத்து மூத்த பிள்ளையார் சிற்பமே, தமிழகத்தில் உள்ள விநாயகர் சிற்பங்களில் முதன்மையானதாகும் என்று ஐராவதம் மகாதேவன் கூறினார்.

Tuesday, October 13, 2015

சேரர் தலைநகரம் வஞ்சி கரூர்

 கருவூர்ச் சேரர் தலைநகரம் பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப் புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது. சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது. கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது.
அகழ்வாராய்ச்சியின் போதுரோமானிய நாணயங்கள் கண்டு எடுக்கப் பட்டுள்ளன. ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது. கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கரூவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.


Monday, September 7, 2015

கண்ணகி என்ற மங்கல தேவி -பேராசிரியர் எம்.ஏ.சுசீலா.


Pictureகண்ணகி என்ற மங்கல தேவி
கண்ணகி என்ற மங்கல தேவி.


கண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடும்.சித்திரை மாத முழு நிலவு நாள் - சித்திரா பௌர்ணமி ,பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றிருப்பது. புத்தர் ஞானம் பெற்றதாக , புத்த பூர்ணிமா என்ற பெயருடன் வழங்கப்படும் இந்த நாளில்தான் , மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவமும் நிகழ்கிறது. கண்ணகி வழிபாட்டிற்காகத் தமிழர்களும் , பகவதி வழிபாட்டிற்காக மலையாளிகளும் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மங்கல தேவி கோயிலை நோக்கிப் படையெடுத்துச் செல்வதும் இந்த நாளிலேதான். 

தமிழகத்தில் கண்ணகி குறித்த கற்பிதங்களால் ஏற்பட்டுப் போயிருக்கும் சமூக மனோ பாவங்கள் ,அவற்றை மிக இலேசாகச் சீண்டினாலும் கூடக் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியவை. கண்ணகியின் பிம்பம் ,இலட்சியத் தமிழ்ப் பெண் ஒருத்தியின் பிம்பமாகக் காலம் காலமாகத் தமிழ் உள்ளங்களில் இலக்கிய / அரசியல் வாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திருப்பதே இதற்கான காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தனக்கு விதிக்கப்பட்ட அக்கினிப் பிரவேசத்தை மறுப்பேதும் சொல்லாமல் வாய் மூடி மௌனமாக ஏற்றுக் கொண்ட சீதை , உடலெல்லாம் அழுகிப் போன கணவனைக் கூடையில் வைத்துப் பரத்தை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுபோன நளாயினி ஆகியவர்கள் , பெண்களுக்கான சரியான முன் மாதிரி இல்லை என்பதைத் தயக்கமின்றி ஒத்துக் கொள்பவர்களும் கூடக் கண்ணகி என்று வரும்போது மட்டும் சில மனத் தடைகளோடு ஒதுங்கிப் போய் வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டு விடுவதற்குக் காரணம் , அது தமிழ் இன உணர்வுக்கு எதிரானது என்ற ஒரு வகை மூட நம்பிக்கையே.

'பரத்தையிற் பிரிவு' என்பது ஆணுக்குரிய ஒரு நெறியாகவே ஏற்கப்பட்டுச் சமூக அங்கீகாரத்தைப் பெற்றிருந்த சங்க காலச் சூழலின் நீட்சியாகவே சிலம்பு காட்டும் சமுதாயமும் விரிந்திருக்கிறது. சங்கத்தின் பெண் சார்ந்த . தவறான மதிப்பீடுகளும் கூட அச் சமூகத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கின்றன. மாதவிக்குக் கொடுப்பதற்காகத் தன் சிலம்பைத் தானே வலிய வந்து முன் நீட்டும் கண்ணகியின் தாராளம்...., ஊர் துறந்து, சுற்றம் துறந்து மதுரை செல்ல அவன் எழுந்தபோது 'எழுக என எழுந்த' அவள் செயல்பாடு -இவை அனைத்தும் அதற்கான சான்றுகள்.

கணவனின் பிரிவுக்காக அழுது புலம்பிக் கலங்கித் தவிக்கும் ''கையறு நெஞ்சத்துக் கண்ணகி''யாகவே அவள் காட்சி தருகிறாளேயன்றித் தன்னைப் பிரிந்து இன்னொருத்தியிடம் சென்ற அவனைத் தட்டிக் கேட்கும் துணிவோ,ஆன்ம வீரமோ ,மன எழுச்சியோ இந்த வீர பத்தினியிடம் இல்லை.

கணவன் பொய்ப் பழிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டபோது அவளிடமிருந்து பீறிட்டுப் பெருக்கெடுக்கும் வீரம் - மதுரை நகரையே தீக்கிரையாக்க முனையும் அவளது உக்கிரம் ஆகியவை,அவளது வாழ்வின் தொடக்க நிலையில் அவளுள் புதையுண்டு போன உணர்ச்சிகளின் வடிகால் என்றும் அதுவே 'கொங்கைத் தீ' யாக (நன்றி; இந்திரா பார்த்தசாரதி) வெளிப்பாடு கொண்டது என்றும் உளப் பகுப்பாய்வுகளுக்குள் ஆழ்ந்து போய் விடுகிறோம் நாம்.

'கண்ணகியைப் பேச
கண்ணகியே எழுந்தால்
மதுரைக்குப் போய்

மன்னன் முன் சிலம்பை உடைத்து
தெய்வமாகி இருக்க மாட்டாள்
புகாரிலேயே
கோவலனின் மண்டையை உடைத்து
மனுஷியாகி இருப்பாள்''
என்கிறது அறிவுமதியின் கவிதை.

