Sunday, November 30, 2025

மதுரை அழகர் கோவில் - தொ.பரமசிவன் புரட்டுகளும்

 அழகர் கோயில் - தொ.பரமசிவன் (திரு Badri Seshadri அவர்களின் பதிவு)

மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவனின் முனைவர் பட்ட ஆய்வேடு, “அழகர் கோயில்”, மதுரைக் காமராசர் பல்கலைக்கழக வெளியீடாக 1989-ம் ஆண்டு வந்துள்ளது. இதனை மின்கோப்பு வடிவில் படித்தேன்.
இந்தப் புத்தகத்தில் தொ.ப சேகரித்த தகவல்கள் ஒரு பக்கம் என்றால் அவர் முன்வைக்கும் கருத்துகளும் அவருடைய சாய்மானமும் மற்றொரு பக்கம்.
உண்மையிலேயே மிக விரிவாகத் தகவல்களைச் சேகரித்துள்ளார். அதற்கான கள ஆய்வை விரிவாகச் செய்துள்ளார். ஆனால் மிகுந்த பக்கச் சார்புடன் தகவல்களை ஆராய்கிறார். வெளிப்படையாகத் தெரியும் பல விஷயங்களைத் திரிப்பதற்கு அவர் சற்றும் அஞ்சுவதில்லை. அவருடைய சில கருத்துகளைப் பார்ப்போம்:
(1) பௌத்தக் கோயிலாக இருந்த இந்த மலைக்குன்றை வைணவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். இதற்கான வலிய ஆதாரமாக அவர் ஒன்றையுமே காட்டுவதில்லை. மயிலை சீனி வேங்கடசாமிதான் அவருடைய பெரும் ஆதாரம். மயிலையார், கண்ணில் கண்டதையெல்லாம் சமணம் அல்லது பௌத்தம் என்று சொல்வதில் சமர்த்தர். உதாரணமாக உலகிலேயே அவர் ஒருவர்தான் மாமல்லபுரத்தின் பெருந்தவச் சிற்பக் காட்சியை சமணர் சிற்பமாகக் காண்கிறார். அதனைக் குறித்து சிறுநூல் ஒன்றையே எழுதியுள்ளார். மயிலையார் அழகர் கோயில் குறித்துக் காண்பிப்பதைக் கைக்கொள்ளும் தொ.பரமசிவன் குறிப்பிடுவது ஒன்றுகூட எந்த வாதத்திலும் நிற்காதவை.
வட்டவடிவ அடித்தளம் பௌத்த சைத்தியங்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது சிறிதுகூட உண்மையல்ல. நரசிம்மர் பிரதிஷ்டை, ஆழ்வார்கள் மீண்டும் மீண்டும் ‘இது எங்கள் மலை’ என்றெல்லாம் சொல்வது ஆகியவற்றை முன்வைத்து பௌத்த வழிபாட்டிடம் வைணவத்துக்கு மாற்றப்பட்டது என்கிறார். பரிபாடல் இந்தத் தலத்தை வைணவத் தளம் என்கிறது. சிலப்பதிகாரமும் இந்தத் தலத்தை வைணவத் தலமாகவே குறிப்பிடுகிறது. அதற்குமுன்பு இந்த இடம் பௌத்தத் தலமாக இருந்ததற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் மயிலை சீனியாரிடமும் இல்லை, தொ.பவிடமும் இல்லை. ஆனால் இருந்தது, இருந்தது, இருந்திருக்கவேண்டும் என்றெல்லாம் தொ.ப சொல்கிறார். இதுதான் ஆய்வாளருக்கு அழகா?
பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் காணக்கிடைத்தாலும் அவை மக்கள் மதமாக இருந்ததற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகளே இல்லை. கல்வெட்டுகளும் படுகைகளும் பொயுமு காலத்திலிருந்தே இருந்தாலும, அம்மதங்கள் மக்களிடையே நிலவவில்லை என்றே சொல்லவேண்டும். மாறாக மாயோன் வழிபாடு சங்க இலக்கியத்தில் மிகத் தெளிவாக வருகிறது. அது மக்கள் வழிபாடாகவே இருக்கிறது. சிலப்பதிகாரம் சமண மதச் சார்புடைய இலக்கியமாகக் கருதப்பட்டாலும் அதில் வரும் ஆயர்கள் வைணவப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். இது சங்க இலக்கிய முல்லை நில வர்ணனைகளோடு அப்படியே ஒத்துப்போகிறது. பரிபாடல் காட்டும் காட்சியும் இதுவே.
எனவே அழகர் மலையைப் பொருத்தமட்டில் பௌத்த வழிபாட்டிடமாக இருந்து அது வைணவ வழிபாட்டிடமாக மாற்றப்பட்டதாக கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம், நாட்டுப்புறப் பாடல் என எங்குமே இல்லாத ஒன்றை தொ.ப இட்டுக்கட்டுகிறார். இது ஆய்வுமுறைமையே அல்ல.
(2) வைணவ மதத்தைப் பெருந்தெய்வ அந்நிய மதமாகவும் பிராமண சாதி அல்லாதோருக்குத் தொடர்பில்லாத மதமாகவும் தொ.ப சொல்லிச் செல்கிறார். இதை முற்றுமுழுதான உண்மையாக ஏற்றுக்கொண்டதனால் இதற்கு ஆதாரம் தேவையில்லை என்று அவர் கருதுகிறார்போலும். ஆனால் அவரே கொடுக்கும் ஆதாரங்களான பரிபாடல் முதலான சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் ஆகியவற்றால் தொ.பவின் கூற்று மறுக்கப்படுகிறது. அழகர் கோவிலின் ஆண்டார்களுக்கும் (பிராமணர்கள்) அவர்கள்கீழ் இயங்கும் பிராமணர் அல்லாத சமயத்தார்களுக்குமான உறவை தொ.ப கொச்சைப்படுத்துகிறார். இந்த சமயத்தார்கள், வைணவத்துக்கு “ஆள் பிடித்துத் தருபவர்கள்” என்கிறார் தொ.ப. இவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று ஆட்களை அழைத்துவந்து அழகர்கோவில் ஆண்டார்களிடம் திருச்சின்னம் (தோள்களில் சங்கு சக்கரம் பொறித்துக்கொள்வது) பெறவைத்து அனுப்பினார்கள் என்று எழுதுகிறார்.
இராமானுஜ வைணவத்தில் சமாஷ்ரயணம் (https://en.wikipedia.org/wiki/Samasrayana) எனப்படும் இந்தச் சடங்கு சாதி பார்த்து தரப்படுவதில்லை. யார் ஒருவர் தன்னை வைணவராகக் கருதுகிறாரோ அவர் வைணவ ஆசாரியர் ஒருவரிடம் சென்று இந்தச் சடங்குகளைச் செய்துகொண்டு, மந்திர உபதேசம் பெற்று ஶ்ரீவைணவராக வாழலாம். அழகர் கோயிலில் இந்தச் சடங்கு தொடர்ந்து அனைத்துச் சாதியினருக்கும் செய்யப்பட்டுவந்திருந்தது. இதில் பள்ளர், பறையர், கள்ளர், கோனார், வன்னியர், நாயுடு என அனைவரும் உண்டு என்று தொ.பவே சுட்டுகிறார். ஆனால் இதனை மதம் பரப்பும் வேலை என்பதாக முன்வைக்கிறார். இங்கே மதம் பரப்புதல் எங்கிருந்து வருகிறது? இன்றும்கூட வடகலை, தென்கலை வைணவ மடங்கள் இந்தச் சடங்குகளைத் தம்மை நோக்கி வருவோருக்குச் செய்கிறார்கள். ஊர் ஊராகச் சென்று யாரையும் தம்மை நோக்கி வருமாறு அழைப்பதில்லை.
(3) இந்திரனை வழிபட்டுவந்தவர்களை, பலராம வழிபாட்டுமூலமாக கிருஷ்ண வழிபாட்டை நோக்கி இழுத்துவந்தார்கள் என்கிறார் தொ.ப. இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இலக்கியம் காட்டும் சான்று என்ன? சங்க இலக்கியம் மாயோனையும் வழிபடுகிறது, இந்திரனையும் வழிபடுகிறது. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்த பிரச்னையில் இந்திரனுக்கும் மாயோனுக்கும் தகராறு. இந்திரன் தோற்க, இந்திரன் ஏவிய வருணன் தோற்க, மாயோன் வெல்வதுதான் புராணக் கதை. இது நிகழ்விலும் நடக்கிறது. வருணனும் இந்திரனும் மக்கள் வழிபாட்டிலிருந்து காணாமல் போகிறார்கள்.