சராசரி மனித உணர்வுகளோடு, பெண் ஒரு மனுஷியாக வாழும் இருப்பை மறுத்து விட்டு , அப்படி மறுத்ததை மறைப்பதற்காகவே அவளைத் தெய்வமாக்கி விடும் சமூகப் போக்கிற்கு ஏற்ப....எப்படியோ கண்ணகியும் அன்றேதெய்வமாக்கப்பட்டு விட்டாள் ; இன்றைய நவீன யுகத்தில் சிலையாகவும் கூடத்தான்.

கடற்கரைச் சோலை ஒன்றில் மாதவி பாடிய கானல் பாட்டு..,.அடுத்தடுத்த மாற்றங்களுக்கு அடியெடுத்துத் தர..வட புல மன்னர்களான கனக விசயர்களின் 'முடித்தலை நெரியும் வண்ணம்' இமயத்திலிருந்து அவர்களைக் கல் சுமந்து வரச் செய்து கோயிலும் அமைக்கிறான் சேரன் செங்குட்டுவன். அந்தக் கோயில் எது என்பதில் ஆய்வாளர்களிடையே பல கருத்து மாறுபாடுகள் நிலவி வந்தபோதும் - கேரள , தமிழக எல்லைப் பகுதியில் -தேக்கடிக்கு மேல்- மேற்குத் தொடர்ச்சி மலை அடுக்குகளுக்கு இடையே ஒளிந்து கொண்டிருக்கும் ' மங்கல தேவி கோயில் ' ,கண்ணகி கோயில்களுக்கான பட்டியலில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. ( 'வஞ்சி' என்ற பெயருடன் சேர நாட்டின் தலை நகராக இருந்து , இன்று கொடுங்கல்லூர் என்றும் கொடுங்கோளூர் என்றும் வழங்கப்படும் ஊரிலுள்ள பகவதி ஆலயமே செங்குட்டுவன் சமைத்த கண்ணகி கோட்டம் என்று குறிப்பிடுபவர்களும் உண்டு).

''மதுரையின் கிழக்கு வாயில் வழியே கணவனுடன் நுழைந்த நான் , இப்போது யாருமற்ற அனாதையாக மேற்குத் திசை வழியே தனியே செல்கிறேன் ''
(கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கின்றேன்'')
என்று புலம்பியபடி கண்ணகி பயணிப்பதையும் , மேடு பள்ளங்களைப் பாராமல் மேற்குத்திசையில் நடந்து சென்று நெடுவேள் குன்றம் அடி வைத்தேறி ,நன்கு மலர்ந்த ஒரு வேங்கை மரத்தடியில் அவள் நிற்பதையும், பதினான்காம் நாளன்று இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் , தன்னைத் துதிக்குமாறு கணவனோடு வான ஊர்தி ஏறிச் சென்றதையும் விவரமாக எடுத்துரைக்கிறது , சிலம்பின் 'கட்டுரை காதை'.அந்தக் குன்றத்தில் வசிக்கும் குறவர்கள் அந்த நிகழ்வுக்குச் சாட்சியாகக் காட்டப்படுகின்றனர். மலை வளம் காண வந்த சேரன் , முதன் முதலாக அவர்களின் வழியாகவே கண்ணகியைப் பற்றித் தெரிந்து கொள்கிறான்; அதன் பிறகே சீத்தலைச் சாத்தனார் மூலம் அவளது விரிவான கதையைக் கேட்டறிந்து , வட நாட்டுப் படையெடுப்பை நிகழ்த்திக் கோயிலும் சமைக்கிறான்.

மேற்குறித்த அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது கேரளத்திலுள்ள மங்கல தேவி கோயில் கண்ணகி கோயிலாக இருப்பதற்கான பல சாத்தியக் கூறுகளைக் காண முடிகிறது.


கண்ணகி பயணித்த திசை , தன்னந்தனியே உணர்ச்சிப் பிழம்பாகப் பயணித்த அவள் ,கால் நடையாக வந்து சேர்ந்திருக்கக் கூடிய தூரம் , ஆவேசத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்த அவள் அடிவைத்தேறிய மலைச் சிகரம் , அவை பற்றிய வருணனைகள் ஆகிய எல்லாவற்றோடும் ஒத்துப் போவதாகவே மங்கல தேவி கோயிலின் நிலவியலும் அமைந்திருக்கிறது.

கடல் மட்டத்திற்கு மேல் , 1200 அடி உயரத்திலிருக்கும் ஒரு சிறிய மலைச் சிகரத்தில் இக் கோயில் அமைந்திருக்கிறது. இதன் அருகிலுள்ள வனப்பகுதி அபூர்வ வகையைச் சேர்ந்த தாவரங்களையும் , அரிதான பல காட்டுயிர்களையும் கொண்டதாக உள்ளது.முற்றிலும் சமன்பாடானதொரு சுற்றுச் சூழலைக்(Perfect eco-system) கொண்டிருப்பதால்,கேரள வனத்துறையின் சிறப்புக் கவனத்திற்கு உரியதாக - அவர்களால் பராமரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது இப் பகுதி. இடுக்கி தாலுக்கா, குமுளி பஞ்சாயத்தைச் சேர்ந்த இந்த இடம் இந்தியாவிலிருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய புலிகள் சரணாலயங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றான தேக்கடி - பெரியார் புலிகள் சரணாலயத்திற்குள் உள்ளடங்கியதாகவும் இருக்கிறது.

மங்கல தேவி கோயிலையும், அது சார்ந்த வழிபாட்டையும் தமிழகம் , கேரளம் என இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் தமக்கே உரியதெனச் சொந்தம் கொண்டாடியபோதும் - வருடத்தில் ஒரே ஒரு நாள் சித்திரா பௌர்ணமி அன்று மட்டுமே இம் மலைப்பாதை பொதுமக்களின் அனுமதிக்காகத் திறந்து விடப்படுகிறது. பிற நாட்களில் இப் பாதை பெரும்பாலும் பூட்டப்பட்டுப் பாதுகாக்கப்படுவதால் (வனத்துறைப் பயன்பாட்டைத் தவிர) வனத் துறையின் அனுமதி இன்றி இங்கு செல்வது சாத்தியமில்லை.