பரிபாடல் முதற்கொண்டு பலராமனும் கண்ணனும் நப்பின்னையும் இலக்கியத்தில் வந்துவிடுகிறார்கள். சிலப்பதிகாரத்திலும் வருகிறார்கள். இரண்டு இலக்கியங்களும் கண்ணனைத திருமாலோடு சேர்த்துத்தான் பார்க்கின்றன. இவற்றை ஆரியப் பார்ப்பனர்கள் புகுத்துவதில்லை. தமிழர்கள்தான் செய்கின்றனர். பலராம வழிபாடு கண்ணன் வழிபாட்டோடு இணைந்துதான் உள்ளது. இதில் வெளுத்த அண்ணனைவிட, கறுத்த தம்பிக்கே முதலிடம். நாளடைவில் தம்பியே முதன்மைக் கடவுளாகத் தொடர, அண்ணன் வழிபாடு மறைகிறது. இதில் யார் யாரை இழுத்தார்கள். ஏன் இழுக்கவேண்டும்?
ஆழ்வார் பாடல்கள் தொடர்ந்து பலராமனையும் நப்பின்னையையும் சேர்த்தேதான் கொண்டாடுகின்றன. ஆனால் கண்ணனை அதிகமாகக் கொண்டாடுகின்றன. சதித்திட்டங்களை தொ.பதான் தீட்டுகிறார். அவருக்குச் சான்றுகள் தேவையிருப்பதில்லை.
(4) கள்ளர்கள் எவ்வாறு வைணவர்களாக உள்ளனர், அவர்கள் சிறுதெய்வ வழிபாட்டாளர்களாகத்தானே இருக்கவேண்டும் என்று அதிசயப்படுகிறார் தொ.ப. இதில் என்ன பிரச்னையை இவர் கண்டார் என்று புரியவே இல்லை. நீங்கள் முதலிலேயே முடிவு செய்துவிடுகிறீர்கள் - தமிழகத்தில் பிராமணர்களையும் சில உயர்சாதியினரையும் தவிர வேறு யாருமே சிவனையும் விஷ்ணுவையும் வணங்குவதில்லை என்று. ஆனால் கள ஆராய்ச்சியில் தொ.ப இறங்கும்போது, அழகர் மலைக் கள்ளர்கள் வைணவர்களாக உள்ளது தெரிகிறது. அழகர் ஆற்றில் இறங்குவது, அழகருடைய தேர்த் திருவிழா, திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் ஆகியவற்றில் கள்ளர்களே முதன்மையாக ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது. எனவே இதற்கு ஏதேனும் ரகசியக் காரணம் (மதமாற்றம்?) இருக்குமோ என்று தேடு, தேடு என்று தேடுகிறார். தேடினால் எதுவும் அகப்படுவதில்லை.
திருமங்கை ஆழ்வார் கள்ளர் சமூகத்தவர் என்று தொ.பவே தெளிவாகச் சொல்கிறார். [ஶ்ரீரங்கத்தில் முத்தரையர்கள் அவரைத் தங்கள் சமூகத்தவராகப் பார்க்கின்றனர்!] எனவே கள்ளர் சமூகத்தவர் வைணவர்களாக இருப்பதில் என்ன ஆச்சரியம்? ஏன் இருக்கக்கூடாது?
(5) துலுக்க நாச்சியார் கதையை முன்வைத்து வைணவர்களை மேலும் கேவலப்படுத்துதல் தொடர்கிறது. முஸ்லிம் படையெடுப்புகளால் தமிழகத்தின் பெரிய கோவில்களான சிதம்பரம், மதுரை, ஶ்ரீரங்கம் ஆகியவை கொள்ளையடித்து நாசமாக்கப்பட்டன. ஆனாலும் வைணவர்கள் துலுக்க நாச்சியார் கதையை உருவாக்கியிருப்பது, எதிராளியைத் தோற்கடிக்க முடியாவிட்டால் ஒரு கதைமூலம் அவர்களை உறவாளிகளாக ஆக்கிவிடுதலே என்பதனாலாம்.
விஜயநகர ஆட்சிக் காலத்தில் குமார கம்பண்ண உடையார், முஸ்லிம்களைத் தோற்கடித்து, தமிழகக் கோயில்கள் அனைத்தையும் மீட்டுவிடுகிறார். அதன்பின் ஹைதர் அலி, திப்பு சுல்தான் காலத்தில் இந்துக் கோயில்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. (தொ.ப அதனையும் சுட்டிக் காட்டுகிறார்.) இந்தக் காலகட்டம் தவிர, முஸ்லிம்கள் தமிழகத்தில் வைணவக் கோயில்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை. எனவே முஸ்லிம்களுடன் துலுக்க நாச்சியார் வழியே உறவாடி அவர்களுடன் நட்பாக இருக்கவேண்டும் என்ற அரசியல் தேவை வைணவர்களுக்கு இருக்கவில்லை. ஆனாலும் அந்தக் கதைக்கு ஒரு மரபு உண்டு. அதனாலேயே இன்றளவும் தமிழக வைணவக் கோயில்களில் [தமிழகத்தில் மட்டும்] அது புழங்குகிறது. முஸ்லிம் படையெடுப்பால் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்த ஶ்ரீரங்கம் கோயிலில் துலுக்க நாச்சியாருக்கு இன்றளவும் சந்நதி உண்டு. அது ஏன் என்பது தொ.பவுக்குப் புரியவில்லை. ஏனெனில் அவருடைய ஆராய்ச்சிச் சட்டகத்தில் அதற்கு இடமில்லை.
[நாச்சியாரை ‘நாய்ச்சியார்’ என்றே தொ.ப எழுதுகிறார். ஒருவேளை டைப்போவாக இருக்கலாம். ஆனால் ஓரிடத்தில் அல்ல, எங்கெல்லாம் நாச்சியார் வரவேண்டுமோ, அங்கெல்லாம் நாய்ச்சியார்தான்.]
***
தொ.பவின் ஆராய்ச்சிச் சட்டகங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, அவர் தரும் தகவல்களை மட்டும் தொகுத்தால் சில அற்புதமான விஷயங்கள் தென்படுகின்றன.
(அ) அழகர் கோவில் மிகவும் தொன்மையானது. ஶ்ரீரங்கம், திருப்பதி இரண்டுக்கும் இணையான தொன்மையைக் கொண்டது. பரிபாடலில் குறிப்பிடப்படும் ஒரே வைணவக் கோயில் இதுவே. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் நான்கு வைணவக் கோயில்களுள் இதுவும் ஒன்று.
(ஆ) சாதி வேற்றுமை இல்லாமல் அனைத்துச் சாதியினருக்கும், தீண்டத்தகாத சாதி என்று சொல்லப்படும் பள்ளர் பறையர் உட்பட அனைவர்க்கும், இந்தக் கோயிலில் வைணவத் திருச்சின்னம் பொறித்தல் நடைபெற்றுவந்துள்ளது. இராமானுஜரின் ஓர் ஆசிரியரான திருமாலை ஆண்டான் காலத்திலிருந்து இது நடைபெற்றுவந்துள்ளது. அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல். அதற்குமுன்னரேகூட நடந்திருக்கலாம்.
(இ) இந்தக் கோயிலின் அனைத்து விழாக்களையும் சுற்றியுள்ள கள்ளர், வன்னியர், பள்ளர், பறையர், கோனார் ஆகியோர், பல நூற்றாண்டுகளாக நடத்திவந்துள்ளனர். இன்றும் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு என்று தெளிவான முறைகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கோயிலுக்குள் செல்லலாம். கோயில் நுழைவு இவர்களுக்கு ஒருபோதும் மறுக்கப்படவில்லை.
(ஈ) கள்ளழகர் என்ற பெயர்க்காரணம் தெளிவாக இல்லை. இது கள்ளர்களுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம். அல்லது கண்ணனை மாயக்கண்ணன், கள்வன் என்றெல்லாம் அழைப்பதனால் இருக்கலாம். அந்தப் பெயர் தொடர்பு இல்லாவிட்டாலுமே, இப்பகுதியின் கள்ளர் சாதியினர் இந்தக் கோயிலுடன் மிக நெருங்கிய தொடர்புகொண்டுள்ளனர்.
(உ) இந்தக் கோயிலுக்கும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கும் தொடர்பு உள்ளது; அதேபோல மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் தொடர்பாக அக்கோயிலுடன் உறவு உள்ளது. கோயில்களுக்கு இடையிலான நெருக்கமான இந்த உறவு, ஒருசில திருவிழாக்களின்போது இன்றும் பின்பற்றப்படுவருகிறது.
திரு Marirajan Rajan அவர்களின் மற்றொரு பதிவு :-
" அழகர் கோயில் "
மதுரை.