மங்கல தேவிகோயிலுக்குக்குச் செல்லும் பாதையிலுள்ள வனத்துறைச் சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டுப் பயணத்தைத் தொடங்கினால் ஆள் அரவமற்ற அடர்காடுகளில் சில் வண்டுகளின் ரீங்கார ஒலியோடு , முதல் பாதி பயணம் இனிமையாகக் கழியும். பயணத்தின் அடுத்த பாதி சிலிர்ப்பூட்டக்கூடிய அரிதான பல தருணங்களை உள்ளடக்கி இருப்பது. மலைகளையும் , காடுகளையும் கிடைக் கோடாகவும் , சில வேளைகளில் செங்குத்தாகவும் வகிர்ந்தபடி செல்லும் குறுகலான - கரடுமுரடான பாதையில் பயணப்படுகையில் ஏற்படும் உடல்..மன ரீதியான அதிர்வுகளையும், அச்சங்களையும் மட்டும் சற்றே பொறுத்துக் கொள்ளப் பழகி விட்டால்...நம் கண் முன்னே விரியும் இயற்கையின் தரிசனம் அற்புதமானது...மகத்தானது ! உன்னதமான அந்தக் கணத்தை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொண்டு விடலாம் என்ற மன எழுச்சியை ஏற்படுத்தக்கூடியது. மாசுபடுத்தப்படாத இயற்கையின் மடியில்....பிரபஞ்சப் பெரு வெளியில் ஒன்றிக் கலக்கும் பேரானந்தப் பெருக்கைக் கிளர்த்தக் கூடியது.

மனித வாடையோ , ஆரவாரங்களோ அற்ற அந்த மலைமுடியின் உச்சியிலிருந்து அழகழகாக , அடுக்கடுக்காகத் தென்படும் மேற்கு மலைத் தொடர்களும் , அவற்றின் கொடுமுடிகளும் ஒரு புறம் ! ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில் இருளைப் பரத்தி விரித்துத் தரையே தெரியாதபடி போர்த்தியிருக்கும் அடர்ந்த மரச் செறிவுகள் மற்றொரு புறம் ! வெயில் நுழைய முடியாத காட்டில் குயில் மட்டும் நுழைந்து விடுவதைக் கூறும்
''வெயில் நுழைவு அறியாக்
குயில் நுழை பொதும்பர்''
என்ற இலக்கிய வரிகளை நெஞ்சுக்குள் மோத விடும் பசுமைப் பள்ளத்தாக்குகளைப் பார்த்தபடி சிகரத்தின் உச்சியில் சென்றால் அட ! வானம் கூடத் தொட்டுவிடும் தூரம்தான் !

பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தித்தால் அந்தச் சிகரத்தின் உச்சி வரை ஏறிப் போன கண்ணகி , அங்கிருந்து கீழே பாய்ந்து உயிரை விட்டிருக்கக்கூடும் என்பதே பொருத்தமாக இருக்கக் கூடும் என்றபோதும் , எட்டிப் பிடிக்கும் தொலைவில் இருப்பதைப் போல் தென்படும் அந்த வான் வெளியைப் பார்க்கும்போது....ஒரு வேளை கண்ணகி , இந்த இடத்தில் நின்றபடிதான் தன் கணவனை அழைத்திருப்பாளோ...., அவனும் கூட , அவளுக்குக் கைலாகு கொடுத்து விமானத்தில் ஏற்றியிருப்பானோ என்ற மன மயக்கம் கண நேரமாவது ஏற்பட்டு விடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பாதுகாக்கப்பட்ட அந்த வனப் பகுதில் , தவறான நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்காகவே மிக உயரமான கண்காணிப்புக் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது . அதன் உச்சியிலிருந்து பார்க்கும்போது கம்பம் பள்ளத்தாக்கின் செழுமையான வனப்பு நம் கண் முன் விரிகிறது .

மங்கல தேவி கோயிலை ஓர் ஆலயம் என்று அழைப்பதை விட ' சிதைவுண்ட கற்கோயில் ஒன்றின் எச்சம் ' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

தொல்தமிழர்களின் சிற்பத் திறமையைப் பறை சாற்றும் ஒரு சில மிச்சங்களையும் , , பண்டைய கற்கோயில் கட்டுமானங்களைநினைவூட்டும் சில சிதைவான அடையாளங்களையும் மட்டுமே அங்கே காண முடிகிறது.

ஏதோ ஒரு காலகட்டத்தில் கோயிலின் முன் வாசலாக இருந்திருக்குமென்பதை நினைவுபடுத்தும் இரண்டு தூண்கள், அவற்றுக்கு முன்னால் சுற்றுச் சுவர் எதுவுமின்றித் தூர்ந்து போய்க் கிடக்கும் மிகச் சிறிய குளம்..கோயிலைச் சுற்றி , முன்பு மதிற்சுவர் இருந்ததற்கு அடையாளமாகப் பெரிய பாறைக் குவியல்கள்...வனத்துறையின் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருக்காமல் , எப்பொழுதும் , எந்தத் தடையும் இன்றி , விலங்குகள் மட்டும் (குறிப்பாக யானைகள் )அங்கே வந்து சஞ்சரித்துவிட்டுப்போவதன் தடயங்களாக அவற்றின் கழிவுகள் !
இன்றைய மங்கல தேவி கோயிலின் சுருக்கமான சித்திரம் இது மட்டும்தான்

சுரங்கப்பாதையைப்போன்ற ஓர் அறைக்குள் தலையைத் தாழ்த்தி உள்ளே நுழைந்தால்..அங்கே ,கருவறைக்குள் தலையில்லாத ஒரு சிலை உருவம் ! (தலைப்பகுதியைச் செயற்கையாக உருவாக்கி -மஞ்சள்,சந்தனக் காப்பு சார்த்தி-அதுவே கண்ணகி சிலையாகக் கருதப்பட்டு வழிபடப் படுவதாக -அங்கிருந்தவர்கள் வழி அறிய முடிந்தது.)

புராதனச் சின்னங்களைப் பராமரித்து வரும் தொல்லியல் துறையின் பாதுகாப்புக்கு இப் பகுதி உட்படவில்லை என்பதால் இங்குள்ள சிற்பங்கள், அவற்றின் காலம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கான குறிப்புக்களோ , அறிவிப்புப் பலகைகளோ அங்கு எதுவுமில்லை.
திறந்த மைதானம்போலச் சிதைவுண்டு கிடக்கும் அந்த வளாகத்திற்குள் , எப்படியோ ஒரு பிள்ளையார் சிலை மட்டும் பிற்கால இடைச் செருகலாக முளைத்து விட்டிருக்கிறது.

மிக அரிதான இந்தக் காட்டுப் பகுதி அதிக அளவிலான மனிதர்களின் தொடர்ந்த நடமாட்டங்களால் மாசுபட்டுவிடக் கூடாது என்பதாலேயே மிகுந்த கெடுபிடி காட்டி வரும் வனத்துறை , சித்திரா பௌர்ணமியன்று மட்டும் பொதுமக்களை இங்கே அனுமதிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அந்த நாளில் மட்டும் கண்ணகி கோயில்பற்றிய சர்ச்சைகள் , நாளிதழ்களில் தவறாமல் இடம் பிடிப்பது ஒரு வாடிக்கையாகவே ஆகி விட்டிருக்கிறது. கண்ணகி கோயிலைச் சீரமைத்துப் புதுப்பிக்க வேண்டுமென்றும் , தொடர்ந்த வழிபாட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்றும் குரல்கள் ஓங்கி ஒலிப்பதையும் அச் சமயங்களில் மட்டுமே அதிகமாகக் கேட்கவும் முடிகிறது. எனினும் அக்காட்டுப் பகுதியில் நிலவம் இயற்கைச் சமன்பாட்டை மனித ஆரவாரங்களும் , மனிதப் பயன்பாட்டுக்குரிய பலவகைப்பொருள்களும் குலைத்து விடக் கூடும் என்று அஞ்சுவதனாலேயே சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் , வனத்துறையினரும் இதற்கு ஒப்புதலளிக்க மறுப்புக் காட்டி வருகின்றனர்.

சித்திரை முழு நிலவு நாளில் , கண்ணகியைத் தங்களின் ஆதரிசத் தமிழ்ப் பெண் தெய்வமாகக் கருதும் தமிழர் கூட்டமும் , மங்கல தேவியைப் பகவதியாகப் போற்றி வழிபடும் கேரள மக்கள் கூட்டமும் இக் கோயிலை நோக்கி வந்து பொங்கலிட்டுப் படையல் செய்யும் காட்சியைக் காண முடியும், அந்த ஒரு நாளில் மட்டும் அவர்கள் வந்து செல்வதற்கான ஜீப் முதலிய வசதிகளையும் , குடிநீர் ஏற்பாடுகளையும் கேரள அரசின் வனத் துறையே கொடுத்து உதவுகிறது. தனியார் இயக்கும் வாகனங்களுக்கும் ( ஜீப் மட்டுமே அங்கே செல்லமுடியும் ) அன்று மட்டும் அனுமதி தரப்படுகிறது.

கூட்டமும் , ஆரவாரமும் நிறைந்த அந்த நாளைத் தவிர்த்து விட்டு வனத்துறையின் சிறப்பு அனுமதியோடு - சடங்கு , சம்பிரதாயக் கூச்சல்களற்ற அமைதியான தருணத்தில் அங்கே செல்ல முடிந்தால் , உண்மையான கண்ணகியையும், அவளது தொன்மத்தையும் , சுற்றியுள்ள இயற்கை விடுக்கும் எண்ணற்ற இரகசியப் புதிர்களையும் உணர்ந்து உட் கலக்க முடியும். 

Picture
மங்கல தேவி கோயிலை நோக்கி
Picture
கண்ணகி கருவறையின் நுழை வாயில்
Picture
கண்ணகி கோயில் ஒரு காட்சி
Picture
கண்ணகி கோயில் இன்னொரு காட்சி
Picture
கண்ணகி கோயில் இன்னொரு காட்சி
Picture
கலைந்தும் , சிதைந்தும் போன கண்ணகியின் பல கனவுகளைப் போலவே - அவளுடையதென்று சொல்லப்படும் இந்தக் கோயிலும் இருந்தபோதும்.....ஏதோ வினோதமான ஒரு பண்டைத் தொன்மத்தின் அடையாளமாக ( ஒருக்கால்...கண்ணகி தன் வாழ்வை முடித்துக் கொண்ட இடமாக...) மர்ம முடிச்சுக்கள் பலவற்றைப் பொதிந்து வைத்திருக்கும் இந்த இடம் இனம் பிரித்துச் சொல்ல முடியாத பல மாயப் பிரமைகளை நம்முள் எழுப்புவதை நிதானமான அந்தக் கணங்களிலேதான் நம்மால் ஆழமாக உள் வாங்கிக்கொள்ள முடியும்.

கண்ணகி ஒரு வழிபாட்டின் அடையாளமா அல்லது சமூக அமைப்பின் ஒரு கோளாறைச் சுட்டிக்காட்டும் குறியீடா என்ற சிந்தனையில் சிறிது நேரம் சஞ்சாரம் செய்வதற்காகவாவது....அமங்கலமாகப் போய் விட்ட மங்கலதேவி கோயிலுக்கு - அந்த வனப் பகுதிலுள்ள கானுயிர்களுக்கு நம் மூச்சுக் காற்றால் கூடச் சிரமம் ஏற்படாதபடி ஒரு முறை சென்று வந்தால் ...பரவசத்தில் ஆழ்த்தும் புதுப்புது அனுபவங்கள் நம்மை எதிர்கொள்ளக் காத்திருக்கும் என்பது உறுதி.