அழகர்கோவில்.
மிகவும் பிரபலமான ஒரு பெருமாள் கோவில்.
இக்கோவில் குறித்து வழக்கம்போல் ஒரு வதந்தி.
பௌத்தக் கோவிலாக இருந்ததை வைணவக்கோவிலாகக் மாற்றினார்களாம்.
என்ன ஆதாரம்.?
யார் மாற்றியது.?
எப்போ மாற்றினார்கள்.?
இக்கேள்விகளுக்கு சரியான பதில் கூறுவதில்லை. அவர் சொல்லிட்டாராம். அவர் நூலில் எழுதியுள்ளாராம்.
என்ன எழுதினார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் இது நிச்சயமாகப் பெருமாள் கோவில்தான்.
அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளன.
சங்ககாலம் தொட்டே இவ்வழகர் மலைக்கு திருமாலிருங்குன்றம், இருங்குன்றம், திருமாலிருஞ்சோலை, சோலைமலை, திருவரை எனப் பல பெயர்கள் உண்டு. சிலப்பதிகாரத்தில் திருமால்குன்றம் என இம்மலையின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இம்மலை அடிவாரத்தில் கோயில் கொண்டுள்ள அழகரை (திருமால்), பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
சங்கஇலக்கியமான பரிபாடலில் இக்கோவில் வெகுவாகச் சிறப்பிக்கப்பட்டு ..
இக்கோவிலை திருமாலிருஞ்சோலை என்று பரிபாடல் கூறும்.
பரிபாடல் கூறும் திருமாலிருஞ்சோலை என்பது தற்போதைய அழகர்கோவில்தானா..?
நிச்சயமாக..
பரிபாடலில் வரும் திருமாலிருஞ்சோலை என்னும் பெயர் அப்படியே கல்வெட்டுகளிலும் இருக்கிறது.
முதலாம் இராஜராஜன், குலசேகரபாண்டியன், சுந்தரபாண்டியன் ஆகியோர்களது கல்வெட்டுகளில் பெருமாளின் பெயர்...
" திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமி "
பரிபாடல் என்ன பெயரைச் சொல்கிறதோ அதே பெயர்தான் கல்வெட்டுகளிலும் இருக்கிறது.
பெருமாளுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றியே அனைத்துக் கல்வெட்டுகளும் பதிவு செய்கிறது.
சங்க இலக்கியம் தொட்டு..
ஆழ்வார் பாடல்களிலும்.
சோழர் மற்றும் பாண்டியர் காலக் கல்வெட்டுகளிலும் தொடர்ந்து காணப்படும்
பெயர்...
" திருமாலிருஞ்சோலை "
ஆக..
இக்கோயில் அன்றிலிருந்து இன்று வரை நிச்சயம் பெருமாள் கோவில்தான்.
பௌத்தமாக இருந்து மாறியது என்ற பேச்சுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
இது ஓர் வதந்தி.
மதுரை அழகர் கோவில் ...
பெருமாளின் கருவறையின்மீது எழுப்பப்பட்டுள்ள
விமானம் சோமசந்த விமானம் எனப்படுகிறது. சந்திரனைப்
போன்று வட்ட வடிவமான அழகிய தோற்றத்தை இவ்விமானம்
கொண்டுள்ளது. கருவறைச் சுவர்கள் சிற்ப வேலைப்பாடு மிக்கவை என்றும்...
தளசூத்திர அடிப்படையில் ஆயதவேசரம் என்னும் நீள்வட்டமாக அமைந்த விமானம் என்றும்..
கோவில் கட்டிடக்கலை ஆய்வாளர்கள் வரையறை
செய்கின்றனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீவிமானமும் வட்டவடிவம்தான். லால்குடி
கொத்தமங்கலம் பள்ளிகொண்ட பெருமாள் செங்கற் தளியும் வட்ட வடிவம்தான். மதுரை அழகர் கோவிலும் வட்டவடிவம்தான்.
இலக்கியம்.
ஆழ்வார் சாசனம்..
கல்வெட்டு..
கோயிற் கலை..
மரபு வழிபாடு..
அனைத்தின் தரவுகளும்
மதுரை அழகர் கோவில் பெருமாள் கோவில்தான்
என்பதை உறுதிசெய்கின்றன.
அன்புடன்...
மா.மாரிராஜன்..

No comments:

Post a Comment