நன்றி. 
எம்.ஏ.சுசீலா.
தமிழ்த்துறைப்பேராசிரியர்.(1970-2006);
பாத்திமாக்கல்லூரி.
மதுரை.

சிலப்பதிகாரம்.
இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனுக்கு இவர் சகோதரர். சிறு பிராயத்தில் துறவு மார்க்கத்தைக்கைக்கொண்டவர். இவர் காலத்தில் கற்பிற் சிறந்த கண்ணகி தன் கணவன் கோவலன் கொலையுண்டமையால் மனம் வெறுத்துப் பாண்டிய நாட்டை விட்டுச் சேரநாட்டில் கொடுங்கோளூர் அல்லது வஞ்சி என்னும் கடற்கரைப் பட்டினத்தை அடைந்து அங்கே மரணம் அடைந்தாள். இவள் மரணத்தின் பின் உண்டான கடுமையான பஞ்சத்தின் காரணம் கண்ணகியின் சாபமென்றும் அது தீர அவள்போல் ஒரு சிலை ஸ்தாபித்து உற்சவம் கொண்டாடவேண்டும் என்றும் தெரிந்து செங்குட்டுவன் கொடுங்கோளூரில் ஒரு பிரபலமான ஆலயம் கட்டி அதில் கண்ணகியைப்போல் கறுப்புக் கல்லினால் பத்தினிக் கடவுள் உருவமைத்து உற்சவம் கொண்டாடினார். இளங்கோவடிகள் இச்சரித்திரத்தைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரையுடைய நூலாக இயற்றி அதில் சேர சோழ பாண்டிய நாட்டையும் அவற்றை ஆண்ட அரசர்களையும் வளங்களையும் நாடு நகரச் சிறப்பையும் தமிழ் மக்களின் நாகரீகத்தையும் அவர்கள் காலத்தில் வழங்கிவந்த கலைகளையும் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் குறித்துச் சொல்லுகிறார், அதில் அரங்கேற்று காதையிலும் கானல் வரியிலும் வேனிற்காதையிலும் ஆய்ச்சியர் குரவையிலும் அக்காலத்தில் வழங்கிவந்த இசைத்தமிழ் அல்லது சங்கீதத்தின் நுட்பமான பலபாகங்களைச் சொல்லியிருக்கிறார்.

பாண்டிய நாட்டில் நெடுஞ் செழியனும் உறையூரில் சோழன் பெருங்கிள்ளியும் இலங்கையில் முதற் கயவாகுவுமிருந்த காலத்தில் இருந்தவராதலால் இவர் முதலாம் நூற்றாண்டில் இருந்தவரென்று தெரிகிறது. 

கண்ணகியின் அடிச்சுவட்டில் - பேராசிரியர் சி.கோவிந்தராசனார்

http://karanthaijayakumar.blogspot.com/2013/11/blog-post.html
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்பார் திருவள்ளுவர். நண்பர்களே, நாமும் நமது பணியினை நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தினமும் முயன்று கொண்டே இருப்பவர்கள்தான். ஆனாலும் நமது முயற்சியின் எல்லை சிறியது, முயற்சிக்கும் காலமும் சிறியது.

     நண்பர்களே, நாம் அனைவரும் புத்தகங்கள் படிப்பவர்கள்தான். எத்துனையோ மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர்கள்தான். இதிகாசங்களையும், இலக்கியங்களையும், காப்பியங்களையும் படித்தவர்கள்தான். ஆனால் நம்மில் எத்தனைபேர், நூல்கள் சுட்டும் திசையில் பயணித்திருக்கிறோம்.

     நண்பர்களே, களப் பணி என்னும் சொல் இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. தமிழாய்வாளர்கள் இன்று களப்பணி செய்து, புதிய புதிய செய்திகளை, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள்.

     தமிழ்ப் பல்கலைக் கழகத்திலே பணியாற்றும், எனது நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், விடுமுறை நாட்களில், பௌத்தத்தின்அடிச்சுவட்டைத் தேடி, சோழ நாடு முழுமையும் பயணம் செய்து கொண்டே இருக்கிறார்.

    இன்று களப்பணி ஆற்றுவதற்கு தொடர் வண்டிகள், பேரூந்துகள், வானூர்திகள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வசதிகள் பல்கிப் பெருகிவிட்டன. ஆனால் இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், பயண வசதிகள் என்ன இருந்திருக்கும், என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் நண்பர்களே.

     ஒரு சில புகை வண்டிகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், இரு சக்கர மிதி வண்டிகள் இவைதானே, அன்றிருந்தவை.
பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
     நண்பர்களே, தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய பேராசிரியர் சி.கோவிந்தராசனார்அவர்கள், இலங்கையைச் சார்ந்த பேரறிஞர், யாழ் நூல் என்னும் தமிழ் இசை இலக்கண நூலின் ஆசிரியர், சுவாமி விபுலானந்த அடிகளாரிடம், சிலப்பதிகாரத்தைத் திறம்படக் கற்றவர். சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரது மனதில் நீண்ட நாட்களாகவே, ஓர் ஆசை, ஏக்கம், கனவு. சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த, பாதை வழியாகவே, ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களும் எண்ணி, எண்ணித் துணிந்து இறங்கினார்.

     நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கண்ணகியின் அடிச்சுவட்டில் பயணம் தொடங்கிய ஆண்டு 1945. ஆம் நண்பர்களே, இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், துணிந்து இறங்கினார்.

     நண்பர்களே, கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியாகவே, இவரும் நடந்தே சென்றார். கல்லூரி விடுமுறையில் நடந்தார், விடுமுறை எடுத்துக் கொண்டு நடந்தார். ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார். தனது உடமைகள் ஒவ்வொன்றையும், விற்று, விற்று, காசாக்கிக் கொண்டே நடந்தார்.

     நண்பர்களே, இவர் நடந்தது ஒரு மாதம், இரு மாதமல்ல, பதினேழு ஆண்டுகள் நடந்தார். முடிவில் சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தினார்.

     அதுமட்டுமல்ல நண்பர்களே, சிலப்பதிகாரத்தில், குன்றக்குரவை என்னும் காதையுள், கண்ணகி மலைமேல், வேங்கை மர நிழலில் நின்று தெய்வமானஇடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவரும் இவரேதான்.

     நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், பதினேழு ஆண்டுகள் செலவிட்டு, கண்ணகியின் பாதச் சுவடுகளைப் பின் பற்றி நடந்த பாதையின் வழியே, நாமும் ஒரு புனிதப் பயணம் மேற்கொள்வோமா. வாருங்கள் நண்பர்களே வாருங்கள்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், தனது பயணத் திட்டத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார்.

     காவிரிப் பூம்பட்டிணம் முதல், காவிரியின் வடகரை வழியாக, திருவரங்கம், உறையூர் வரையிலான பாதை, இவரது ஆய்வின் முதல் பகுதி.

     உறையூர் முதல், கற்குடி, பூங்குடி, விராலிமலை, கொடும்பாளூர் வழியாகப் பிரான் மலை, அழகர் மலை, மதுரை வரையிலான பாதை இவரது ஆய்வின் இரண்டாம் பகுதி.

     மதுரை மாநகர் ஆராய்ச்சி இவரது ஆய்வின் மூன்றாம் பகுதி.

     மதுரை முதல் வையை கரை வழியே நெடுவேள் குன்றம் வரையிலான பாதை இவரது ஆய்வின் நான்காம் பகுதி.

கண்ணகியில் அடிச்சுவட்டில் பேராசிரியர் பயணித்த பாதை

    


1945 ஆம் ஆண்டின் ஓர் நாள், இவர் மயிலாடுதுறை என்று இன்று அழைக்கப் படுகின்ற மாயுரம் வரை புகை வண்டியில் சென்றார். அங்கிருந்து இரு சக்கர மிதி வண்டிதான். அந்தக் காலத்தில், இவர் மாயுரத்தில் இறங்கி விசாரித்த பொழுது, காவிரிப் பூம்பட்டிணம் எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.

     பலமுறை முயன்ற பிறகு, கடற் கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் சூரைச் செடிகளும் செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங் காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று, அன்று அழைக்கப் பட்டப் பகுதியே, பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டுபிடித்தார்.

     அங்கிருந்த மீனவர்களின் துணையோடு, கட்டுமரத்தில் ஏறி, ஒரு கல் அளவு கடலில் பயணித்தார். கடல் ஆழமின்றி இருந்ததை அறிந்தார். கடலில் மூழ்கி, மூச்சை அடக்கிக் கொண்டு, கடலுள் பயணிக்கும் பயிற்சி பெற்றிருந்தமுழுக்காளிகள் சிலரை, கடலினுள் மூழ்கச் செய்து, கடலடி ஆய்வு செய்தார். கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணக் காரைகள், பாசி படிந்த பானை ஓடுகள் என பலவற்றை எடுத்து வந்து இவரிடம் வழங்கினர்.

     இவ்வாராய்ச்சியின் பயனாக, கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப் பரப்பே, காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

     1945 ஆம் ஆண்டில் பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கிய இவருக்கு, கால் நடையாக ஆராய்ந்து, ஆராய்ந்து, நடந்து, நடந்து மதுரை வரை செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப் பட்டன.

     திருப்பரங் குன்றம் செல்லும் சாலையில் பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார்.

      பிறகு, மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார்.

     வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதை கண்டு கொண்டார்.
     மதுரையில் இருந்து கோட்டையின் மேற்கு வாசல் வழியாக மனமுடைந்து, வெறுப்பு உணர்ச்சியோடு, தனித்துப் புறப்பட்ட கண்ணகி, வையை ஆற்றின் ஒரு கரையைப் பின்பற்றி, மேற்கு நோக்கி சென்று, நெடுவேள் குன்றத்தில் அடி வைத்து ஏறி, மலை மேல் இருந்த, வேங்கை மரச் சோலையில் நின்று தெய்வமானாள்.

    சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் நிறுவி, அதில், தான் இமயத்தில் இருந்து கொண்டு வந்த கல்லில், சிலை செய்து வைத்து வழிபாடு செய்தான். அச் செய்தியினை, அறிந்த கண்ணகியின் செவிலித் தாயும், பணிப் பெண்ணும், தேவந்தி என்கிற தோழியும் சேர்ந்து, கண்ணகித் தெய்வத்தைக் காண, காவிரிப் பூம்பட்டிணத்தில் இருந்து புறப்படுகிறார்கள். இவர்கள் மதுரைக்கு வந்து, அங்கிருந்த மாதரியின் மகள் ஐயை, கண்ணகியைப் பற்றிக் கூறக் கேட்டு, அவளையும் அழைத்துக் கொண்டு, வையை ஆற்றின் ஒரு கரை வழியாகச் சென்று, பெரிய மலையின் மேல் ஏறி, கண்ணகியின் கோயிலை அடைந்தார்கள்.

      நண்பர்களே, மேற்கண்ட இரு செய்திகளும், சிலப்பதிகாரக் கட்டுரைக் காதையிலும், வாழ்த்துக் காதை உரைப் பாட்டுப் பகுதியிலும் இடம் பெற்றுள்ளன.

     எனவே, மேலே கண்ட சிலப்பதிகார வழிகளின் படி மதுரையில் இருந்து, தரை வழியாகச் சென்றால், வையை ஆற்றின் தென் கரையே, அதற்குரிய வழி என்பதைப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் ஆராய்ந்து உணர்ந்தார்.

     இவ்வழியைப் பின்பற்றி நடந்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், 40 மைல்களுக்கும் மேல் பயணித்து, வையை ஆற்றின் தென்புறம் தொடர்ந்து நடந்து சுருளி மலைத் தொடரை அடைந்தார்.

     சுருளி மலைத்தொடரின் மேற்குப் புறக் கோடியில் உற்பத்தியாகும் வையை ஆறு, பள்ளத்தாக்கின் வழியாக, வடக்கு நோக்கி ஓடி, தேனி அருகில், கிழக்கு நோக்கித் திரும்புகிறது. இங்கு குன்னூர் இருக்கிறது. இங்கிருந்து கண்ணகி நடந்த வழியாகச் செல்வதற்கு காட்டிலும், கரம்பிலும், சதுப்பு நிலத்திலும் ஓடி வரும் வையை ஆற்றைப் பின்பற்ற வேண்டும்.

     குன்னூரில் இருந்து வையை ஆற்றைப் பின்பற்றி நடந்து, எதிரில் நிற்கும் மலைத் தொடரின் குறுக்கே, எங்காவது ஓரிடத்தில் மலை மேல் ஏறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்.

வையை ஒரு கரைகொண்டு ஆங்கு நெடுவேள்
குன்றம் அடிவைத்து ஏறினாள்
என்று இளங்கோ அடிகள் கூறியிருப்பதற்கு ஏற்ப, இயற்கையில் அமைப்பு அவ்விடம் இருப்பதை அறிந்தார்.

     மேல் சுருளிமலையின் ஒரு பகுதியை ஆராயத் தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதி செய்தார்.

      பண்டைக் காலத் தமிழ் மரபுப் படி, முருகனின் பெயர்களுள் ஒன்று நெடுவேள் என்பதாகும். அப்பெயராலேயே, இம்மலைத் தொடர் அழைக்கப் பட்டிருக்க வேண்டும் என முடிவு செய்தார்.

     சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலைஎன்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னும் பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும் அருவியின் பெயரால் சுருளி மலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

     சுருளி மலைத் தொடராலும், பழநி மலைத் தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது.

     வர்ஷ நாட்டின் மலைப் அடிவாரப் பகுதிகளை ஆராய்ந்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கீழக் கூடலூருக்குத் தெற்கே உள்ள கோயிலில் கல்வெட்டு ஒன்றினைக் கண்டு பிடித்தார்.

     கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூஜைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது.

     நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் மனதில் ஒரு மின்னல் வெட்டியது. கண்ணகிக்கு அடைக்கலம் தந்தபொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை கவுந்தி அடிகள், இடையர் குல மங்கையான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு வந்தது.

     1963 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, மங்கலதேவி மலை ஆராய்ச்சிக்காக கூடலூருக்குச் சென்றார் பேராசிரியர். அடுத்த நாள் 17 ஆம் தேதி, அதிகாலை நான்கு மணிக்கு, ஊர் மக்கள் சிலரின் துணையுடனும், முத்து மற்றும் கந்தசாமி என்னும், இவரது இரு மாணவர்களோடும் புறப்பட்டார்.

     கூடலூரில் இருந்து மலையின் அடிவாரத்திற்குச் செல்ல மூன்று மைல்கள் நடக்க வேண்டியிருந்தது.  முல்லையாறு, காட்டாறு, களிமண் வழுக்கல், காடு கரம்பு, யானைகளின் புழக்கம் ஆகியவற்றைக் கடந்தாக வேண்டியிருந்த்து. ஏழு மணிக்கு மலை ஏறத் தொடங்கினார்கள். மலையில் தொடர்ந்து உயரும் மூன்று அடுக்குகளையும் ஏறிக் கடக்க வேண்டியிருந்தது. இடையே பற்பல இடையூறுகள்.

     ஒரு வழியாக, மங்கல தேவி மலையின் மேற் பரப்பிற்கு வந்தார்கள். போதைப் புற்காடு எட்டடி உயரத்திற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது. அப் புதற்களுக்கு இடையில், ஓரிடத்தில், மூன்று சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய பெரிய, பெரிய கற்களைக் கண்டார்.

     அவற்றுள் இரண்டு கம்பமாக நிறுத்தப் பட்டிருந்த்து. ஒன்று வில் வடிவமாக கம்பத்தின் மீது நிறுத்தப் பட்டிருந்த்து. வில் வடிவமான கல்லின், ஒரு முகப்பில், மகர வாசிகையும, இரு பெண்களின் உருவமும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டிருந்தன. இதை ஆராய்ந்த்தில், இது ஒரு சிற்ப முறையிலான மகர தோரண வாயில் என்பதை அறிந்தார்.

     பேராசிரியருடன், உடன் வந்த உள்ளூர் காரர்களில் ஒரு வேட்டைக் காரரும் இருந்தார். அந்த வேட்டைக் காரர், எல்லோரையும் உரக்கக் கத்துமாறு கூறவே, அனைவரும் தங்களால் இயன்ற வரை ஒலி எழுப்பினர். எதிரே திட்டாகத் தெரிந்த காட்டில் இருந்து எதிரொலி கிளம்பியது.

        எதிரொலி கிளம்பிய திட்டைச் சுட்டிக் காட்டிய வேட்டைக் காரன், அதோ தெரிகிறதே, அதுதான் வேங்கைக் கானல். அதனுள்ளேதான் கோட்டம் உள்ளது, அங்கிருந்துதான் எதிரொலி வருகிறது என்றார்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் நெஞ்சம், ஒரு நிமிடம், துடிப்பதை சற்றே நிறுத்திவிட்டுப் பிறகு துடிக்கத் தொடங்கியது. வேங்கைக் கானல், கோட்டம், ஆகா, ஆராய்ச்சியின் இலக்கைத் தொட்டு விட்டோம். பதினேழு ஆண்டுகால ஆராய்ச்சிக்கு, உழைப்பிற்குப் பலன் கிடைத்து விட்டது. மனம் மகிழ்ச்சியில் குதூகலிக்கத் தொடங்கியது.

     இது எப்படி வேங்கைக் கானல் ஆகும்? கோட்டம் என்றால் என்ன? யார் சொன்னது? என கேள்வி மேல் கேள்விகளால், வேட்டைக் காரனைத் துளைத்தெடுத்தார்.

     அதெல்லாம் தெரியாதுங்க. இதை வேங்கைக் கானல் என்றுதான் கூப்பிடுவாங்க. இதுக்குள்ளேதான மங்கல தேவி குடி. அதுதான் கோட்டம். இதுக்கு இதுதான் பேரு என்றார்.

     வேங்கைக் கானல் என்ற பெயரைக் கேட்டவுடன் கோவிந்தராசனார் அவர்களின் உடல் ஒரு முறை சிலிர்த்தது. உள்ளத்தில் புதிய சக்தி பிறந்தது. கானலில நுழைந்தார். 200 அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே வராத வகையில், மதிர் சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடந்தது. மரங்கள் நிறைந்திருந்தன.

     செடி, கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள் சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன. இக் கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்த்து.

     கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகான படிக்கட்டு. அதற்கு முன்னர் அரை குறையாகக் கட்டப் பட்டு, குத்துக் கற்களுடன் நிற்கும் வாயில். கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை.

    சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்து இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள்.

     மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.

கண்ணகி சிலையின் மேற்பகுதி
கண்ணகி சிலையிருந்த அடிப் பகுதி (பீடம்)
      உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலது காலை ஊன்றிய நிலையில், ஒரு பெண்ணின் சிலை.

      அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுப் புற மார்பு சிறியதாக இருந்தது.

       நண்பர்களே, இதுதான், இதுதான் நண்பர்களே சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலை. படிக்கும் நமக்கே, இவ்வளவு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகிறதே, இதனைக் கண்டு பிடித்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார் எவ்விதம் இருந்திருப்பார். உள்ளத்தில் உணர்ச்சிகள் அலைமோத, உற்சாகக் கடலிலே அல்லவா மிதந்திருப்பார். பதினேழு ஆண்டுகால இடையறா முயற்சி அல்லவா?

     கண்ணகி சிலை செய்யப் பெற்றக் கல், திண்மை இல்லாத, ஒருவகைக் கருங்கல். அதனால் அழிந்த அக் கட்டடத்தில் இருந்து , கீழே விழுந்த கற்களால் சிதைந்து போயிருந்தது. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலையல்லவா.

     பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.

     இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில், பல இடங்களில் குறிப்பிடும், நெடுவேள் குன்றமும், பத்தினிக் கோட்டமும் இதுதான் நண்பர்களே. சேரன் செங்குட்டவன் அமைத்த கண்ணகி சிலையும் இதுதான்.
கண்ணகி தீர்த்தம்
கண்ணகி கோயில் கல்வெட்டு




கண்ணகி கோயில், இன்றும்  அதே நிலையில்




கண்ணகி கோயிலும், செல்லும் மலைப் பாதையும்
 (இது இன்றைய நிலைமை)

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று ம.பொ.சி அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில்தான் முதன்முதலாக, கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றி வெளியுலகிற்குத் தெரியப் படுத்தினார். தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

      இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தனது கண்டுபிடிப்புப் பற்றி சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார். அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், 17.5.1971 அன்று பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களைக் அழைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற, இளங்கோவடிகள் சிலைத் திறப்பு விழாவின் போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழக முதல்வரே , தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

தேடிச் சோறுநிதந்  தின்று – பல
     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ?
என்று பாடுவாரே பாரதி. அம்மகாகவியின் வரிகளுக்கு ஏற்ப, வேடிக்கை மனிதராய், வகுப்பறையே உலகென்று வீழ்ந்து விடாமல், வீறு கொண்டு எழுந்து, நடையாய் நடந்து, மலைதனில் மறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்து, உலகறியச் செய்த மாமனிதரல்லவா இவர்.
   
கர்மவீரர் காமராசருடன் கை குலுக்குபவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார்


பதினேழு ஆண்டுகள், ஒரே சிந்தனை, ஒரே செயல். சாதித்துக் காட்டிய மனிதரல்லவா பேராசிரியர் சி.கோவிந்தராசனார்.

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களை சில நாட்களுக்கு முன்னர்,
இந்தப் பதிவிற்காகச் சந்தித்த போது எடுத்துக் கொண்ட படம்.
(படம் எடுத்து உதவியவர் நண்பர் கரந்தை சரவணன் அவர்கள்)
     நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், இன்றும் நலமுடன் உள்ளார். அவருக்கு வயது 94. பத்தினி தெய்வம் கண்ணகியை நமக்கு மீட்டுக் கொடுத்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், இன்னும் நூறாண்டு வாழ வாழ்த்துவோம். அவர்தம் உழைப்பை எந்நாளும் போற்றுவோம்.

       


     


     
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் காட்சி

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாராட்டப்பெறும் காட்சி
---------------------------------
நண்பர்களே,
ஆர்வத்தினால், பதிவு சற்று நீண்டு விட்டது.
பொறுத்தருள வேண்டுகிறேன்

என்றென்றும் நட்புடன்,
கரந்தை ஜெயக்குமார்